குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை
குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை
“என் அப்பாவைப் போலவே நானும் குடிக்கு அடிமை ஆனேன். 12 வயசிலேயே குடிக்கத் தொடங்கிவிட்டேன். கல்யாணமான சமயத்திலோ தினந்தினம் குடித்துவிட்டு வந்து, வீட்டில் ரகளை செய்தேன்; அதைத் தீர்த்துவைக்க அடிக்கடி போலீஸ் வந்துபோனார்கள். நாளுக்கு நாள் என்னுடைய உடல்நிலையும் மோசமாகிக்கொண்டே போனது. வயிற்றில் பயங்கர ரத்தக்கசிவு ஏற்பட்டதால் செத்துப் பிழைத்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் பிறகோ கல்லீரல் கரணை நோயும் இரத்த சோகை நோயும் என்னை பாடாய் படுத்தின. மதுபானம் குடிப்பதை விட்டுவிட நினைத்து சுய உதவி குழுக்களில் சேர்ந்தேனே தவிர ஒன்றையும் சாதிக்கவில்லை. ஏதோ சிலந்தி வலையில் மாட்டிக்கொண்ட பூச்சிபோல குடிப்பழக்கத்திலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தேன்.”—பிக்டர், a அர்ஜென்டினா.
மதுபானத்திற்கு அடிமையானவர்கள் நிறையபேர் இதுபோன்ற கதைகளைச் சொல்கிறார்கள். பிக்டரைப் போலவே இவர்களும், தாங்கள் மாட்டிக்கொண்ட இந்தப் பழக்கத்திலிருந்து தப்பிக்கவே முடியாதென நினைக்கிறார்கள். மதுபானத்தால் விளைகிற பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற முடியுமா அல்லது அவற்றை தவிர்க்க முடியுமா? முடியுமென்றால் எப்படி?
பிரச்சினையை உணர்ந்துகொள்ளுதல்
முதலாவதாக, குடிப்பவர்கள் தாங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பதை உணர வேண்டும், அவர்களுக்கு நெருங்கியவர்களும் அதை உணர வேண்டும். இது மிகமிக அவசியம். குடிக்கு அடிமையாகிற இந்த நிலை மிகப் பெரிய பிரச்சினையின் மிகச் சிறிய பாகமே. ஒருகாலத்தில் மிதமாக குடித்த மனிதனே பிற்பாடு அதற்கு அடிமையாகிவிடுகிறான். மதுபானத்தினால் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள், வன்முறைகள், சமுகப் பிரச்சினைகள் ஆகியவற்றிற்குக் காரணம் மிதமாக மதுபானம் அருந்துபவர்களே, அதற்கு அடிமையானவர்கள் அல்ல என்பதுதான் ஆச்சரியத்தைத் தருகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) சொல்வதைக் கவனியுங்கள்: “மதுபானத்தினால் ஏற்படுகிற சமுகப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு, அதற்கு அடிமையானவர்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மிதமாக குடிப்பவர்களைக் கட்டுப்படுத்துவதே சிறந்த வழி.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) நீங்கள் சுகாதார அதிகாரிகள் சிபாரிசு செய்திருக்கும் அளவை மீறிக் குடிக்கிறீர்களா? நீங்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டிய சமயங்களிலும் சட்டென்று செயல்பட வேண்டிய நேரங்களிலும் குடிக்கிறீர்களா? நீங்கள் குடிப்பதால் உங்கள் குடும்பத்திலும் வேலையிலும் பிரச்சினை ஏற்படுகிறதா? அந்தளவு குடிப்பது ஆபத்தானது என்பதை நீங்களே புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு மதுபானத்தின் அளவைக் குறைத்துக்கொள்வதுதான் பயங்கரமான பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க சிறந்த வழி. ஏனென்றால், மதுபானத்திற்கு அடிமையாகிவிட்டால் அதை விட்டு வெளியே வருவது மிகக் கடினம்.
மிதமிஞ்சி குடிப்பவர்கள் பொதுவாக உண்மையை ஒத்துக்கொள்வதில்லை. “மற்றவர்களைப் போலத்தான் நானும் குடிக்கிறேன்” என்றோ “எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது என்னால் நிறுத்திக்கொள்ள முடியும்” என்றோ அவர்கள் சொல்வார்கள். “குடித்துக் குடித்து செத்துப்போகிற நிலைக்கு வந்தபிறகுகூட நான் குடிக்கு அடிமையல்ல என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன். அதனால் குடிப்பதை நிறுத்துவதற்கு நான் முயற்சியே எடுக்கவில்லை” என்று ரஷ்யாவைச் சேர்ந்த கன்ஸ்டன்டியின் சொல்கிறார். “நிறைய தடவை நான் அந்தப் பழக்கத்தை விடுவதற்கு முயற்சி செய்திருக்கேன். ஆனால் நான் அதற்கு அடிமை என்று ஒருநாளும்
ஒத்துக்கொண்டதே கிடையாது. அதனால் வரும் பிரச்சினைகளையும் அசட்டை செய்தேன்” என்று போலந்தைச் சேர்ந்த மாரெக் சொல்கிறார்.ஒருவர் அதிகம் குடிக்கிறார் என்பதை எப்படி அவருக்கு புரியவைத்து அதிலிருந்து மீண்டுவர உதவலாம்? முதலாவதாக, மதுபானத்தை அளவுக்கதிகமாகக் குடிப்பதாலேயே தனக்குப் பிரச்சினைகள் வருகின்றன என்பதையும் அதை நிறுத்துவதன் மூலமே வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என்பதையும் அவர் உணர வேண்டும். “என் மனைவி என்னைவிட்டு போய்விட்டாள், என்னுடைய வேலையும் போய்விட்டது, அதனால்தான் நான் குடிக்கிறேன்” என்று நினைப்பதை நிறுத்திவிட்டு, “நான் குடிப்பதால்தான் என் மனைவி என்னைவிட்டு போய்விட்டாள், என்னுடைய வேலையும் போய்விட்டது” என்று அவர் நினைக்க ஆரம்பிக்க வேண்டும். இந்த ஆலோசனை, “மதுபான அடிமைத்தன அபாயத்திலிருந்து விடுதலை” என்ற பிரெஞ்சு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குடிக்கு அடிமையான ஒருவர் மேற்குறிப்பிடப்பட்டுள்ளபடி தன் எண்ணத்தை மாற்றிக்கொள்வதற்கு நீங்கள் உதவ விரும்பினால் பின்வரும் ஆலோசனைகள் உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கலாம்: அவர் சொல்வதை கவனமாகக் கேளுங்கள்; நேரடியான கேள்விகளைக் கேளுங்கள், அப்போதுதான் அவர் தயங்காமல் தனது உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்த முடியும்; அனுதாபத்துடன் நடந்துகொள்ளுங்கள், அப்போதுதான் தன்னை மற்றவர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்று அவர் உணர முடியும்; அவர் கொஞ்சம் முன்னேற்றம் காண்பித்தாலும் பாராட்டுங்கள்; அவரை கண்டனம் செய்யாமல் இருங்கள்; அவர் தன் எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கோ உங்களிடம் உதவி கேட்டு வருவதற்கோ தயங்கும் விதத்தில் நடந்துகொள்ளாதீர்கள். அவரை இரண்டு லிஸ்டுகள் போடச் சொல்லுங்கள்; ஒரு லிஸ்டில், நான் தொடர்ந்து குடித்துகொண்டே இருந்தால் என்ன ஆகும்? என்றும், இன்னொரு லிஸ்டில், ‘நான் குடிப்பதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்? என்றும் எழுதச் சொல்லுங்கள். இவ்வாறு செய்வதுகூட அவருடைய எண்ணத்தை மாற்ற உதவியாக இருக்கும்.
உதவி தேடி
ஒருவர் மிதமிஞ்சி குடிக்க ஆரம்பித்திருந்தால் அவரை லாயக்கற்ற நபராகவோ சீர்திருத்த முடியாத நபராகவோ நினைக்கத் தேவையில்லை. சிலர் தாங்களாகவே இந்தப் பழக்கத்தைவிட்டு வெளிவர முடிகிறது, ஆனால் பெரும்பாலோருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. b சிலர் ஆஸ்பத்திரியில் சேராமலேயே சிகிச்சை பெற முடிகிறது, ஆனால் மதுபானத்தை நிறுத்துவதன் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும்போது ஆஸ்பத்திரியில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. முதலில் ஏற்படுகிற அப்படிப்பட்ட பாதிப்புகள் அத்தனையும் இரண்டிலிருந்து ஐந்து நாட்களுக்குள் சரியாக்கப்பட்ட பிறகு மதுபானத்திற்கான அவர்களுடைய ஏக்கத்தைக் குறைத்து அதிலிருந்து தொடர்ந்து விலகியிருக்க சிகிச்சை கொடுக்கப்படலாம்.
என்றாலும், மேற்கூறப்பட்டுள்ள சிகிச்சைகளால் தீர்வு நிச்சயம் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. சிகிச்சை என்பது ஒரு தற்காலிக உதவியே தவிர பூரணமாகக் குணப்படுத்தும் ஒன்றல்ல. பிரான்சைச் சேர்ந்த அலென் என்பவர் மதுபானம் குடிப்பதை நிறுத்துவதற்காக அநேக முறை சிகிச்சை பெற்றார். “நான் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியே வந்தேனோ இல்லையோ மறுபடியும் குடிக்கத் தொடங்கினேன், ஏனென்றால் என்னுடைய அதே பழைய குடிகார நண்பர்களுடன் பழகத் தொடங்கினேன். சொல்லப்போனால் குடியை நிறுத்தியே ஆக வேண்டுமென்ற சரியான மன உந்துதல் எனக்கு இல்லை” என்கிறார் அவர்.
வெற்றிடத்தை நிரப்புதல்
அநேகர் குடியை விடாதிருப்பதற்குக் காரணம் குடிக்காமல் இருக்கையில் ஏதோ நெருங்கின நண்பரின் தோழமையை இழந்ததுபோல ஒரு வெறுமை உணர்வு அவர்களை வந்து ஒட்டிக்கொள்வதே. ரஷ்யாவைச் சேர்ந்த வசியிலி என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “நாளெல்லாம் என்னுடைய எண்ணங்கள் குடியிலேயே மூழ்கியிருக்கும். ஒரு நாள் குடிக்காமல் இருந்துவிட்டால் அந்த நாளே வீணாய்ப்போனதாக உணருவேன்.” குடிக்கு அடிமையானவர்கள், மதுபான தாகத்தைத் தணித்துக்கொள்வதற்காக மற்ற எல்லாக் காரியங்களையும் முக்கியமற்றதாக கருதுகிறார்கள். போலந்தைச் சேர்ந்த ஏஷி என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய வாழ்க்கையே குடிப்பதும் குடிப்பதற்கு பணம் திரட்டுவதுமாக இருந்தது.” எனவே குடியின் அடிமைத்தனத்திலிருந்து ஒருவர் விடுதலை பெற வாழ்வில் ஒரு புது அர்த்தத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் அவசியம்.
குடிப்பழக்கத்தை விடுவதற்கு முயற்சி செய்கிறவர்களுக்கு ஆலோசனை அளிக்கும் ஒரு கையேட்டை WHO பிரசுரித்திருக்கிறது. அது, குடிப்பதை நிறுத்தியிருப்பவர்கள் மறுபடியும் அதில் விழுவதை தவிர்ப்பதற்கு, பயனுள்ள செயல்களில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஓர் உதாரணம் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதாகும்.
ஆன்மீக காரியங்களில் முழுமையாக ஈடுபடுவது மதுபான பிடியிலிருந்து ஒருவர் விடுதலை பெறுவதற்கு உதவியாக இருக்கலாம். உதாரணத்திற்கு, அலென் என்பவர் குடிபோதையில் செய்த குற்றங்களுக்காக சிறையில் மூன்றாவது முறை அடைக்கப்பட்ட பிறகு யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கத் தொடங்கினார். அவர் சொல்கிறார்: “பைபிளைப் படித்ததால் என் வாழ்க்கைக்கு
அர்த்தம் கிடைத்தது. குடிக்காமல் இருப்பதற்கு அது எனக்கு உதவி செய்தது. என்னுடைய தீர்மானம் வெறுமனே குடிக்காமல் இருக்க வேண்டும் என்பதல்ல, ஆனால் யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்பதாக இருந்தது.”மறுபடியும் குழியில், மறுபடியும் வெளியில்
குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வர முயற்சி செய்யும் நபர்களுக்கு உதவியையும் உற்சாகத்தையும் அளிப்பது மிகமிக முக்கியம் என்று மதுபான துஷ்பிரயோக ஆலோசகர்கள் கூறுகிறார்கள். குடிக்கு அடிமையாகியிருக்கும் இவர்களில் அநேகர் குடும்பத்தையும் நண்பர்களையும் இழந்து நிற்கிறார்கள். இந்தத் தனிமை அவர்களை வாட்டிவதைத்து மனச்சோர்வுக்குள் தள்ளி, தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குத் தூண்டிவிடுகிறது. முன்குறிப்பிடப்பட்ட கையேடு, குடிப்பழக்கமுடைய ஒருவருக்கு உதவ நினைப்பவர்களுக்கு பின்வரும் ஆலோசனைகளைத் தருகிறது: “குடிப்பவர் உங்களை கோபப்படுத்துகிற விதத்தில் நடந்துகொண்டாலும்கூட அவரைக் குறைகூறாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். பழக்கங்களை மாற்றுவது சுலபமானதல்ல என்பதை நினைவில் வையுங்கள். சில வாரங்கள் குடிக்காமல் இருக்கிற அவர் பிறகு மீண்டும் சில வாரங்களில் குடித்துவிடுவார். நீங்கள் அளிக்கும் உற்சாகம், குடிக்காமல் இருப்பதற்கும் குடித்தாலும் சிறிதளவு மட்டுமே குடிப்பதற்கும் நீங்கள் தரும் உதவி, அந்தப் பழக்கத்தை விடுவதற்கு நீங்கள் கொடுக்கும் புதுப்புது ஐடியாக்கள் ஆகிய அனைத்துமே மிகவும் அவசியம்.”
கிட்டத்தட்ட 30 வருடங்களாக குடிப்பழக்கம் இருந்த இலாரியோ என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் உள்ள நண்பர்கள் எனக்கு காட்டின அன்பும் அக்கறையும் மிகவும் உதவியாக இருந்தது. அநேக முறை என்னுடைய பழைய குடிப்பழக்கத்திற்குத் திரும்பிச்சென்றேன், ஆனால் அவர்கள் எப்போதும் என்கூடவே இருந்து உற்சாகம் அளித்து, சரியான சமயங்களில் பைபிளிலிருந்து ஆலோசனைகளையும் கொடுத்தார்கள்.”
நீங்கள் குடிப்பழக்கத்தை விட்டுவிட கடுமையாகப் போராடுகிறீர்கள் என்றால் குடியின் குழியில் மறுபடியும் விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். ஆனால் நீங்கள் அதை உங்களுடைய போராட்டத்தின் பாகமாகவே கருத வேண்டும். விடாமல் முயற்சி செய்யுங்கள்! நீங்கள் மறுபடியும் குடியின் குழியில் விழுந்ததற்கான காரணத்தைக் கண்டுபிடித்து அடுத்த முறை அதைத் தவிருங்கள். எந்தச் சூழல் குடிப்பதற்கு உங்களை தூண்டிவிடுகிறது: சலிப்பா? சோர்வா? தனிமையா? விவாதமா? அழுத்தமா? அல்லது மற்றவர்கள் குடிக்கிற இடங்களா அல்லது நிகழ்ச்சிகளா? இவற்றில் எது காரணமாக இருந்தாலும் அதைத் தவிருங்கள்! குடிப்பதை அடியோடு நிறுத்துவதற்கு இரண்டு வருடங்கள் எடுத்த ஏஷி என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “குடிப்பதற்கு என்னைத் தூண்டிவிடுகிற உணர்ச்சிகளைக் கண்டுபிடிக்க கற்றுக்கொண்டேன். குடிப்பதற்கு என்னைத் தூண்டுகிற எந்த உணர்ச்சியையும் இப்போது நான் தவிர்க்கிறேன். மதுபானம் குடிக்கப்படுகிற இடங்களிலிருந்து நான் தூரமாக இருக்கிறேன். மதுபானம் கலந்திருக்கும் எந்தப் பொருளையும் நான் சாப்பிடுவதில்லை, மதுபானம் கலந்திருக்கும் கிரீம், லோஷன்களையும்கூட நான் பயன்படுத்துவதில்லை, ஏன் மதுபானம் கலந்திருக்கும் மருந்தையும் நான் சாப்பிடுவதில்லை. அதுமட்டுமல்ல மதுபானத்திற்கான விளம்பரங்களைக்கூட நான் பார்ப்பதில்லை.” ‘மகத்துவமுள்ள வல்லமைக்காக’ கடவுளிடம் ஜெபிப்பதன் மூலம் குடிப்பதற்கு தங்களுக்கு ஏற்படும் தூண்டுதலை தவிர்க்க முடிகிறது என்பதை அநேகர் உணர்ந்திருக்கிறார்கள்.—2 கொரிந்தியர் 4:7; பிலிப்பியர் 4:6, 7.
விடுதலை!
மதுபான அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவது பெரிய சவாலாக இருந்தாலும், முடியாத காரியமல்ல. இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருமே அதைச் சாதித்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்திலும்சரி வேலையிலும்சரி நல்ல பலன்களை அனுபவித்துவருகிறார்கள். அலென் இவ்வாறு சொல்கிறார்: “நான் இனி மதுபானத்திற்கு அடிமை கிடையாது.” கன்ஸ்டன்டியின் சொல்கிறார்: “யெகோவாவை தெரிந்துகொண்டதால் இன்று என்னுடைய குடும்பம் உயிரோடு இருக்கிறது. இப்போது என் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. இப்போது சந்தோஷத்திற்காக மதுபானத்தைத் தேடிப் போவதில்லை.” விக்டர் இவ்வாறு சொல்கிறார்: “இப்போது நான் சுதந்தரப் பறவை. இழந்துபோன மதிப்பையும் மரியாதையையும் திரும்ப பெற்றுவிட்டேன்.”
ஒரு நபர் அதிகமாக மதுபானத்தைக் குடிப்பதால் ஆபத்து வரும் நிலையில் இருந்தாலும் சரி, அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் சரி, அதற்கு அடிமையே ஆகியிருந்தாலும் சரி, அவர் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் மதுபானம் குடிப்பது உங்களுடைய உடலுக்கும் மனதுக்கும் கேடு விளைவிக்கிறது என்றால் மாற்றங்களை செய்ய தாமதிக்காதீர்கள். அது உங்களுக்கும் நல்லது, உங்களை நேசிப்பவர்களுக்கும் நல்லது. (g05 10/8)
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b உதவியளிப்பதற்கு சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகள், மற்ற சுகப்படுத்தும் திட்டங்கள் பல இருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகள் எந்தவித குறிப்பிட்ட சிகிச்சையையும் சிபாரிசு செய்கிறதில்லை. வேதவசனத்தின் நியமங்களை விட்டுக்கொடுக்கிற விதத்தில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்கும்படி ஒருவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எனினும், முடிவில் எப்படிப்பட்ட சிகிச்சை அவசியம் என்பதை, ஒவ்வொருவரும் தனக்குத்தானே தீர்மானம் செய்துகொள்ள வேண்டும்.
[பக்கம் 10-ன் படம்]
பிரச்சினை இருப்பதை ஒத்துக்கொள்வது முதற்படி
[பக்கம் 11-ன் படம்]
குடிப்பழக்கத்திலிருந்து வெளிவர அநேகருக்கு மருத்துவ உதவி தேவை
[பக்கம் 12-ன் படம்]
ஜெபம் உதவி செய்யலாம்
[பக்கம் 12-ன் படம்]
குடிக்காமல் இருப்பதற்கு நீங்கள் பலத்தைக் கண்டடையலாம்!