சமுகத்தைச் சீரழிக்கும் குடிப்பழக்கம்
சமுகத்தைச் சீரழிக்கும் குடிப்பழக்கம்
குடிக்கு இரண்டு முகங்கள்: ஒன்று இன்பம், மற்றொன்று துன்பம். அளவோடு குடிப்பது மனிதனுக்குச் சந்தோஷத்தைத் தரும் என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 104:15) ஆனால் மிதமிஞ்சிக் குடிப்பதோ தீங்கை விளைவிக்கும் அல்லது பாம்பின் கடியைப்போல சாவை விளைவிக்கும் என்றும் பைபிள் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 23:31, 32) மிதமிஞ்சி குடிப்பதால் வரும் பயங்கரமான பாதிப்புகளைக் கொஞ்சம் ‘குளோசப்’பில் பார்க்கலாம்.
“சனிக்கிழமையன்று, குடிபோதையிலிருந்த டிரைவர் 25 வயது தாய் மீதும் அவளுடைய இரண்டு வயது மகன் மீதும் வண்டியை ஏற்றினார், . . . ஆறு மாத கர்ப்பிணியான அந்த இளம் பெண் ஞாயிற்றுக்கிழமை இறந்துபோனாள். அவளுடைய மகனுக்குத் தலையில் பலத்த அடி, அவன் உயிர் ஊசலாடுகிறது” என்று ல மாண்ட் செய்தித்தாள் அறிக்கை செய்தது. வருத்தகரமாக, இப்படிப்பட்ட சம்பவங்கள் சர்வ சகஜமாக நடக்கின்றன. குடிபோதையில் இருந்ததால் விபத்துக்கு ஆளான யாரேனும் ஒருவரை நீங்களும்கூட அறிந்திருக்கலாம். குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் அடிபட்டு, செத்துப்போகிறார்கள்.
உயிர்களைக் குடிக்கிறது
மிதமிஞ்சிய குடியால் உலகெங்கிலும் எக்கச்சக்கமான மனிதர்கள் காயம் அடைகிறார்கள், வியாதிப்படுகிறார்கள், ஏன், உயிரையும் இழக்கிறார்கள். புற்றுநோயும், இதய இரத்தக்குழாய் நோயுமே பிரான்சு நாட்டு மக்கள் இறப்பதற்கு முதல் இரண்டு காரணங்களாகவும், மிதமிஞ்சிய குடி மூன்றாவது காரணமாகவும் இருக்கிறது. இது ஒவ்வொரு வருடமும் சுமார் 50,000 உயிர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ கொல்கிறது. “இந்த எண்ணிக்கை, ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று ஜம்போ ஜெட் விமான விபத்துகள் நடந்தால் எத்தனை பேர் இறப்பார்களோ அந்த எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கிறது” என்று பிரெஞ்சு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை சொல்கிறது.
குடிப்பழக்கம் குறிப்பாக இளவட்டங்களின் உயிரையே அதிகமாகக் குடிக்கிறது. ஐரோப்பாவில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட வாலிபப் பையன்கள் இறந்துபோவதற்கு முக்கியக் காரணம் குடியே என்று 2001-ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை சொல்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் மிதமிஞ்சிய குடி, மூன்றில் ஒரு பாகம் இளைஞர்களை வெகு சீக்கிரத்தில் கொன்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடிதடி, பாலியல் தாக்குதல்
குடிப்பது வன்முறையை உசுப்பிவிடும். சுய கட்டுப்பாட்டை இழந்துவிடச் செய்யும், மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளச் செய்யும். இதனால், குடிபோதையில் இருப்பவர் மற்றவர்களுடன் அடிதடியில் இறங்கிவிடும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
வீட்டு வன்முறைக்கும் பாலியல் தாக்குதலுக்கும் முக்கிய காரணம், அளவுக்கு மீறிய குடியே. பிரான்சு நாட்டு சிறைவாசிகளிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, மூன்றில் இரண்டு பங்கு கற்பழிப்புகளுக்கும் முறைகெட்ட பாலியல் தாக்குதல்களுக்கும் அளவுக்கு மீறிய குடியே காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. போலந்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, குடிகாரர்களுடைய மனைவிகளில் 75 சதவீதம் பேர் அடிதடிக்கு இரையானவர்கள் என்று பொலிடிக்கா பத்திரிகை குறிப்பிடுகிறது. ஒரு மருத்துவ ஆய்வு சொல்கிறபடி, “மதுபானம் குடிக்கும் எல்லா வயதினர் மத்தியிலும், கொலை செய்கிற ஆபத்து ஏறக்குறைய இருமடங்கு அதிகமாக இருக்கிறது; அதோடு, குடிகாரர்களுடன் வாழும் குடிப்பழக்கம் இல்லாத ஆட்கள் கொலை செய்யப்படுவதற்கான ஆபத்தும் அதிகமாக இருக்கிறது.”—அமெரிக்க மருத்துவ அமைப்பு, விஞ்ஞான விவகாரங்களின் மன்றம்.
சமுகத்திற்கு நஷ்டம்
விபத்தாலோ வியாதியாலோ அகால மரணத்தாலோ ஏற்படும் மருத்துவச் செலவு, இன்சூரன்ஸ் செலவு, உற்பத்தி வீதத்தின் சரிவு ஆகியவற்றைக் கணக்கிட்டு பார்க்கும்போது சமுகத்திற்குப் பெருத்த பொருளாதார நஷ்டம் ஏற்படுவது தெரிகிறது. அயர்லாந்தில், 40 லட்சம் மக்கள் ஒரு வருடத்தில் குறைந்தது 100 கோடி டாலர் (4,500 கோடி ரூபாய்) நஷ்டமடைகிறார்கள் என சொல்லப்படுகிறது. காரணம், மிதமிஞ்சிய குடிப்பழக்கம். “இந்தப் பணத்தில் ஒவ்வொரு வருடமும் ஒரு மருத்துவமனையையும் ஒரு விளையாட்டு அரங்கத்தையும் கட்டிவிடலாம், அதுபோக ஒவ்வொரு மந்திரிக்கும் ஒரு ஜெட் விமானமும் வாங்கித்தரலாம்” என்று ஒரு பிரசுரம் சொல்வதை தி ஐரிஷ் டைம்ஸ் செய்தித்தாள் மேற்கோள் காட்டியது. ஜப்பானில் மிதமிஞ்சிய குடிப்பழக்கத்தின் விளைவாக, “ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் கோடி யென்னுக்கும் (2,47,500 கோடி ரூபாய்க்கும்) அதிகமாக நஷ்டம்” ஏற்படுவதாய் 1998-ல் மைநிச்சி டெய்லி நியூஸ் என்ற செய்தித்தாள் அறிக்கையிட்டது. ஐ.மா. காங்கிரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு சொல்லப்பட்டது: “அளவுக்கு மீறிய குடியால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டம், 1998-ல் மட்டும் 18,460 கோடி டாலர்கள் (8,30,700 கோடி ரூபாய்) என மதிப்பிடப்பட்டது. அதாவது, அந்த வருடத்தில் ஐக்கிய மாகாணத்தில் வாழ்ந்த ஆண், பெண், பிள்ளை என்று ஒவ்வொரு தனி நபருக்கும் 638 டாலர்கள் (28,710 ரூபாய்) பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது என குத்துமதிப்பாகச் சொல்லலாம்.” அதுமட்டுமா? பிரிந்துபோன அல்லது ஒருவரை மரணத்தில் பறிகொடுத்த குடும்பங்களுக்கு ஏற்பட்ட மன அவஸ்தை என்ன? பள்ளிப் படிப்பிலிருந்து அல்லது வேலையிலிருந்து பாதியிலேயே நிறுத்தப்பட்டவர்களின் கதி என்ன?
அளவுக்கு மீறிய குடியால் சமுகத்திற்கு ஏற்படும் நஷ்டத்தைப் புரிந்துகொள்வது கடினமல்ல. குடிப்பழக்கம் உங்களுடைய ஆரோக்கியத்திற்கும் மற்றவர்களுடைய ஆரோக்கியத்திற்கும் ஆபத்தைத் தேடித்தருகிறதா? இந்தக் கேள்விக்குப் பின்வரும் கட்டுரையில் விடை காணலாம். (g05 10/8)