Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாட் ரூம்கள்—அதன் ஆபத்துகளை நான் எப்படித் தவிர்ப்பது?

சாட் ரூம்கள்—அதன் ஆபத்துகளை நான் எப்படித் தவிர்ப்பது?

இளைஞர் கேட்கின்றனர் . . .

சாட் ரூம்கள்​—⁠அதன் ஆபத்துகளை நான் எப்படித் தவிர்ப்பது?

“ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு மணிநேரம் தவறாமல் ஆன்-லைனில் சாட் செய்தேன். சிலசமயம் ‘ப்ரேக்’ இல்லாமல் ஆறு அல்லது ஏழு மணிநேரம்கூட சாட் செய்திருக்கிறேன்.”​—⁠ஹோஸே. a

முன்பின் தெரியாத ஆசாமிகள் தொடர்புகொள்கிற இடங்களில் ஆபத்துகள் இருக்கவே இருக்கும், அவ்வாறே சாட் ரூம்களிலும் ஆபத்துகள் இருக்கின்றன; எனவே, உஷார்! உஷார்! உதாரணத்திற்கு, ஒரு பெரிய நகரத்தை ‘விசிட்’ செய்யச் செல்கிறீர்களென்றால், ஆபத்தான இடங்களை அடையாளங்கண்டு அங்கு போகாமல் இருக்கத்தானே நீங்கள் முயலுவீர்கள்!

அப்படியானால், நீங்கள் சாட் ரூமை ‘விசிட்’ செய்யும்போதுகூட அதே ‘லாஜிக்’ பொருந்துகிறது. விழித்தெழு! பத்திரிகையின் அக்டோபர் 8 இதழில், சாட் ரூம்களுக்கே உரிய இரண்டு ஆபத்துகளைப் பற்றி, அதாவது செக்ஸ் காமுகர்கள் உங்களோடு தொடர்புகொள்ளக்கூடிய ஆபத்தைப் பற்றியும், மற்றவர்களை ஏமாற்ற வேண்டுமென்ற கெட்ட ஆசை ஏற்பட்டுவிடுகிற ஆபத்தைப் பற்றியும் சிந்தித்தோம். அதுபோக, இன்னும்பல ஆபத்துகளும் இருக்கின்றன; அவற்றையும் சிந்தித்துப்பார்ப்பது ரொம்பவே முக்கியம். ஆனால், முதலாவது சாட் ரூம்கள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன?

ஒரு நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ளன

பொதுவாக, குறிப்பிட்ட சில தொகுதியினரைக் கவருவதற்கென்றே வெவ்வேறு தலைப்புகளில் சாட் ரூம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏதோவொரு விளையாட்டு அல்லது ஹாபியில் படு ஆர்வமாக இருப்பவர்களுக்குச் சில சாட் ரூம்கள் அமைக்கப்பட்டிருக்கலாம். சில சாட் ரூம்கள், முழுக்க முழுக்க ஒரு டிவி புரோகிராமைப் பற்றி கலந்துரையாடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம். இன்னும் சில சாட் ரூம்கள், குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்காகவே அமைக்கப்பட்டிருக்கலாம்.

உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலுள்ள இளைஞர்களோடு புது ஃப்ரெண்ட்ஷிப்பை ஆரம்பிக்க உதவுவதாகக் கருதப்படுகிற ஒருவித சாட் ரூம் இருக்கிறது; நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்றால், அந்த சாட் ரூமை ‘விசிட்’ செய்ய உங்களுக்கு ஆசை ஆசையாக இருக்கலாம். சக விசுவாசிகளான இளைஞர்கள் மத்தியில் புதுப்புது நண்பர்களைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டுமென்று ஆசைப்படுவது நல்லதுதான். ஆனாலும், இத்தகைய சாட் ரூம்களில் நயவஞ்சகமான சில ஆபத்துகள் மறைந்திருக்கின்றன. எத்தகைய ஆபத்துகள்?

ஒழுக்கச் சீர்குலைவு புகுத்தப்படுகிறது

“ஒருமுறை நான் சாட் ரூமில் ‘பேசிக்கொண்டிருந்தேன்;’ யெகோவாவின் சாட்சிகளோடுதான் ‘பேசிக்கொண்டிருந்ததாக’ நினைத்தேன். ஆனால், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவர்களில் சிலர் நம்முடைய நம்பிக்கைகளை மட்டம்தட்ட ஆரம்பித்தார்கள். அவர்கள் விசுவாசத் துரோகிகள் என்பது சீக்கிரத்திலேயே தெளிவானது” என்கிறான் டைலர். சக விசுவாசிகள் என்று சொல்லிக்கொண்டு நம்முடைய ஒழுக்கநெறிகளை வேண்டுமென்றே கெடுத்துப்போட முயலும் ஆசாமிகள் இவர்கள்.

கடவுளுடைய குமாரனான இயேசு கிறிஸ்து, தம்மைப் பின்பற்றியவர்களில் சிலர் தங்களுடைய தோழர்களுக்கு விரோதமாக எழும்புவார்கள் என்று எச்சரித்திருந்தார். (மத்தேயு 24:48-51; அப்போஸ்தலர் 20:29, 30) அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த அத்தகைய ஆட்களைக் கள்ளச் சகோதரர்கள் என்று அழைத்தார், அதோடு, கிறிஸ்தவச் சபையாருக்குத் தீங்கு விளைவிப்பதற்காக “பக்கவழியாய் நுழைந்த” ஆட்கள் என்றும் கூறினார். (கலாத்தியர் 2:4) ‘நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டுகிற’ குறிக்கோளுடன் அவர்கள் “பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்” என்று பைபிள் எழுத்தாளரான யூதாவும் சொன்னார். (யூதா 4) அவர்கள் “தண்ணீருக்கடியில் மறைந்துகிடக்கிற பாறைகள்” என்றும் அவர் விவரித்தார்.​—யூதா 12, NW.

விசுவாசத் துரோகிகள் அடிக்கடி பயன்படுத்துகிற வஞ்சகமான வழிகளை பவுலும் யூதாவும் அடையாளங்காட்டுவதைக் கவனியுங்கள். கிறிஸ்தவச் சபையினரின் ஒழுக்கநெறிகளைக் கெடுத்துப்போடும் நோக்கத்துடன் அந்த விசுவாசத் துரோகிகள் ‘பக்கவழியாய் நுழைந்ததாக’ அவ்விரு பைபிள் எழுத்தாளர்களுமே குறிப்பிட்டார்கள். இன்று, அத்தகைய விஷமிகள் தந்திரமாக மறைந்திருந்து செயல்படுவதற்குப் பயன்படுத்துகிற படுவசதியான “திரைச்சீலை” எது தெரியுமா? சாட் ரூம்களே. இந்தப் பொய்க் கிறிஸ்தவர்கள், தண்ணீரில் மறைந்துகிடக்கிற பாறைகளைப் போல் தங்களுடைய சுயரூபத்தை மறைத்து, யெகோவாவின் சாட்சிகளாய் இருக்கும் இளைஞர்கள்மீது கரிசனை காட்டுவது போல் நடிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய குறிக்கோள் விழிப்பாயிராதவர்களுடைய விசுவாசத்தைச் சேதப்படுத்துவதே.​—1 தீமோத்தேயு 1:19, 20.

யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்படுகிற இந்தப் பத்திரிகையும் இன்னும்பல புத்தகங்களும் சாட் ரூமில் உள்ள ஆபத்துகளைக் குறித்து திரும்பத்திரும்ப எச்சரித்திருக்கின்றன. b எனவே, யெகோவாவின் சாட்சிகளுக்கென்றே அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிற சாட் ரூமில் நீங்கள் சந்திக்கும் நபர், விசுவாசத் துரோகியாக இல்லாவிட்டால்கூட, அத்தகைய எச்சரிப்புகளை அவமதிக்கும் நபராகவே இருக்கிறார். பைபிள் அறிவுரைகளை மட்டம்தட்ட நினைக்கிறவர்கள் உங்களுடைய நண்பர்களாக இருக்க வேண்டுமென நிஜமாகவே நீங்கள் விரும்புகிறீர்களா?​—நீதிமொழிகள் 3:5, 6; 15:5.

தனியே இருப்பது​—⁠ஒரு கண்ணி

சாட் ரூம்களைப் பற்றிய மற்றொரு விஷயத்தைக் குறித்தும், அதாவது அவை ‘உறிஞ்சுகிற’ நேரத்தைக் குறித்தும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். “சிலசமயம், சாப்பிடக்கூட மறந்துபோகும் அளவுக்கு நான் சாட் ரூம்களில் அப்படியே மூழ்கிப்போனதுண்டு” என இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட ஹோஸே கூறுகிறான்.

ஹோஸேயைப் போல் ஒருவேளை நீங்கள் சாட் ரூம்களில் அந்தளவு மூழ்கிப்போகாதவராக இருக்கலாம். என்றாலும், ஆன்-லைனில் சாட் செய்வதற்கு, நீங்கள் வேறெதாவது அலுவலிலிருந்து நேரத்தை வாங்க வேண்டியிருக்கும். இதனால் உங்களுடைய ஹோம்-ஒர்க்கோ அல்லது வீட்டு வேலைகளோ உடனடியாகப் பாதிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், படுமோசமாக முதலில் பாதிக்கப்படுவது ஒருவேளை உங்கள் குடும்பத்தாரோடுள்ள பேச்சுத்தொடர்பாகத்தான் இருக்கும். ஸ்பெயினில் வசிக்கும் ஆட்ரியான் என்பவன் இவ்வாறு சொல்கிறான்: “சாப்பிட்டு முடித்த மறுநிமிடமே ஆன்-லைனில் சாட் செய்ய சென்றுவிடுவேன். சாட் ரூமே தஞ்சமென கிடந்ததால், என் குடும்பத்தாரிடம் பேசுவதைக் கிட்டத்தட்ட நிறுத்தியே விட்டிருந்தேன்.”

உங்கள் பொன்னான நேரத்தை சாட் ரூம்களில் வீணாக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு மிகவும் முக்கியமானவர்களிடமிருந்து உங்களையே நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இது சம்பந்தமாக பைபிள் பின்வரும் எச்சரிப்பை விடுக்கிறது: “தன்னை தனிமைப்படுத்திக்கொள்கிறவன் சுய இச்சையை நாடுவான்; நடைமுறையான ஞானம் அனைத்தையும் புறக்கணித்துவிடுவான்.” (நீதிமொழிகள் 18:1, NW) ஏராளமான சாட் ரூம்களில் நீங்கள் சந்திக்கும் ஆசாமிகள் பைபிளின் நடைமுறை ஞானத்திற்கேற்ப வாழும்படி உங்களை ஊக்குவிக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, சுயநல நாட்டங்களில் ஈடுபடும்படி தூண்டி, கிறிஸ்தவ ஒழுக்க தராதரங்களை விட்டுவிடுவதற்கே உங்களை ஊக்குவிப்பார்கள்.

உண்மைதான், குடும்பத்தாரோடு பேசுவதைவிட ஆன்-லைனில் பேசுவது ஒருவேளை உங்களுக்கு எளிதாக இருக்கும்; சாட் ரூம்களைக் கவர்ச்சிகரமாக்குவதில் இதுவும் ஒன்று. உங்கள் சாட் ரூம் தோழர்கள் சில விஷயங்களின் பேரில் உங்களுடைய கருத்தைக் கேட்க ஆவலாய் இருப்பதுபோல் காட்டிக்கொள்ளலாம், தங்களுடைய கருத்துகளையும் ஒளிவுமறைவில்லாமல் உங்களிடம் தெரியப்படுத்தலாம். ஆனால் உங்கள் குடும்பத்தாரோ, உங்களுடைய கருத்துகளையெல்லாம் கேட்பதற்கு நேரம் இல்லாதவர்கள்போல் பிஸியாகக் காணப்படலாம், அதோடு தங்களுடைய கருத்துகளைத் தயக்கமில்லாமல் சொல்ல ஒருவேளை அவர்கள் கஷ்டப்படலாம்.

என்றாலும், ‘என்னுடைய ஆன்-லைன் தோழர்களுக்கு நான் யார் என்பது உண்மையிலேயே தெரியுமா? என்னுடைய பிற்கால நலனில் அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுடைய உணர்ச்சிப்பூர்வ மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தின் மீது அவர்களைவிட உங்கள் குடும்பத்தாருக்கு எத்தனையோ மடங்கு அதிக அக்கறை இருக்கும். உங்களுடைய அப்பா அம்மா பைபிள் தராதரங்களின்படி வாழ முயற்சிப்பவர்கள் என்றால், உங்களோடு மனம்விட்டுப் பேச அவர்கள் ரொம்பவே வாஞ்சையாய் இருக்கிறார்கள். (எபேசியர் 6:4) உங்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மரியாதையான விதத்தில் அவர்களிடம் தெரியப்படுத்தினீர்கள் என்றால், நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அன்போடு அவர்கள் உங்களிடம் பேசுவதைக் காண்பீர்கள்; உங்களுக்கே ஆச்சரியமாகிவிடும்.​—லூக்கா 11:11-13.

ஆபத்துகளைத் தவிர்த்தல்

ஒருவேளை நீங்கள் சாட் ரூமை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம்; உதாரணத்திற்கு, ஸ்கூல் புராஜக்ட் ஒன்றிற்காக நீங்கள் அதைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். c அப்படிப்பட்ட சூழலில், சாட் ரூம்களினால் உங்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக்கொள்ள பின்வரும் சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கலாம்.

முதலாவது, இன்டர்நெட் கனெக்‍ஷன் உள்ள கம்ப்யூட்டரை உங்களுடைய ‘ப்ரைவேட் ரூமில்’ வைத்து பயன்படுத்தாதீர்கள். அப்படிப் பயன்படுத்துவது, விநோதமான ஒரு நகரத்தில் இருட்டான வீதியில் தனியாக நடந்துதிரிவதுபோல் இருக்கும்​—⁠வம்பை விலைக்கு வாங்குவீர்கள். எனவே, தனி அறையில் கம்ப்யூட்டரை வைப்பதற்குப் பதிலாக, வீட்டிலுள்ள பொது இடம் ஒன்றில் மற்றவர்கள் எளிதாகப் பார்க்கிறபடி வைத்துப் பயன்படுத்துங்கள்.

இரண்டாவது, நீங்கள் ஆன்-லைனில் எந்தெந்த ‘சைட்டுகளுக்கு’ செல்கிறீர்கள் என்பதை உங்கள் பெற்றோருக்குக் காண்பியுங்கள், அதோடு குறிப்பிட்ட ஒரு சாட் ரூமை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அவர்களுக்கு விளக்குங்கள், இப்படிச் செய்வதன் மூலம் அவர்களோடுள்ள பேச்சுத்தொடர்பை இன்னும் வளர்த்துக்கொள்ளுங்கள். இன்னொரு விஷயம், கம்ப்யூட்டர் முன் எவ்வளவு நேரம் உட்காருவீர்கள் என்பதை முன்னதாகவே நிர்ணயித்துக்கொள்ளுங்கள், பிறகு சரியாக அந்த நேரத்திற்கெல்லாம் சட்டென எழுந்துவிடுங்கள்.

மூன்றாவது, உங்களுக்கு வரும் மெசேஜுகளை ‘ஃபில்ட்டர்’ செய்யும் சில கம்ப்யூட்டர் ஸாஃப்ட்வேர் புரோகிராம்களை உங்கள் கம்ப்யூட்டரில் ‘இன்ஸ்டால்’ செய்துகொள்ளுங்கள்; ஆன்-லைனில் வரும் பாலியல் நச்சரிப்புகளிலிருந்து அது உங்களைப் பாதுகாக்கலாம். ஒருவேளை நீங்கள் ஆன்-லைனில் இருக்கும்போது, பாலியலில் ஈடுபடச்சொல்லி உங்களுக்கு ஏதாவது மெசேஜுகள் வந்தால், உடனடியாக அதை உங்கள் டீச்சரிடமோ உங்கள் பெற்றோரிடமோ தெரியப்படுத்துங்கள். நீங்கள் ஒரு மைனர் என்பதைத் தெரிந்துகொண்டே, செக்ஸ் சம்பந்தப்பட்ட பச்சை பச்சையான மெசேஜுகளை அல்லது ஆபாசப் படங்களை அனுப்பி உங்களுக்கு ‘அழைப்பு’ கொடுக்கும் ஆசாமிகள், சில நாடுகளில் க்ரிமினல் குற்றவாளிகளாகக் கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பற்றி போலீஸாரிடம் உடனடியாகப் புகார்செய்ய வேண்டும்.

மற்றுமொரு விஷயம், சாட் ரூமில் நீங்கள் சந்திக்கும் ஒருவரிடம் உங்களுடைய பெயரையோ, விலாசத்தையோ, ஃபோன் நம்பரையோ, உங்கள் பள்ளியின் பெயரையோ கொடுக்கவே கொடுக்காதீர்கள். அதுமட்டுமல்ல, அந்த நபர் தன்னை நேரில் வந்து சந்திக்கும்படி விடுக்கும் அழைப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஞானமுள்ள சாலொமோன் ராஜா எழுதிய பின்வரும் வார்த்தைகள், சாட் ரூம்களினால் ஏற்படுகிற ஆபத்துகளைப் பற்றி எச்சரிப்பது போலவே இருக்கின்றன: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.”​—நீதிமொழிகள் 22:3. (g05 10/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 14-ன் படம்]

ஆன்-லைனில் நீங்கள் எந்தெந்த ‘சைட்டுகளுக்கு’ செல்கிறீர்கள் என்பதை உங்கள் பெற்றோருக்குக் காண்பியுங்கள், அதுதான் புத்திசாலித்தனம்