டீனேஜர்களுக்குத் தேவை—பெரியவர்களின் நேரம்
டீனேஜர்களுக்குத் தேவை—பெரியவர்களின் நேரம்
பிஞ்சு குழந்தைகளை அன்பாக அரவணைத்து கவனித்துக்கொள்ளும்போது அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள் என்பது எந்த ஒரு அக்கறையுள்ள பெற்றோருக்கும் தெரிந்த விஷயம்தான். குழந்தைகள், தங்களை கொஞ்சிக் குலவுவதற்காக, தவழ்ந்து சென்று பெற்றோரின் மடியில் ஏறிக்கொள்வார்கள். ஆனால் டீனேஜ் பருவத்தை அடையும்போதோ இந்தப் பொடிசுகள், பெற்றோரின் அரவணைப்பை உதறித்தள்ளுகிறார்கள் என்று டாக்டர் பார்பரா ஸ்டாகர்ஸ் சொல்கிறார்; இவர் அ.ஐ.மா., கலிபோர்னியாவிலுள்ள ஓக்லாண்டில், குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டீனேஜ் வயதினர்கள் பிரிவில் இயக்குநராக பணியாற்றுகிறார். ஆனால், இந்த டீனேஜ் பருவத்தில்தான் பிள்ளைகளுக்கு தங்களுடைய பெற்றோர்களின் அரவணைப்பு மிக அதிகம் தேவைப்படுகிறது. ஏன்?
பிள்ளைகள் டீனேஜ் பருவத்தை அடையும்போது, அதிகமான நேரத்தை பெரியவர்களின் கவனிப்பு இல்லாமல்தான் செலவழிக்கிறார்கள். இது அவர்களைப் பிரச்சினையில் சிக்கவைக்கும் பயங்கரமான ஆபத்துகளில் ஒன்று என டாக்டர் ஸ்டாகர்ஸ் குறிப்பிடுகிறார். டோரன்டோ ஸ்டார் செய்தித்தாளுக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு சொன்னார்: “டீனேஜ் பருவத்தில்தான், பிள்ளைகள் தங்களைப் பற்றி புரிந்துகொள்கிறார்கள்; மேலும் உலகத்தோடு ஒத்துப்போகக் கற்றுக்கொள்கிறார்கள். அதோடு, இந்த வயதில் எதிலும் துணிந்து செயல்பட விரும்புவார்கள் என்பதாலும் நண்பர்களின் அழுத்தம் பலமாக இருக்கும் என்பதாலும் பேராபத்துகள் பன்மடங்கு அதிகமாகின்றன.” இந்த பருவத்தில் பல கட்டங்கள் இருக்கின்றன; ஆனால் அது வயதை சார்ந்து இல்லை. மாறாக “தகவல்களை சேகரிப்பதிலும் செயல்படுத்துவதிலும் அதை சோதனை செய்து பார்ப்பதிலும் [டீனேஜர்கள்] எப்படி செய்கிறார்கள் என்பதில்தான் சார்ந்திருக்கிறது” என்று ஸ்டாகர்ஸ் சொல்கிறார். டீனேஜ் பருவத்தின் ஆரம்ப கட்டத்தில், அவர்கள் சதா தங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பார்கள். தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். அதோடு முன்யோசனை இல்லாமல் செயல்படுவார்கள். அடுத்த கட்டத்தில், புதுப்புது விஷயங்களை செயல்படுத்துவதிலும் அதன் விளைவுகள் என்ன என்று பார்ப்பதிலும் ஆர்வமாய் இருப்பார்கள். கடைசி கட்டத்தில் யார்மீதும் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக செயல்பட விரும்புவார்கள்.
ஆம், டீனேஜ் பருவம் உற்சாகமும் ஆர்வமும் நிறைந்த பருவம். அதே சமயத்தில் அது பெற்றோர்களுக்கும் சரி டீனேஜர்களுக்கும் சரி குழப்பத்தை உண்டாக்கும் பருவமாகவும் இருக்கலாம். 20 வருடங்களுக்கும் மேலாக பருவ வயதினருக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர் ஸ்டாகர்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “பெரும்பாலான டீனேஜர்களுக்கு தங்கள்மீது அக்கறை காட்டும் பெரியவர் ஒருவருடன் நேரம் செலவழிப்பதுதான் மிக முக்கியம்.” ஆனால் இதை எப்படி செய்வது?
அடிக்கடி பேச்சுத்தொடர்பு கொள்ளுங்கள்! பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் சொல்வதை கவனமாக கேட்பதன் மூலம் நீங்கள் அவர்கள் மீது ஆழ்ந்த அக்கறை வைத்திருக்கிறீர்கள் என்று அவர்களுக்கு உறுதிப்படுத்துங்கள். உங்கள் டீனேஜ் பிள்ளைகளிடம் அவர்களுடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் தொடர்புபடுத்தி பார்க்க உதவும் விதத்தில் கேள்விகளை கேட்பதன் மூலமும் அவர்கள் எடுக்கும் ஞானமற்ற தீர்மானங்களின் விளைவுகளை முன்கூட்டியே கண்டுபிடிக்க உதவுவதன் மூலமும் நீங்கள் அவர்கள்மீது அக்கறை வைத்திருக்கிறீர்கள் என்பதை காட்டுங்கள். அவர்கள் எடுக்கும் சரியான தீர்மானங்களால் வரும் நல்ல விளைவுகளுக்காக அவர்களை பாராட்டுங்கள். எப்படிப்பட்ட நடத்தை ஏற்கத்தகுந்தது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள உதவுங்கள்.
பிள்ளைகள் தங்களுடைய பிரச்சினைகளை தாங்களே சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பொதுவான கருத்தின்படி பெற்றோர்கள் அவர்களை அப்படியே விட்டுவிட்டால், அவர்கள் ஒழுக்கக்கேடான மற்றும் பழிபாவத்திற்கு அஞ்சாதவர்களுடைய வலையில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது. (நீதிமொழிகள் 13:20) அதற்கு மாறாக, பைபிள் ஆலோசனைகளை கடைப்பிடிக்கும் பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகள் டீனேஜ் பருவத்தின் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கவும், பொறுப்புள்ள பெரியவர்களாக ஆகவும் மிகச் சிறந்த வாய்ப்பை அவர்களுக்கு அளிப்பார்கள். ஆகவே “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்த” பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.—நீதிமொழிகள் 22:6.
நல்ல பேச்சுத்தொடர்பு கொள்வதற்கும் டீனேஜ் பிள்ளைகளை வளர்ப்பதற்கும் தேவைப்படும் நடைமுறை ஆலோசனைகள் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் a என்ற புத்தகத்தில் உள்ளது. குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினருக்கும் தேவைப்படும் நடைமுறையான பைபிள் ஆலோசனைகளும் அதில் உள்ளது. (g05 10/8)
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.