துயர சம்பவத்தின்போது ஆறுதல் அளித்தல்
துயர சம்பவத்தின்போது ஆறுதல் அளித்தல்
டோலோரெஸ் கோமெஸ் என்ற ஒரு யெகோவாவின் சாட்சி ஸ்பெயினில், பார்சிலோனாவிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய நகரத்தில் வாழ்ந்து வந்தார். 44 வயதான அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக டாக்டர் சொன்னார். கிட்டத்தட்ட எட்டு மாதங்கள்தான் அவர் உயிரோடு இருப்பார் என்றும் சொன்னார். டோலோரெஸின் சக கிறிஸ்தவர்கள் அவர்மீது அன்பு மழை பொழிந்தார்கள். டோலோரெஸின் இறுதி நாட்களில், ஸ்பெயினின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சாட்சிகளல்லாத அவருடைய உறவினர்கள் வந்தார்கள்.
அருகிலிருந்த சாட்சிகள் டோலோரெஸின் உறவினர்களை நன்கு கவனித்துக்கொண்டார்கள். தங்குவதற்கு இடம், உணவு, போக்குவரத்து போன்ற எல்லா வசதிகளையும் செய்து தந்தார்கள். இறுதி மூச்சுவரை அவர் காட்டிய அசைக்க முடியாத விசுவாசமும், கண்ணியமிக்க நடத்தையும், அதோடு சாட்சிகளுடைய உபசரிப்பும் டோலோரெஸின் உறவினர்களை நெகிழ வைத்தன. அவர்களுடைய உணர்ச்சிகளை பின்வரும் கடிதம் வெளிப்படுத்துகிறது. (g05 10/22)
“பிறரிடம் உயர்ந்த அன்பை, சொல்லில் மட்டுமல்ல செயலிலும் மனப்பூர்வமாகக் காட்டுகிற ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்தக் கடிதத்தை நாங்கள் சமர்ப்பிக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சோக சம்பவம் நடந்த சமயத்தில், அதாவது எங்களுடைய தங்கை லோலீ [டோலோரெஸ்] மரணப்படுக்கையில் கிடந்த சமயத்தில், இந்த அன்பை நாங்கள் பெற்றோம்.
“டோலோரெஸின் இன்ப துன்பங்களிலும் கஷ்ட நஷ்டங்களிலும் கடைசி நிமிஷம்வரை பங்குகொண்ட உங்கள் அனைவருக்கும், இழப்பின் துக்கத்தில் பங்குகொள்ள (ஸ்பெயினின் பல பகுதிகளிலிருந்து) வந்திருக்கும் நாங்கள் எங்களுடைய இதயப்பூர்வ நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
“அதோடு, அன்பிற்கும் ஒற்றுமைக்கும் தலைசிறந்த உதாரணத்தை கண்கூடாக கண்டோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுடைய வீடுகளுக்கும் குடும்பங்களுக்கும் சொந்த வேலைகளுக்கும் நாங்கள் திரும்புகிறோம், ஆனால் புதிய மனநிலையோடு திரும்புகிறோம். எங்களுடைய தங்கை லோலீயும் நீங்களும் காட்டிய அபரிமிதமான அன்பு எங்கள் உள்ளத்தைத் தொட்டது. எங்களுடைய வாழ்க்கையைத் தொடர இந்த அன்பு எங்களைப் பலப்படுத்தும்.
“மிகுந்த அன்போடும் இதயப்பூர்வ நன்றிகளோடும் பிரியாவிடை பெறுகிறோம். நண்பர்களே, நாம் மீண்டும் சந்திக்கும் வரை, யெகோவா உங்கள்மீது ஆசீர்வாதங்களை பொழிவாராக.”
டோலோரெஸ் கோமெஸின் உறவினர்களும் சகோதர சகோதரிகளும் கையெழுத்திட்டது
[பக்கம் 31-ன் படங்கள்]
உள்ளூர் சாட்சிகளில் சிலர்