Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெண்கள் தங்கள் அழகை மறைக்க வேண்டுமா?

பெண்கள் தங்கள் அழகை மறைக்க வேண்டுமா?

பைபிளின் கருத்து

பெண்கள் தங்கள் அழகை மறைக்க வேண்டுமா?

“பெண்கள் ஃபேஷனுக்கு அடிமை” என்று ஜார்ஜ் சைமன்டன் சொன்னார். இவர் நியு யார்க் ஃபேஷன் இன்ஸ்டியுட் ஆஃப் டெக்னாலஜியில், அனுபவமுள்ள ஃபேஷன் டிசைனராகவும் பேராசிரியராகவும் இருக்கிறார். இவர் இவ்வாறு சொல்கிறார்: “பெண்கள் தங்களுக்கென்று ஒரு தனி ஸ்டைலை அமைத்துக்கொள்ளவும் மிடுக்குடன் இருக்கவும் தங்களுடைய அழகுக்கு மெருகூட்டவும் விரும்புகிறார்கள் . . . அப்படியெல்லாம் செய்வது அவர்களுடைய சுய மரியாதையை கூட்டுவதோடு அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கும் மரியாதை காட்டுவதாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.” ஆம், பெண்கள் அலங்காரம் செய்துகொள்வது, பெண்மையை வெளிக்காட்டவும் அழகுக்கு அழகு சேர்க்கவும் தன்னம்பிக்கையைப் பெறுவதற்கும் உதவி செய்வதாக ரொம்ப காலமாக நம்பப்படுகிறது.

என்றாலும், மதத்தை ஒரு சாக்காக உபயோகித்து பெண்களின் அலங்கரிப்பைப் பற்றி சிலர் தவறான கருத்தை கொண்டிருக்கிறார்கள். பொ.ச. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த டெர்டுலியன் இவ்வாறு எழுதினார்: “பரிசுத்தமான பெண்கள் . . . இயற்கையாகவே அழகாக இருந்தால் . . . தங்களை மேன்மேலும் அழகாக்கிக்கொள்ளக் கூடாது, மாறாக, இருக்கிற அழகைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.” அழகு சாதனங்களைப் பற்றி அவர் இவ்வாறு தொடர்ந்தார்: “பெண்கள் தங்கள் முகத்தில் க்ரீம் போட்டுக்கொண்டாலோ, கன்னங்களை ரூஜ் போட்டு சிகப்பாக்கிக்கொண்டாலோ, புருவங்களை பெரிதாக தீட்டிக்கொண்டாலோ கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்கிறார்கள்.” தங்க “நகைகளும்” வெள்ளி “ஆபரணங்களும்” மற்றவர்களை “வசீகரிக்கும் கருவிகளாக” இருக்கின்றன என்றும் அவர் சொன்னார்.

பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்ளவே கூடாது என்ற கருத்து இன்றும்கூட பலர் மத்தியில் நிலவுகிறது. நகைநட்டு போட்டுக்கொள்வது, மேக்கப் செய்துகொள்வது, கலர் கலராக டிரஸ் போட்டுக்கொள்வது போன்றவற்றையும்கூட சில மதங்கள் தடை செய்கின்றன. அப்படியென்றால், ஒரு கிறிஸ்தவ பெண் தன்னுடைய அழகை மறைக்க வேண்டுமா அல்லது அதை கூட்டிக்கொள்ள முயற்சி செய்யலாமா?

கடவுளுடைய கருத்து

நகைநட்டு அணிந்துகொள்வதைப் பற்றியும் மேக்கப் போட்டுக்கொள்வதைப் பற்றியும் பைபிள் விலாவாரியாக சொல்லவில்லை. என்றபோதிலும், கடவுள் இதையோ மற்ற அலங்கரிப்புகளையோ கண்டனம் செய்யவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.

எருசலேமை அவர் ஆசீர்வதித்த விதத்தைப் பற்றி சொல்லும்போது, அந்நகரத்தை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி, பின்வருமாறு சொன்னார்: ‘உன்னை ஆபரணங்களால் அலங்கரித்தேன், . . . நீ மிகவும் அழகுள்ளவளானாய்.’ (எசேக்கியேல் 16:11-13) இந்த ஆபரணங்கள் அடையாள அர்த்தமுள்ளதாக இருந்தாலும் அதில் கடகங்களும் (அதாவது, பிரேஸ்லெட்டுகளும்) சரப்பணியும் (நெக்லஸும்) காதணியும் (தோடுகளும்) அடங்கியிருந்தன. பைபிள் தங்க ஆபரணங்களை, கேட்க விருப்பமுள்ள ஒருவருக்கு ‘ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்தி சொல்லுகிறவனுக்கு’ ஒப்பிடுகிறது. (நீதிமொழிகள் 25:1, 12) ஆகவே, பைபிள் ஆபரணங்களைப் பற்றி நல்ல கருத்தில் ஒப்பிட்டு பேசுவதால் பெண்கள் தங்களை ஆபரணங்களால் அழகுபடுத்திக்கொள்வதை நிச்சயம் கடவுள் தடை செய்வதில்லை என்பது தெளிவாகிறது.

கிறிஸ்தவ பெண்கள் தங்களை அலங்கரிக்கிறார்கள்

சில பைபிள் வசனங்கள் பெண்களின் அலங்காரத்தைப் பற்றி நேரடியாக குறிப்பிடுகின்றன. ‘ஸ்திரீகள் தங்களை தகுதியான வஸ்திரத்தினால் அலங்கரிக்க வேண்டும்’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். பெண்கள் “நாணத்தினாலும் [“அடக்கத்தினாலும்,” NW] தெளிந்த புத்தியினாலும்” தங்களை அலங்கரித்துக்கொள்வது தாங்கள் தேவபக்தியுள்ளவர்கள் என்பதைக் காட்டுவதாக இருக்கும். (1 தீமோத்தேயு 2:9, 10) கிறிஸ்தவப் பெண்கள் தங்களை இவ்வாறு அடக்கமாக அலங்கரிக்கும்போது கடவுளுடைய போதனைகளுக்கும் சபைக்கும் நற்பெயரைத் தேடித் தருகிறார்கள்.

எனினும் அதே வசனங்கள் ‘பெண்கள் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல் . . . தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற பெண்களுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினால் தங்களை அலங்கரிக்க வேண்டும்’ என்றும் சொல்கிறதே என சிலர் வாதாடலாம். அப்படியானால், தேவபக்தியுள்ள பெண்கள் சிகை அலங்காரம் செய்துகொள்ளக் கூடாது அல்லது நகைகளை அணிந்துகொள்ளக் கூடாது என்று இது அர்த்தப்படுத்துகிறதா?

இல்லவே இல்லை. பைபிள், அலங்கரிப்பைப் பற்றி சாதகமாக பேசுகிறது. ஆகவே, சில விதமான அலங்கரிப்பைத் தடைசெய்வதற்கு பதிலாக பெண்கள் மிக முக்கியமாக கிறிஸ்தவ குணங்களாலும் நற்கிரியைகளாலும் தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும் என்று பவுல் ஊக்குவித்தார்.

உள்நோக்கம் முக்கியம்

அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.” (ரோமர் 14:13) இந்த வசனம், நம் அலங்கரிப்போடு எவ்வாறு பொருந்துகிறது?

‘ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்’ என்று பவுல் முதலில் சொல்கிறார். அதன்பின், ‘சகோதரனை இடறலாக்காமல்’ இருப்பதைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார். எது சரியான அலங்காரம் என்பது அந்தந்த ஊருக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாறும். ஒரு காலத்திலோ இடத்திலோ ஏற்றுக்கொள்ளப்படுவது வேறொரு காலத்திலோ இடத்திலோ ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கலாம். நம்முடைய கலாச்சாரத்தில் உள்ளவர்கள் கெட்ட நடத்தையோடு சம்பந்தப்படுத்தும் அலங்கரிப்பை செய்துகொள்வதால் நாம் மற்றவர்களுக்கு இடறலுண்டாக்கவோ அவர்களைப் புண்படுத்தவோ கூடாது. தேவபக்தியுள்ள பெண்கள் தங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் அணியும் உடையை என் சமுதாயம் எப்படி கருதுகிறது? சபையிலுள்ளவர்கள் என்னுடைய ஆடையைப் பார்த்து தர்மசங்கடம் அடைகிறார்களா, குழம்புகிறார்களா, அல்லது வெட்கப்படுகிறார்களா?’ ஒரு கிறிஸ்தவ பெண், தன் விருப்பப்படி உடை அணிந்துகொள்ளவும் சிகை அலங்காரம் செய்துகொள்ளவும் உரிமை பெற்றிருந்தாலும் அது மற்றவர்களை பாதிக்குமானால் அந்த உரிமையை விட்டுக்கொடுப்பாள்.​—1 கொரிந்தியர் 10:23, 24.

அதோடு, நம் தோற்றத்திற்கு அளவுக்கதிகமாக கவனம் செலுத்தினால் நம் மனப்பான்மை கெட்டுப்போகலாம். இன்று அநேக நாடுகளில், ஒழுக்கங்கெட்ட விதத்தில் தங்களிடம் கவனத்தை ஈர்ப்பதற்காகவே அடக்கமில்லாத உடையை சில பெண்கள் அணிகிறார்கள். ஆனால் கிறிஸ்தவ பெண்கள் அப்படிப்பட்ட அலங்கரிப்பை அறவே வெறுத்து ஒதுக்குகிறார்கள். “தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு” தெளிந்த புத்தியுள்ளவர்களாயும், கற்புள்ளவர்களாயும் இருக்க கடுமையாக முயற்சிக்கிறார்கள்.​—தீத்து 2:4, 5.

எனவே கிறிஸ்தவ பெண்கள் தங்களை எந்த அளவிற்கு அழகுபடுத்திக்கொண்டாலும் ‘இருதயத்தில் மறைந்திருக்கிற குணம்தான்’ உண்மையான அழகு என்று புரிந்துகொள்கிறார்கள். அதை அவர்களுடைய எண்ணத்திலும் நடத்தையிலும் வெளிக்காட்டுகிறார்கள். (1 பேதுரு 3:3, 4) உடையையும் அழகு சாதனங்களையும் நகைகளையும் ஞானமாக தேர்ந்தெடுக்கும் ஒரு பெண் மற்றவர்களுடைய மரியாதையை சம்பாதித்துக்கொள்கிறாள், கடவுளுக்கும் கனத்தைச் சேர்க்கிறாள். (g05 10/8)