Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மெக்சிகோவின் சிறைகளில் சீர்திருத்தம்

மெக்சிகோவின் சிறைகளில் சீர்திருத்தம்

மெக்சிகோவின் சிறைகளில் சீர்திருத்தம்

மெக்சிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

குற்றவாளிகளை சீர்திருத்தவே அவர்கள் சிறையில் அடைக்கப்படுவதாக சில சமயம் சொல்லப்படுகிறது. என்றாலும், சிறைவாசம் மட்டுமே ஒரு குற்றவாளியை திருத்திவிடாது. திருந்த வேண்டும் என்ற எண்ணம் ஒருவருடைய மனதிலிருந்தும் இருதயத்திலிருந்தும் பிறக்க வேண்டும். அதோடு, செய்த தவறுகளுக்காக உள்ளப்பூர்வமாய் வருந்தி வாழ்க்கையை மாற்றிக்கொள்வதற்கான உத்வேகமும் தேவை. உலகெங்கிலும் உள்ள சிறைச்சாலைகள் பலவற்றில், யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் கல்வி திட்டம் சிறைவாசிகள் சீர்த்திருந்த துணைப் புரிந்திருக்கிறது. மெக்சிகோவில் அவர்கள் மேற்கொண்டிருக்கும் திட்டத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.

யெகோவாவின் சாட்சிகள் மெக்சிகோவிலுள்ள 150 சிறைச்சாலைகளைச் சென்று சந்திக்கின்றனர்; அங்குள்ளவர்களுக்கு பைபிளை வாசிக்கவும், நன்னெறிகளுடன் வாழவும், பைபிள் சத்தியங்களை அறியவும் உதவி செய்கின்றனர். உதாரணமாக, சிஹுவாஹுவா மாகாணத்தில் சியுடாட் ஹுவாரெஸ் என்ற இடத்திலுள்ள ஒரு சிறைச்சாலையில் நடந்ததைச் சற்று கவனியுங்கள். இந்தச் சிறைச்சாலையில் இருக்கும் சுமார் 1,200 கைதிகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து பிரசங்கித்து வருகின்றனர். கைதிகளுக்கு அவர்கள்மீது ஆழ்ந்த மரியாதை இருப்பது மட்டுமல்லாமல் அவர்களை பேராபத்துகளிலிருந்துகூட காப்பாற்றுகின்றனர். ஒரு முறை அந்தச் சிறையில் ஒரு பெரிய கலவரம் வெடித்தது. யெகோவாவின் சாட்சிகளைக் காப்பாற்றுவதற்காக, அங்கிருந்த கொடிய குற்றவாளிகள் சிலர் அந்தக் கும்பலை அடக்கி, சாட்சிகள் பத்திரமாக வெளியேற வழி செய்தனர்.

மே 8, 2001 விழித்தெழு! (ஆங்கிலம்) இதழில், “கைதிகளை சீர்திருத்த முடியுமா?” என்ற தலைப்பில் முகப்புக் கட்டுரைகள் வெளிவந்தன; அவை கைதிகளையும் சிறை அதிகாரிகளையும் மிகவும் கவர்ந்தன. ஸனாரா மாகாணத்தில் சான் லூயிஸ் ரியோ கொலோராதோ நகரிலுள்ள சிறையில் 12 சாட்சிகள் 2,149 பத்திரிகைகளை வினியோகித்தனர்.

பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறவர்களை யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொரு வாரமும் சென்று சந்திக்கின்றனர். அங்கே அவர்களுக்கு பைபிளைப் பற்றி போதித்தும் பைபிள் சார்ந்த கூட்டங்களை நடத்தியும் வருகின்றனர். இந்த பைபிள் கல்வித் திட்டம் கைதிகளின் வாழ்க்கையை மாற்றுவதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது தெரியுமா?

கிறிஸ்தவ ஊழியர்களாக மாறிய கைதிகள்

ஹார்ஹே என்பவர் 20 வயது ஆவதற்குள்ளேயே குற்றச்செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார். இஸ்லாஸ் மரியாஸிலுள்ள சிறைச்சாலையில் 13 வருஷம் சிறைவாசம் அனுபவித்த பிறகு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் மறுபடியும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார். அடியாளாக மாறிய அவர், கொலை செய்யச் சொல்லி தகவல் வந்தால் உடனே காரியத்தை முடித்துவிடுவார். இப்படி 32 கொலைகளைச் செய்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய முன்னாள் நிழலுலக தாதாக்கள் அவரை விடுதலை செய்ய, கட்டுக் கட்டாக பணம் தருவதற்குத் தயாராக இருப்பதாய் தன்னுடைய வக்கீல்கள் மூலம் தெரிந்துகொண்டார். அந்த தாதாக்கள் ஹார்ஹேயை வெளியே கொண்டுவர முயற்சி செய்வதற்கு காரணம் அவர்களுக்கு இன்னும் ஒரு ஆளை தீர்த்துக்கட்ட வேண்டுமாம். அதற்குள் ஹார்ஹே யெகோவாவின் சாட்சிகளுடன் சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பித்திருந்தார். முழுக்காட்டுதல் எடுக்கும் அளவிற்கு ஆன்மீக முன்னேற்றம் செய்தார். பிறகு சிறையிலேயே முழுநேர பிரசங்கிப்பாளராக, அதாவது பயனியராக, ஊழியம் செய்தார். தாதாக்களின் உதவியால் விடுதலை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு அடியாளாக இருப்பாரா அல்லது சிறையிலே இருந்து யெகோவாவை சேவிப்பாரா? “நான் செய்த தவறுகளுக்கெல்லாம் பிராயச்சித்தமாக சிறையிலேயே தங்க விரும்புகிறேன். பேரரசரான யெகோவா தேவனை இப்போது நான் வணங்குகிறேன்” என்று ஹார்ஹே சொன்னார். ஹார்ஹே கடைசிவரை கடவுளுக்கு உண்மையாய் இருந்து, உயிர்த்தெழுதல் நம்பிக்கையோடு மரித்தார். அவரோடு சிறையில் இருந்த மற்ற பைபிள் மாணவர்கள் அவரைப் பற்றி இவ்வாறு சொன்னார்கள்: “அவர் ‘சத்தியத்தை அறிந்துகொண்டார், சத்தியம் அவரை விடுதலையாக்கியது.’”​—யோவான் 8:⁠32.

கொலை, கடத்தல், திருட்டு ஆகிய குற்றங்களுக்காக டேவிட் 110 வருடம் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். பயங்கரமான குற்றவாளிகளை அடைத்து வைக்கும் விசேஷ பாதுகாப்புள்ள தனிப் பிரிவில் அவர் அடைத்து வைக்கப்பட்டார். ஆனால், யெகோவாவின் சாட்சிகளிடம் பைபிள் படிக்க ஆரம்பித்ததிலிருந்து, அவரிடம் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், அந்தப் பிரிவிற்கு வெளியே நடந்த ஒரு கூட்டத்திற்கு காவலாளியுடன் செல்ல விசேஷ அனுமதி அளிக்கப்பட்டது. பைபிள் தராதரங்களுக்கு இசைய அவருடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டதால், இப்போது அவர் பிரசங்க வேலையில் பங்கு கொள்கிறார். அவருடைய சிறைப் பிரிவிலேயே உள்ள மற்ற குற்றவாளிகளுக்கு பைபிள் படிப்பு நடத்திவருகிறார். அவருக்கு மொத்தம் எட்டு பைபிள் படிப்புகள் இருக்கின்றன. அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பார்த்து அவருடைய குடும்பத்தாருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை; அவர்களும் அவரிடம் பைபிள் படிக்க செல்கின்றனர். டேவிட் இவ்வாறு சொல்கிறார்: “இப்படிப்பட்ட ஆன்மீக விடுதலையை அளித்ததற்காக யெகோவாவுக்கு சளைக்காமல் நன்றி சொல்லிவருகிறேன்.”

யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்பட்ட பைபிள் கல்வித் திட்டத்தின் விளைவாக 79 சிறைகளில், 175 பேர் தங்களுடைய வாழ்க்கையை மாற்றியுள்ளனர். அவர்கள் பிரசங்க வேலை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 80 பேர் முழுக்காட்டுதல் பெற்றிருக்கின்றனர். அவர்கள் மொத்தம் 703 கைதிகளுக்கு பைபிள் படிப்புகளை நடத்திவருகின்றனர். அதோடு, சிறையில் நடக்கும் கூட்டங்களுக்கு சுமார் 900 கைதிகள் வருகின்றனர்.

அதிகாரிகளிடமிருந்து பாராட்டு

யெகோவாவின் சாட்சிகள் செய்யும் வேலைக்கு சிறை அதிகாரிகள் பாராட்டு தெரிவிக்கின்றனர். உதாரணத்திற்கு, யூக்கட்டன் மாநிலத்தின் டேகாஷ் பகுதியிலுள்ள ஒரு சிறையின் அதிகாரிகள், கைதிகள்மீது யெகோவாவின் சாட்சிகள் காட்டும் “விலைமதிப்புள்ள தன்னலமற்ற சேவைக்கும் மனிதநேயத்திற்கும்” நன்றி தெரிவிக்கும் விதத்தில், 2002-⁠ல் அவர்களுக்கு ஒரு சான்றிதழை வழங்கினர்.

இந்தச் சிறையில் பைபிள் கல்வித் திட்டத்தை சாட்சிகள் முதன்முதலில் ஆரம்பித்தபோது, அவர்களுடைய கூட்டங்கள் பலத்த பாதுகாப்போடு நடைபெற்றன. காவலாளிகள் கண் இமைக்காமல் கைதிகளை கண்காணித்து வந்தனர். ஆனால் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, கைதிகளிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்த காவலாளிகள் அவர்களிடம் மரியாதையாக நடந்துகொண்டனர். அதன் பிறகு அவர்களை கண்காணிக்க ஒரேவொரு காவலாளிதான் நியமிக்கப்பட்டார்.

சியுடாட் ஹுவாரெஸிலுள்ள சிறையில் ஒரு ராஜ்ய மன்றம் இருக்கிறது. உபயோகிக்காமல் கிடந்த உலோக ஃப்ரேம்களாலான கட்டிடத்தை ராஜ்ய மன்றமாக மாற்ற அவர்களுக்கு அனுமதி கிடைத்தது; அதற்காக கட்டுமான பொருட்களை வெளியிலிருந்து உள்ளே கொண்டுசெல்லவும் அனுமதி கிடைத்தது. முழுக்காட்டப்பட்ட 13 கைதிகளும் அவர்களுடைய பைபிள் மாணாக்கர்களான மற்ற கைதிகளும் சேர்ந்து ராஜ்ய மன்றத்தைக் கட்டினர். அந்த மன்றத்தில் ஒலிபெருக்கி வசதிகள், ஒரு கழிவறை, சினிமா தியேட்டரில் இருப்பதைப் போன்ற இருக்கைகள் உள்ளன. 100 பேர் தாராளமாக உட்காரும் அளவிற்கு போதிய இடவசதி அங்கு உள்ளது. வாரத்தில் நடைபெறும் ஐந்து கூட்டங்களுக்கும் சுமார் 50 பேர் தவறாமல் ஆஜராகின்றனர்.

ஆம், பைபிள் கல்வித் திட்டத்தால் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையைச் சீரமைத்துக்கொள்ள முடியும். பெரும் பாவத்தை செய்து பாபிலோனில் கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட பைபிள் கதாபாத்திரமான மனாசே என்ற யூத ராஜா மனந்திரும்பி மன்னிப்பிற்காக கடவுளிடம் ஜெபித்தது போலவே, இன்றுள்ள சிறை கைதிகளும் தாங்கள் செய்த பாவத்திற்காக மனந்திரும்பி தேவ பக்தியுள்ளவர்களாக மாற முடியும்.​—2 நாளாகமம் 33:12, 13. (g05 10/8)

[பக்கம் 20, 21-ன் படம்]

சிறைக்குள் முழுக்காட்டுதல்

[பக்கம் 20, 21-ன் படம்]

சிறையில் நடந்த பயனியர் ஊழியப் பள்ளியில் கலந்துகொண்ட முழுநேர ஊழியர்களும் அவர்களுடைய போதனையாளர்களும்