Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“வெள்ளை டிராகன்கள்” உஷார்!

“வெள்ளை டிராகன்கள்” உஷார்!

“வெள்ளை டிராகன்கள்” உஷார்!

சுவிட்சர்லாந்திலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

சிறகுகள் இல்லை, ஆனால் பறக்கும், கைகள் இல்லை, ஆனால் அடிக்கும்,

கண்கள் இல்லை, ஆனால் பார்க்கும்; அது என்ன?​—⁠வெள்ளை டிராகன்களைப் பற்றி இடைக்காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வரும் ஒரு விடுகதை.

பனிச்சரிவுகள்​—⁠இவற்றிற்கு வெள்ளை டிராகன்கள் என்ற பெயர் ஏக பொருத்தம்; கண்ணிமைக்கும் நேரத்திற்குள், மலையேறும் ஒருவரை இவை விழுங்கிவிடலாம் அல்லது ஒரு முழு கிராமத்தையே புதைத்துவிடலாம். அதனால்தான், ஜனங்கள் இந்தப் பனிச்சரிவுகளுக்கு வெள்ளை மரணம் என்றுகூட பெயரிட்டார்கள். பிரமிப்பூட்டும் இந்த இயற்கை நிகழ்வு எதனால் உண்டாகிறது? பனிபோர்த்திய மலைகள் உள்ள இடத்தில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், இதற்கான பதில் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். ஆனால், நீங்கள் வெப்பமண்டலப் பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், அல்லது சமவெளிப் பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், அதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒருவேளை ஆர்வம்காட்ட மாட்டீர்கள்; ஏனெனில் அத்தகைய பனிச்சரிவுகள் ஏற்படும் இடங்களுக்கு நீங்கள் துணிந்து சுற்றுலா செல்லாதவரை, அவற்றால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேரிடப்போவதில்லை.

பனி அதிகமாகக் கொட்டுகிற, அதுவும் அடிக்கடி கொட்டுகிற உயரமான மலைகளில்தான் பனிச்சரிவுகள் உதயமாகின்றன. மிக ஏராளமான பனிக்கட்டிகள், ஐஸ்கட்டிகள், மண்கட்டிகள், பாறைகள், அடிமரங்கள் போன்ற பல பொருள்கள் மலைச்சரிவிலிருந்தோ செங்குத்தான பாறை விளிம்பிலிருந்தோ பெருமளவில் படு வேகமாக திடீரென வந்து விழும்போது பனிச்சரிவுகள் ஏற்படுகின்றன; அப்போது பெரும்பாலும் அவற்றின் பாதைகளில் இருக்கிற அனைத்தையும் அவை நாசப்படுத்திவிடுகின்றன. அத்தகைய பனிச்சரிவுகளின் பளுவும் சக்தியும் மட்டுமே பேரழிவை உண்டுபண்ணுவதில்லை, அவை வருவதற்கு முன் அடிக்கிற பலத்த காற்றும்கூட அழிவை உண்டாக்குகிறது; ஆம், அது வீசும் திசையில் உள்ள அடர்ந்த மரங்களையும், பாலங்கள், சாலைகள், இரயில் தண்டவாளங்கள் போன்ற பிறவற்றையும் அவை சின்னாபின்னமாக்கிவிடுகின்றன.

ஓர் இயற்கை நிகழ்வு

டன் கணக்கிலுள்ள அந்த வெண்சக்தியின் பெரும்பகுதி பொடிப்பொடியான பனித்திவலைகளால் ஆனது. பூப்போல் அழகாகப் பொழியும் பனி மழை, புயல்போல் ஆபத்தான பனிச்சரிவாக எப்படி மாறுகிறது? இதற்கான பதில் பனியின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளில் இருக்கிறது. பனியானது படிகங்கள், வில்லைகள், துகள்கள் என்று வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது. பனித்திவலைகள் எப்போதுமே நட்சத்திரம் போன்ற கூர்மையான அறுங்கோண வடிவத்தில், கணக்குவழக்கில்லா டிஸைன்களில் காணப்படுகின்றன. ஒவ்வொரு பனித்திவலையும் ஓர் அற்புதம்தான். தரையில் விழுந்தவுடன், அந்தப் பனிப்படிகங்களின் வடிவம் மாறிவிடலாம். காற்றில் ஏற்படுகிற வெப்பநிலை மாற்றங்களாலும் அடுக்கடுக்காக விழுந்துகொண்டே இருக்கிற பனியின் அழுத்தத்தினாலும் அவை தரையோடு தரையாக ஆகி, அளவில் சிறியதாகிவிடுகின்றன. முப்பது சென்டிமீட்டர் அளவுக்குப் புதிதாக விழும் பனி, வெறும் 24 மணிநேரத்திற்குள் பத்து சென்ட்டிமீட்டர் அளவுக்கு அமுங்கிவிடலாம்.

மலைகளைப் போர்த்தியிருக்கும் பனியின் ஸ்திரத்தன்மை, பனித்திவலைகளின் வடிவத்தைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். அறுங்கோண வடிவப் படிகங்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துகொள்கின்றன, ஆனால் துகள்களும் வில்லைகளும் ஒன்றின்மீது ஒன்று உருளுவதால் உறுதியற்ற அடுக்குகளை உண்டாக்குகின்றன. இந்த உறுதியற்ற அடுக்குகள் அவற்றின் கீழுள்ள இன்னுமதிக கெட்டியான அடுக்குக்கு மேல் எளிதில் சரிந்துவிடலாம். எனவே அந்தப் பனியின் தன்மை, அதன் அளவு, நிலப்பகுதியின் சரிவு, வெப்பநிலை மாற்றங்கள், காற்றின் அழுத்தம் ஆகிய அனைத்தும் பனிச்சரிவு ஏற்படுமா இல்லையா என்பதை நிர்ணயிக்கின்றன. பனிமூடிய செங்குத்தான பகுதியில் நடந்துசெல்லும் ஓர் ஆளோ அல்லது ஒரு மிருகமோகூட பனிச்சரிவுக்குத் தெரியாத்தனமாகக் காரணமாகிவிடலாம். ஆனால், வேறுவிதமான பனிச்சரிவுகளும் இருக்கின்றன.

அதற்கு உதாரணம், காற்றுவீச்சுப் பனிச்சரிவுகள் ஆகும்; புதிதாக விழுகிற பனியிலுள்ள படிகங்களும் துகள்களும் சேர்ந்த கலவையானது, அதாவது பனிச்சறுக்கு விளையாடுபவர்கள் அதிகமாக விரும்புகிற ‘பௌடர்’ போன்ற பனியானது, பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்படும்போது அத்தகைய பனிச்சரிவுகள் ஏற்படுகின்றன. அந்தப் பனி பஞ்சுபோல் லேசாக இருப்பதால், காற்றிலே மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பள்ளத்தாக்கை நோக்கி வீசியடிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், பனிப்பாறைக்கு முன்னால் உள்ள காற்றழுத்தம் அந்தளவு அதிகரிப்பதால் காற்றுவீச்சுப் பனிச்சரிவு சில நொடிகளில் கூரைகளையே அலக்காகத் தூக்கிவிடும், வீடுகளைக்கூட நாசமாக்கிவிடும்.

ஹார்ட்-ஸ்லாப் பனிச்சரிவு என்பது படுபயங்கரமான மற்றொரு வகை பனிச்சரிவாகும். பல காலமாக விழுகிற பனி அப்படியே உறைந்து கெட்டியாகி, அடுக்கடுக்காய் படிந்துவிடுகிறது, இப்படிப் படிந்துவிடுகிற பழைய பனிதான் ஹார்ட்-ஸ்லாப் பனிச்சரிவுகள் உண்டாவதற்குக் காரணம். பனியின் மேல் அடுக்கு உடையும்போது, பெரிய பெரிய ஐஸ் பாளங்கள் மணிக்கு 50-லிருந்து 80 கிலோமீட்டர் வேகத்தில் மலைச்சரிவிலிருந்து கீழே சறுக்கி விழலாம். சிலசமயம் அத்தகைய கெட்டியான ஐஸ் ஒரு செங்குத்துப் பாறையின் விளிம்பில் அசைந்தாடிக்கொண்டிருக்கலாம். பனிச்சறுக்கு விளையாடுபவர்களுக்கு இவை மிகுந்த ஆபத்து விளைவிக்கக்கூடும்; ஏனென்றால், பனிச்சறுக்கு விளையாடும் ஒருவரின் பளு மாத்திரம்போதும் அந்தப் பாளம் உடைந்து, பனிச்சரிவு ஏற்பட்டுவிடும், பிறகு சில நொடிகளுக்குள் அந்த நபர் அதில் ஒரேயடியாய் புதைந்துவிடுவார்.

பனிச்சரிவுகளின் அபாயம் இளவேனில் காலத்தில் அதிகரிக்கிறது. மழையோ சுரீரென்ற வெயிலோ பனியை இளக வைக்கிறது, இது பெரும்பாலும் வெட்-ஸ்லாப் என்ற பனிச்சரிவுகளை உண்டாக்குகிறது. இவை வெகு மெதுவாகவே நகருகின்றன, ஆனால் இத்தகைய பனிச்சரிவின்போது அந்த மலைச்சரிவில் உள்ள பனிப்பாளம் முழுவதுமே விழத் தொடங்கிவிடலாம். பனிப்பாறைகள் கீழே நழுவிக்கொண்டே போகையில், வழியெல்லாம் கற்பாறைகளையும், மரங்களையும், மண்ணையும் வாரிக்கொண்டு, கடைசியில் போய்ச்சேரும் இடத்தில் ஒரு பெரிய குப்பை மேட்டையே உருவாக்கிவிடக்கூடும்.

பனிச்சரிவுகளைப் போன்றவைதான் பனிக்கட்டி ஆறுகள், அதாவது ஐஸ்கட்டிச்சரிவுகள். பனிக்கட்டி ஆறுகள் என்பவை கடுங்குளிர் பிரதேசங்களிலோ, தாழ்நிலப் பகுதிகளிலோ, பனி உருகாத நிழலுள்ள மலைச்சரிவுகளிலோ உண்டாகிற இராட்சத ஐஸ் பாளங்கள் ஆகும். ஆனால் காலப்போக்கில், அங்குள்ள பனி கெட்டியான ஐஸாக உறைந்துவிடுகிறது. பனிக்கட்டி ஆறுகள் மிக மெதுவாக கீழ்நோக்கி நகருகின்றன. அவை எந்த வழியே நகரும் என்பதைக் கணிக்க முடியும் என்பதால், அவற்றால் அந்தளவு தீங்கோ சேதமோ உண்டாவதில்லை.

பனிச்சரிவுகள் எங்கு ஏற்படுகின்றன?

நம்முடைய கிரகத்திலுள்ள பனிப்பிரதேசங்கள் அனைத்திலுமே பனிச்சரிவுகள் ஏற்படுவதில்லை. அவை ஏற்படுவதற்கு, குறிப்பிட்ட உயரமுள்ள மலைகள் இருக்க வேண்டும், பனியையும் ஐஸையும் உண்டாக்குகிற சீதோஷ்ண நிலையும் வேண்டும். ஒவ்வொரு வருடமும் உலகெங்கும் பத்து லட்சம் பனிச்சரிவுகள் ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவை ஏற்படக்கூடிய இடங்களில் சில பின்வருமாறு: தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைகள், வட அமெரிக்காவில் உள்ள ராக்கி மலைகள், ஆசியாவில் உள்ள இமய மலைத்தொடர்கள், அதோடு பிரான்சின் வடகிழக்கிலிருந்து சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியாவரை நீண்டிருக்கும் ஐரோப்பிய ஆல்ப்ஸ் மலைகள். இந்தப் பிரதேசங்களில் உள்ள குடியிருப்புப் பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 200 பேர் பனிச்சரிவுகள் காரணமாக உயிரிழக்கிறார்கள். இதில், சராசரியாக 26 பேர் சுவிட்சர்லாந்தில் உயிரிழக்கிறார்கள்.

பெரு என்ற இடத்தில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் படுபயங்கரமான பனிச்சரிவுகள் இரண்டு முறை ஏற்பட்டிருக்கின்றன. 1962-⁠ம் ஆண்டின்போது, 6,768 மீட்டர் உயரமுள்ள வாஸ்காரான் என்ற மலையில், 50 மீட்டர் திண்ணமுடைய ஐஸ்கட்டியிலிருந்து ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள ஐஸ் பாளம் ஒன்று உடைந்து விலகியது. 40 லட்சம் டன் எடையுள்ள அந்த ஐஸ் பாளம் நியு யார்க்கின் எம்ப்பையர் ஸ்டேட் பில்டிங்கின் உயரத்தைவிட, அதாவது 102 மாடிக் கட்டிடத்தின் உயரத்தைவிட, நான்கு மடங்கு அதிகமாக இருந்தது! மாபெரும் அந்த ஐஸ்பாளம் 15 நிமிடத்திற்குள் 18 கிலோமீட்டர் பயணித்தது. அந்தப் பனிப்பாளத்திற்கு அடியில் ஏழு கிராமங்கள் புதைந்துபோயின, இரண்டு கிலோமீட்டர் பரப்பளவில் 13 மீட்டர் ஆழத்திற்குக் குவிக்கப்பட்ட அதன் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3,000-லிருந்து 4,000 பேர் உயிரிழந்தார்கள். அதே போன்ற சம்பவம், 1970-⁠ல் மீண்டும் அந்த மலையில் நடந்தது. ஆனால், இம்முறை பூமியதிர்ச்சியின் காரணமாக வடக்கு மலைச்சிகரம் ஒன்றை மூடியிருந்த ஐஸ்கட்டி உடைந்துபோனது. மலை முழுவதுமே நொறுங்கிப்போனது. அப்போது, ஆயிரக்கணக்கான எடையுள்ள பனியும், பாறையும், ஐஸும் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் குறுகலான ஒரு மலையிடுக்கு வாயிலாகச் சென்றது, வழியெல்லாம் பெரிய பெரிய பாறைகளையும் வீடுகளையும் அள்ளிக்கொண்டு சென்றது. 25,000 உயிர்கள் பறிபோனதாகக் கணக்கிடப்பட்டது. மலைப்பிரதேசங்களில் வாழ்கிற மக்களை அத்தகைய துயரச் சம்பவங்களிலிருந்து பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்?

பனிச்சரிவுகளைத் தடுக்க முடியுமா?

சிலவற்றைத் தடுக்க முடியும். மற்றவற்றைத் தடுக்க முடியாது. வானிலை மாறுதல்களால் ஏற்படுகிற பனிச்சரிவுகளைத் தடுக்க முடியாது; அவை கூரையிலிருந்து வடிந்து விழுகிற மழைநீர்போல் சர்வசகஜமானவை. பருவகால சுழற்சியின் காரணமாக ஏற்படும் இயற்கை நிகழ்வுகள் அவை. ஆனால், அரசாங்க அதிகாரிகள் ஒருசில காரியங்களை அனுபவப்பூர்வமாகக் கற்றிருக்கிறார்கள், அதாவது அத்தகைய பனிச்சரிவுகள் ஏற்படும் அபாயமுள்ள இடங்களில் வீடுகள் கட்டுவதற்குத் தடைவிதித்திருக்கிறார்கள், அதோடு சுரங்கப்பாதைகளை அல்லது மூடுபாதைகளை அமைப்பதன் மூலம் போக்குவரத்து பாதைகளைப் பாதுகாத்திருக்கிறார்கள். மறுபட்சத்தில், எச்சரிக்கைகளையும் தடைகளையும் அசட்டை செய்கிற முன்யோசனையில்லா ஆட்களால்​—⁠உதாரணத்திற்கு, பனிச்சறுக்கு விளையாடும் துணிச்சல்கார ஆட்களால்​—⁠ஏற்படுகிற பனிச்சரிவுகள் தடுக்கப்படலாம்.

கடந்தகால அனுபவங்கள் காரணமாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. 1931-⁠ல், ஸ்விஸ் ஆய்வுக்குழு ஒன்று நிறுவப்பட்டது; 1936-⁠ல், தைரியமிக்க ஆய்வாளர்கள் அடங்கிய முதல் கூட்டணி ஒன்று, டாவோஸ் என்ற ஊருக்கு மேல் அமைந்திருந்த வைஸ்ஃப்ளூயாக் என்ற பகுதியில் 2,690 மீட்டர் உயரத்தில் அறிவியல் ஆய்வுகளை நடத்த ஆரம்பித்தது. பிறகு, 1942-⁠ல், பனி மற்றும் பனிச்சரிவுகளை ஆய்வுசெய்கிற ஸ்விஸ் கூட்டரசு நிறுவனம் தொடங்கப்பட்டது. அங்குள்ள மலைகளில் வெவ்வேறு இடங்களில் இன்னும் ஏராளமான நவீன வானிலை ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் வானிலையில் ஏற்படும் மாற்றங்களை முன்னறிவிக்கின்றன, அதோடு பாதுகாப்பற்ற மலைச்சரிவுகளில் நிகழக்கூடிய பனிச்சரிவின் ஆபத்தைக் குறித்து எச்சரிப்பு செய்திகளைத் தவறாமல் ஒலிபரப்புகின்றன.

இத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், வானிலையில் எதிர்பாரா மாற்றங்கள் ஏற்படக்கூடும், அத்தகைய சூழ்நிலையில் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. எனவே, அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்கள் அல்லது விடுமுறையைக் கழிக்க வருபவர்கள் அல்லது குளிர்காலத்தின்போது மலைப்பிரதேசங்களில் சனி ஞாயிறுகளைக் கழிக்கச் செல்பவர்கள் என அனைவருமே பனிச்சரிவுகளை உண்டாக்கிவிடாதவாறு எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்; அது அவர்களுடைய பொறுப்பாகும். ஆர்வத்திற்குரிய விதமாக, ஒருகாலத்தில் நம்பப்பட்டதுபோல் விமானங்களிலிருந்து எழுந்த ஒலி அலைகளோ மனித குரல்களோ பனிச்சரிவுகளை உண்டாக்குவதில்லை என்பதை பிரான்சில் நடத்தப்பட்ட சோதனைகள் சுட்டிக்காட்டின.

அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஜனங்கள் மலைப்பிரதேசங்களில் குடியேற ஆரம்பித்த உடனேயே பனிச்சரிவுகளின் அபாயத்தைப் பற்றிப் புரிந்துகொண்டார்கள். பனிக்கடியில் தங்கள் வீடுகள் புதைந்துபோவதைத் தடுப்பதற்காக, தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு மேலுள்ள மலைச்சரிவுகளில் தடையுத்தரவு காடுகளை, அதாவது எந்த மரத்தையும் செடியையும் வெட்டுவதற்குத் தடைவிதிக்கப்பட்ட காடுகளை அவர்கள் வளர்த்தார்கள். பல சந்தர்ப்பங்களில், இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை நல்ல பலன் அளித்தது; அதனால்தான் அந்த ஊர் அதிகாரிகள் இன்றுவரை அத்தகைய தடையுத்தரவு காடுகளைப் பேணிப்பாதுகாத்து வருகிறார்கள். பனிச்சரிவுகளிலிருந்து பாதுகாக்கிற மிகச் சிறந்த இயற்கை அரண்கள் அவை. ஆனாலும், ஒவ்வொரு 2.5 ஏக்கர் பரப்பளவிற்குப் பல நூற்றுக்கணக்கான மரங்களும், வெவ்வேறு வகையைச் சேர்ந்த பெரிய சிறிய மரங்களும் உள்ள மிக அடர்த்தியான காடுகளாக அவை இருக்க வேண்டும், அப்போதுதான் அவற்றால் பாதுகாப்பளிக்க முடியும் என்பது அனுபவப்பூர்வமாக கண்டறியப்பட்டிருக்கிறது.

சமீப காலங்களில், கான்கிரீட்டை ஆதாரமாகக்கொண்ட உலோகத் தடையரண்களை என்ஜினியர்கள் கட்டியிருக்கிறார்கள். பனி சரிய ஆரம்பிக்கும் இடங்களுக்கு அடுத்துள்ள காட்டுப்பகுதியின் முதல் வரிசை மரங்களுக்கு மேலாக அவை அமைக்கப்படுகின்றன. அந்தத் தடையரண்கள் நான்கு மீட்டர் உயரத்திற்குக் கட்டப்படலாம், ஆனால் எல்லா மலைச்சரிவுகளிலும் அவற்றைக் கட்டுவது முடியாத காரியம், ஏனெனில் அவற்றிற்கு ஏகப்பட்ட செலவாகும். கட்டிடங்கள் அடியோடு தகர்க்கப்படுவதைத் தடுப்பதற்கு மற்றொரு முயற்சியும் எடுக்கப்படுகிறது, அதாவது பனிச்சரிவுகளைத் திசை திருப்புவதற்கான முயற்சி எடுக்கப்படுகிறது; மலைச்சரிவின் அடிவாரத்தில் பாறைகளையும் மண்ணையும் போட்டு மிகப் பெரிய மேடுகள் அமைக்கப்படுகின்றன. இந்த மேடுகள் பனிச்சரிவுகளை வேறு திசையில் திருப்பிவிடக்கூடும், அதுமட்டுமல்ல, அவை ஒரே பாய்ச்சலில் பள்ளத்தாக்குகளில் உள்ள கிராமங்களுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் பாய்ந்துவிடாதபடியும் தடுக்கின்றன. அவற்றைத் திசை திருப்புவதற்கான மற்றொரு முயற்சி, இரண்டு மீட்டர் தடிமனிலும் ஐந்து மீட்டர் உயரத்திலும் மண் சுவர்களை V போன்ற வடிவத்தில் எழுப்புவதாகும். V வடிவத்தின் கூர்மையான பாகம் மலையின் மேல்பகுதியை நோக்கி அமைக்கப்படுகிறது, அப்போதுதான் பனிச்சரிவு ஏற்படும்போது அதை இரண்டாகப் பிளக்க முடியும், அதன்பின் பனியை இருபுறமும் வலுக்கட்டாயமாகத் திருப்பிவிட முடியும். V வடிவத்தின் கால் பகுதிகள் 90 அல்லது 120 மீட்டர் நீளத்திற்குக் கட்டப்படுகின்றன, எனவே அங்குள்ள ஊர்கள் முழுவதற்கும் அவற்றால் பாதுகாப்பளிக்க முடியும். என்றாலும், பள்ளத்தாக்குகளில் உள்ள முக்கிய சாலைகளோ இரயில் தண்டவாளங்களோ பனிச்சரிவுகளால் பாதிக்கப்படும்போது மரத்தினாலும், ஸ்டீலினாலும், கான்கிரீட்டினாலும் ஆன சுரங்கப் பாதைகள்தான் மிகமிகப் பாதுகாப்பானவை; ஆனால், மிகமிகச் செலவுபிடித்தவை.

பனிச்சரிவுகளைத் தடுப்பதற்கான மற்றொரு வழி, பெரிய பெரிய பனிக்கட்டிகளை உடைத்துப்போடுவதாகும். உதாரணத்திற்கு, ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தின்போது கனடா நாட்டு இராணுவத்தினர், ஊர் ஊராக ரோந்து சென்று பனிக்கட்டிகளை வெடிமருந்து வைத்து தகர்க்கிறார்கள். பனிச்சரிவுகள் ஏற்பட்டு ரோடுகள் மூடப்படுவதற்கு முன்னரே பனிக்கட்டிகளை இவ்வாறு உடைத்து ட்ரான்ஸ்-கனடா நெடுஞ்சாலையைப் பாதுகாக்கிறார்கள். பனிச்சரிவுகளைத் தடுப்பதற்கான இந்த முறை ஓரளவுக்கு சுவிட்சர்லாந்திலும் பயன்படுத்தப்படுகிறது; எப்படியெனில், ஸ்திரமற்ற மலைச்சரிவுகளில் உள்ள பனிக்கட்டிகளைத் தகர்ப்பதற்காக அவை துப்பாக்கியால் சுடப்படுகின்றன அல்லது ஹெலிகாப்டரிலிருந்து அவற்றின் மீது வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன.

பனிச்சரிவிலிருந்து மீட்பு

மலைச்சரிவுகளில் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தி முடிக்கப்படும்வரை மலையேறுபவர்களும் பனிச்சறுக்கு விளையாடுபவர்களும் காத்திருக்க வேண்டும். எச்சரிப்புப் பலகைகளை ஒருபோதும் அசட்டை செய்யாதீர்கள்! பனிச்சறுக்கு விளையாட்டில் மிகவும் தேர்ச்சிபெற்ற அனுபவசாலியான ஒருவரும்கூட பனியில் புதைந்துபோய்விடலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒருவேளை பனிச்சரிவில் நீங்கள் திடீரென மாட்டிக்கொண்டுவிட்டால், பீதியடையாதீர்கள்! அச்சமயத்தில் கடலில் நீந்துவதுபோல் நீந்திக்கொண்டே இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அவ்வாறு நீந்துவது பனிச்சறுக்கின் மேற்பகுதிக்கு அருகிலேயே இருக்க உங்களுக்கு உதவும். அப்படி நீந்தாவிட்டால், உங்களுடைய ஒரு கையைத் தலைக்கு மேல் எவ்வளவு உயரத்திற்குத் தூக்க முடியுமோ அவ்வளவு உயரமாகத் தூக்குங்கள். அப்படிச் செய்வது நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க மீட்புப் பணியாளர்களுக்கு உதவும். மற்றொரு கையால் உங்கள் வாயையும் மூக்கையும் பொத்திக்கொள்ளுங்கள். பனிச்சரிவில் 30 நிமிடங்களுக்கும் அதிகமாக மாட்டிக்கொண்டவர்களில் வெறும் 50 சதவீதத்தினர் மட்டுமே உயிர்பிழைத்ததாக மீட்புப் பணி புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன. இப்போதெல்லாம், பனிச்சறுக்கு விளையாடுபவர்கள் பாட்ரியால் செயல்படுகிற ஒலிபரப்புக் கருவிகள் போன்ற வழிகாட்டுகிற கருவிகளைக் கையோடு எடுத்துச்செல்கிறார்கள். உயரமான ஸ்தலங்களில் எப்போது வேண்டுமானாலும் ‘வெள்ளை மரணம்’ ஏற்படக்கூடும் என்பதால், அதிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற தாமதமின்றி மீட்புப் பணி முயற்சிகள் எடுக்கப்படுவது அவசியமாகிறது.

சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளில் உள்ள அகஸ்டினிய துறவிகள், பல நூற்றாண்டுகளாக பிரபல செயின்ட் பெர்னார்ட் இன நாய்களை வளர்த்தார்கள். அடர்ந்த பனிகளில் நடப்பதற்கான தெம்பும் சக்தியும் அந்த நாய்களுக்கு இருந்தன, அதோடு, உறைய வைக்கிற காற்றையும் நடுங்க வைக்கிற குளிரையும் தாக்குப்பிடிப்பதற்கான சக்தியும் அவற்றிற்கு இருந்தன. எந்தெந்த திசையில் சென்றால் எந்தெந்த இடத்தை அடைய முடியும் என்று அறியும் திறனும் அவற்றிற்கு நன்றாகவே இருந்தது; அதுமட்டுமல்ல, மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத சத்தத்தையும் அசைவையும்கூட அவற்றால் வெகு எளிதில் கண்டுணர முடிந்தது. இதன் காரணமாக, அந்த நாய்களால் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. இன்று மீட்புப் பணியில் பயன்படுத்தப்படும் நாய்களில் பெரும்பாலானவை ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களாகும், என்றாலும் இத்தகைய பணிக்கு வேறுசில இனங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. நாய்களைத் தவிர, எலக்ட்ரானிக் சாதனங்களும் பிரயோஜனமாய் இருக்கின்றன; மீட்புப் பணியாளர்கள் அவற்றைக் கூர்ந்து கவனித்தபடி சென்றால், அவர்களால் உயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனாலும், பயிற்றுவிக்கப்பட்ட நாய்களுக்கு ஈடாக இந்த எலக்ட்ரானிக் சாதனங்களால் வெற்றிபெறவே முடியாது.

நாம் இதுவரை சிந்தித்தபடி, ‘சிறகுகள் இல்லாமல் பறக்கிற, கைகள் இல்லாமல் அடிக்கிற, கண்கள் இல்லாமல் பார்க்கிற’ இந்தப் பனிச்சரிவு, இயற்கையில் இயங்கிக்கொண்டிருக்கிற வலிமைமிக்க சக்திகளைத் திரைவிலக்கிக் காண்பிக்கிறது. ஆம், இந்த வெள்ளை டிராகன்களிடம் நாம் கொஞ்சம் உஷாராகவே இருக்க வேண்டும். (g05 10/8)

[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]

பனிச்சரிவில் நீங்கள் திடீரென மாட்டிக்கொண்டுவிட்டால், கடலில் நீந்துவதுபோல் நீந்திக்கொண்டே இருங்கள்

[பக்கம் 18-ன் படம்]

செயின்ட் பெர்னார்ட் இன நாய்கள் சிறு பிராந்தி பீப்பாயுடன் இருப்பதுபோல் அடிக்கடி படங்களில் காட்டப்படுகின்றன, ஆனால் மீட்புப் பணியின்போது உண்மையில் அவை அவற்றைச் சுமந்து செல்லவில்லை

[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]

AP Photo/Matt Hage