Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உணவுப் பொருள்களெல்லாம் தீர்ந்துவிட்டால்

உணவுப் பொருள்களெல்லாம் தீர்ந்துவிட்டால்

உணவுப் பொருள்களெல்லாம் தீர்ந்துவிட்டால்

உள்ளூரில் உள்ள கடைக்கோ மார்கெட்டுக்கோ போனால் நியாயமான விலைக்கு எல்லா விளைபொருள்களும் எப்போதுமே கிடைத்துவிடும் என்று நகரவாசிகள் சிலர் நினைத்துக்கொள்கிறார்கள். உணவுப் பொருள்கள் தாராளமாக கிடைக்கும் காலங்களில், அவை எப்படி வருகின்றன, வினியோகிக்கப்படுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் நுகர்வோர் துளிகூட கவலைப்படுவதில்லை. ஆனால், நெருக்கடி காலங்களில், கடைகளுக்கு உணவுப் பொருள்கள் வந்து சேருவதற்கு முன்பு என்னென்ன வேலையெல்லாம் இருக்கிறது என்பதைப் பற்றி மக்கள் யோசிக்க ஆரம்பிக்கலாம். ஏதாவது காரணத்தால் உணவுப் பொருள்களை வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டால், விளைவுகள் படுபயங்கரமாக இருக்கலாம்.

வட ஆப்பிரிக்காவில், பொருளாதாரத்தில் நலிவுற்ற ஒரு நாட்டில் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். விவசாயிகளுக்குக் கிடைத்து வந்த மானியங்கள் நின்றுபோனதால், ஒரே இரவில் ‘பிரெட்’ விலை இரட்டிப்பாகிவிட்டது. இதைக் கண்டு கொதித்தெழுந்த கும்பல்கள் மூர்க்கத்தனமாக தெருக்களில் புகுந்து கடைகண்ணிகளையெல்லாம் நொறுக்கித் தள்ளின, வங்கிகளையும் தபால் அலுவலகங்களையும் தாக்கின. நாடெங்கிலும் பதட்டம் நிலவியது, உடனே அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது, இந்தக் கலகத்தை நிறுத்துவதற்குக் கூட்டத்தார்மீது போலீசார் சரமாரியாக சுட்டார்கள், அதனால் 120 பேர் கொல்லப்பட்டார்கள், அநேகர் காயமடைந்தார்கள்.

பொருளாதார ரீதியில் ஸ்திரமாக இருக்கும் நாடுகளிலும்கூட உணவுப் பொருள்களை சப்ளை செய்வது சிலசமயங்களில் பெரும் திண்டாட்டமாக ஆகிவிடலாம். இதைத்தான் செப்டம்பர் 2000-⁠ல் பிரிட்டனில் நிகழ்ந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. எரிபொருள்களின் விலை எக்கச்சக்கமாக ஏறியதை எதிர்த்து புரட்சி செய்தவர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்து வெளியேறும் வழிகளை மூடினார்கள், அங்கிருந்து டிரக்குகள் எதுவும் வெளியே செல்ல முடியாமல் தடுத்துவிட்டார்கள். சில நாட்களில், கேஸ் நிலையங்களில் கேஸ் தீர்ந்துவிட்டது, கார்கள், டிரக்குகளுக்கு எரிபொருள் இல்லை, உணவுப் பொருள் வினியோகிப்பு முறையே ஸ்தம்பித்துவிட்டது. “கனகச்சிதமான நேரத்தில்” நாடெங்கிலும் பொருட்களை டெலிவரி செய்யும் ஸ்டோர்கள் மற்றும் சூப்பர் மார்கெட்டுகளின் ‘ஷெல்ஃப்’கள் காலியாகிவிட்டன.

வளரும் நாடுகளில், உணவு வினியோகிப்புடன் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தப்பட்டுள்ளன. வறட்சி, பொருளாதார நெருக்கடி, உள்நாட்டுச் சண்டைகள், போர் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், “உணவு வினியோகிப்பு முறை அடிக்கடி தோல்வி அடைந்துவிடுகிறது” என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தால் (FAO) வெளியிடப்பட்ட நகரவாசிகளுக்கு உணவூட்டுதல் என்ற ஆங்கில ஏடு கூறுகிறது. “அப்படி சம்பவிக்கும்போது, அதன் விளைவுகள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குரியதாகவோ தற்காலிகமானதாகவோ இருந்தாலும்கூட, பாதிக்கப்படுவது ஏழைகளே.”

நகர்ப்புறங்களின் அதிவேக வளர்ச்சி உணவுப் பொருள் வழங்குவோருக்கும் வினியோகிப்போருக்கும் “பயங்கரமான சவால்களைக்” கொண்டுவருமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 2007-⁠ம் ஆண்டுக்குள், உலக ஜனத்தொகையில் பாதிக்கும் அதிகமானோர் நகரங்களில் வசிப்பார்கள் என கணக்கிடப்படுகிறது. “உணவைப் பாதுகாப்பாகவும் நியாயமான விலையிலும் [நகரவாசிகளுக்கு] வழங்குவது உணவு வழங்கீடு மற்றும் வினியோகிப்பு சங்கிலியை பயங்கரமாக பாதித்து அறுந்துபோகும் நிலைக்கு கொண்டுவந்துவிடும்” என FAO கூறுகிறது.

கடைகளுக்கும் அங்கிருந்து உங்களுடைய மேஜைக்கும் உணவுப் பொருள்களை கொண்டுவந்து சேர்ப்பது மிகமிக முக்கியமான ஒரு வேலை. அப்படியானால், உணவு வழங்கீட்டு முறை எந்தளவு பாதுகாப்பாக இருக்கிறது? உணவு வழங்கீட்டு முறை கிட்டத்தட்ட நின்றுபோகும் நிலைக்கு வருவதைக் குறித்து ஏன் நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்? அடுத்த வேளை உணவைப் பெறுவதைப் பற்றி யாரும் கவலையே படாத காலம் என்றாவது வருமா? (g05 11/22)

[பக்கம் 2-ன் படம்]

இடது: தாய்லாந்தில் மிதக்கும் மார்கெட்

[படத்திற்கான நன்றி]

© Jeremy Horner/Panos Pictures

[பக்கம் 3-ன் படம்]

உணவுப் பற்றாக்குறை காலத்தில் கொள்ளையடித்தல்

[படத்திற்கான நன்றி]

BETAH/SIPA