Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

இதயத்தைப் பாதுகாக்கும் நட்புறவுகள்

“நிறைய நண்பர்களை வைத்திருப்பதும், குடும்பத்தாரோடு நல்லுறவை அனுபவிப்பதும் மாரடைப்பு அல்லது ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கின்றன” என்று ஸ்பானிய செய்தித்தாளான டியார்யோ மெடிகோ குறிப்பிடுகிறது. கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் எடை ஆகியவையே இதயத்தைப் பாதிப்பதாக டாக்டர்கள் வெகு காலம் நம்பி வந்திருக்கிறார்கள். ஆனால் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட சுமார் 500 பெண்களை வைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், குடும்பத்தாரிலும் நண்பர்களிலும் எத்தனை பேரோடு எத்தனை நெருக்கமாக ஒட்டி உறவாடுகிறார்கள் என்பதும்கூட இதயத்தைப் பாதிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், “மற்றவர்களோடு அதிகம் பழகாத பெண்கள், கலகலப்பாக எல்லாருடனும் பழகும் பெண்களைவிட இரண்டு மடங்கு அதிகமாய் [அகால] மரணமடைகிறார்கள்” என்பதும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு, “ஓரிரண்டு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருந்தால்கூட [ஸ்ட்ரோக் அல்லது மாரடைப்பு ஏற்படும்] ஆபத்து குறைவது கண்டுபிடிக்கப்பட்டது” என அந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான கார்ல் ஜே. பெப்பின் கூறுகிறார். (g05 11/22)

அதிசய கடற்பஞ்சு

வெள்ளை நிறத்திலும், உருண்டை வடிவிலுமுள்ள, அதிசய திறன் படைத்த ஒரு கடற்பஞ்சை ஜெர்மனியிலுள்ள ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்; இதைப் பற்றி ஜெர்மானிய செய்தித்தாளான டி வெல்ட் அறிக்கை செய்தது. அந்தக் கடற்பஞ்சு மிகவும் சிறியது என்றாலும், ஒவ்வொரு நாளும் பல சென்டிமீட்டர் தூரம் வேகமாக உந்திச் செல்கிறது; இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கடற்பஞ்சுகளிலேயே இதுதான் இவ்வளவு வேகமாகச் செல்லக்கூடியது. அவ்வப்போது சுருங்கி விரிகிறது; சுருங்கும்போது தன் உடலிலுள்ள தண்ணீரை வெளியேற்றிவிடுகிறது; இவ்வாறு அதன் உடல் 70 சதவீதம் சுருங்கிவிடுகிறது. மூச்சை உள்ளிழுக்கும்போது தண்ணீரை உறிஞ்சுகிறது; அப்போது சத்துக்களும், கரையத்தக்க ஆக்ஸிஜனும் அதன் உடலுக்குள் செல்கின்றன. அந்தக் கடற்பஞ்சுகள் இருக்கும் தொட்டியில் சிறு நண்டு, நத்தை போன்றவற்றைப் போடும்போது, அவை இன்னும் அதிகமாகச் சுருங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. கடற்பஞ்சுகளுக்கு “நரம்பு மண்டலமே இல்லாததால் அவ்வாறு சுருங்குவது மிக அதிசயமாக இருக்கிறது” என ஆராய்ச்சியாளரான மைக்கேல் நிக்கெல் சொல்கிறார். அப்படியென்றால் நரம்பு மண்டலம் இல்லாத கடற்பஞ்சு எவ்வாறு சுருங்கி விரிகிறது, மற்ற பிராணிகள் சுற்றுவட்டாரத்தில் இருப்பதை எப்படித் தெரிந்துகொள்கிறது? இதற்கான பதிலைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் கடற்பஞ்சை மிகத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். (g05 11/22)

திகில் கோளாறு

“திகில் கோளாறு உள்ளவர்கள் எந்த நேரத்தில் திகிலடைவார்கள் என்று சொல்ல முடியாது. இரவில் தூங்கிக்கொண்டிருக்கையில்கூட அவர்கள் திகிலடையலாம். அப்போது அவர்கள் மார்பு வலியால் துடித்து, மூச்சுத் திணறி, பயத்தால் பதறிப்போய், நெஞ்சடைத்து, வியர்த்து விறுவிறுத்து, எங்கேயாவது ஓடிவிட நினைப்பார்கள். இவை திகில் கோளாறு உடையவர்களின் அறிகுறிகளில் சில” என வான்கூவெர் சன் செய்தித்தாள் சொல்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 36,894 பேர் பேட்டி காணப்பட்டார்கள். அதன்படி, கனடாவின் மக்கள்தொகையில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3.7 சதவிகிதத்தினர், அதாவது சுமார் 10 லட்சம் பேர், இந்தக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்தது. ஆண்களைவிட (2.8 சதவீதம்) பெண்களே (4.6 சதவீதம்) இந்தக் கோளாறினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தக் கோளாறு இல்லாதவர்களைவிட உடையவர்களிடமே “குடிப்பழக்கம் இருப்பதற்கான வாய்ப்பு சுமார் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இவர்கள் தங்கள் திகில் கோளாறை சமாளிப்பதற்காகவே குடிக்கிறார்கள். இந்தக் கோளாறு இல்லாதவர்களைவிட [உடையவர்களிடம்] புகைபிடிக்கும் பழக்கம் இருப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது” என்றும் அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தக் கோளாறு உடையவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் சிறந்த மருத்துவ உதவியை நாடுவது நம்பிக்கை அளிக்கிறது. இந்தக் கோளாறு மரபியல் அல்லது உயிரியல் காரணமாக ஏற்பட்டாலும், “வாழ்க்கையில் சந்திக்கும் கடும் துயரங்களும்கூட காரணமாக இருக்கலாம்” என்று ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மனநோய் பிரிவின் தலைவரான டாக்டர் ஸாக் பிராட்வேன் நம்புவதாக அறிக்கை சொல்கிறது. (g05 9/22)

இளைஞர்களும் மொபைல் போன்களும்

“பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, மொபைல் போன் இல்லாவிட்டால் அன்றாட வேலைகளை நன்கு திட்டமிட்டு செய்ய முடிவதில்லை” என லண்டனின் செய்தித்தாளான டெய்லி டெலிகிராஃப் குறிப்பிடுகிறது. ஆய்வு நடத்தியவர்கள், 15-24 வயதுக்குட்பட்ட சில இளைஞர்களுக்கு இரண்டு வாரங்கள் மொபைல் போன்களைக் கொடுக்காமல் இருந்தார்கள். “பார்ப்பதற்கே மிக விசித்திரமாக இருந்தது. அந்த இளைஞர்கள் புது விதமான சூழ்நிலைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது; உதாரணத்திற்கு, தங்கள் பெற்றோருடன் பேச வேண்டியிருந்தது, நேரில் போய் நண்பர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது, நண்பர்களின் பெற்றோரைச் சந்திக்க வேண்டியிருந்தது” என அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. இளைஞர்கள் மொபைல் போனில் பேசுவது “தன்னம்பிக்கை பெறவும் அவர்களுக்கென ஒரு ‘தனிப் பாணியை’ ஏற்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது” என இங்கிலாந்தைச் சேர்ந்த லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் மைக்கேல் ஹ்யூம் விளக்குகிறார். ஓர் இளைஞி, மொபைல் போன் இல்லாததால், “சிடுசிடுவென்றும் மன அழுத்தத்தோடும்” இருந்ததாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது; அதோடு, இன்னொரு இளைஞன் தனிமையாக உணர்ந்தான், மேலும் “நினைத்த நேரத்திலெல்லாம் நண்பர்களிடம் பேச முடியாமல் போனதால், அவர்களைச் சந்திப்பதற்கான நேரத்தை அவன் முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருந்தது.” (g05 11/8)

“தலைசிறந்த அலங்காரப் பொருள்”

“சீனாவில் புலித் தோலை சட்ட விரோதமாக வாங்கும் மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளும் வியாபாரிகளும், அடியோடு அழியும் ஆபத்திலுள்ள உயிரினங்களில் ஒன்றான புலியின் படுகொலைக்கு ஒருவிதத்தில் பொறுப்பாளிகளாக ஆகிறார்கள்” என லண்டனின் செய்தித்தாளான த சன்டே டெலிகிராஃப் குறிப்பிடுகிறது. ஒரு நூற்றாண்டிற்கு முன்பு ஏறக்குறைய 1,00,000 காட்டுப் புலிகள் இருந்தன; இப்போதோ அவை 5,000-⁠க்கும் குறைவாக இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவில் உள்ளன; மற்றவை தென் ஆசியாவைச் சேர்ந்த மற்ற நாடுகளிலும் கிழக்கு ஆசிய நாடுகளிலும் உள்ளன. புலித் தோலை வாங்குபவர்கள் அதை, “வீடுகளில் வைக்கும் தலைசிறந்த அலங்காரப் பொருளாக கருதுகின்றனர், இதனால் புலி இனமே அழிந்துபோகக் காரணமாகின்றனர். . . . அவை முற்றிலும் இல்லாமல் போகும் நிலைக்கு வந்துவிட்டன, ஆகவே இன்று உயிரோடிருக்கும் ஒவ்வொரு புலியையுமே பாதுகாக்க வேண்டும், அப்போதுதான் அந்த இனம் பூண்டோடு அழியாதிருக்கும்” என லண்டனிலுள்ள ஒரு நிறுவனம் (The Environmental Investigation Agency) குறிப்பிடுகிறது. 1994 முதல் 2003 வரை, 684 புலித்தோல்கள் கைப்பற்றப்பட்டன; ஆனால் திருட்டுத்தனமாக விற்கப்படும் புலித்தோல்களின் உண்மையான எண்ணிக்கையோ பல மடங்கு அதிகம் என்று கருதப்படுகிறது. (g05 11/8)

கடுமையான சீதோஷ்ணம் நிலவிய வருடம்

“2004-ஆம் வருடம், பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான வருடங்களின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது; அந்த வருடத்தில் கரீபியன் கடலில் நான்கு முறை பலத்த புயல்காற்று வீசியது, ஆசியாவைத் தாக்கிய பயங்கர புயல்கள் உயிர்களைக் காவுகொண்டன. 1990 முதல் இப்படிப்பட்ட சீதோஷ்ணமே நிலவுகிறது; மிக வெப்பமான 10 வருடங்கள் இக்காலப்பகுதியில்தான் பதிவாகியுள்ளன” என அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை செய்கிறது. வானிலையால் ஏற்பட்ட சேதத்தைப் பொறுத்ததிலும்கூட, கடந்த வருடம்தான் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஐக்கிய மாகாணங்களிலும் கரீபியனிலும் மட்டுமே, புயல்களால் 4,300 கோடி டாலர் (1,93,500 கோடி ரூபாய்) இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் புயல்காற்றும் கடும் வெப்பமும் நிலவிய அதேசமயத்தில் மற்ற பகுதிகளில் மிகக் கடும் குளிர் நிலவியது. உதாரணத்திற்கு, தெற்கு அர்ஜென்டினா, சிலி, பெரு ஆகிய நாடுகளில் ஜூன், ஜூலை மாதங்களில் கடும் குளிரும் பனியும் இருந்தது. அந்த அறிக்கையின்படி, “வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே போய், கடைசியில் உலக வானிலையில் சிக்கல்களை ஏற்படுத்திவிடலாம் என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.” (g05 11/8)

‘விசில்’ மொழி

கேனரி தீவுகளின் லா கோமேராவைச் சேர்ந்த மேய்ப்பர்கள் சில்போ என்ற ‘விசில்’ மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இது, இரண்டு உயிரெழுத்துக்களையும் நான்கு மெய்யெழுத்துக்களையும் கொண்ட சங்கேத மொழியாகும்; இந்த எழுத்துக்களை வித்தியாசமான தொனிகளில் விசில் அடிக்கிறார்கள்; இவ்வாறு தொலை தூரங்களில் உள்ளவர்களோடும் தொடர்பு கொள்கிறார்கள். சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் MRI (magnetic resonance imaging) என்ற தொழில்நுட்பத்தின் மூலம், இரு தொகுதிகளின் மூளை செயல்படும் விதத்தை கண்காணித்தார்கள்; ஸ்பானிய மொழி பேசிய ஐந்து பேரையும் ஸ்பானிய மொழியோடுகூட சில்போ மொழியையும் பேசிய ஐந்து மேய்ப்பர்களையும் வைத்து அவர்கள் ஆய்வு நடத்தினார்கள். மேய்ப்பர்கள் விசிலடித்தபோதும் சரி, “சாதாரணமாக பேசிக்கொண்டபோதும் சரி ஒரேவிதமான சமிக்கைகள்தான் அவர்களுடைய மூளையில் ஏற்பட்டன” என்று ஸ்பானிய செய்தித்தாளான எல் பாயஸ் குறிப்பிடுகிறது. “விதவிதமான மொழிகளைக் கற்றுப் பயன்படுத்தும் திறன் மனிதனுக்கு இருப்பதற்கான இன்னுமதிக அத்தாட்சிகளையே எங்கள் ஆய்வு அளித்திருக்கிறது” என ஓர் ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டதாக அறிக்கை சொல்கிறது. (g05 11/22)