எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
இளைஞர் கேட்கின்றனர் “இளைஞர் கேட்கின்றனர் . . . அவர் என்னை காதலிக்கவில்லை என்றால்?” (ஜனவரி 8, 2005) என்ற கட்டுரைக்கு நன்றி. அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டது போன்றே, நானும் ஒரு கிறிஸ்தவரை காதலித்தேன். ஆனால் அப்படியொரு எண்ணம் தனக்கு இல்லையென அவர் சொல்லிவிட்டார். அப்படியே நொறுங்கிப்போய்விட்டேன். அதை மறந்து ஆன்மீகக் காரியங்களில் அதிக நேரத்தைச் செலவிட உதவுமாறு யெகோவாவிடம் குறிப்பாக ஜெபம் செய்ய இந்தக் கட்டுரை எனக்கு உதவியது. காதல் தோல்வியின் பேரிடியிலிருந்து மீள விரும்புகிறேன்.
ஐ.வை., ஜப்பான்
அந்தக் கட்டுரையைப் படித்தபோது ஏற்பட்ட உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சரியான நேரத்தில் அது வெளிவந்திருக்கிறது. என் உணர்ச்சிகள் அதில் அப்படியே துல்லியமாக வடிக்கப்பட்டிருந்தன. காதல் தோல்வியை ஏற்றுக்கொள்வது எனக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை, ஆனால் அதையே நினைத்து நினைத்து வேதனைப்படாதிருக்க அந்தக் கட்டுரை எனக்கு உதவியது.
எம்.பி., இத்தாலி
அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட சில ஆலோசனைகளின்படி நடப்பது கஷ்டமாக இருந்தாலும், பழைய நிலைக்கு வர அது எனக்கு உதவியது. யெகோவாவின் பார்வையில் தாங்கள் மதிப்பானவர்கள் என்று உணருவதற்கும் பழையதை மறந்து புதியதோர் வாழ்க்கையைத் துவங்குவதற்கும் மற்றவர்களுக்குக்கூட அது உதவும் என்று நம்புகிறேன்.
ஜெ.ஈ., ஐக்கிய மாகாணங்கள்
ஏமாற்றத்தில் நான் அப்படியே புதைந்துபோய்விடாதிருக்க இக்கட்டுரை எனக்கு உதவியது, என்னைப் பலப்படுத்தவும் செய்தது. நிராகரிக்கப்பட்டுவிட்டேனே என்ற வேதனை இன்னும் என் மனதில் இருந்தாலும், அந்த வேதனையை இக்கட்டுரை ஓரளவு தணித்தது. யெகோவா நம் ஒவ்வொருவரிடமும் அக்கறையாக இருக்கிறார் என்பதை அறிவது அதிக ஆறுதல் அளிக்கிறது.
எம்.எல்., ஐக்கிய மாகாணங்கள்
இந்த விழித்தெழு! என் கைக்கு வந்த அதே நாளில், நான் காதலித்த கிறிஸ்தவரிடமிருந்தும் ஒரு கடிதம் வந்தது; என் காதலை ஏற்றுக்கொள்ள முடியாதென தயவாக, அதேசமயத்தில் உறுதியாக அவர் எழுதியிருந்தார். அநேக நாட்கள் என்னால் சாப்பிடவும் தூங்கவும் முடியவில்லை. ஆனால் இந்தக் கட்டுரை, காரியங்களை எதார்த்தமாகப் பார்க்கவும் என் சுயமரியாதையைக் காத்துக்கொள்ளவும் உதவியது.
எம்.ஐ., ஜப்பான்
ஒருதலைக் காதலினால் அநேக நாட்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் நிஜத்தை ஏற்றுக்கொள்வதுதான் சிறந்தது என்பதை இப்போது புரிந்துகொண்டேன். காதலில் தோல்வியடைந்தது நான் மட்டுமே அல்ல என்பதைத் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி.
எல்.ஏ.சி., பிரேசில்
நான் விரும்பியவர் என் காதலை நிராகரித்ததால் ரொம்பவும் ஏமாற்றம் அடைந்தேன்; என் மனம் மிகவும் புண்பட்டுவிட்டது. இந்தக் கட்டுரையைப் படித்ததும் அழுதேவிட்டேன். ஏனென்றால் இந்தக் கட்டுரையின் மூலம் யெகோவா எனக்கு உதவியதை நினைத்து மனம் நெகிழ்ந்தேன். வேதனையிலிருந்து நான் மீள வேண்டும் என்று யெகோவா விரும்புவதைப் புரிந்துகொண்டேன். யெகோவாவின் மீதுள்ள என் அன்பு இப்போது இன்னும் அதிகரித்துள்ளது.
டி.ஓ., ஆஸ்திரியா
காதல் எனும் ஆசையை யெகோவா நம் மனதில் வைத்திருக்கிறார் என்பதையும், அந்த ஆசையை நம்மால் எப்படிக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் அறிந்திருக்கிறார் என்பதையும் “இளைஞர் கேட்கின்றனர்” கட்டுரையிலிருந்து தெரிந்துகொண்டேன்; இக்கருத்துகள் எனக்குப் புதிதாகவும் ஆறுதலாகவும் இருந்தது. யெகோவாவின் பார்வையில் அழகுள்ளவளாய் இருக்க நான் ஆசைப்படுகிறேன். ஆம், அட்டைப்பட கட்டுரைகளில் [டிசம்பர் 22, ஆங்கில விழுத்தெழு!] குறிப்பிட்டிருந்தபடியே, யெகோவா விரும்புகிற அழகை—அழகிய குணங்களை—பெற ஆசைப்படுகிறேன்.
எச்.டபிள்யூ., ஜப்பான் (g05 10/8)
எனக்கு 11 வயது. “இளைஞர் கேட்கின்றனர் . . . மற்றவர்கள் தங்கள் பிரச்சினைகளைச் சொல்லும்போது நான் என்ன செய்ய வேண்டும்?” என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (பிப்ரவரி 8, 2005) என்னுடன் ஸ்கூலில் படிக்கும் ஒரு பிள்ளைக்கு நிறைய பிரச்சினைகள், எல்லாவற்றையும் என்னிடம் சொல்லியிருக்கிறாள். அது போதாதென்று, போன வாரம் அவளுடைய தாத்தாவும் இறந்துவிட்டார். அந்தக் கட்டுரையிலுள்ள நிறைய குறிப்புகள், அவளுக்கு ஆறுதல் சொல்ல எனக்கு உதவியது. இளைஞர்களுக்கு வருகிற பிரச்சினைகளை யெகோவா நன்கு புரிந்துகொள்கிறார் என்பதை அறிவது மிகுந்த ஆறுதலாக இருக்கிறது.
ஏ.எச்., ஐக்கிய மாகாணங்கள்
எனக்கு 14 வயது, என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் என்னிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். சில சமயங்களில், என்னால் ஆலோசனை சொல்ல முடியாத பிரச்சினைகளைப் பற்றி என்னிடம் சொல்வார்கள். அச்சமயங்களில், என்னால் அவர்களுக்கு உதவ முடியாது என்று மனதை நோகடிக்காத விதத்தில் சொல்லிவிடுவேன்; சில சந்தர்ப்பங்களில், பைபிள் கருத்துகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்வேன். இப்போதெல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ் என்னுடைய மதத்தைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்கிறார்கள். அதனால் வகுப்பில் நான் கொடுக்க வேண்டிய பேச்சில், “யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் யார்? அவர்களின் நம்பிக்கை என்ன?” என்ற தலைப்பில் பேச முடிவு செய்துள்ளேன்.
பி.டி., கனடா (g05 11/8)