Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“கிணற்றுப்பக்கம் சந்திக்கலாம்”

“கிணற்றுப்பக்கம் சந்திக்கலாம்”

“கிணற்றுப்பக்கம் சந்திக்கலாம்”

மால்டோவாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து சாலையில் ஊற்றப்படுகிறது. மணமகளின் நெஞ்சம் படபடக்கிறது. பிறகு மணமகன் வந்து அவளை அலாக்காகத் தூக்கிக்கொண்டு, தண்ணீர் ஊற்றப்பட்ட தரைமீது நடந்து செல்ல, அவள் பூரித்துப்போய் வாய்நிறைய சிரிக்கிறாள். புதுமணத் தம்பதிகள் இந்தப் பழங்கால சடங்கில் ஈடுபடுவதை கண்டுகளிக்கும் நண்பர்களும் உறவினர்களும் சந்தோஷ ஆரவாரம் செய்கிறார்கள். மால்டோவா நாட்டு மக்கள் கிணறுகளை வெறுமனே நீர் ஊற்றுகளாக மட்டும் கருதாமல், அவற்றிற்கு விசேஷ மதிப்பு கொடுப்பதை விசித்திரமான இந்தத் திருமணச் சடங்கு எடுத்துக்காட்டுகிறது.

மால்டோவா தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. அதன் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் உக்ரைன் நாடும், மேற்கிலோ ருமேனியா நாடும் அமைந்துள்ளன. மால்டோவாவின் மொத்த நிலப்பரப்பு சுமார் 34,000 சதுர கிலோமீட்டர் ஆகும்.

மால்டோவாவில் கிட்டத்தட்ட 3,100 ஆறுகள் இருந்தாலும், அடிக்கடி வறட்சி ஏற்படுவதால் அங்கு வசிக்கும் 43,00,000 பேருடைய தேவைகளையும் அந்த ஆறுகளால் பூர்த்தி செய்ய முடிவதில்லை. ஆகவே, அந்நாட்டிற்குத் தேவையான தண்ணீரில் 20 சதவீதத்தைக் கிணறுகள் வழங்குகின்றன. அங்குள்ள ப்ரூட் ஆற்றுப் பள்ளத்தாக்கில் (மால்டோவாவைச் சேர்ந்த பகுதியில்) 1,00,000 முதல் 2,00,000 கிணறுகள்வரை இருக்கின்றனவாம்!

மால்டோவாவின் நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் அலங்கார மண்டபங்களுடன் காணப்படும் கிணறுகள், களைப்படைந்த பயணிகளின் தாகத்தைத் தீர்க்கின்றன. அநேக கிராமங்களில், நண்பர்கள் கிணற்றுப்பக்கம் கூடிவந்து அரட்டையடிப்பதும் சகஜம்.

தண்ணீருக்கு மரியாதை​—⁠காலங்காலமாக

மால்டோவாவில் கிணற்று நீருக்கு பல விதங்களில் மரியாதை காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு, வீட்டிலுள்ள கிணற்றிற்கு வெகு தூரம் தள்ளியே கழிவறைகள் கட்டப்படுகின்றன; மேலும், கிணற்றுநீர் அசுத்தமாகாதிருக்க, அதிலிருந்து இறைத்த தண்ணீரை மறுபடியும் அதற்குள் கொட்டுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதிகமாகத் தண்ணீர் இறைத்துவிட்டால் அதை நிலத்தில் அல்லது கிணற்றின் அருகே உள்ள தொட்டியில் ஊற்ற வேண்டும். அதுமட்டுமல்ல, கிணற்றின் அருகே எச்சில் துப்புவது கெட்ட பழக்கமாகக் கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், கிணற்றருகே வாக்குவாதம் செய்வதற்குக்கூட அவர்களுடைய பாரம்பரியம் அனுமதிப்பது கிடையாது!

கிணறுகள் மால்டோவா நாட்டினர் மத்தியில் சமுதாய ஒற்றுமையை வளர்க்கின்றன. புதிதாக கிணறு வெட்டுவது ஒரு பொது நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது; புதிய வீடு கட்டுவதைப் போல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சொல்லப்போனால், வீடு கட்டாத, மகனை வளர்க்காத, கிணறு வெட்டாத, மரம் நடாத ஒருவர் தன் வாழ்க்கையையே வீணடித்துவிட்டார் என்ற பழமொழிகூட அந்நாட்டில் உண்டு. கிணறு வெட்டி முடிக்கப்பட்ட பிறகு, அவ்வேலையில் பங்குகொண்ட அனைவரும் ஒன்றுகூடி ஒரு பெரிய விழாவே கொண்டாடுவார்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்புகள்

5-12 மீட்டர்வரை ஆழத்திலுள்ள நீர்மட்டத்திலிருந்தே மால்டோவாவிலுள்ள பெரும்பாலான கிணறுகள் தண்ணீரைப் பெற்றுக்கொள்கின்றன. மற்றொரு நீர்மட்டம் 150-250 மீட்டர் ஆழத்தில் உள்ளது. பெருமளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், மால்டோவாவின் நிலத்தடி நீர் மாசடைந்திருக்கிறது; தொழிற்சாலைக் கழிவுகளும் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களுமே அதற்குக் காரணம். நைட்ரேட் உரங்களும் நோய் உண்டாக்குகிற பாக்டீரியாக்களும் “மால்டோவாவிலுள்ள கிணறுகளில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை” அசுத்தமாக்கிவிட்டன என்று 1996-⁠ல் வெளியிடப்பட்ட ஐக்கிய நாட்டு சங்கத்தின் ஒரு பிரசுரம் (Republic of Moldova Human Development Report) குறிப்பிடுகிறது. இருந்தாலும் சமீப ஆண்டுகளில், கிணற்றுநீரின் தரம் முன்னேறியிருக்கிறது; ஏனென்றால் தொழிற்சாலை உற்பத்தி குறைந்துள்ளது, அதோடு, நிலத்தடி நீரில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்துவந்த இரசாயனங்கள், எரிபொருட்கள் ஆகியவற்றின் அளவும் குறைந்துள்ளது.

நீங்கள் மால்டோவாவுக்கு விஜயம் செய்தால், அங்குள்ளவர்களோடு நட்புடன் பேசி மகிழ கிணற்றுநீரை சாலையில் ஊற்ற வேண்டியதில்லை. ஜில்லென்று ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தவாறேகூட அரட்டை அடிக்கலாம். அதற்கு, உபசரிக்கும் குணம்படைத்த மால்டோவாவாசி ஒருவர் உங்களை கிணற்றருகே சந்திக்க ஒத்துக்கொண்டாலே போதும். (g05 11/8)

[பக்கம் 13-ன் பெட்டி/படங்கள்]

வழிவழியாக வந்த கலை

ஆல்யெக் என்பவர், மால்டோவாவில் உள்ள கிணறுகளுக்கு உலோகத் தகடுகளால் மண்டபங்கள் அல்லது கூண்டுகள் செய்யும் கைவினைஞர். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கிணறுகளுக்கு அழகழகான மண்டபங்கள் செய்ய ஆரம்பித்தார். அவர் சொல்வதாவது: “தகடுகளால் மண்டபங்கள் செய்யும் கலை எங்கள் குடும்ப இரத்தத்திலேயே ஊறிப்போயிருக்கிறது என்று நினைக்கிறேன். 1900-களில் என் தாத்தா இந்தக் கலையை யூத கைவினைஞர் ஒருவரிடமிருந்து கற்றுக்கொண்டார்; அவர், தாத்தாவின் சொந்த ஊரான லிப்கானிக்கு அருகேயிருந்த ஒரு பெரிய யூத சமுதாயத்தினரோடு வசித்துவந்தார்; அங்கிருந்த அநேக யூதர்கள் இப்படிப்பட்ட கைவினைஞர்களாக இருந்தார்கள். இரண்டாம் உலகப் போரின்போது நடந்த படுகொலைக்குப் பிறகு தப்பிய சில கைவினைஞர்களில் யாருமே யூதர்கள் அல்ல. அந்த சமயத்தில்தான் என் அப்பா அந்த வேலையைக் கற்றுக்கொண்டார்; பிற்பாடு எனக்கும் பயிற்சி அளித்தார்.”

கிணற்று மண்டபங்களில் நுணுக்கமான வேலைப்பாடுகளை அவர் உருவாக்குகிறார். இதற்குச் சாதாரண கருவிகளையும் வெகு சில அச்சுகளையும் மட்டுமே பயன்படுத்துகிறார்; மற்றபடி, வழிவழியாகக் கற்ற கலையையும் கற்பனைத் திறனையும் கலந்து தன் கைவண்ணத்தைக் காட்டுகிறார். உள்ளூர்வாசிகள் அவருடைய திறமையை உயர்வாக மதிக்கிறார்கள். அவர் சொல்கிறார்: “என் வாடிக்கையாளர்கள் வேறு யாரிடம் போனாலும் பொதுவாக பேரம் பேச ஆரம்பித்துவிடுவார்கள்; ஆனால் என்னிடம் வந்தால், கேட்ட பணத்தை மறுபேச்சில்லாமல் கொடுத்துவிடுகிறார்கள்.”

[பக்கம் 13-ன் தேசப்படங்கள்]

உக்ரைன்

மால்டோவா

ருமேனியா

கருங்கடல்