Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சம்பிரதாயப்படிதான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமா?

சம்பிரதாயப்படிதான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமா?

இளைஞர் கேட்கின்றனர் . . .

சம்பிரதாயப்படிதான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமா?

“எல்லா ஃபிரெண்ட்ஸையும் சொந்தபந்தங்களையும் கூப்பிடாமல் ஒரு சிலரை மட்டும் வைத்து கல்யாணத்தை முடித்துக்கொள்ளலாம் என்று என் காதலி சின்டிதான் முதலில் சொன்னாள். அதைப் பற்றி இரண்டு பேரும் பேசினோம். ரொம்ப நல்ல ஐடியாவாகத் தெரிந்தது. எவ்வளவோ நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்தலாம், அந்தளவு டென்ஷனும் இருக்காதே.”​—⁠ஆலன். a

உங்களுக்குத் திருமணம் செய்துகொள்ளும் வயதா? யாரையாவது காதலிக்கிறீர்களா? அப்படியென்றால், யாருக்கும் சொல்லாமல் கல்யாணம் செய்துகொள்ள நீங்கள் ஆசைப்படலாம். சிலரோ தங்கள் பெற்றோரிடம்கூட சொல்லாமல் ஓடிப்போய் திருட்டுத்தனமாகக் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், சரியான தீர்மானம் எடுக்க உங்களுக்கு என்னென்ன நியமங்கள் உதவும்?

பாரம்பரியம்தான் மிக முக்கியமா?

திருமணம் என்பது எல்லா இடங்களிலும் நடக்கும் நிகழ்ச்சிதான், ஆனால் திருமணச் சடங்குகள் கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம் வேறுபடுகின்றன. ஒரு கிறிஸ்தவ ஜோடியைப் பொறுத்தவரை, உள்ளூர் சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அதற்கேற்ப திருமணம் செய்துகொள்வது முக்கியமே அல்ல. (ரோமர் 12:2) ஆனால், யெகோவா தேவனுக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் ஒருவரோடொருவர் பழகுவதும் திருமணம் செய்துகொள்வதும்தான் மிக முக்கியம்.​—1 கொரிந்தியர் 10:⁠31.

திருமணம் என்பது மதிப்புக்குரிய ஏற்பாடு என்பதால், அதை யாருக்கும் சொல்லாமல் நடத்த பெரும்பாலோர் விரும்புவதில்லை. மேலை நாடுகள் பலவற்றில், யெகோவாவின் சாட்சிகள் தங்கள் ராஜ்ய மன்றத்தில் திருமண நிகழ்ச்சியை நடத்துவது வழக்கமாக இருக்கிறது. b அதன் பிறகு, வேறெங்காவது வரவேற்பு விழா நடத்தி, குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் விருந்துண்டு மகிழ்கிறார்கள். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ரொம்ப ஆடம்பரமாக இருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் திருமணத்திற்கு/வரவேற்பு விழாவுக்கு செலவும் அதிகம், டென்ஷனும் அதிகம். உதாரணத்திற்கு, ஐக்கிய மாகாணங்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குப் பெரும்பாலும் ஆயிரக்கணக்கான டாலர் செலவாகிறது.

டென்ஷனையும் செலவையும் குறைப்பதற்குச் சிலர் இன்னுமொரு எளிய வழியைக் கையாளுகிறார்கள். முன்பு குறிப்பிடப்பட்ட ஆலனின் காதலி சின்டி இவ்வாறு சொல்கிறாள்: “எங்கள் கல்யாணத்தை ரொம்ப சிம்ப்பிளாக, சிக்கனமாக நடத்த விரும்பியதால் சம்பிரதாயப்படி கல்யாணம் செய்துகொள்ள மாட்டோம் என்று எங்கள் பெற்றோரிடம் சொன்னோம். என்னுடைய பெற்றோர் நிலைமையை நன்றாகப் புரிந்துகொண்டார்கள். ரொம்ப ஆதரவாகவும் இருந்தார்கள்.” ஆனால், ஆலனின் பெற்றோரால் அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆலன் சொல்கிறார்: “அவர்கள் ஏதோ தவறு செய்துவிட்டதால்தான் நாங்கள் இந்த முடிவெடுத்ததாக நினைத்துக்கொண்டார்கள்; ஆனால் அது உண்மையே அல்ல.”

நீங்கள் ரொம்ப சிம்ப்பிளாக திருமணம் செய்துகொள்ள விரும்பினால் ஒருவேளை உங்கள் பெற்றோரும்கூட சங்கடப்படலாம். அந்த விசேஷ நிகழ்ச்சிக்கு நிறைய பேர் வரவேண்டும், தங்களுடன் சேர்ந்து சந்தோஷப்பட வேண்டும் என அவர்கள் விரும்பலாம். ஆனால், பெற்றோரிடம் சொன்னால் திருமணத்திற்கே சம்மதிக்க மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு அவர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்வதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் என்ன செய்வது?

குடும்பத்தாரின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுங்கள்

ஒருவேளை உங்கள் பெற்றோர், இப்படிப்பட்ட முக்கியமான தீர்மானம் எடுப்பதற்கு உங்களுக்கு வயது போதாது என்று நினைத்து உங்கள் திருமணத்தை ஆட்சேபிக்கலாம். வயதாக வயதாக உங்களுடைய விருப்புவெறுப்புகள் மாறும் என்பதால் சீக்கிரத்தில் உங்கள் தீர்மானத்தைக் குறித்து நீங்கள் வருந்துவீர்களோ என நினைத்து அவர்கள் கவலைப்படலாம். அல்லது திருமண வயதை நீங்கள் எட்டிவிட்டீர்கள் என அவர்கள் நினைத்தாலும், நீங்கள் தேர்ந்தெடுத்த நபரிடம் ஏதோ குறைகள் இருப்பதாய்க் கருதலாம். அல்லது அந்நபர் வேறோரு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் உங்கள் திருமணத்தையே எதிர்க்கலாம்.

உங்கள் பெற்றோர் உண்மை கிறிஸ்தவர்கள் என்றால், அவர்கள் கவலைப்படுவது பைபிள்படி நியாயமாகவே இருக்கலாம். ஆக, தங்களுடைய சந்தேகங்களையும் கவலைகளையும் அவர்கள் உங்களிடம் தெரிவிப்பது நிச்சயமாகவே சரிதான். சொல்லப்போனால், அவர்கள் அப்படிச் செய்யாவிட்டால் அக்கறையில்லாமலும் அன்பில்லாமலும் நடந்துகொள்வதாக யெகோவா கருதுவாரே! எனவே, அவர்கள் சொல்வதைக் கேட்பதால் உங்களுக்குத்தான் நன்மை.​—நீதிமொழிகள் 13:1, 24.

இந்த உதாரணத்தைச் சிந்தித்துப் பாருங்கள்: நீங்கள் ஒரு டிரெஸ் வாங்கப் போகிறீர்கள். அது உங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறதா இல்லையா என யாரிடமாவது அபிப்பிராயம் கேட்பீர்கள், அல்லவா? அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வீர்கள் என சொல்ல முடியாது. ஆனாலும் அந்த டிரெஸ் உங்களுக்குப் பொருத்தமாக இல்லாவிட்டால் உங்கள் நெருங்கிய நண்பர்கள் அதைச் சொல்ல வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள்தானே? அவர்கள் சொல்லும் கருத்துக்கு நீங்கள் மதிப்பு கொடுப்பீர்கள்; ஏனென்றால் உங்கள் பணம் வீணாகாதிருக்க அவர்கள் உதவலாம். டிரெஸுக்கே அப்படியென்றால், திருமணம் செய்ய நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபரைப் பற்றிய உங்கள் குடும்பத்தாரின் அபிப்பிராயத்திற்கு நீங்கள் இன்னும் எந்தளவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்! உங்களுக்குப் பொருந்தாத டிரெஸ்ஸை மறுபடியும் கடையில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது தூக்கிப்போட்டு விடலாம், ஆனால் உங்களுடைய மணத்துணையோடு நீங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். (மத்தேயு 19:5, 6) ஆகவே, உங்கள் குணத்திற்கும் தேவபக்திக்கும் பொருத்தமில்லாத ஒருவரை மணப்பதற்கு நீங்கள் தீர்மானித்தால் என்ன ஆகும்? பொருந்தாத டிரெஸ்ஸைப் போட்டுக்கொண்டு அவஸ்தைப்படுவதைவிடவும் எத்தனையோ மடங்கு அதிகமாக அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்! (ஆதியாகமம் 2:18; நீதிமொழிகள் 21:9) இதன் காரணமாக, உண்மையான சந்தோஷத்தைப் பெறுகிற ஒரு வாய்ப்பை நழுவ விட்டிருப்பீர்கள்.​—நீதிமொழிகள் 5:18; 18:⁠22.

அதேசமயத்தில், சில பெற்றோர் சுயநலம் காரணமாக தங்கள் பிள்ளையின் திருமணத்தை ஆட்சேபிக்கலாம்; உதாரணத்திற்கு, தங்கள் பிள்ளை தங்களுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டுமென விரும்பலாம். ஆனாலும் உங்கள் பெற்றோர் அப்படிப்பட்ட சுயநலவாதிகள் என்று நினைத்துக்கொண்டு, அவர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்ள தீர்மானிப்பதற்கு முன், அவர்களது ஆட்சேபணைகளை நீங்கள் ஏன் சீர்தூக்கிப் பார்க்கக் கூடாது?

ஜாக்கிரதையாய் இருப்பதற்கான காரணங்கள்

வயது ஆகஆக விருப்புவெறுப்புகள் மாறும் என்பது உண்மைதான். “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 13:11) ஒரு டீனேஜராக நீங்கள் மற்றவர்களிடம் ரசித்த குணங்களும், வளர்ந்து ஆளான பிறகு நீங்கள் மற்றவர்களிடம் ரசிக்கும் குணங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கலாம். இதனால்தான், ‘இளமையின் மலரும் பருவத்தை கடக்கும்வரை,’ அதாவது பாலியல் ஆசைகள் உச்சத்தில் இருக்கும் காலம் கடந்துபோகும்வரை காத்திருந்து, பிறகு மணத்துணையைத் தேர்ந்தெடுக்கும்படி பைபிள் ஊக்குவிக்கிறது; அது ஒரு மிகப் பெரிய தீர்மானம்.​—1 கொரிந்தியர் 7:36, NW.

உங்கள் காதலனிடமோ காதலியிடமோ உங்கள் பெற்றோர் குறைகளைக் கண்டால்? நன்மை தீமையைப் பகுத்தறியும் அவர்களுடைய ஆற்றல் பல வருட அனுபவத்தால் நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம். (எபிரெயர் 5:14) ஆகவே, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள நபரிடம் உங்களுக்குப் புலப்படாத பெரிய குறைகள் அவர்களுக்குப் புலப்படலாம். சாலொமோன் ஞானி எழுதிய வார்த்தைகளிலுள்ள நியமத்தைக் கவனியுங்கள்: “தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.” (நீதிமொழிகள் 18:17) அதேபோல், உங்கள் காதலனோ காதலியோ, தான்தான் உங்களுக்கு ஏற்ற ஜோடி என உங்களை நம்ப வைத்திருக்கலாம். ஆனால் உங்கள் பெற்றோர் ‘அவரைப் பரிசோதித்த’ பிறகு, சில உண்மைகளை வெட்டவெளிச்சமாக்கலாம்; அதற்கு நீங்கள் கவனம் செலுத்துவது புத்திசாலித்தனமாகும்.

உதாரணத்திற்கு, ‘கர்த்தருக்குட்பட்டவரை’ மட்டுமே திருமணம் செய்ய வேண்டுமென்று உண்மை கிறிஸ்தவர்களுக்கு பைபிள் அறிவுறுத்துவதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டுமென அவர்கள் உங்களுக்கு நினைப்பூட்டலாம். (1 கொரிந்தியர் 7:39) ஆனால் உங்களுக்குத் தெரிந்த சிலர், வேறு மதத்தவரை மணந்தபோதிலும் இப்போது இருவருமாகச் சேர்ந்து யெகோவாவைச் சந்தோஷத்துடன் சேவித்து வருகிறார்களே என்று சொல்லி நீங்கள் ஆட்சேபிக்கலாம். அவ்வாறு நடப்பது உண்மைதான். ஆனால் வெகு சில சந்தர்ப்பங்களிலேயே அவ்வாறு நடக்கிறது. வேறு மதத்தவரை நீங்கள் திருமணம் செய்துகொண்டால், யெகோவாவின் தராதரங்களைப் புறக்கணிப்பதோடு ஆன்மீக ரீதியிலும் உங்களுக்கு நீங்களே குழிதோண்டிக்கொள்வீர்கள்.​—2 கொரிந்தியர் 6:14. c

திருமணத்திற்குத் தவறான காரணம்

சில இளைஞர்கள், காதலித்தவருடன் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டதால், மனசாட்சி உறுத்தாமலிருக்க ஓடிப்போய் அவரையே திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். அல்லது, அவர்களுடைய பாவத்தின் விளைவுகளை​—⁠உதாரணத்திற்கு, கர்ப்பமடைந்திருப்பதை​—⁠மறைக்க நினைத்து திருமணம் செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஒரு பாவத்தை மறைக்க திருமணம் செய்துகொள்ளப்போய் இன்னொரு பாவத்தையும் செய்து நிலைமையை இன்னும் மோசமாக்குகிறீர்கள். “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான்” என்று சாலொமோன் எச்சரித்தார். (நீதிமொழிகள் 28:13) சாலொமோனின் பெற்றோர்களாகிய தாவீதும் பத்சேபாளும், தங்கள் ஒழுக்கக்கேட்டை மறைக்க முயன்றது எவ்வளவு முட்டாள்தனம் என்பதைப் புரிந்துகொண்டார்கள். (2 சாமுவேல் 11:2–12:25) ஆகவே, உங்கள் பாவத்தை மறைப்பதற்குப் பதிலாக அதைக் குறித்து உங்கள் பெற்றோரிடமும் சபை மூப்பர்களிடமும் பேசுங்கள். இதற்கு அதிக தைரியம் தேவைப்படும், என்றாலும், நீங்கள் மனந்திரும்பினால் யெகோவா உங்களை நிச்சயம் மன்னிப்பார். (ஏசாயா 1:18) மறுபடியும் சுத்தமான மனசாட்சியைப் பெற்றுவிட்டீர்கள் என்றால், திருமணம் சம்பந்தமாக சமநிலையான ஒரு தீர்மானத்தை உங்களால் எடுக்க முடியும்.

பிற்பாடு வருத்தப்படுவதைத் தவிருங்கள்

ஆலன் இவ்வாறு தன் திருமணத்தைப் பற்றி சொல்கிறார்: “நாங்கள் நினைத்தபடியே சிம்ப்பிளாகக் கல்யாணம் செய்துகொண்டோம், இதனால் அந்தளவு டென்ஷன் இருக்கவில்லை. ஆனால் என்னுடைய வருத்தமெல்லாம், நான் ஏன் அந்தத் தீர்மானத்தை எடுத்தேன் என்பதை என் குடும்பத்தாருக்கு என்னால் சரியாகப் புரியவைக்க முடியவில்லையே என்பதுதான்.”

பக்குவமடைந்த ஓர் ஆணும் பெண்ணும், சம்பிரதாயப்படி கல்யாணம் செய்கிறார்களா இல்லையா என்பது அவர்களது தனிப்பட்ட தீர்மானம். ஆனாலும், திருமணத்தைக் குறித்து தீர்மானம் எடுக்கையில், அவசரப்படாமல் நிதானமாக யோசியுங்கள், உங்கள் குடும்பத்தாருடன் கலந்துபேசுங்கள், உங்கள் ‘நடையின்மேல் கவனமாயிருங்கள்.’ அப்படிச் செய்தால், பிற்பாடு வருந்த மாட்டீர்கள்.​—நீதிமொழிகள் 14:⁠15. (g05 11/22)

[அடிக்குறிப்புகள்]

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b வணக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் இந்த இடங்கள், யெகோவாவின் சாட்சிகளுடைய திருமணங்களுக்கு ஏற்றவையாக இருக்கின்றன. திருமணம் எளிமையாக நடத்தப்படுகிறது; பைபிள் நியமங்களின் அடிப்படையில் சுருக்கமான ஒரு பேச்சு கொடுக்கப்படுகிறது; மண வாழ்க்கை செழித்தோங்குவதற்கு அந்தப் பேச்சு அஸ்திவாரமாக அமைகிறது. இப்படி ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்துவதற்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

c இவ்விஷயத்தின்பேரில் கூடுதலான விளக்கத்திற்கு, காவற்கோபுரம், ஜூலை 1, 2004, பக்கங்கள் 30-31 மற்றும் ஜூன் 1, 1990, பக்கங்கள் 12-16 ஆகியவற்றைக் காண்க.

[பக்கம் 23-ன் படம்]

திருமணம் சம்பந்தமாகத் தீர்மானிக்கையில், உங்கள் குடும்பத்தாருடன் கலந்துபேசுங்கள்