Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிராஃபிக் ஜாம் நீங்கள் என்ன செய்யலாம்?

டிராஃபிக் ஜாம் நீங்கள் என்ன செய்யலாம்?

டிராஃபிக் ஜாம் நீங்கள் என்ன செய்யலாம்?

பிலிப்பைன்ஸிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

எச்சரிக்கை: அநேக மாநகரங்கள் ஒருவித கொள்ளை நோயினால் அவதிப்படுகின்றன. அது ஒரு தொற்றுநோயும் அல்ல, கபளீகரம் செய்யும் பூச்சிகளின் கூட்டமும் அல்ல. ஆனாலும் லட்சக்கணக்கானோரின் நலனை அது அச்சுறுத்துகிறது. அது என்ன? அதுதான் டிராஃபிக் ஜாம்!

அடிக்கடி டிராஃபிக் ஜாமில் மாட்டிக்கொள்வது ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். சொல்லப்போனால், டிராஃபிக்கில் மாட்டிக்கொள்ளும் ஒரு நபருக்கு குறைந்தது ஒரு மணிநேரத்திற்குள் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதென்று சமீபத்திய ஆய்வு ஒன்று காண்பிக்கிறது. த நியுஜிலாந்து ஹெரால்ட் என்ற செய்தித்தாள் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “மாரடைப்பு ஏற்படுகிற வாய்ப்பு திடீரென அதிகமாவதற்கு வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையும், அதோடு சப்தமும், மன அழுத்தமும் முக்கிய காரணங்களாக இருக்கலாம்.”

காற்றில் நச்சு

பெரும்பாலான மோட்டார் வாகனங்கள், நைட்ரஜன் ஆக்ஸைடுகளையும் புற்றுநோயுண்டாக்கும் சில பொருள்களையும் வெளியேற்றுகின்றன. முக்கியமாக டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் நுண்ணிய துகள்களை மிக ஏராளமாக வெளியேற்றுகின்றன. அவை மக்களின் உடல்நலத்திற்கு மாபெரும் கேடு விளைவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும், காற்றில் கலந்துவிடுகிற நச்சுகளால் சுமார் 30 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்றும், அந்த நச்சுகள் பெரும்பாலும் மோட்டார் வாகனங்களிலிருந்தே வெளியேறுகின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஓர் அறிக்கையின்படி, ஐரோப்பாவிலுள்ள பிள்ளைகளுக்கு ஏற்படும் சுவாசத் தொற்றுகளில் 10 சதவீதத்திற்குக் காரணம் காற்றில் கலந்துவிடுகிற நுண்ணிய துகள்களாகும்; இந்தச் சதவீதம், டிராஃபிக் நிறைய உள்ள நகரங்களில் இன்னுமதிகமாக இருக்கிறது.

இதனால் பூமியின் சுற்றுச்சூழியலுக்கு ஏற்படும் பாதிப்பைக் கவனியுங்கள். வாகனங்களிலிருந்து வெளியேறுகிற நைட்ரஜன் ஆக்ஸைடுகளும் சல்ஃபர் டையாக்ஸைடும் அமில மழைக்குக் காரணமாகின்றன; இம்மழை, பூமியிலிருக்கும் நீர் நிலைகளை அசுத்தமாக்கி, நீர்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கிழைத்து, பற்பல பயிர்களை நாசப்படுத்துகிறது. இதைவிடக் கொடுமை என்னவென்றால், வாகனங்களிலிருந்து பெருமளவு கார்பன் டையாக்ஸைடு வெளியேற்றப்படுகிறது. புவிச்சூடேற்றத்திற்கு இதுவே முக்கிய பொறுப்பாளி எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது; புவிச்சூடேற்றத்தினால் பூமிக்கு வேறு பல ஆபத்துகளும் ஏற்படுகின்றன.

இன்னுமதிக விபத்துகள்

வாகன நெரிசல் அதிகரிக்க அதிகரிக்க, மனித உயிருக்கு ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு வருடமும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வாகன விபத்துகளில் இறந்துபோகிறார்கள்; இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. முக்கியமாக சில பகுதிகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, “ஒவ்வொரு 10 லட்சம் பேரிலும், 690 பேர் கிரீஸிலும் 120 பேர் ஸ்வீடனிலும் வாகன விபத்துகளில் இறக்கிறார்கள்” என ஐரோப்பிய கமிஷனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சமீப ஆண்டுகளாக, டிரைவர்களின் கோபாவேச செயல்களைப் பற்றிய செய்தி அடிக்கடி காதுகளில் விழுகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் கோபத்தில் மோதிக்கொள்வது மிகவும் சகஜமாகி வருகிறது. ஐக்கிய மாகாணங்களில் உள்ள நேஷனல் ஹைவே டிராஃபிக் சேஃப்டி அட்மினிஸ்ட்ரேஷன் நடத்திய ஓர் ஆய்வின்படி, டிரைவர்களின் மூர்க்கத்தனம் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்று “டிராஃபிக் ஜாம்”; இதை அந்த டிரைவர்களே ஒப்புக்கொண்டார்கள்.

பொருளாதாரத்தைப் பாதிக்கும் பிணி

டிராஃபிக் ஜாமினால் பணமும் விரயமாகிறது. ஓர் ஆய்வின்படி, கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டுமே ஒவ்வொரு வருடமும் டிராஃபிக் ஜாமினால் 400 கோடி லிட்டர் எரிபொருள் வீணாகிறது. இப்படிப்பட்ட நேரடி இழப்போடு மற்ற மறைமுக இழப்புகளும் உள்ளன. உதாரணத்திற்கு, வியாபார வாய்ப்புகள் பறிபோகின்றன, தூய்மைக்கேட்டினால் மருத்துவ செலவு அதிகரிக்கிறது, எண்ணற்ற விபத்துகளால் சேதம் ஏற்படுகிறது.

இந்த எல்லா இழப்புகளையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்தால், தேசிய பொருளாதாரமே ஆட்டங்காணும். டிராஃபிக் ஜாமினால் விரயமாகும் நேரத்தையும் எரிபொருளையும் மட்டும் எடுத்துக்கொண்டாலே ஒரு வருடத்தில் அமெரிக்கர்களுக்கு சுமார் 68 பில்லியன் டாலர் (4.6 லட்சம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்படுவதாக ஓர் ஆய்வு காட்டியது. கிழக்கு ஆசிய நாடுகளில் பிலிப்பைன் ஸ்டார் என்ற செய்தித்தாள் இந்த அறிக்கையை வெளியிட்டது: “டாக்ஸியில் மீட்டர் ஓடிக்கொண்டே போவதுபோல், டிராஃபிக் ஜாமினால் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான பணம் செலவாகிக்கொண்டே போகிறது.” ஐரோப்பாவில் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் செலவாகிறதென கணக்கிடப்பட்டிருக்கிறது.

டிராஃபிக் ஜாம்​—⁠எதிர்காலத்தில் இருக்குமா?

டிராஃபிக் பிரச்சினையைத் தீர்க்க எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தும் நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது. ஐக்கிய மாகாணங்களிலுள்ள 75 நகர்ப்புற பகுதிகளில் ஒரு நிறுவனம் (Texas Transportation Institute) நடத்திய தேசிய ஆய்வு ஒன்றின்படி, டிராஃபிக் ஜாமில் வீணாகும் நேரம் அதிகரித்திருக்கிறது; 1982-⁠ல் அது ஆண்டுக்குச் சராசரியாக 16 மணிநேரமாக இருந்தது, ஆனால் 2000-⁠ல் அது 62 மணிநேரமாக உயர்ந்தது. மேலும், பயணிகள் டிராஃபிக்கில் மாட்டிக்கொள்ள நேரிடும் சமயமும் அதிகரித்துள்ளது; அதாவது, ஒரு நாளுக்கு 4.5 மணிநேரமாக இருந்தது இப்போது 7 மணிநேரமாக அதிகரித்துள்ளது. அந்த அறிக்கை மேலும் சொன்னதாவது: “ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆண்டுகளில் டிராஃபிக் ஜாமின் வீதம் அந்த நகரப் பகுதிகள் அனைத்திலும் அதிகரித்து வந்திருக்கிறது. டிராஃபிக் ஜாமாகும் நேரமும் அதிகரித்திருக்கிறது; இந்தக் காலத்திலெல்லாம் மக்கள் அதிகமாகப் பயணம் செய்கிறார்கள், ஆகவே அதிகமான சாலைகள் டிராஃபிக்கால் பாதிக்கப்படுகின்றன.”

இதேபோன்ற அறிக்கைகள் மற்ற நாடுகளிலிருந்தும் வந்திருக்கின்றன. ஐரோப்பிய கமிஷனின்கீழ் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் முடிவாக இவ்வாறு சொன்னார்கள்: “நம்முடைய போக்குவரத்து முறையையே முற்றிலும் மாற்றினால் தவிர, டிராஃபிக் ஜாம்களை தவிர்க்க முடியாது; அடுத்த பத்தாண்டில் அவை முழு நகரங்களையே ஸ்தம்பிக்கச் செய்துவிடும்.”

ஆசிய நாடுகளிலும் அதே பிரச்சினைதான். டிராஃபிக் ஜாம்களுக்கு டோக்கியோ பேர்போனது; ஜப்பான் முழுவதும் உள்ள மற்ற நகரங்களில்கூட இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசல்தான். பிலிப்பைன்ஸில் இதுபோன்ற அறிக்கைகள் இப்போது சர்வசாதாரணம்: “சாலைகளில் பயங்கர வாகன நெரிசல்; அதுவும் மிக அவசரமாகச் செல்ல வேண்டிய ‘ரஷ் அவர்ஸில்’ ஆயிரக்கணக்கானோர் நகர முடியாமல் சிக்கித்தவிக்கிறார்கள்; ‘ரஷ் அவர்ஸ்’ இப்போது அதிகரித்திருக்கிறது.”​—⁠மணிலா புல்லட்டீன் செய்தித்தாள்.

உண்மையில் இந்த டிராஃபிக் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு இப்போது கிடையவே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆன்தனி டௌன்ஸ் என்பவர் (Stuck in Traffic​—Coping With Peak-Hour Traffic Congestion என்ற புத்தகத்தின் ஆசிரியர்) இந்த முடிவுக்கு வந்தார்: “எதிர்காலத்தில் டிராஃபிக் ஜாமைக் குறைக்க என்னதான் கொள்கைகளை வகுத்தாலும் அது உலகின் எல்லாப் பாகங்களிலும் இன்னும் மோசமடையவே செய்யும். எனவே, இறுதியாக நான் சொல்ல விரும்புவது இதுதான்: டிராஃபிக் ஜாமை சகஜமான ஒன்றாக ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.”

நீங்கள் என்ன செய்யலாம்?

அப்படியானால், எரிச்சலூட்டும் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க நீங்கள் என்ன செய்யலாம்? டிராஃபிக்கில் அடிக்கடி சிக்கித்தவிக்கும் கோடிக்கணக்கானோரில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்கள் உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதுகாக்க இதோ சில டிப்ஸ்:

தயாராக இருங்கள். அநேகருக்கு, டிராஃபிக்கில் மாட்டிக்கொள்வதற்கு முன்பே ஏகப்பட்ட டென்ஷன் இருந்திருக்கும். காலையில் லேட்டாக எழுந்து, பிறகு அவசர அவசரமாகக் குளித்து, ட்ரெஸ் செய்துகொண்டு, சாப்பிட்டுவிட்டு ஓட்டமாய் ஓடிவந்திருப்பார்கள். வேலைக்கு லேட்டாகிவிடுமோ என்ற பெரிய டென்ஷன் வேறு இருந்திருக்கும். அதனால், டிராஃபிக் ஜாமில் சிக்கிக்கொள்ளும்போது அந்த டென்ஷன் ரொம்பவே எகிறிவிடுகிறது. இதையெல்லாம் தவிர்க்க, எப்படியும் டிராஃபிக்கில் மாட்டிக்கொள்ள நேரிடும் என்பதை எதிர்பார்த்து கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்ப முயற்சி செய்யுங்கள். இதனால் ஒருவேளை டிராஃபிக் ஜாமையேகூட தவிர்க்கலாம். “டென்ஷன் இல்லாமல் பயணிக்கும் ஒருவர் முந்தின நாளே அல்லது முந்தின இரவே தயாராக ஆரம்பிக்கிறார். தனக்கோ பிள்ளைகளுக்கோ தேவைப்படும் துணிமணி, ப்ரீஃப்கேஸ், சாப்பாடு போன்றவற்றை காலையில் அவசர அவசரமாக ரெடி செய்வதற்குப் பதிலாக இரவே ரெடி செய்து வைக்கிறார்” என்று ஒரு புத்தகம் (Commuting Stress​—Causes, Effects, and Methods of Coping) சொல்கிறது. அதுமட்டுமல்ல, இரவில் நன்கு தூங்குவதும் அவசியம். காலையில் சீக்கிரமாகவே எழுந்திருக்க இரவில் ஓரளவு சீக்கிரமாகவே தூங்கச் செல்ல வேண்டும்.

காலையில் சீக்கிரம் எழுந்திருப்பதால் மற்ற நன்மைகளும் உண்டு. உதாரணத்திற்கு, காலையில் உடற்பயிற்சி செய்யலாம். டிராஃபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு வெகு நேரம் உட்கார்ந்திருக்கையில் உங்கள் தசைகள் இறுகிக்கொள்ளலாம். ஆகவே, முடியுமானால் காலையிலேயே உடற்பயிற்சி செய்துவிட்டுப் புறப்படுவது உதவியாக இருக்கும். தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமாக இருப்பதற்கும், டிராஃபிக்கில் மாட்டும்போது ஏற்படும் உடல் களைப்பைச் சமாளிப்பதற்கும் உதவும். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது, சத்துள்ள உணவைச் சாப்பிடவும் உதவும். சத்தில்லாத உணவைச் சாப்பிட்டுவிட்டு அல்லது ஒன்றுமே சாப்பிடாமல் வந்து டிராஃபிக் ஜாமில் மாட்டிக்கொள்வது உங்கள் டென்ஷனை அதிகரிக்கும்.

உங்கள் வாகனம் நல்ல நிலையில் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வதும் டென்ஷனைக் குறைக்க உதவும். இருக்கிற டிராஃபிக் போதாதென்று வண்டி வேறு மக்கர்பண்ண ஆரம்பித்தால் வாழ்க்கையே வெறுத்துவிடும். அதுவும் மழைக்காலத்தில் அல்லது குளிர்காலத்தில் கேட்கவே வேண்டாம். அதனால், உங்கள் காரின் ப்ரேக்குகள், டையர்கள், ஏசி, ஹீட்டர், வின்ட்ஷீல்ட் வைப்பர்கள், டீஃப்ராஸ்டர்கள் போன்ற முக்கிய பாகங்களைச் சரியாகப் பராமரியுங்கள். டிராஃபிக் ஜாமில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டால்கூட டென்ஷன் தலைக்கேறிவிடலாம். மேலும், உங்கள் வாகனத்தில் பெட்ரோலோ டீசலோ போதுமானளவு இருக்கிறதாவென எப்போதும் செக் செய்துகொள்ளுங்கள்.

விஷயமறிந்திருங்கள். நீங்கள் வண்டி ஓட்ட ஆரம்பிப்பதற்கு முன்பு, மோசமான வானிலை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகள், தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் சாலைகள், விபத்துகள், மற்ற டிராஃபிக் நிலவரங்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். ரேடியோவில் அல்லது செய்தித்தாளில் இந்த விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும், அந்தப் பகுதிக்குரிய ஒரு நிலவரைபடத்தை வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு, மூன்று வழிகளைத் தெரிந்துவைத்திருப்பது, சாலையில் பிரச்சினை ஏதேனும் ஏற்படுகையில் வேறு பாதையில் செல்ல உதவியாக இருக்கும்.

◼ சௌகரியமாக இருங்கள். முடிந்தளவு சௌகரியமாக இருக்க உங்களுக்குப் போதுமான காற்றோட்டம் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள், உங்கள் இருக்கையையும் அட்ஜஸ்ட் செய்யுங்கள். ரேடியோ, காஸட், அல்லது சிடி ப்ளேயர் ஏதேனும் இருந்தால் உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்கலாம். சில விதமான இசை, டென்ஷனைக் குறைத்து மனதிற்கு இதமளிக்கும். டிராஃபிக் இரைச்சலின் கொடூரத்தையும் சற்று தணிக்கும். a

◼ ஆக்கபூர்வமாக இருங்கள். டிராஃபிக்கில் மாட்டிக்கொள்கையில் உங்களால் செய்ய முடிந்த மிக ஆக்கபூர்வமான செயல்களில் ஒன்று, நம்பிக்கையான விஷயங்களைப் பற்றி யோசிப்பதே. டிராஃபிக்கை பற்றியே நினைத்து எரிச்சலடைவதற்குப் பதிலாக அந்நாளில் செய்யப்போகும் காரியங்களைப் பற்றி யோசியுங்கள். நீங்கள் தனியாக இருந்தால், முக்கியமான விஷயங்களைப் பற்றி யோசிக்கவும், எந்த இடையூறுகளும் இல்லாமல் தீர்மானங்களை எடுக்கவும் அது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

நீங்கள் ஒரு பயணி என்றால், வரிசையாக நிற்கும் வண்டிகளையே வெறித்துப் பார்ப்பது டென்ஷனை அதிகரிக்கும். அதனால், காத்திருக்கும் நேரத்தை ஆக்கபூர்வமாகச் செலவிட திட்டமிடுங்கள். உங்களுக்குப் பிடித்த ஏதேனும் புத்தகத்தை அல்லது செய்தித்தாளை கையோடு கொண்டுபோகலாம். ஒருவேளை, முந்தைய நாளுக்குரிய சில லெட்டர்களைப் படிக்கலாம். சிலர் கடிதங்கள் எழுதுகிறார்கள் அல்லது போர்ட்டபிள் கம்ப்யூட்டரில் வேறு ஏதேனும் வேலை செய்கிறார்கள்.

எதார்த்தமாய் இருங்கள். அடிக்கடி டிராஃபிக் ஜாம் ஏற்படும் பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், அதை முன்கூட்டி எதிர்பார்த்து அதற்கேற்ப திட்டமிடுங்கள். பெரும்பாலான நகரங்களில் இந்தப் பிரச்சினை தீராது. முன்பு குறிப்பிட்ட புத்தகம் (Stuck in Traffic​—Coping With Peak-Hour Traffic Congestion) இவ்வாறு சொல்கிறது: “இன்று பீக்-அவர்ஸில் டிராஃபிக் ஜாம் ஏற்படும் பெருநகரங்கள் அனைத்திலும், வருங்காலத்தில்கூட கண்டிப்பாக அது தொடரும்.” ஆகவே, டிராஃபிக்கை உங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாக ஏற்றுக்கொண்டு அதை ஆக்கபூர்வமாகச் சமாளிக்க கற்றுக்கொள்ளுங்கள்! (g05 11/22)

[அடிக்குறிப்பு]

a விழித்தெழு! வாசகர்கள் அநேகர் இப்பத்திரிகையின் அல்லது காவற்கோபுரம் என்ற இதன் துணைப் பத்திரிகையின் ஆடியோ ரெக்கார்டிங்குகளைப் போட்டுக்கேட்டு மகிழ்கிறார்கள். சில மொழிகளில் இவை ஆடியோகாஸட், சிடி, MP3 ஆகியவற்றில் கிடைக்கின்றன.

[பக்கம் 26-ன் படம்]

முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் டிராஃபிக்கைத் தவிருங்கள்

[பக்கம் 26-ன் படம்]

வண்டியை ஓட்ட ஆரம்பிப்பதற்கு முன், பொருத்தமான காஸட்டை அல்லது சிடியை தேர்ந்தெடுங்கள்

[பக்கம் 26-ன் படம்]

பயணிக்கையில் நேரத்தை ஆக்கபூர்வமாகச் செலவிட திட்டமிடுங்கள்

[பக்கம் 26-ன் படம்]

உங்கள் கட்டுப்பாட்டை மீறிய காரியங்களை நினைத்து டென்ஷன் ஆகாதீர்கள்