Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நகரவாசிகளுக்கு உணவூட்டும் சவால்

நகரவாசிகளுக்கு உணவூட்டும் சவால்

நகரவாசிகளுக்கு உணவூட்டும் சவால்

“உலகிலுள்ள நகரங்களுக்குப் போதுமான உணவளிக்கும் மாபெரும் பணி ஓர் அவசரப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இது உணவு உற்பத்தியாளர்களும் போக்குவரத்துத் துறையினரும் மொத்த வியாபாரிகளும் எண்ணற்ற சில்லறை வியாபாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய ஒரு வேலை.”​—⁠ஐக்கிய நாட்டு உணவு மற்றும் வேளாண் நிறுவன (FAO) பொது இயக்குநர் ஷாக் ஜூஃப்.

நகரவாசிகளுக்கு தவறாமல் உணவு வழங்குவது 21-⁠ம் நூற்றாண்டின் “மிகப் பெரிய மனிதாபிமான பிரச்சினை”யாக உருவெடுக்கலாம் என்றும்கூட உணவு வினியோகிக்கும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

“உயிர்த்துடிப்புடன் ஆரோக்கியமாக வாழ எல்லா மக்களுக்கும் எல்லா சமயங்களிலும் போதிய உணவு கிடைப்பதே” உணவு பாதுகாப்பு என வரையறுக்கப்படுகிறது. இப்பொழுது உலகெங்கிலும் கிடைக்கிற உணவே உலக ஜனத்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானது​—⁠தேவைக்கு ஏற்ப வினியோகம் செய்தால். ஆனால் நிஜத்தில் பார்த்தால், ஒவ்வொரு இரவும் சுமார் 84 கோடி மக்கள் போதிய உணவின்றியே படுக்கைக்குப் போகிறார்கள். அவர்களில் அநேகர் நகரங்களில் வாழ்கிறார்கள். இந்தப் பிரச்சினையின் பரிமாணங்கள் சிலவற்றை கவனியுங்கள்.

அகோர பசி கொண்ட ‘மெகா’ நகரங்கள்

நகரங்கள் வளர வளர, ஒருகாலத்தில் வேளாண்மைக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களெல்லாம் புதிய வீடுகளும் தொழிற்சாலைகளும் சாலைகளும் அமைக்க பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால், விளைநிலங்கள் நகரங்களிலிருந்து வெகு தொலைவுக்குத் தள்ளப்படுகின்றன. பெரும்பாலும் நகரங்களில் கொஞ்சநஞ்ச உணவுப் பொருள்களே விளைகின்றன அல்லது எந்தவித விளைச்சலுமே இருப்பதில்லை. இறைச்சியும் வெகுதூரத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளிலிருந்தே வருகிறது. பெரும்பாலான வளரும் நாடுகளில், உற்பத்திப் பொருள்களை பண்ணைகளிலிருந்து நகரங்களுக்குக் கொண்டுவர போதிய சாலை வசதிகள் இல்லை. இதனால் சரக்குகள் வந்து சேருவதற்கு நீண்ட காலம் எடுக்கிறது, இதற்கிடையே ஏராளமான உணவுப் பொருள்களும் கெட்டுப்போய் விடுகின்றன, கடைசியில் நுகர்வோர் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது, அவர்களில் பெரும்பாலோர் பரம ஏழைகளாக இருக்கிறார்கள்.

வளரும் நாடுகளில் உள்ள சில நகரங்கள் ஏற்கெனவே பெரியவையாக உள்ளன, அவை நிச்சயம் இன்னும் பெரியவையாக ஆகப்போகின்றன. 2015-⁠க்குள், மும்பையில் (முன்பு பம்பாய்) மக்கள் தொகை 2.26 கோடியும், டெல்லியில் 2.09 கோடியும், மெக்சிகோ நகரத்தில் 2.06 கோடியும் சாவோ போலோவில் 2.0 கோடியும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெருநகரங்கள்​—⁠மணிலா அல்லது ரியோ டிஜெனிரோ போன்றவை​—⁠நாளொன்றுக்கு 6,000 டன் வரையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதாக கணக்கிடப்படுகிறது.

இது ஓர் எளிய வேலை அல்ல, அதோடு இது அதிக சிக்கலாகவும் ஆகிவருகிறது, முக்கியமாக அதிவேக வளர்ச்சி அடைந்துவரும் பகுதிகளில். உதாரணமாக, பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பிறப்பு விகிதம் அதிகமாக (2.8 சதவீதம்) இருப்பது மட்டுமல்லாமல், கிராமப்புற பகுதிகளிலிருந்து மக்கள் “குபுகுபுவென” இடம்பெயர்ந்தும் வருகிறார்கள். நல்ல வாழ்க்கைச் சூழல், கல்வி, ஆரோக்கியம், வேலை, பொருள்கள், சாலை வசதிகள் போன்றவற்றைப் பெற ஏற்கெனவே ஜனநெரிசல் மிகுந்த நகரங்களுக்குள் வெள்ளம் போல் மக்கள் திரண்டு வருவதை பெரும்பாலான வளரும் நாடுகள் எதிர்பட்டு வருகின்றன. இப்படி குடிபெயர்ந்து வருவதால், எதிர்காலத்தில் பங்ளாதேஷில் உள்ள டாக்கா நகரத்தின் ஜனத்தொகை ஆண்டொன்றுக்கு பத்து லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது சீனாவின் ஜனத்தொகையில் மூன்றில் இரண்டு பாகத்தினர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர், ஆனால் 2025-⁠க்குள் அவர்களில் பெரும்பாலோர் நகர்ப்புற வாசிகளாக மாறுவர் என கணக்கிடப்படுகிறது. அதே காலப்பகுதிக்குள், இந்திய நகரங்களில் 60 கோடி மக்கள் வசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்து செல்வது உலகின் பெரும்பாலான பகுதிகளின் கட்டமைப்பையே மாற்றுகிறது. உதாரணமாக, 1960-⁠ல், மேற்கு ஆப்பிரிக்காவின் ஜனத்தொகையில் 14 சதவீதத்தினர் மாத்திரமே நகர்ப்புறங்களில் வசித்துவந்தார்கள். 1997-⁠ல் நகர்ப்புற ஜனத்தொகை 40 சதவீதமாக ஆனது, 2020-⁠க்குள் இந்த எண்ணிக்கை 63 சதவீதத்திற்கு உயருமென நம்பப்படுகிறது. ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில், நகர்ப்புற ஜனத்தொகை பத்தாண்டுகளுக்குள் இரட்டிப்பாக மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது. சமீப எதிர்காலத்தில், வளரும் நாடுகளில் பட்டணங்களிலும் நகரங்களிலுமே 90 சதவிகித ஜனத்தொகை அதிகரிப்பு இருக்குமென கணக்கிடப்படுகிறது.

பசியோடிருக்கும் இத்தனை அநேக வாய்களுக்கு உணவூட்ட நகர்ப்புற பகுதிகளில் உணவு வழங்கீட்டை அதிகரிப்பது இமாலய சாதனையாக இருக்கிறது. இதற்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள், பேக்கிங் செய்வோர், சரக்குகளை ஏற்றிச் செல்வோர், வியாபாரிகள், உணவுப் பொருள்களை கையாளுவோர் ஆகியோருடைய ஒருங்கிணைந்த முயற்சி அவசியம், அதோடு ஆயிரக்கணக்கான வாகனங்களும் தேவைப்படுகின்றன. என்றாலும், சில நாடுகளில், நகர்ப்புறங்களின் உணவு தேவை அதிகரித்திருக்கிறது; உணவை வழங்கும் சுற்றியுள்ள இடங்களோ இந்தத் தேவையை பூர்த்திசெய்ய முடியவில்லை. அதோடு, வளரும் நாடுகளில் உள்ள பெரும்பாலான நகரங்களில், போக்குவரத்து சேவைகளும், சேமிப்பு கிடங்குகள், மார்க்கெட்டுகள், கசாப்புக் கூடங்கள் போன்றவையும் ஏற்கெனவே நிரம்பி வழிகின்றன.

பரவலாக காணப்படும் வறுமை

பெருகிவரும் மக்களுக்கு உணவூட்டும் பிரச்சினை வறுமை தாண்டவமாடும் இடங்களில் மேலும் சிக்கலாகியிருக்கிறது. வளரும் நாடுகளில் உள்ள அநேக பெருநகரங்களில், உதாரணமாக டாக்கா, ப்ரி டவுன், குவாதமாலா ஸிட்டி, லாகோஸ், லா பாஸ் போன்ற பெருநகரங்களில், 50 சதவீதத்தினர் அல்லது அதற்கும் அதிகமானோர் ஏற்கெனவே வறுமையில் தவிக்கின்றனர்.

இத்தகைய மக்களுக்கு உணவு வழங்குவதைப் பற்றி பேசும்போது, பொருள்கள் கடையில் கிடைப்பதற்கும் (availability) கையில் கிடைப்பதற்கும் (accessibility) இடையே உள்ள வேறுபாட்டை ஆய்வாளர்கள் காட்டுகிறார்கள். ஸிட்டி மார்கெட்டுகளில் உணவுப் பொருள்கள் விற்கப்படலாம்​—⁠அதாவது கிடைக்கலாம்​—⁠ஆனால் யானை விலை குதிரை விலையாக இருந்தால் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு அதனால் எந்தப் பயனுமில்லை. நகரவாசிகள் சிலருடைய வருவாய் உயருகையில், அவர்கள் பல்வகைப் பொருள்களை ஏராளமாக வாங்கலாம். மறுபட்சத்தில், நகர்ப்புற ஏழைகளுக்கோ, தங்களுடைய தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப போதுமான உணவுப் பொருள்களை வாங்குவது கடினமாக இருக்கிறது. இத்தகைய ஏழை குடும்பங்கள் தங்களுடைய மொத்த வருவாயில் 60 முதல் 80 சதவீதத்தை உணவுக்காக செலவழிக்க வேண்டியிருக்கிறது.

உணவுப் பொருள்களை மொத்தமாக வாங்கினால், ஒருவேளை விலை குறைவாக இருக்கலாம். என்றாலும், போதுமான பணம் கைவசமில்லாத மக்களுக்கு அது சாத்தியமல்ல. பெரும்பாலான குடும்பங்களால் குறைந்தபட்ச உணவுத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடிவதில்லை, அதனால் ஊட்டச்சத்தின்மை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது. உதாரணமாக, சஹாரா பாலைவனத்தின் தெற்கில் அமைந்துள்ள ஆப்பிரிக்க நகரங்களில், ஊட்டச்சத்தின்மை “பரவலாகவும் பெரும் பிரச்சினையாகவும் இருப்பதாக” சொல்லப்படுகிறது.

முக்கியமாக, இப்படி கஷ்டப்படுகிறவர்கள் சமீபத்தில் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்குச் குடியேறியவர்களே; நகர்ப்புற சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வது இவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. உதாரணமாக, ஒற்றைத் தாய்மார்கள், அரசாங்கத்திடம் போதுமான பணம் இல்லாததால் காலந்தாழ்த்தி சம்பளம் பெறுகிற இளநிலை சிவில் ஊழியர்கள், உடல் ஊனமுற்றோர், வயதானோர், வியாதிப்பட்டோர் ஆகியோருக்குக் கடினமாக இருக்கிறது. இத்தகைய ஆபத்தில் இருப்போர் பெரும்பாலும் அடிப்படை வசதிகள்​—⁠மின்வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி, சாலை வசதி, குப்பைத்தொட்டி வசதி போன்றவை​—⁠இல்லாத ஒதுக்குப்புற இடங்களில் வசிக்கிறார்கள்; அதிலும், தற்காலிக அல்லது மிகவும் மட்டமான வீடுகளில்தான் பெரும்பாலோர் குடியிருக்கிறார்கள். இதுபோன்ற சூழல்களில் வாழ்ந்துகொண்டு கைக்கும் வாய்க்கும் போராடுகிற கோடானுகோடி மக்கள் உணவு வழங்கீட்டு முறையில் ஏற்படும் எந்தக் குறைபாடுகளுக்கும் எளிதில் பலியாகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் மார்கெட்டுகளிலிருந்து வெகு தொலைவில் வசிக்கிறார்கள், அதனால் மட்டரகமான உணவுப் பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. உண்மையிலேயே அவர்களுடைய சூழ்நிலை கவலைக்குரியது.

அநிச்சயமான, ஆரோக்கியமற்ற சூழல்கள்

பெரும்பாலான இடங்களில், நகரங்கள் தாறுமாறாகவும் சட்ட விரோதமாகவும் அதிவேக வளர்ச்சி அடைவது சர்வ சாதாரணமாக காணப்படுகிறது. இதனால் ஆரோக்கியமற்ற சூழலும் பெரும் குற்றச்செயல்கள் நிறைந்த பாதுகாப்பற்ற சூழலுமே ஏற்படுகிறது. “கொஞ்சம் பேர் மாத்திரமே வசிக்கக்கூடிய இடத்தில் ஜனத்தொகை ராக்கெட் வேகத்தில் அதிகரிப்பதை சமாளிப்பது வளரும் நாடுகளில் உள்ள நகர நிர்வாகிகளுக்குப் பெரும் போராட்டமாக இருப்பதாக” நகரவாசிகளுக்கு உணவூட்டுதல் என்ற FAO பிரசுரம் கூறுகிறது.

ஆப்பிரிக்காவில் பெரும்பாலான இடங்களில், மார்கெட்டுகள் பெரும்பாலும் எந்தவித திட்டமிடுதலுமின்றி திடீரென முளைக்கின்றன. எங்கெல்லாம் கிராக்கி இருக்கிறதோ அங்கெல்லாம் வியாபாரிகள் தங்களுடைய பொருள்களை விற்க ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படி முளைக்கிற மார்கெட்டுகளுக்கு மிக அடிப்படை வசதிகள்கூட இருப்பதில்லை.

இலங்கையில் உள்ள கொழும்பு நகரத்தில், மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை மார்கெட்டுகள் மோசமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன, அதோடு அதிக நெருக்கடியாலும் அவதிப்படுகின்றன. சென்ட்ரல் மார்கெட்டுக்கு வந்து போவதற்குள் மணிக்கணக்காக ஆகிவிடுகிறதென டிரக் டிரைவர்கள் புலம்புகிறார்கள். வண்டிகளை நிறுத்துவதற்கும் சாமான்களை ஏற்றி இறக்குவதற்கும் போதிய இடவசதி இல்லை.

வேறு இடங்களில், மார்கெட்டுகள் நன்றாக பராமரிக்கப்படுவதில்லை, ஒழுங்கற்று நடத்தப்படுகின்றன. கரிமப் பொருள்கள் மற்றும் கனிமப் பொருள்களுடைய கழிவுகளின் அளவு அதிகரித்து வருவதால் சுகாதாரமற்ற நிலைமைகள் உருவாகின்றன, அதனால் உடல்நலத்திற்கு ஆபத்துகளும் ஏற்படுகின்றன. “வாழ்க்கைத் தரம் படிப்படியாக சீரழிவதற்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் அடிகோலுவதாக” தென் ஆசிய நகரம் ஒன்றின் மேயர் கூறுகிறார்.

தென் கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நகரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சிகளைப் பற்றி ஒரு சுற்றாய்வு நடத்தப்பட்டது; அது ஆரோக்கியத்தோடும் சுற்றுச்சூழலோடும் தொடர்புடைய பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இறைச்சியை “புழுதியும் அழுக்குத் தண்ணீரும் படும்படி வெறும் தரையில் பார்வைக்கு வைப்பது” அங்கு சகஜமாக இருக்கிறது. சாம்பிளுக்கு எடுக்கப்பட்ட 40 சதவீத பன்றி இறைச்சியிலும் 60 சதவீத மாட்டு இறைச்சியிலும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரியான சால்மோனெல்லா இருந்தது, 100 சதவீத மாட்டு இறைச்சி சாம்பிள்களில் இ. கோலி (E. coli) என்ற நுண்ணுயிரி இருந்தது. ஈயம், பாதரசம் போன்ற கனரக உலோகங்களால் உண்டாகும் தூய்மைக்கேடும் இருந்தது.

உணவுப் பொருள்களின் பற்றாக்குறையாலும் அவற்றை பெறுவதில் சிக்கல் இருப்பதாலும், நைஜீரியாவில் கனோ என்ற இடத்தில் வசிப்பவர்கள் கிடைக்கும் காலி இடங்களில் எல்லாம் பயிர் செய்ய முயற்சி செய்கிறார்கள். என்றாலும், இவர்களில் பெரும்பாலோருக்கு இந்த நிலத்தின் மீது சட்டப்பூர்வ உரிமை இல்லை. ஆகவே, திடீரென காலி செய்ய வேண்டிய நிலையோ கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்கள் அழிக்கப்படும் ஆபத்தோ ஏற்படலாம்.

FAO-வைச் சேர்ந்த உணவுப் பாதுகாப்பு நிபுணரான ஒலிவியோ ஆர்ஜென்டி என்பவர் மெக்சிகோவில் உள்ள நகர்ப்புற விவசாய பகுதியைப் பார்வையிட்டார். அது, ஓர் ஆற்றுக்கு பக்கத்தில் அமைந்திருந்தது; அந்த ஆற்றில், பக்கத்து கிராமத்திலிருந்து வெளியேறும் சாக்கடை நீர் கலப்பதை கண்டுபிடித்ததைப் பற்றி விவரிக்கிறார். உள்ளூர் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளுக்கு அந்த ஆற்று நீரையும் நாற்றங்கால்களுக்கு அங்கிருந்து எடுக்கப்பட்ட மண்ணையும் பயன்படுத்தினார்கள். “இதனால் ஏற்படும் ஆபத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று அதிகாரிகளிடம் நான் கேட்டேன், அவர்களோ, இந்த நிலைமையை சரிசெய்வதற்குத் தேவையான நிதி வசதியோ தொழில்நுட்பமோ தங்களிடம் இல்லாததால் இதைக் குறித்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக கூறினார்கள்” என ஆர்ஜென்டி எழுதுகிறார். வளரும் நாடுகளில் அநேக இடங்களில் இத்தகைய பிரச்சினைகள் உள்ளன.

சமாளிக்கப் போராடும் நகரங்கள்

வேகமாக வளர்ந்துவரும் நகரங்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளின் பட்டியலுக்கு முடிவே இல்லாதது போல் தோன்றுகிறது. சர்வதேச அமைப்புகள், திட்டம் வகுப்பவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் இவற்றைத் தீர்ப்பதற்கு தங்களால் இயன்றதைச் செய்துவருகிறார்கள். கிராம உணவு உற்பத்தியைப் பெருக்குதல், உணவுப் பொருள்களைப் போதியளவு பெற வழிசெய்தல், அதோடு புதிய சாலைகள், மார்கெட்டுகள், கசாப்புக் கூடங்கள் அமைத்தல் ஆகியவை அவர்களுடைய திட்டங்களில் அடங்கும். பண்டகசாலை வசதிகளுக்கு தனியார் முதலீடு செய்ய ஊக்குவிப்பதன் அவசியத்தையும், விவசாயிகள், வியாபாரிகள், சரக்கேற்றி செல்பவர்கள் ஆகியோர் பணத்தை எளிதில் கடன் வாங்க வழிசெய்வதையும் அவர்கள் உணருகிறார்கள், வியாபாரம் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமாக தகுந்த விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், இப்படி அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டிருக்கிறபோதிலும், உள்ளூர் அதிகாரிகள் பலர், அவற்றில் உட்பட்டுள்ள பிரச்சினைகளை உணரவும் அவற்றிற்கு போதிய கவனம் செலுத்தவும் தவறுகிறார்கள் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அப்படியே அவர்கள் உணர்ந்தாலும், இந்தப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குப் போதிய வள ஆதாரங்கள் இல்லை.

நகரங்கள் எதிர்ப்படும் இமாலய பிரச்சினைகள், முக்கியமாக வளரும் நாடுகள் எதிர்ப்படும் பிரச்சினைகள், அவசர எச்சரிக்கைகளை அறிவிப்பதற்குத் தூண்டியிருக்கின்றன. வாஷிங்டன் டிசியிலுள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் கூறுகிறபடி, “இப்பொழுது நடவடிக்கைகள் எடுத்தால் தவிர, நகரங்களில் ஜனத்தொகை வளர்ந்துகொண்டே இருக்கும், [பசி, ஊட்டச்சத்தின்மை, வறுமை ஆகிய] பிரச்சினைகளும் அவற்றோடு சேர்ந்து அதிகரிக்கத்தான் செய்யும்.” ஏழை நாடுகளில் உள்ள நகரங்களின் எதிர்காலத்தைப் பற்றி மெகா ஸிட்டிஸ் புராஜெக்ட் (நகர்ப்புற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முனையும் நிறுவனங்களின் சர்வதேச வலைப்பின்னல்) தலைவி ஜேனிஸ் பெர்ல்மேன் இவ்வாறு கூறுகிறார்: “கடுமையான நிதி தட்டுப்பாடுகளும் சுற்றுச்சூழல் குறைபாடுகளும் உள்ள நிலையில், அதிக ஜனநெருக்கடிமிக்க ஓர் இடத்தில் வசிக்கும் மக்களுக்கு உணவு, உறைவிடம், வேலை அல்லது போக்குவரத்து வசதிகள் வழங்குவதற்கு எந்தவொரு வழிகாட்டியும் இல்லை. நகரங்கள் மனித உயிரை காப்பாற்ற முடியாத நிலையை எட்டிக்கொண்டிருக்கின்றன.”

என்றபோதிலும், உணவு வழங்கீடு மற்றும் வினியோகிப்பு பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்புவதற்கு நல்ல காரணங்கள் உள்ளன. (g05 11/22)

[பக்கம் 5-ன் பெட்டி]

வளர்ந்துவரும் நகரங்கள்

அடுத்த 30 ஆண்டுகளில் உலகமுழுவதிலும் உள்ள நகரங்களில் ஜனத்தொகை பெருக்கம் மிக அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

2007-⁠க்குள் உலக ஜனத்தொகையில் பாதிக்கும் அதிகமானோர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகெங்கும் நகரங்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 1.8 என்ற வீதத்தில் அதிகரிக்குமென கணக்கிடப்படுகிறது; இந்த வீதப்படி, 38 ஆண்டுகளில் நகர்ப்புற ஜனத்தொகை இரட்டிப்பாகும்.

2003-⁠ல் 50 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான மக்களைக் கொண்ட 46 நகரங்கள் இருந்தன; 2015-⁠ல் அந்த எண்ணிக்கை 61-⁠க்கு உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

[படத்திற்கான நன்றி]

தகவல் மூலம்: உலக நகரமயமாக்கல் எதிர்பார்ப்புகள்​—⁠2003 மறு ஆய்வு (ஆங்கிலம்), ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமுக விவகாரங்கள் இலாக்கா, ஜனத்தொகை பிரிவு

[பக்கம் 6-ன் பெட்டி]

ஒழுங்கற்ற உணவுப் பொருள் வழங்கீட்டிற்கு சில காரணங்களும் அதன் விளைவுகளும்

“உணவுப் பொருட்களின் விலைவாசி திடீரென்றும் பயங்கரமாகவும் ஏறும்போதெல்லாம் நகர்ப்புறத்தில் அரசியல் கொந்தளிப்பு மற்றும் சமுக ஸ்திரமின்மை ஏற்படுவது உலகெங்கிலும் ஏற்கெனவே நன்கு நிரூபிக்கப்பட்ட உண்மை.”​—⁠ஷாக் ஜூஃப், ஐநா உணவு மற்றும் வேளாண் அமைப்பு பொது இயக்குநர்.

1999-⁠ல், ஜார்ஜ், மிச் ஆகிய சூறாவளிகள் கரிபியன் பகுதி மற்றும் மத்திய அமெரிக்காவைத் தாக்கின; அது பேரழிவை ஏற்படுத்தி, இயல்பான வாழ்க்கையைப் பாதித்து, உணவுப் பற்றாக்குறையை உண்டாக்கியது.

1999-⁠ல் ஈக்வடாரிலும், 2000-ல் பிரிட்டனிலும் எரிபொருள் விலை ஏறியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உணவு வழங்கீடு செய்வதில் பெரும் இடையூறு உண்டானது.

போரினால் உண்டாகும் அவலங்களில் ஒன்று உணவுப் பற்றாக்குறை.

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

கோடிகளில் ஒன்று

கோன்ஸ்வெலோவும் அவளுடைய 13 பிள்ளைகளும் பெருவிலுள்ள லிமாவின் புறநகர்ப்பகுதியில் ஒரு புறம்போக்கு நிலத்தில் (மேலே காட்டப்பட்டுள்ளது) வசிக்கிறார்கள். அவளுடைய பிள்ளைகளில் மூவருக்கு டிபி வியாதி இருக்கிறது. “நாங்கள் மலைகளில் வசிப்பது வழக்கம், ஆனால் ஒருநாள் ராத்திரி எங்களுடைய கிராமத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் இந்த நகரத்திற்கு குடிபெயர்ந்து வந்துவிட்டார்கள். ‘லிமாவில், எங்களுடைய பிள்ளைகளுக்கு கல்வியும் போட்டுக்கொள்வதற்கு ஷூவும் கிடைக்கும், அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுமென நினைத்தோம்’” என்பதாக அவள் கூறுகிறாள். ஆகவே, அந்தக் கிராமவாசிகள் கோரைப் பாய்களைத் தயாரித்து, ஒரே ராத்திரியில் எல்லாரும் இந்த நகரத்திற்கு கிளம்பி வந்து, கோரை புல்லில் வீடுகள் அமைத்தார்கள். காலையில், அதிகாரிகள் வந்து காலி செய்ய முடியாத அளவுக்கு நிறைய வீடுகள் இருந்தன.

கோன்ஸ்வெலோவின் வீட்டுக் கூரையில் ஒரு பெரிய ஓட்டை இருக்கிறது, தரையும் மண் தரைதான். “பணக்காரர்களுக்கு விற்பதற்காக இந்தக் கோழிகளை நான் வளர்க்கிறேன்” என்று சொல்லி, அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த கோழிகளைக் காட்டினாள். “என்னுடைய மகளுக்கு ஷூ வாங்குவதற்குப் பணம் தேவைப்பட்டது. ஆனால் இப்போது ஆஸ்பத்திரிக்கும் மருந்து செலவுக்கும்தான் அதை பயன்படுத்த வேண்டும்.”

கோன்ஸ்வெலோவுக்கு சாப்பிட இருக்கும் ஒரே உணவு சில வெங்காயங்கள்தான். வேலை கிடைப்பது ரொம்ப கடினம், தினமும் தண்ணீர் வாங்கு​வதற்கும்​கூட அவளிடம் போதிய பணம் இல்லை. மோசமான அவளுடைய வீட்டில் குழாய் தண்ணீரோ டாய்லெட்டோ கிடையாது. “இந்த பக்கெட்டைத்தான் நாங்கள் டாய்லெட்டாக பயன்படுத்துகிறோம். பிறகு இராத்திரியில் என்னுடைய பிள்ளைகளை அனுப்பி, எங்காவது கொண்டுபோய் கொட்டிவிட்டு வரச் சொல்வேன். அப்படித்தான் நாங்கள் செய்ய வேண்டும்” என அவள் விளக்குகிறாள்.

கணவனிடமிருந்து கோன்ஸ்வெலோவுக்கு எந்த ஆதரவுமில்லை, அவரை எப்போதாவதுதான் அவள் பார்க்கிறாள். அவளுக்கு சுமார் 35 வயதுதான் இருக்கும், ஆனால் பார்ப்பதற்கு அதிக வயதானவள் போல் இருக்கிறாள். “சற்று ஊதிப்போன முகத்திலிருந்து சிறிய கருநிற கண்கள் எந்தவித உணர்ச்சியுமின்றி உற்றுப்பார்க்கின்றன” என்பதாக அவளைப் பேட்டி கண்ட எழுத்தாளர் கூறுகிறார். “அவை நம்பிக்கையிழந்து காணப்படுகின்றன.”

[படங்களுக்கான நன்றி]

தகவல் மூலம்: இன் கான்டெக்ஸ்ட்

AP Photo/Silvia Izquierdo

[பக்கம் 9-ன் பெட்டி/படம்]

“நகரத்திற்கு குடிபெயர்ந்து செல்ல வேண்டுமா?”

நகரத்திற்குக் குடிபெயர்ந்து செல்ல நினைத்துக் கொண்டிருக்கும் எவருமே அநேக காரணிகளை நன்கு சிந்தித்துப் பார்ப்பது நல்லது. “கிராமப்புற பகுதிகளைவிட நகரத்தில் வாழ்க்கை முன்னேற்றமடையும் என்ற எதிர்பார்ப்பே முக்கியமான கவர்ச்சிகளில் ஒன்றாகும்” என ஐநா உணவு மற்றும் வேளாண் அமைப்பு பிரசுரமான நகரவாசிகளுக்கு உணவூட்டுதல் கூறுகிறது. என்றாலும், “அந்த முன்னேற்றம் உடனடியாக வந்துவிடாது, ஒருவேளை ஒரு தலைமுறை ஆனாலும் அதற்கும் அதிகம் ஆனாலும் வந்துவிடாது.”

கிராமப்புற பகுதிகளிலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்து செல்கிற பலர் வீடின்மை, வேலையின்மை, முன்பைவிட மோசமான வறுமை ஆகிய அனைத்தையும் தங்களுக்குப் பழக்கமில்லாத ஓர் இடத்தில் எதிர்ப்படுகிறார்கள் என்பதே உண்மை. ஆகவே, குடிபெயர்வதைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், அப்படிச் செல்வது உங்கள் குடும்பத்தை ஆதரிக்க உதவுமென உறுதியாக நம்புகிறீர்களா? நகரங்களில் ஒருவேளை உங்களுக்கு வேலை கிடைத்து நீங்கள் வேலை பார்த்தாலும் பெரும்பாலும் மிகக் குறைந்த சம்பளமே கிடைக்கிறது. வெறுமனே வாழ்க்கையை ஓட்டுவதற்கே நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய அழுத்தங்கள் ஏற்படுகையில், முக்கியமான காரியங்களை நீங்களோ அல்லது உங்களுடைய குடும்பத்தினரோ புறக்கணிக்க வேண்டிய அவசியம் வருமா?​—⁠மத்தேயு 28:19, 20; எபிரெயர் 10:24, 25.

பெற்றோர்கள் சிலர், தங்களுடைய குடும்ப அங்கத்தினர்களை வீட்டில் விட்டுவிட்டு நகரத்தில் குடியேற தீர்மானித்திருக்கிறார்கள். அது ஞானமான செயலா? கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்களுடைய குடும்பங்களின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது, ஆனால் வேலை தேடி பிரிந்து சென்றால் உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் குடும்ப அங்கத்தினர்களின் நிலை என்னவாகும்? (1 தீமோத்தேயு 5:⁠8) ‘யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்’ பிள்ளைகளை தகப்பன்மார் திறம்பட வளர்க்க முடியுமா? (எபேசியர் 6:⁠4) கணவனும் மனைவியும் பிரிந்து சென்றால் சபலங்கள் ஏற்படக்கூடுமா?​—⁠1 கொரிந்தியர் 7:⁠5.

என்றாலும், குடிபெயர்ந்து செல்வது தனிப்பட்ட தீர்மானம். இத்தகைய தீர்மானம் எடுப்பதற்கு முன்பு, அதில் உட்பட்டுள்ள எல்லா அம்சங்களையும் கிறிஸ்தவர்கள் சீர்தூக்கிப் பார்த்து, ஜெபசிந்தையுடன் யெகோவாவின் வழிநடத்துதலை நாட வேண்டும்.​—⁠லூக்கா 14:⁠28-30.

[பக்கம் 8-ன் படங்கள்]

சுகாதாரமற்ற நிலைமைகளாலும் பயங்கர போக்குவரத்து நெரிசலாலும் நகரங்கள் போராடுகின்றன

இந்தியா

நைஜர்

மெக்சிகோ

பங்ளாதேஷ்

[பக்கம் 8-ன் படம்]

அநேக ஏழ்மையான நகர்ப்புற குடும்பங்களில், சிறுபிள்ளைகளும்கூட வேலை செய்ய வேண்டும்

[பக்கம் 8-ன் படங்களுக்கான நன்றி]

இந்தியா: © Mark Henley/Panos Pictures; நைஜர்: © Olivio Argenti; மெக்சிகோ: © Aubrey Wade/Panos Pictures;பங்ளாதேஷ்: © Heldur Netocny/ Panos Pictures; கீழேயுள்ள படம்: © Jean-Leo Dugast/Panos Pictures