Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பசியில் வாடாத உலகம்?

பசியில் வாடாத உலகம்?

பசியில் வாடாத உலகம்?

ஊட்டச்சத்தின்மையால் பிள்ளைகள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது அன்பும் அக்கறையுமுள்ள தகப்பன் எப்படி உணருவார் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அது அவருடைய இதயத்திற்கு மிகுந்த வேதனையை உண்டாக்குகிறது. மனித தகப்பனே அப்படி பிரதிபலித்தால், நம்முடைய அன்புள்ள பரலோக தகப்பன் எப்படி உணருவார் என்பதை யோசித்துப் பாருங்கள். கோடானுகோடி மக்கள் இத்தகைய சூழலில் கஷ்டப்படுவதை அவர் நன்றாகவே அறிந்திருக்கிறார்.

இவ்வுலகில் பசியால் வாடுவோருக்கு உணவளிக்க வேண்டுமென்ற நல்ல நோக்கங்கள் மனிதருக்கு இருக்கிறபோதிலும், இந்த 21-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பசியின் கொடுமை அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. என்றாலும், நம் பரலோக தகப்பனாகிய யெகோவா தேவனால் பசி பட்டினியை அடியோடு ஒழித்துக்கட்ட முடியும், ஒழித்தும் கட்டுவார். நமக்கு எப்படித் தெரியும்?

ஆதாம் ஏவாளை ஏதேன் தோட்டத்தில் கடவுள் வைத்தபோது, அவர்களுடைய பாதுகாப்புக்கும் திருப்திக்கும் உணவுக்கும் தேவையான அனைத்தையும் அவர் அளித்தார் என பைபிள் விளக்குகிறது. அவர்களிடம் கடவுள் இவ்வாறு கூறினார்: “பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், . . . உங்களுக்குக் கொடுத்தேன்.” ஆதாம் ஏவாளுடைய பிள்ளைகள் இந்த ‘பூமியை நிரப்ப’ வேண்டும் என்பதும், புசிப்பதற்கு ஏராளமான உணவுப் பொருள்களை எல்லா மனிதரும் பெற வேண்டும் என்பதுமே யெகோவாவின் நோக்கம்.​—ஆதியாகமம் 1:28, 29.

படைப்பாளருக்கு விரோதமாக முதல் மானிட தம்பதியர் கலகம் செய்து அவருடைய ஆசீர்வாதத்தை இழந்தபோதிலும், மனிதருக்கான கடவுளுடைய ஆதி நோக்கம் மாறவே இல்லை. ‘பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறவர்’ என யெகோவாவை பைபிள் அழைக்கிறது. அதுமட்டுமல்ல, உணவைப் பெறுவது சம்பந்தமான எல்லாப் பிரச்சினைகளையும் நீக்கப் போவதைச் சுட்டிக்காட்டும் எண்ணற்ற தீர்க்கதரிசனங்களும் பைபிளில் உள்ளன.​—சங்கீதம் 146:⁠7.

இயேசு எப்பொழுது தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்கப் போகிறார், எப்போது பூமியின் விவகாரங்களில் தலையிடப் போகிறார் என்பதற்கு ஓர் அடையாளத்தை, அதாவது அத்தாட்சியை, சீஷர்கள் அவரிடம் கேட்டபோது, பூமியின் விவகாரங்களில் அவர் தலையிடுவதற்கு முன்பு நிலவும் சூழ்நிலைகளைப் பட்டியலிட்டுக் கூறினார். அவற்றில் ஒன்றே “உணவுப் பற்றாக்குறை.” இயேசுவின் வார்த்தைகளைக் கவனமாக ஆராய்கையில், மனிதர் படும் துன்பத்திற்கு விரைவில் முடிவு கட்டுவார் என்பதற்கு அவர் உறுதி அளித்திருப்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். a—⁠மத்தேயு, 24-⁠ம் அதிகாரம்.

கடவுள் ஸ்தாபிக்கப்போகும் பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமியைப் பற்றி சங்கீதம் 72:16 (NW) இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்கிறது: “பூமியில் தானியம் மிகுந்திருக்கும்; தானியத்தின் விளைச்சல் மலைகளின் உச்சிகளில் நிரம்பி வழியும்” என அவர் வாக்குறுதி அளிக்கிறார். பூர்வ இஸ்ரவேலில் தானியம் பொதுவாக பள்ளத்தாக்கில் விளையும். என்றாலும், இந்தத் தீர்க்கதரிசனத்தில் விவரிக்கப்படும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலைமையில், மிகவும் வறண்டு கிடக்கும் வளமற்ற நிலத்தில், தரிசு நிலத்தில் விதைக்கப்படும் விதையும்கூட அபரிமிதமான பலனைத் தரும். “மேசியாவின் காலத்தில், வயல்களில் கதிர்கள் காற்றில் அசைந்தாடும்; மலை முகடுகள்வரை பயிர் செய்யப்பட்டது போல் இருக்கும், அதனால் முழு தேசமும் விளைந்த கதிர்களால் பசுமையாக காட்சி அளிக்கும்” என பைபிள் அறிஞர் ஒருவர் கூறுகிறார்.

பைபிள் முன்னறிவிக்கும் எதிர்காலத்திற்கும் கோடானுகோடி மக்களுடைய இன்றைய வாழ்க்கைக்கும் எப்பேர்ப்பட்ட வித்தியாசம்! ஆம், கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிற எதிர்காலத்தில், நிச்சயம் பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய நம் தேவனே நம்மை ஆசீர்வதிப்பார்.​—சங்கீதம் 67:⁠6.

இவற்றையும் இருதயத்திற்கு இதமூட்டும் பைபிள் தீர்க்கதரிசனங்களில் விவரிக்கப்படும் வேறுபல ஆசீர்வாதங்களையும் நீங்களும் உங்கள் நேசத்திற்குரியவர்களும் எப்படி அனுபவிக்கலாம் என்பதைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால், உங்களுடைய பகுதியில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்பதற்கோ இந்தப் பத்திரிகையின் 5-⁠ம் பக்கத்தில் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு எழுதுவதற்கோ தயங்காதீர்கள். (g05 11/22)

[அடிக்குறிப்பு]

a இயேசுவின் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேற்றம் அடைந்துள்ளது என்பதைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வதற்கு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் 11-⁠ம் அதிகாரத்தைக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.