புதுவிதமான நடை!
புதுவிதமான நடை!
பின்லாந்திலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
பனிநடை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவ்விதமான நடை பின்லாந்தில் மிகப் பிரபலமான உடற்பயிற்சியாய் ஆகியிருக்கிறது. பனிச்சறுக்கிற்கு கோல்களை உபயோகிப்பது போலவே பனிநடைக்கும் கோல்களை உபயோகிக்கிறார்கள். இது எப்படி ஆரம்பமானது? இதன் பயன்கள் என்ன?
பனிநடை செய்யும் ஒருவரை நீங்கள் பார்க்கும்போது, பனிச்சறுக்கு வீரர் ஒருவர் பனிச்சறுக்கு மட்டை இல்லாமல் போகிறார் என்றே நினைத்துக்கொள்வீர்கள். உண்மையில் இந்தப் பனிநடையை ஆரம்பித்தவர்கள் பனிச்சறுக்கு வீரர்கள்தான். இந்தப் பனிச்சறுக்கு வீரர்கள் தங்கள் கோடைக்கால பயிற்சியைத் தீவிரமாக்க பனிச்சறுக்குக் கோலை வைத்து நடக்கத் தொடங்கியபோது, பனிநடை என்ற புதுவிதமான நடை உருவானது. 1980-களில், பனிநடை சிறந்த உடற்பயிற்சியாக மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990-களின் முடிவில் பனிநடையை மற்ற ஜனங்களும் ஏற்றுக்கொண்டார்கள். 2004-ல் நடந்த ஒரு சுற்றாய்வின்படி 7,60,000 பின்லாந்து நாட்டவர்—மக்கள் தொகையில் மொத்தம் 19 சதவீதத்தினர்—வாரத்திற்கு ஒரு முறையாவது பனியில் நடக்கிறார்கள். “பின்லாந்தின் பிரபலமான உடற்பயிற்சிகளில், நடப்பது முதலிடத்தில் இருக்க, இரண்டாம் இடத்தை பனிநடை பிடித்துள்ளது” என்று இந்தச் சுற்றாய்வை நடத்திய சூவாமென்லாடூ என்னும் அமைப்பின் செயற்குழு இயக்குனர் டுவாமா யான்டுநென் சொல்கிறார். பனிநடை ஒருவித ஃபாஷன்போல் கொஞ்ச காலத்திற்குத் தோன்றி பிறகு மறைந்துவிடவில்லை. சமீப வருடங்களில் இன்னும் ஏராளமான நாடுகளிலும் இது மெல்லமெல்ல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அநேகருக்கு நடப்பதன் பயன்கள் நன்றாகவே தெரிந்திருக்கும், ஆனால் பனியில் கோல்களைப் பிடித்து நடப்பதால் என்ன பயன்? “ஒரு முக்கியமான பயன் நம் உடலின் மேல்பாகத்திற்கு, அதாவது நம் கைகள், முதுகு, அடிவயிறு ஆகிய பகுதிகளிலுள்ள தசைகளுக்கு அது நன்றாகப் பயிற்சி அளிக்கிறது” என்று உடற்பயிற்சி மருத்துவர் மற்றும் பனிநடை வல்லுநர் யார்மா ஆஹாநென் சொல்கிறார். “ஆபீஸில் வேலை செய்கிறவர்களுக்குப் பொதுவாகக் கழுத்து, தோள்பட்டைப் பிடித்துக்கொள்ளும், அந்தப் பிரச்சினையைக் குறைக்க பனிநடை உதவும்” என்றும் அவர் சொல்கிறார்.
சாதாரணமாக நடப்பதைவிட பனியில் நடக்கும்போது அநேக தசைகளை நாம் பயன்படுத்துவதால், அதிக கலோரிகள் குறைகின்றன. பனியில் நடக்க கோல்களைப் பயன்படுத்துகையில் வேகமாக நடக்க முடிகிறது, இதனால் நாடித் துடிப்பும் அதிகமாகிறது. அதுமட்டுமல்ல, கோல்களைச் சரியாகப் பயன்படுத்துகையில் நிமிர்ந்து நடக்க முடிகிறது, இதனால் உடலின் தோரணை மேம்படுகிறது என்று பனிநடையை ஆதரிக்கிறவர்கள் சொல்கிறார்கள். “பனியில் கோல்களை வைத்து நடக்கும்போது உடலின் கனத்தை அந்தக் கோல்கள் ஓரளவு தாங்கிக்கொள்கின்றன. அதனால் மூட்டுகளுக்கு ஏற்படும் அழுத்தம் குறைகிறது” என்று ஆஹாநென் சொல்கிறார். சறுக்கிவிடுகிற பனியின்மீது நடக்கும்போது விழுந்துவிடாமல் இருக்க கோல்களில் இருக்கும் கூர்மையான முனை உதவுவதாக பனிநடை செய்யும் ஒருவர் சொல்கிறார். அதனால், குளிர் காலங்களில் எங்கு பார்த்தாலும் பனி குவிந்திருக்கும்போது வயதானவர்கள் இப்படிப் புதுவிதமாக நடக்கிறார்கள். (g05 11/22)
[பக்கம் 20-ன் பெட்டி]
நாம் நடப்போமா?
பனியில் நடக்க விலை உயர்ந்த பொருள்கள் தேவையில்லை. உங்களுக்குத் தேவையானதெல்லாம், நல்ல ஷூக்களும் சரியான நீளமுள்ள கோல்களும்தான். ரோட்டில் நடந்தால், கோல்களின் கூர்மையான முனைகளுக்கு ரப்பர் பிளக்குகளைப் பொருத்திக்கொள்ளுங்கள். பனிநடையைப் பழகுவது ஒன்றும் அவ்வளவு கஷ்டம் இல்லை. நீங்கள் கற்றுக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் புதிதாகக் கற்றுக்கொள்கிறவராக இருந்தால், பனிநடை வல்லுநரின் அறிவுரையைக் கேட்பது நல்லது.