Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெண்களை பைபிள் தாழ்த்திப் பேசுகிறதா?

பெண்களை பைபிள் தாழ்த்திப் பேசுகிறதா?

பைபிளின் கருத்து

பெண்களை பைபிள் தாழ்த்திப் பேசுகிறதா?

“பிசாசின் நுழைவாயில்” என்று பெண்களை விவரித்தார், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையியலாளரான டெர்டுல்லியன். ஆண்களைவிட பெண்கள் தாழ்ந்தவர்கள் எனக் காட்டுவதற்கு பைபிளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் மற்றவர்கள். இதனால்தான், பைபிள் பெண்களைத் தாழ்த்திப் பேசுவதாக அநேகர் நினைக்கிறார்கள்.

“பைபிளும் சர்ச்சும்தான் பெண்களின் விடுதலைக்கு மாபெரும் தடைக்கற்களாக இருந்திருக்கின்றன” என எலிசபெத் கெடி ஸ்டான்டன் என்பவர் சொன்னார்; அவர் 19-ஆம் நூற்றாண்டில் ஐக்கிய மாகாணங்களில் பெண் உரிமைக்காகப் போராடியவர். பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களைக் குறித்து அவர் ஒருமுறை இவ்வாறு சொன்னார்: “எனக்குத் தெரிந்தவரை, வேறெந்த புத்தகமும் பெண்களின் மதிப்பையும் கண்ணியத்தையும் இந்தளவுக்கு மட்டம்தட்டிப் பேசியதில்லை.”

இப்படிப்பட்ட மிதமீறிய கருத்து இன்று சிலரிடம் உண்டு என்பது உண்மைதான்; என்றாலும், பெண்களைத் தாழ்வாக நடத்தும்படி பைபிளின் சில பாகங்கள் ஆண்களை ஊக்குவிக்கிறது என்பதாக பலர் இன்னமும் நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பது சரியா?

எபிரெய வேதாகமம் பெண்களைக் கருதும் விதம்

“உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்.” (ஆதியாகமம் 3:16) விமர்சகர்கள் இந்த வசனத்தைச் சுட்டிக்காட்டி, கடவுள்தாமே ஏவாளுக்கு நியாயத்தீர்ப்பு வழங்கியதாகவும், பெண்கள்மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதை அவர் அங்கீகரிப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இந்த வசனம் கடவுளுடைய நோக்கத்தைச் சுட்டிக்காட்டுவதில்லை; மாறாக, பாவத்தின் காரணமாகவும் கடவுளுடைய பேரரசுரிமையை நிராகரித்ததன் காரணமாகவும் விளைந்த சோகமான நிலைமையையே தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. ஆம், பெண்களை இழிவாக நடத்த வேண்டுமென்பது கடவுளுடைய நோக்கம் அல்ல, மாறாக, மனித அபூரணத்தின் நேரடி பாதிப்பாகவே அது இருக்கிறது. அநேக கலாச்சாரங்களில் கணவன்மார் தங்கள் மனைவியை மிகக் கேவலமாக ஆட்டிப்படைத்திருக்கிறார்கள். ஆனால் இது கடவுளுடைய நோக்கமே அல்ல.

ஆதாம் ஏவாள் இருவருமே கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டார்கள். மேலும், பலுகிப்பெருகி பூமியை நிரப்பி அதை ஆண்டுகொள்ளும் கட்டளையை இருவருமே பெற்றார்கள். இதற்கு, அவர்கள் இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 1:27, 28) அச்சமயத்தில் அவர்கள் ஒருவரையொருவர் கொடூரமாக அடக்கி ஆளவில்லை. ஆதியாகமம் 1:31 இவ்வாறு சொல்கிறது: “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.”

பைபிளிலுள்ள சில பதிவுகள், இந்த விஷயத்தின் பேரில் கடவுளுடைய கருத்தை வெளிப்படுத்துவதில்லை. அவை வெறுமனே சரித்திரப் பதிவுகளாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, லோத்து தன் மகள்களை சோதோம் நகரவாசிகளிடம் ஒப்புக்கொடுக்க முன்வந்ததைப் பற்றிய பதிவு, அது சரியா தவறா என்று எதுவுமே குறிப்பிடுவதில்லை; அது சம்பந்தமாக கடவுளுடைய அபிப்பிராயத்தையும் குறிப்பிடுவதில்லை. a​—⁠ஆதியாகமம் 19:6-8.

எல்லா விதமான ஒடுக்குதலையும் துஷ்பிரயோகத்தையும் கடவுள் வெறுக்கிறார் என்பதே உண்மை. (யாத்திராகமம் 22:22; உபாகமம் 27:19; ஏசாயா 10:1, 2) கற்பழிப்பையும் வேசித்தனத்தையும் நியாயப்பிரமாண சட்டம் கண்டனம் செய்தது. (லேவியராகமம் 19:29; உபாகமம் 22:23-29) விபச்சாரம் தடைசெய்யப்பட்டிருந்தது; அதில் ஈடுபட்ட இருவருக்குமே மரண தண்டனை விதிக்கப்பட்டது. (லேவியராகமம் 20:10) ஆகவே, நியாயப்பிரமாணம் பெண்களைத் தாழ்த்துவதற்குப் பதிலாக உயர்வாகக் கருதியது; அதோடு, சுற்றிலுமிருந்த தேசத்தார் மத்தியில் சர்வ சகஜமாகக் காணப்பட்ட துஷ்பிரயோகத்திலிருந்து அவர்களைப் பாதுகாத்தது. திறமைசாலியான யூத மனைவி மிக உயர்வாகக் கருதப்பட்டாள். (நீதிமொழிகள் 31:10, 28-30) பெண்களுக்கு மரியாதை காட்டும்படியான கடவுளுடைய சட்டங்களை இஸ்ரவேலர் பின்பற்றாதது அவர்களுடைய தவறு, அப்படி அவர்கள் மரியாதை காட்டாதிருக்க வேண்டும் என்பது கடவுளுடைய நோக்கம் அல்ல. (உபாகமம் 32:5) இறுதியில், அவர்கள் கீழ்ப்படியாமையின் எல்லைக்கே போய்விட்டதால் கடவுள் அவர்களை ஒட்டுமொத்தமாய் தண்டித்தார்.

கீழ்ப்படியும்படி கேட்பது தாழ்த்துவதாக இருக்குமா?

எந்தச் சமுதாயமாக இருந்தாலும், ஒழுங்கு இருந்தால் மட்டுமே அது நன்கு இயங்க முடியும். இதற்கு அதிகாரிகளின் நிர்வகிப்பு தேவை. இல்லையென்றால் குழப்பம்தான் மிஞ்சும். “தேவன் கலகத்திற்கு [“ஒழுங்கின்மைக்கு,” NW] தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்.”​—1 கொரிந்தியர் 14:⁠33.

அப்போஸ்தலனாகிய பவுல், குடும்ப தலைமைத்துவ ஏற்பாட்டை இவ்வாறு விவரித்தார்: ‘ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறார், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறான், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறார்.’ (1 கொரிந்தியர் 11:3) கடவுளைத் தவிர ஒவ்வொரு நபரும் மேலான அதிகாரிக்குக் கீழ்ப்படிகிறார். கிறிஸ்துவுக்கு தேவன் தலையாக இருக்கிறார் என்பதற்காக அவர் தாழ்த்தப்படுகிறார் என்று அர்த்தமாகுமா? நிச்சயமாகவே இல்லை! சபையிலும் குடும்பத்திலும் ஆண்கள் தலைமை வகிக்க வேண்டுமென பைபிள் சொல்வது, பெண்களைத் தாழ்த்துவதாக இல்லை. குடும்பமும் சபையும் செழித்தோங்குவதற்கு, ஆண்களும் பெண்களும் அவரவர் கடமைகளை அன்போடும் மரியாதையோடும் செய்ய வேண்டும்.​—எபேசியர் 5:21-25, 28, 29, 33.

பெண்களை இயேசு எப்போதுமே மரியாதையோடு நடத்தினார். பரிசேயர்கள் கற்பித்த பாகுபாடுமிக்க பாரம்பரியங்களையும் சட்டதிட்டங்களையும் பின்பற்ற மறுத்தார். யூதரல்லாத வேறு இனத்தைச் சேர்ந்த பெண்களிடமும் தயங்காமல் பேசினார். (மத்தேயு 15:22-28; யோவான் 4:7-9) பெண்களுக்குக் கற்பித்தார். (லூக்கா 10:38-42) அவர் கொடுத்த நியமங்களின் காரணமாக, பெண்கள் கைவிடப்படாமல் பாதுகாக்கப்பட்டார்கள். (மாற்கு 10:11, 12) எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய நெருங்கிய நண்பர்களில் பெண்களும் இருந்தார்கள்; இது அவரது காலத்தில் ஒரு பெரிய புரட்சியாக இருந்திருக்கும். (லூக்கா 8:1-3) கடவுளுடைய அனைத்து குணங்களின் பரிபூரண உருவாக விளங்கிய இயேசு, ஆண்களும் பெண்களும் கடவுளுடைய பார்வையில் சரிசம மதிப்புள்ளவர்கள் என்பதைக் காட்டினார். சொல்லப்போனால், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மத்தியில், ஆண்கள், பெண்கள் ஆகிய இரு சாராருமே பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றார்கள். (அப்போஸ்தலர் 2:1-4, 17, 18) கிறிஸ்துவுடன் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் பணிபுரியப்போகிற அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டதுமே ஆண், பெண் என்ற பாகுபாடே இல்லாமல் இருப்பார்கள். (கலாத்தியர் 3:28) ஆக, பைபிளின் நூலாசிரியரான யெகோவா தேவன் பெண்களைத் தாழ்வாகக் கருதுவதில்லை. (g05 11/8)

[அடிக்குறிப்பு]

a பிப்ரவரி 1, 2005 காவற்கோபுரம், பக்கங்கள் 25-6-ஐக் காண்க.

[பக்கம் 18-ன் படம்]

பெண்களை இயேசு மரியாதையோடு நடத்தினார், தன் காலத்திலிருந்த அநேகரைப் போல் தாழ்வாக நடத்தவில்லை