Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முத்துப்பல் சிரிப்பிற்கு

முத்துப்பல் சிரிப்பிற்கு

முத்துப்பல் சிரிப்பிற்கு

கனடாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கண்ணாடி முன் நிற்கையில் நீங்கள் எதைப் பார்ப்பீர்கள்? ஒருவேளை உங்கள் தலைமுடியையோ டிரஸ்ஸையோ பார்ப்பீர்கள். ஆனால் உங்கள் சிரிப்பை கவனிப்பீர்களா? உங்கள் பற்கள் எவ்வாறு உங்கள் புன்னகைக்கு அழகுசேர்க்கின்றன என்பதை பார்த்திருக்கிறீர்களா? ஆம், நீங்கள் அழகாக புன்னகைப்பதற்கு உங்கள் பற்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய நிலைப்பற்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் விதத்தில் வடிமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அவற்றிற்கு விசேஷ கவனம் செலுத்த வேண்டும். அவை உணவை மெல்லுவதற்கும், சரியாகப் பேசுவதற்கும் உதவுவதோடு உங்கள் உதடுகளையும் கன்னங்களையும் தாங்கிப் பிடித்திருக்கின்றன. இவ்வாறு, உங்கள் புன்னகைக்குப் பொலிவையும் வசீகரத்தையும் கூட்டுகின்றன! ஆம், உங்கள் பற்கள் உண்மையிலேயே மதிப்புமிக்கவை!

பற்களைப் பேணுவது எப்படி?

முதலாவதாக, பற்களின் உறுதி, நாம் உண்ணும் உணவையே சார்ந்திருக்கிறது. கால்சியம், வைட்டமின் A, C, D ஆகியவை அடங்கிய சத்துணவு, பற்கள் வளர உதவுகிறது; தாயின் கருவில் சிசு இருக்கும் காலம்முதல், பற்கள் முழுமையாக வளர்ச்சியடையும் காலம்வரை அந்த சத்துணவு தேவைப்படுகிறது. a நல்ல சாப்பாட்டுப் பழக்கம், கட்டுறுதியான பற்களைப் பேணிக்காக்க உதவுகிறது. அதிக இனிப்பு சாப்பிடாதீர்கள்! பல்லெல்லாம் சீக்கிரம் சொத்தையாகிவிடும். சர்க்கரைக்கும் பல் சொத்தைக்கும் சம்பந்தமிருப்பதாக மீண்டும் மீண்டும் எச்சரிக்கை கொடுத்தும்கூட, ஓர் அறிக்கையின்படி, வட அமெரிக்காவிலுள்ள சராசரி நபர், ஒவ்வொரு வருடமும் 50-60 கிலோ சர்க்கரை சாப்பிடுகிறார்! சர்க்கரை எப்படிப் பற்சிதைவை ஏற்படுத்துகிறது?

பற்சிதைவுக்குக் காரணமான இரண்டு வகையான பாக்டீரியாக்கள்​—⁠“மியூடன்ஸ் ஸ்ட்ரெப்டோகாக்கய், லாக்டோபாசில்லி”​—⁠பற்படலத்தின் பாகமாகின்றன; பாக்டீரியாக்களும் உணவுத் துகள்களும் பிசுபிசுப்பான மெல்லிய படலமாக பற்கள்மீது படிவதே பற்படலம். இந்த பாக்டீரியாக்கள் சர்க்கரையை உண்ட பின், அதைத் தீங்கு விளைவிக்கும் அமிலங்களாக மாற்றுகின்றன; இந்த அமிலங்கள் பற்களைச் சிதைக்க ஆரம்பிக்கின்றன. சில வகையான சர்க்கரைகள், வெகு சீக்கிரம் அமிலங்களாக மாறுகின்றன அல்லது பற்கள்மீது விடாப்பிடியாக ஒட்டிக்கொள்கின்றன; இதனால் பாக்டீரியாவிற்கு அதிக நேரம் கிடைப்பதால் பல் சீக்கிரத்திலேயே சொத்தையாகிறது. b பற்படலம் நீக்கப்படாவிட்டால் அது கெட்டியாகி, ஈறுகளைச் சுற்றி பற்காரையாக (calculus) படிந்துவிடுகிறது.

பற்சிதைவைத் தடுப்பதற்கு, பற்படலத்தையும் முக்கியமாக மியூடன்ஸ் ஸ்ட்ரெப்டோகாக்கய் பாக்டீரியாவையும் கட்டுப்படுத்துவது அவசியம். ஆகவே உங்கள் சிரிப்பு பளிச்சிட, நீங்கள் கண்டிப்பாக பற்களை தினமும் சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும். பல் மற்றும் வாய் சிகிச்சைக்கான கொலம்பியா யூனிவர்ஸிட்டி ஸ்கூல் இவ்வாறு குறிப்பிடுகிறது: “[பல் தேய்த்து] பல் இடுக்குகளில் ஃப்ளாஸ் செய்வதுதான், உங்கள் பற்களையும் அவற்றை தாங்கும் திசுக்களையும் ஆரோக்கியத்தோடும் கட்டுறுதியோடும் வைத்திருப்பதற்கு மிக முக்கியமாக உதவுகிறது.” அதை சிறந்த விதத்தில் செய்வதற்கான வழிகள் இந்தப் பக்கத்திலும் அடுத்த பக்கத்திலும் காட்டப்பட்டுள்ளன. புன்னகைக்கையில் உங்கள் பொலிவு குலையாதபடி பற்களைப் பேணிக்காக்க உங்கள் பல் டாக்டர் மற்ற கருவிகளையும் வழிமுறைகளையும் சிபாரிசு செய்யலாம்.

பற்களில் அடிக்கடி அமிலம் படும்போது அவற்றின் இனாமல் போய்விடுகிறது. இருந்தாலும் அது தினமும் புதுப்பிக்கப்படுகிறது. எப்படி? அவ்வாறு புதுப்பிக்கப்படுவதற்கு ஃப்ளூரைடு உதவுகிறது; இது பற்சிதைவு ஏற்படாதபடி தொடர்ந்து தடுக்கிறது. பற்சிதைவானது பரவக்கூடிய ஒன்று என்றாலும், ஃப்ளூரைடு போன்ற சில பொருட்களால் அச்செயலை தலைகீழாக்க முடியும். ஆம், பற்கள் தானாகவே சீராக முடியும்!

பல் டாக்டரை சந்தித்தல்

ஓர் ஆய்வின்போது, எதற்கெல்லாம் பயப்படுகிறார்கள் என மக்களிடம் கேட்கப்பட்டது; மேடையில் பேச்சு கொடுப்பதற்கு அடுத்ததாக, பல் டாக்டரிடம் செல்வதற்கு பயப்பட்டதாக அநேகர் சொன்னார்கள். அப்படிப் பயப்படுவதற்கு நியாயமான காரணம் இருக்கிறதா? பணக்கார நாடுகளில், ஹை-⁠ஸ்பீட் டிரில்களும் விதவிதமான மரப்பு மருந்துகளும் கிடைப்பதால், பல் டாக்டர்கள் அதிக வலியோ அசௌகரியமோ ஏற்படாதவாறு பெரும்பாலான சிகிச்சைகளை அளிக்கிறார்கள். சிகிச்சையின்போது உங்களுக்கு அடுத்தடுத்து என்ன செய்யப்படும் என்பதை நன்கு தெரிந்துகொள்வது பயப்படாமல் இருக்க உதவும்.

நீங்கள் பல் டாக்டரிடம் சென்றால், முதலில் உங்கள் பற்கள் சுத்தம்செய்யப்படலாம்; பொதுவாக, அவரது அஸிஸ்டென்ட் இதைச் செய்வார். அப்போது, டூத் பிரஷ்ஷாலும் ஃப்ளாஸாலும் சுத்தப்படுத்த முடியாத பகுதிகளிலிருந்து பற்காரையும் பற்படலமும் அகற்றப்படும். அதன்பின் பற்கள் பாலிஷ் செய்யப்படும்; இது, பற்படலம் மறுபடியும் உருவாவதைத் தடுப்பதோடு உங்கள் புன்னகையின் அழகைக் கெடுக்கும் கறைகளை நீக்கி பளிச்சென்று ஆக்கும்.

ஃப்ளூரைடு கனிமம், பற்சிதைவை குறைப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது; ஆகவே, பல் டாக்டர்கள் அதை ஜெல்லாக, நீர்மமாக, அல்லது பூச்சாக பிள்ளைகளின் பற்களில் தடவுகிறார்கள். அநேக நாடுகளில் தண்ணீருடன் ஃப்ளூரைடு கலக்கப்படுகிறது; அதோடு, கூடுதலான பாதுகாப்புக்கு, பற்பசைகளிலும் அது பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது.

பல் டாக்டர்கள் தரும் சிகிச்சைகள்

பற்களின் இனாமல் போய்விடாதிருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படியே பல் டாக்டர்கள் அதிகமதிகமாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள். பிரச்சினை சிறியதாக இருக்கும்போதே சிகிச்சை தரப்பட்டால் பற்சிதைவு தடுக்கப்படலாம். ஆக, பற்சிதைவை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை பெற கவனம் செலுத்தும்போது, பல் டாக்டரை சந்திப்பதில் கஷ்டம் இருக்காது.

இருந்தாலும், பற்படலத்தால் உண்டாகும் அமிலம் பற்கள் மீதே படிந்துவிட்டால் பல் சொத்தையாகிவிடுகிறது. அதை அப்படியே விட்டுவிட்டால் பல்லில் குழி (cavity) உண்டாகும். அப்போது சிகிச்சை அவசியமாகிறது. சொத்தை வேர்வரை, அதாவது பற்களின் நரம்புகள் அமைந்துள்ள இடம்வரை சென்றிருக்காவிட்டால், பொதுவாக அந்தப் பல்லிலுள்ள குழியை அடைத்தாலே போதுமானது.

முதலில் பல் டாக்டர், டிரில்லிங் மெஷினைப் பயன்படுத்தி குழியைச் சுத்தப்படுத்திவிட்டு, அதை அடைப்பதற்கு ஏற்றவாறு சரிப்படுத்துகிறார். பிறகு, அது அடைக்கப்படுகிறது. அதற்காகப் பயன்படுத்தப்படும் அமால்கம் கலவை, விரைவில் கெட்டியாகும் தன்மை படைத்தது, வடிவத்திற்கு ஏற்ப பொருந்தக்கூடியது; ஆனால் காம்பசிட் ரெசின் கலவை, புளூ ஃபைபர்-ஆப்டிக் லைட் மூலம் கெட்டியாக்கப்படுகிறது. அந்தச் சொத்தை பல்லின் வேர்வரை சென்றிருந்தால், ரூட்-கெனால் சிகிச்சை அளிக்க வேண்டும் அல்லது பல்லையே பிடுங்க வேண்டும். ரூட்-கெனால் சிகிச்சை தரப்பட்டால் பல்லை பிடுங்க வேண்டியிருக்காது; ஏனென்றால் சொத்தைப் பல், வேர்வரை அடைக்கப்பட்டு சரிசெய்யப்படுகிறது. மிக மோசமான நிலையிலுள்ள பற்களுக்கு செயற்கையாகத் தலைப்பகுதி பொருத்தப்படுகிறது; அல்லது அது நீக்கப்பட்டு செயற்கை பல் பொருத்தப்படுகிறது. c

முயற்சிக்குத் தக்க பலன் உண்டா?

இதற்குப் பிறகும்கூட பல் டாக்டரிடம் போக நீங்கள் ஒருவேளை பயப்படலாம். அப்படியென்றால், நீங்கள் எதையெல்லாம் நினைத்துப் பயப்படுகிறீர்கள் என்பதை பல் டாக்டரிடம் சொல்லுங்கள். அவர் சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு முன், உங்களுக்கு வலி வந்தால் என்ன சைகை காட்டுவீர்கள் (உதாரணத்திற்கு, கையை உயர்த்துவது) என்பதைச் சொல்லிவிடுங்கள். சிகிச்சையின் ஒவ்வொரு படியையும் உங்களுக்கு விளக்கச் சொல்லுங்கள். பற்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உங்கள் பிள்ளைக்குக்கூட நீங்கள் உதவலாம்; முதலாவதாக, பற்களைப் பேணுவது எவ்வளவு நல்லது என்று சொல்லிக் கொண்டே இருக்கலாம்; இரண்டாவதாக, குறும்பு செய்தால் பல் டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போவதாக மிரட்டாமல் இருக்கலாம்.

யூனிவர்சிட்டி ஆஃப் மான்ட்ரியல்ஸ் டிபார்ட்மென்ட் ஆஃப் ஓரல் ஹெல்த்-⁠ல் பேராசிரியராக பணிபுரியும் டாக்டர் டானியேல் கான்டல்மன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இன்று இந்தப் பயனுள்ள இலட்சியத்தை அடைய முடியும்: உங்களுடைய கட்டுறுதியான பற்களைப் பாதுகாத்திடுங்கள், அதன் பலனாக வாழ்நாளெல்லாம் அழகாக புன்னகை சிந்தி அசத்துங்கள்.” ஆம், உண்மையிலேயே முயற்சிக்குத் தக்க பலன் உண்டு! (g05 11/8)

[அடிக்குறிப்புகள்]

a கர்ப்பகாலத்திலும் குழந்தையின் சிசு பருவத்திலும்​—⁠அதாவது, சிசுவின் ஈறுகளுக்கு அடியில் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் காலத்திலும்​—⁠தாய் சத்துணவு அருந்துவதைப் பொறுத்தே பற்கள் முழுமையாக வளர்ச்சியடைகின்றன. டீனேஜ் பருவத்தின் முடிவில் அல்லது 20-25 வயதுக்குள் பற்களின் வளர்ச்சி நின்றுவிடுகிறது.

b இயற்கையில் கிடைக்கும் சைலிடால் (xylitol) என்ற ஒருவகை சர்க்கரை, பற்சிதைவை ஏற்படுத்தும் தீங்கான பாக்டீரியாவை வளரவிடாதிருக்க உதவுவதாக பல் டாக்டர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த சைலிடால், சில சூயிங் கம்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

c செயற்கை பற்களைப் பற்றி இன்னுமதிகமாகத் தெரிந்துகொள்ள, “உங்களுக்குச் செயற்கைப் பற்தொகுப்பு வேண்டுமா?” என்ற கட்டுரையைக் காண்க. இது, ஜூன் 8, 1993, விழித்தெழு! இதழில் பக்கங்கள் 10-12-⁠ல் உள்ளது.

[பக்கம் 16-ன் பெட்டி/படங்கள்]

பல் தேய்த்தல்

பல் தேய்க்க பல வழிகள் உண்டு. ஆனால் ஒரு எச்சரிப்பு​—⁠சிறிதளவு பற்பசையையே பயன்படுத்துங்கள். அது தேய்ப்பதற்கான பொருள், “பற்களின் இயற்கையான அமைப்பைவிட நூற்றுக்கணக்கான மடங்கு கடினமானதாக” அது இருக்கலாம்:

1 பிரஷ்ஷை ஈறுகளின் ஓரத்தில் சுமார் 45 டிகிரி கோணத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பற்களின் ஓரம்வரை மெதுவாகவும் கொஞ்சங்கொஞ்சமாகவும் மேலும்கீழும் தேயுங்கள். பற்களின் மேற்புறம், உட்புறம் ஆகிய அனைத்தையும் நன்கு தேயுங்கள்.

2 பற்களின் மெல்லும் பகுதி​களை ஒட்டு​மொத்த​மாகத் தேய்க்காமல் கொஞ்சங்​கொஞ்சமாகத் தேயுங்கள்.

3 முன்பக்க பற்களின் உட்புறத்தைச் சுத்தப்படுத்த, பிரஷ்ஷை ஏறக்குறைய செங்குத்தாகப் பிடித்துக்கொள்ளுங்கள். ஈறுகளின் ஓரத்திலிருந்து பற்களின் ஓரம்வரை தேயுங்கள்.

4 உங்கள் நாக்கையும் மேல்வாயையும் தேயுங்கள்.

[படத்திற்கான நன்றி]

Steps 1-4: Courtesy www.OralB.com

[பக்கம் 17-ன் பெட்டி/படங்கள்]

ஃப்ளாஸ் செய்தல்

தினமும் ஃப்ளாஸ் செய்ய வேண்டுமென்றும் சாப்பிட்ட பிறகு எப்போதும் பிரஷ் செய்ய வேண்டுமென்றும் பல் டாக்டர்கள் சொல்கிறார்கள்.

1 ஃப்ளாஸை இரு கையிலுமுள்ள நடுவிரல்களில் சுற்றிக்கொள்ளுங்கள்; அவற்றிற்கு இடையே சிறிதளவு ஃப்ளாஸை விடுங்கள்.

2 ஒரு கையின் கட்டைவிரலை வைத்தும் மறு கையின் ஆள்காட்டி விரலை வைத்தும் ஃபிளாஸை நீட்டிப் பிடியுங்கள். பிறகு, பல் இடுக்குகளுக்கு இடையே நுழைக்க முன்னும் பின்னுமாக இழுங்கள்.

3 ஃப்ளாஸை ஒரு பல்லைச் சுற்றினாற்போல் வைத்து, இரு பக்கங்களிலும் மேலும் கீழுமாக இழுங்கள். இவ்வாறு ஒவ்வொரு பல்லின் இருபக்கத்தையும் சுத்தப்படுத்துங்கள். பிறகு ஈறுகளின் ஓரத்தைத் தொடும்வரை மெதுவாகக் கீழே இழுங்கள்; ஆனால் ஈறுகளின் மேல் வைத்து அழுத்தாதீர்கள் அல்லது அதற்குக் கீழ்ப்பகுதியில் வைத்து முன்னும் பின்னும் இழுக்காதீர்கள்.

தகவல்: The Columbia University School of Dental and Oral Surgery’s Guide to Family Dental Care

Steps 1-3: Courtesy www.OralB.com