ஹிகாமா—சத்தான ‘மெக்சிகன் ஸ்நாக்’
ஹிகாமா—சத்தான ‘மெக்சிகன் ஸ்நாக்’
மெக்சிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
படரும் கொடியான ஹிகாமாவின் (பீன்ஸ்/பட்டாணி வகை) இலைகளையும் விதைகளையும் பார்த்தால் நமக்குச் சாப்பிடவே தோன்றாது. ஒருவிதத்தில் அது நல்லதுதான், ஏனென்றால் அவை சாப்பிடும் பொருள்களே அல்ல. ஆனால், வாய் ஊற வைக்கிற சமாச்சாரம் நிலத்துக்கு அடியில் மறைந்திருக்கிறது; அதுதான் ஹிகாமாவின் கிழங்கு வேர்.
மெக்சிகோ வாசிகள் அந்தக் காலத்திலிருந்தே ஹிகாமாவைச் சாப்பிடுகிறார்கள். நாவாட்டல் மொழியில் ஹிகாமா என்னும் பெயருக்கு “ருசித்துப் பார்த்தது” என்று அர்த்தமாம். பச்சையான ஹிகாமாவைத் துண்டு துண்டாக நறுக்கி, கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்து, உப்பு போட்டு, மிளகு பொடி தூவி தயாரிக்கப்பட்ட ‘மெக்சிகன் ஸ்நாக்’ படத்தைப் பார்த்தாலே நமக்கு எச்சில் ஊறும்.
ஹிகாமாவின் சுவை எப்படி இருக்கும்? கொஞ்சம் ஆப்பிளைப் போலவும் கொஞ்சம் வாட்டர் செஸ்ட்நட் (சீனாவில் வளரும் ஒரு வகை செடியின் தண்டு) போலவும் இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஹிகாமா தொடக்கத்தில் மெக்சிகோவிலும் மத்திய அமெரிக்காவிலும் காணப்பட்டது. ஆனால், இப்போது கடல் தாண்டி பிலிப்பைன்ஸ், சீனா, நைஜீரியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. அதை இன்று அநேக நாடுகளில் வளர்க்கிறார்கள். நெருப்பில் சுட்டும், ஊறுகாய்ப் போட்டும், சாலட்களில் சேர்த்தும், சூப்புகளில் கொதிக்க வைத்தும் சாப்பிடுகிறார்கள்.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில், வாட்டர் செஸ்ட்நட்களுக்குப் பதிலாக ஹிகாமாவை உபயோகிக்கிறார்கள். சமைத்த பிறகும் மொருமொருப்பாகவே இருப்பதுதான் இதன் தனிச்சிறப்பு. பிழிந்தால் தண்ணீர் வரும் ஹிகாமாவைவிட, பால் வரும் ஹிகாமாதான் அதிக மொருமொருப்பாக இருக்கும். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், இவ்விரண்டு வகைகளும் ஒரே விதையிலிருந்துதான் வளர்கின்றன.
‘ஸ்நாக்’கிற்கு ஹிகாமா சிறந்தது. இது சத்துள்ளதாகவும் புத்துணர்ச்சியுள்ளதாகவும் இருக்கிறது. மேலும், மொருமொருப்பாக, சாறுள்ளதாக, ஜீரணிக்க சுலபமானதாக, குறைந்த கலோரிகள் உடையதாக இருக்கிறது. 100 கிராம் உருளைக் கிழங்கு சிப்ஸில் 540 கலோரிகள் இருக்கிறது, ஆனால் அதே அளவு ஹிகாமாவில் வெறும் 40 கலோரிகள்தான் இருக்கிறது என்று ஊட்டச்சத்து நிறுவனம் ஒன்று செய்த ஆய்வு காண்பிக்கிறது. ஹிகாமாவில் கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்ற அநேக சத்துக்களும் இருக்கின்றன.
ஆரம்பத்தில் சொன்னபடி, ஹிகாமாவின் கிழங்கு வேர் தவிர மற்ற பாகங்களைச் சாப்பிட முடியாது. ஆனால் அவை உபயோகமே இல்லை என்று முடிவுகட்டிவிட முடியாது. ஹிகாமாவின் விதைகளில் உள்ள அநேக பொருள்கள் பூச்சிகளைக் கொல்ல வல்லவை. அவற்றைப் பொடியாக்கி பூச்சிக்கொல்லி மருந்தாகப் பயன்படுத்தலாம். தோல் சம்பந்தமான வியாதிகளுக்கு மருந்து தயாரிக்கவும் அவ்விதைகள் பயன்படுகின்றன. ஹிகாமாவின் காம்புகளிலிருக்கும் கெட்டியான நார், மீன் வலைகள் செய்ய உபயோகிக்கப்படுகிறது.
ஹிகாமாவின் கிழங்கு வேர் வித்தியாசமான அளவுகளில் வளர்கிறது. அதாவது, 300 கிராமுக்கும் குறைவான எடையிலிருந்து சுமார் ஒரு கிலோவிற்கும் அதிகமான எடைவரை வளர்கிறது. ஹிகாமாவை ஃப்ரிட்ஜில் வைத்தால் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குக்கூட கெட்டுப்போகாமல் இருக்கும். ஹிகாமாவைப் பயன்படுத்த வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அதைக் கழுவி, தோல் சீவி, மேலாக உள்ள நார்ப்பகுதியை உரித்துவிடுவதே; மிக இளசாக இருக்கும் ஹிகாமாவுக்கு மட்டும் நார்ப்பகுதியை உரிக்க வேண்டியிருக்காது.
நீங்கள் வசிக்கும் இடத்தில் ஹிகாமா கிடைத்தால், அதில் ஒரு ‘ஸ்நாக்’ செய்து பார்க்கலாமே. உங்கள் உடம்புக்கும் அது நல்லது. (g05 10/22)