Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிசயமான இரத்தச் சிவப்பணுக்கள்

அதிசயமான இரத்தச் சிவப்பணுக்கள்

அதிசயமான இரத்தச் சிவப்பணுக்கள்

தென் ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

உங்கள் இரத்தம் ஏன் சிவப்பாயிருக்கிறது, தெரியுமா? மிக அதிகமாகக் காணப்படும் ஒருவகை அணுவே அதற்குக் காரணம்; அதனால்தான் இரத்தச் சிவப்பணு என அது அழைக்கப்படுகிறது. வெறும் ஒரு துளி இரத்தத்தில் இந்த அணுக்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றன. இந்த அணுக்களை நுண்ணோக்கியில் பார்த்தால், மெதுவடை போல, ஆனால் மத்தியில் ஓட்டை இல்லாமல் சற்று குழிவாக இருக்கும். ஒவ்வொரு அணுவிலும் கோடிக்கணக்கான ஹீமோகுளோபின் மூலக்கூறுகள் நிறைந்திருக்கின்றன. இந்த மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் அழகான கோளவடிவில் உள்ளன. இதில் கிட்டத்தட்ட 10,000 ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், மற்றும் சல்பர் நுண் அணுக்கள் இருக்கின்றன, அதோடு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்லும் ஆற்றலை இரத்தத்திற்குத் தரும், அதிக நிறையுடைய நான்கு இரும்பு நுண் அணுக்களும் இருக்கின்றன. கார்பன் டை ஆக்ஸைடை தசைகளிலிருந்து நுரையீரலுக்குக் கொண்டுசெல்ல இந்த ஹீமோகுளோபின் உதவுகிறது; பிறகு நுரையீரலிலிருந்து அந்த வாயு வெளிவிடப்படுகிறது.

உங்களுடைய இரத்தச் சிவப்பணுக்களின் இன்னொரு முக்கியமான பாகம்தான் அதன் வெளி உறை, அதாவது சவ்வு. இந்த அற்புதமான உறை, மிக மெல்லிய இரத்த நாளங்களிலும் அணுக்கள் செல்வதற்கு ஏற்றபடி சன்னமான வடிவங்களில் நீளுவதற்கு உதவுகிறது; இவ்விதத்தில் உங்கள் உடலிலுள்ள எல்லா உறுப்புகளுக்கும் அவை ஊட்டம் அளிக்கின்றன.

உங்கள் இரத்தச் சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன. ஒரு புதிய அணு உங்கள் இரத்தத்திற்குள் நுழைந்ததுமே, அது உங்கள் இருதயம் மற்றும் உடல் முழுவதிலும் 1,00,000 தடவைக்கு மேல் சுற்றி வரலாம். மற்ற அணுக்களைப் போல் அல்லாமல், சிவப்பணுக்களில் நியூக்ளியஸ் இல்லை. அதனால் ஆக்ஸிஜனை எடுத்துச்செல்ல அவற்றிற்கு அதிக இடம் கிடைக்கிறது, அதுமட்டுமல்ல, அவற்றை குறைந்த நிறையுடைய அணுவாகவும் ஆக்குகிறது, உங்கள் இருதயம் கோடானகோடி சிவப்பணுக்களை உடல் முழுவதும் அனுப்புவதற்கு இது உதவுகிறது. என்றாலும், நியூக்ளியஸ் இல்லாததால், அவற்றின் உள்ளுறுப்புகளை அவற்றால் புதுப்பிக்க முடிவதில்லை. ஆகவே, சுமார் 120 நாட்களுக்குப் பிறகு அவை சிதைந்துபோக ஆரம்பித்து, எலாஸ்டிக் தன்மையை இழந்துவிடுகின்றன. பெரிய வெள்ளை இரத்த அணுக்கள், அதாவது ஃபாகோசைட்டுகள் சிதைந்துபோன அந்த அணுக்களை உட்கொண்டு இரும்பு நுண் அணுக்களை வெளிவிடுகின்றன. இந்தச் சொற்ப நுண் அணுக்கள் பிளாஸ்மா புரதங்களோடு ஒட்டிக்கொண்டு, எலும்பு மஜ்ஜையிடம் கொண்டுசெல்லப்படுகின்றன; அங்கு புதிய சிவப்பணுக்களின் உற்பத்தியில் அவை பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நொடியும், உங்கள் எலும்பு மஜ்ஜை 20-⁠லிருந்து 30 லட்சம்வரை புதிய சிவப்பணுக்களை இரத்தத்தில் வெளிவிடுகிறது!

உங்கள் உடலிலுள்ள கோடானகோடி சிவப்பணுக்கள் திடீரென்று இயங்காமல் போனால், சில நிமிடங்களிலேயே நீங்கள் இறந்துவிடுவீர்கள். இப்படியொரு அதிசயப் படைப்பின் காரணமாக நம்மால் உயிர்வாழவும் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவிக்கவும் முடிகிறது, இதற்காக நாம் யெகோவா தேவனுக்கு எவ்வளவு நன்றி உள்ளவர்களாய் இருக்க வேண்டும்! சங்கீதக்காரன் சொன்னதைச் சந்தேகமின்றி நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள், அவர் இவ்வாறு சொன்னார்: ‘யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.’​—சங்கீதம் 139:1, 14.

[பக்கம் 24-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

இரத்தச் சிவப்பணு

சவ்வு

ஹீமோகுளோபின் (பெரியதாகக் காட்டப்பட்டுள்ளது)

ஆக்ஸிஜன்