Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இந்த உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

இந்த உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

இந்த உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

அடுத்துவரும் 10, 20, அல்லது 30 ஆண்டுகளில் நிலைமை எப்படி இருக்கும்? பயங்கரவாதம் நிறைந்த இந்த சகாப்தத்தில், எதிர்காலத்தை எண்ணிப் பார்த்தால் நெஞ்சம் உறைந்துபோகலாம். தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் முன்னேறிவருகிறது. உலகமயமாக்கல் அநேக நாடுகளை பரஸ்பரம் நம்பியிருக்கும் நாடுகளாக மாற்றியிருக்கிறது. உலக தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவார்களா? ஆம் என சிலர் சொல்கிறார்கள், 2015-⁠ம் ஆண்டுக்குள், கடல் அலையென பொங்கிவரும் வறுமையையும் பசிபட்டினியையும் தலைவர்களால் தடுத்து நிறுத்த முடியும் என்றும், எய்ட்ஸுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும், சுத்தமான குடிநீரும் சுகாதார வசதியும் இல்லாமல் தவிப்போரின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.​—⁠“நல்நம்பிக்கை Vs. நிஜம்” என்ற பெட்டியைக் காண்க.

என்றாலும், எதிர்காலத்தைப் பற்றி மனிதன் கண்ட காட்சியெல்லாம் பெரும்பாலும் மாயக்காட்சியாகவே இருந்திருக்கிறது. உதாரணமாக, 1984-⁠ம் ஆண்டுக்குள் தண்ணீருக்கடியில் செல்லும் டிராக்டர்களைக் கொண்டு கடல் தரையில் விவசாயிகள் உழுவார்கள் என்று பல பத்தாண்டுகளுக்கு முன்பு நிபுணர் ஒருவர் கூறினார்; 1995-⁠ம் ஆண்டுக்குள், கார்களெல்லாம் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டிருக்கும், அதனால் மோதல்கள் ஏற்படாது என மற்றொருவர் கூறினார்; 2000-⁠ம் ஆண்டுக்குள், சுமார் 50,000 பேர் விண்ணில் வாழ்ந்துகொண்டும் வேலை செய்துகொண்டும் இருப்பார்கள் என இன்னொருவர் முன்னறிவித்தார். பேசாமல் மௌனமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமென இத்தகைய முன்னறிவிப்புகளைச் செய்தவர்கள் இப்பொழுது நினைக்கக்கூடும். பத்திரிகையாளர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “வேறு எதைக் காட்டிலும், காலங்கள் செல்லச் செல்ல இந்த உலகிலுள்ள புத்திசாலிகளெல்லாம் முழு முட்டாள்களாக இருந்திருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.”

நமக்கு வழிகாட்டும் ஒரு “வரைபடம்”

எதிர்காலத்தைப் பற்றிய மக்களுடைய ஊகத்திற்கு எல்லையே இல்லை, ஆனால் சிலசமயங்களில் அவர்கள் காணும் காட்சி நிஜ காட்சியாக இருப்பதைவிட கற்பனை காட்சியாகவே இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய நம்பகமான கருத்தை எங்கே பெறலாம்?

இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். ஓர் அயல்நாட்டில் நீங்கள் பஸ்ஸில் பயணம் செய்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த இடம் உங்களுக்குப் பழக்கமாக இல்லாததால், நீங்கள் கவலைப்பட ஆரம்பிக்கிறீர்கள். ‘நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்? இந்த பஸ் உண்மையிலேயே சரியான திக்கில்தான் போய்க்கொண்டிருக்கிறதா? போய்ச்சேர வேண்டிய இடம் இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?’ என்றெல்லாம் யோசிக்கிறீர்கள். திருத்தமான வரைபடத்தை வைத்துக்கொண்டு, ஜன்னலுக்கு வெளியே தெரியும் குறியீடுகளைப் பார்த்தால், உங்களுடைய கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடித்துவிடலாம்.

எதிர்காலத்தைப் பற்றி கவலையோடு யோசித்துப் பார்க்கும் அநேகருடைய சூழ்நிலை இன்றைக்கு இப்படித்தான் இருக்கிறது. ‘நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?’ என அவர்கள் யோசிக்கிறார்கள். ‘உலக சமாதானத்திற்கு வழிநடத்தும் பாதையில்தான் நாம் இருக்கிறோமா? அப்படியானால், அந்த இலட்சியத்தை நாம் எப்பொழுது எட்டுவோம்?’ பைபிள் ஒரு வரைபடத்தைப் போல் இருக்கிறது, இந்தக் கேள்விகளுக்குரிய பதில்களைப் பெற அது நமக்கு உதவுகிறது. அதை கவனமாக படிப்பதோடு “ஜன்னலுக்கு” வெளியே, அதாவது இந்த உலகத்தில், என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து பார்ப்பதன் மூலம் நம்முடைய தற்போதைய சூழ்நிலையையும் நம்முடைய எதிர்காலத்தையும் பற்றி நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். ஆனால் முதலாவதாக, நம்முடைய பிரச்சினைகள் எப்படி ஆரம்பித்தன என்பதை நாம் ஆராய வேண்டும்.

சோகமான ஓர் ஆரம்பம்

முதல் மனிதனையும் மனுஷியையும் கடவுள் படைத்தபோது, அவர்கள் பரிபூரணராக இருந்தார்கள் என்றும், பூங்காவனம் போன்ற பரதீஸில் அவர்களைக் குடிவைத்தார் என்றும் பைபிள் சொல்கிறது. ஆதாமும் ஏவாளும் என்றென்றும் வாழவே படைக்கப்பட்டார்கள்​—⁠வெறுமனே 70 அல்லது 80 ஆண்டுகள் வாழ்வதற்கு அல்ல. அவர்களிடம் கடவுள் இவ்வாறு கூறினார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, . . . ஆண்டுகொள்ளுங்கள்.” உலகம் முழுவதிலும் பரதீஸை விஸ்தரிக்க வேண்டும் என்பதே ஆதாம் ஏவாளுக்கும் அவர்களுடைய சந்ததியாருக்கும் கடவுள் வைத்திருந்த நோக்கமாகும்.​—ஆதியாகமம் 1:28; 2:8, 15, 22.

ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு எதிராக கலகம் செய்தார்கள். அதனால், பரதீஸ் வீட்டை இழந்தார்கள்; உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் படிப்படியாக சீரழிய ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு நாளும், கல்லறையை நோக்கி ஓர் அடியெடுத்து வைத்தார்கள். ஏன்? ஏனென்றால் படைப்பாளருக்கு விரோதமாக நடந்ததன் மூலம் அவர்கள் பாவம் செய்திருந்தார்கள், “பாவத்தின் சம்பளம் மரணம்.”​—ரோமர் 6:⁠23.

அநேக குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றெடுத்த பிறகே ஆதாமும் ஏவாளும் இறந்துபோனார்கள். இந்தப் பிள்ளைகளால் கடவுளுடைய ஆதி நோக்கத்தை நிறைவேற்ற முடியுமா? முடியாது, ஏனென்றால் தங்கள் பெற்றோருடைய அபூரணத்தை அவர்கள் சுதந்தரித்திருந்தார்கள். சொல்லப்போனால், தலைமுறை தலைமுறையாக, ஆதாமின் சந்ததியார் அனைவருமே பாவத்தையும் மரணத்தையும் சுதந்தரித்திருக்கிறார்கள், நாமும்தான். “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது” என பைபிள் சொல்கிறது.​—ரோமர் 3:23; 5:⁠12.

நமது தற்போதைய இடத்தைத் துல்லியமாக அறிதல்

ஆதாம் ஏவாள் செய்த கலகம் மனிதகுலத்திற்குக் கடினமான நீண்ட பயணத்தின் ஆரம்பமாக இருந்தது, அந்தப் பயணம் நம்முடைய நாள்வரை தொடர்ந்து வந்திருக்கிறது. மனிதகுலம் “மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது” என பைபிள் எழுத்தாளர் ஒருவர் கூறினார். (ரோமர் 8:21) மனித போராட்டத்தை அது எவ்வளவு அருமையாக விவரிக்கிறது! ஏன், அறிவியலில் சாதனை படைத்த அறிவுக்கூர்மைமிக்க ஆண்களும் பெண்களும், மருத்துவத் துறையில் திறமைமிக்க நிபுணர்களும், தொழில்நுட்பத்தில் புதுமை படைக்கும் கலைஞர்களும் ஆதாமின் சந்ததியாரில் இருந்திருக்கிறார்களே. என்றாலும், அவர்களில் ஒருவரால்கூட, கடவுள் நோக்கம் கொண்டிருந்த உலக சமாதானத்தையோ நல் ஆரோக்கியத்தையோ கொண்டுவர முடியவில்லை.

ஆதாம் ஏவாள் செய்த கலகத்தனம் தனிப்பட்ட விதமாக நம் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. உதாரணமாக, அநீதியின் துன்பத்தை, குற்றச்செயலின் பயத்தை, தீராத வியாதியின் வேதனையை, அல்லது அன்பானவர்களை மரணத்தில் இழக்கும்போது ஏற்படும் துயரத்தை அனுபவிக்காதவர் யார்? அத்திப்பூத்தாற்போல் நம் வாழ்க்கையில் வரும் அமைதியை ஏதாவதொரு சோகம் சடுதியில் பறித்துக்கொண்டு போய்விடுவது போல் தெரிகிறது. மகிழ்ச்சியான தருணங்கள் இருந்தபோதிலும்கூட, பூர்வகால முற்பிதாவான யோபு விவரித்ததைப் போலவே நம்முடைய வாழ்க்கை இருக்கிறது. “மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்லம் நிறைந்தவனுமாயிருக்கிறான்” என்று அவர் கூறினார்.​—யோபு 14:⁠1.

நாம் எங்கிருந்து வந்தோம் என்பதையும் இப்பொழுது நாம் அனுபவிக்கிற பரிதாபகரமான சூழ்நிலையையும் சிந்தித்துப் பார்க்கையில், எதிர்காலம் இருண்டு காணப்படலாம். ஆனால் இத்தகைய சூழ்நிலைகள் என்றென்றும் தொடர கடவுள் அனுமதிக்க மாட்டார் என பைபிள் நமக்கு உறுதி அளிக்கிறது. மனிதகுலத்திற்கான அவருடைய ஆதி நோக்கம் கண்டிப்பாக வெற்றிபெறும். (ஏசாயா 55:10, 11) இது விரைவில் நடக்குமென ஏன் நிச்சயம் நம்பலாம்?

பைபிள் சொல்கிறபடி, ‘கடைசி நாட்கள்’ என்ற ஒரு சிக்கலான காலகட்டத்தை நாம் இப்பொழுது கடந்து வருகிறோம். (2 தீமோத்தேயு 3:1) அந்தச் சொற்றொடர் பூமி கோளத்திற்கும் அதிலுள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் முடிவை குறிப்பதில்லை. மாறாக, இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவை, அதாவது நமக்கு துன்பத்தை உண்டாக்கும் நிலைமைகளின் முடிவைக் குறிக்கிறது. (மத்தேயு 24:3) கடைசி நாட்களில் நடக்கும் சம்பவங்களையும் மக்களிடையே காணப்படும் சுபாவங்களையும் பைபிள் விவரிக்கிறது. இவற்றில் சில, 8-⁠ம் பக்கத்தில் உள்ள பெட்டியில் கொடுக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள், பின்பு “ஜன்னலுக்கு” வெளியே உலக காட்சியைப் பாருங்கள். பைபிள் என்ற நம்முடைய வரைபடம் நாம் தற்போது இருக்கும் இடத்தை, அதாவது இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவுக்கு வெகு அருகில் இருப்பதை, துல்லியமாகத் தெரிந்துகொள்ள உதவுகிறது. ஆனால் அதற்குப்பின் நிலைமை எப்படியிருக்கும்?

முன்னே இருக்கும் பாதை

ஆதாமும் ஏவாளும் கலகம் செய்தவுடனே, “என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை” ஸ்தாபிக்கப்போகும் ஏற்பாட்டைப் பற்றிய தம்முடைய நோக்கத்தை கடவுள் வெளிப்படுத்த ஆரம்பித்தார். (தானியேல் 2:44) பரமண்டல ஜெபம் என பொதுவாக அழைக்கப்படும் ஜெபத்தில் அநேகர் சொல்லும் அந்த ராஜ்யம் மனிதவர்க்கத்திற்கு எண்ணற்ற ஆசீர்வாதங்களை அளிக்கும்.​—மத்தேயு 6:9, 10.

கடவுளுடைய ராஜ்யம் என்பது இன்று மக்களுடைய இருதயத்தில் குடிகொண்டிருக்கும் ஏதோவொரு தெளிவற்ற கருத்து அல்ல. இது நிஜமான பரலோக அரசாங்கம், அது பூமியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். தமது ராஜ்யத்தின் மூலம் கடவுள் சாதிக்கப்போவதாக வாக்குறுதி அளித்திருப்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். முதலில், ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கடவுள் கெடுப்பார்’ என பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 11:18) அவருக்கு கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்கு அவர் என்ன செய்வார்? “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என அவருடைய வார்த்தையான பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 21:4) இவற்றை எந்த மனிதனாவது என்றாவது சாதித்திருக்கிறானா? மனிதருக்காக ஆதியில் நோக்கம் கொண்டிருந்த நிலைமையை கடவுளால் மாத்திரமே தர முடியும்.

கடவுளுடைய ராஜ்யம் தரப்போகும் அந்த ஆசீர்வாதங்களிலிருந்து நீங்கள் எவ்வாறு பயன் அடையலாம்? யோவான் 17:3 இவ்வாறு கூறுகிறது: ‘ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் [தொடர்ந்து] அறிவதே நித்திய ஜீவன்.’ இந்த அறிவைப் பெற்றுக்கொள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காகவே, யெகோவாவின் சாட்சிகள் ஓர் உலகளாவிய கல்வி புகட்டும் வேலையில் ஈடுபடுகிறார்கள். அவர்களுடைய ஊழியம் சுமார் 230 தேசங்களில் நடைபெற்று வருகிறது, அவர்கள் வெளியிடும் பிரசுரங்கள் 400-⁠க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கின்றன. அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால், உங்களுடைய வட்டாரத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளிடம் தொடர்புகொள்ளுங்கள் அல்லது பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு எழுதுங்கள்.

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

“‘இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்; பணம் ஈட்டுவோம்’ என சொல்லுகிறவர்களே, சற்று கேளுங்கள். நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே!”​—⁠யாக்கோபு 4:13, 14, பொது மொழிபெயர்ப்பு

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

முதல் மனுஷனும் மனுஷியும் வாழ்ந்த காலத்திலிருந்து நம் சரித்திரத்தைப் பற்றி பைபிள் விவரிக்கிறது. ஆகவே, நாம் எங்கிருந்து வந்தோம் என்பதைப் பற்றி அது சொல்கிறது. நம்முடைய எதிர்காலம் என்ன என்பதைப் பற்றியும் அது சுட்டிக்காட்டுகிறது. ஆனால், பைபிள் சொல்வதை நாம் புரிந்துகொள்வதற்கு, ஒரு வரைபடத்தை ஆராய்வதைப் போல், அதை கூர்ந்து ஆராய்வது அவசியம்

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

“பாவம்” என்பது ஒரு தவறான செயலையோ கெட்டதைச் செய்யத் தூண்டும் நிலைமையையோ குறிக்கலாம். நாம் பாவம் செய்யும் இயல்புடன் பிறந்திருக்கிறோம், அது நம்முடைய செயல்களைப் பாதிக்கிறது. ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.”​—⁠பிரசங்கி 7:⁠20

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

ஒரு கரும்புள்ளி இருக்கிற தாளை போட்டோகாப்பி எடுத்தால், எல்லா பிரதிகளிலும் அந்தக் கரும்புள்ளி இருக்கும். நாம் ஆதாமின் சந்ததியினராக​—⁠அதாவது பிரதிகளைப் போல​—⁠இருப்பதால், நம்மீது பாவக்கறை இருக்கிறது. ஆதாமிடம், அதாவது “ஒரிஜினலிடம்” காணப்பட்ட அதே கறைதான் இது

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

பைபிள் இவ்வாறு கூறுகிறது: “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” (எரேமியா 10:23) உலக சமாதானத்தைப் பெறுவதற்கு மனிதன் எடுக்கும் முயற்சிகள் ஏன் படுதோல்வி அடைகின்றன என்பதற்கு இதுவே காரணம். கடவுளுடைய உதவியின்றி தானாகவே ‘தன் நடைகளை நடத்தும்’ திறமையுடன் அவன் படைக்கப்படவில்லை

[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]

பைபிள் சங்கீதக்காரன் ஒருவர் கடவுளிடம் இவ்வாறு கூறினார்: உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 119:105) தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டங்களில் ஞானமாக அடியெடுத்து வைப்பதற்கு, ஒரு தீபத்தைப் போல் பைபிள் நமக்கு உதவுகிறது. ‘நம்முடைய பாதைக்கு வெளிச்சத்தைப்’ போல், நமக்கு முன்னால் இருக்கும் வழிக்கு பிரகாசமூட்டுகிறது, அதனால் மனிதவர்க்கத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நாம் பகுத்துணர முடிகிறது

[பக்கம் 7-ன் பெட்டி]

நல்நம்பிக்கை Vs. நிஜம்

செப்டம்பர் 2000-⁠ல், ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிப்பவர்கள், 2015-⁠க்குள் அடைய வேண்டும் என்ற நோக்கோடு ஏகமனதாக எண்ணற்ற இலக்குகளை வைத்தார்கள். பின்வருபவை அவற்றில் சில:

பசியால் வாடுகிற மக்கள் மற்றும் நாளொன்றுக்கு ஒரு ஐ.மா. டாலருக்கும் குறைவான பணத்தை வைத்து வாழ்கிற மக்களின் எண்ணிக்கையை பாதியாக குறைப்பது.

எல்லா பிள்ளைகளும் ஆரம்ப பள்ளிப் படிப்பு முடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது.

கல்வியின் எல்லா மட்டங்களிலும் ஆண்-பெண் என்ற வேறுபாட்டை ஒழிப்பது.

ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் இறப்பு வீதத்தை மூன்றில் இரண்டாகக் குறைப்பது.

குழந்தை பிறக்கையில் ஏற்படும் இறப்பு வீதத்தை 75 சதவீதம் குறைப்பது.

ஹெச்ஐவி/எய்ட்ஸ், மலேரியா போன்ற பெரும் வியாதிகள் பிற ஏற்படுவதைத் தடுத்துநிறுத்துவது, பிறகு அது பரவாதபடி பார்த்துக்கொள்வது.

சுத்தமான குடிநீர் கிடைக்காத மக்களின் வீதத்தை 50 விழுக்காட்டிற்குக் குறைப்பது.

இந்த இலக்குகளை அடைய முடியுமா? 2004-⁠ல் நிகழ்ந்த காரியங்களை மறுபரிசீலனை செய்தபின், உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த சுகாதார அதிகாரிகளின் குழு ஒன்று பின்வரும் முடிவுக்கு வந்தது: நல்நம்பிக்கை இருப்பது நல்லதுதான்; என்றாலும், எதார்த்தமாகவும் இருக்க வேண்டும்; முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் உண்மையில் நிலைமைகள் மோசமாகிக்கொண்டே வருகின்றன என்பதை உணர வேண்டும். உலகின் நிலை 2005 என்ற ஆங்கில நூலின் முன்னுரை இவ்வாறு அறிக்கை செய்கிறது: “வறுமை பல இடங்களில் வளர்ச்சியை தொடர்ந்து அழித்துவருகிறது. ஹெச்ஐவி/எய்ட்ஸ் போன்ற வியாதிகள் பெருகிக்கொண்டே போவதால் அநேக நாடுகளில் மக்களுடைய உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், சுமார் இரண்டு கோடி பிள்ளைகள் இறந்திருக்கிறார்கள், அதுவும் தண்ணீரால் பரவக்கூடிய​—⁠தடுக்கக்கூடிய​—⁠வியாதிகளால் இறந்திருக்கிறார்கள்; அதோடு, அனுதினமும் கோடிக்கணக்கான மக்கள் அவலநிலையில் இருக்கிறார்கள், சுத்தமான குடிநீரும் போதுமான சுகாதார வசதியுமின்றி அழுக்கடைந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்கள்.”

[பக்கம் 89-ன் பெட்டி/படங்கள்]

‘கடைசி நாட்களின்’ சில அம்சங்கள்

வரலாறு காணாத போர்.​—⁠மத்தேயு 24:7; வெளிப்படுத்துதல் 6:⁠4.

பஞ்சம்.​—⁠மத்தேயு 24:7; வெளிப்படுத்துதல் 6:5, 6, 8.

கொள்ளைநோய்.​—⁠லூக்கா 21:11; வெளிப்படுத்துதல் 6:8.

அநீதி அதிகரித்தல்.​—⁠மத்தேயு 24:⁠12.

பூமியைக் கெடுத்தல்.​—⁠வெளிப்படுத்துதல் 11:⁠18.

மகா பூமியதிர்ச்சிகள்.​—⁠லூக்கா 21:⁠11.

கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்கள்.​—⁠2 தீமோத்தேயு 3:1, NW.

பண ஆசை.​—⁠2 தீமோத்தேயு 3:2.

பெற்றோருக்குக் கீழ்ப்படியாமை.​—⁠2 தீமோத்தேயு 3:2.

சுபாவ அன்பில்லாமை.​—⁠2 தீமோத்தேயு 3:3.

கடவுளைத் தேடாமல் இன்பங்களை நாடுதல்.​—⁠2 தீமோத்தேயு 3:4.

இச்சையடக்கம் இல்லாமை.​—⁠2 தீமோத்தேயு 3:3.

நல்லோரைப் பகைத்தல்.​—⁠2 தீமோத்தேயு 3:3.

வரப்போகும் ஆபத்தைக் குறித்து உணர்வில்லாதிருத்தல்.​—⁠மத்தேயு 24:39.

கடைசி நாளுக்குரிய அத்தாட்சியை பரிகாசக்காரர் ஒதுக்கிவிடுதல்.​—⁠2 பேதுரு 3:3, 4.

கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி உலகெங்கும் பிரசங்கித்தல்.​—⁠மத்தேயு 24:⁠14.

[படங்களுக்கான நன்றி]

© G.M.B. Akash/Panos Pictures

© Paul Lowe/Panos Pictures

[பக்கம் 9-ன் படம்]

யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள் என்பது யாவரறிந்த ஒன்று