உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
◼ 2000-ம் ஆண்டின்போது, புதிதாக 83 லட்சம் பேர் காசநோயால் (TB) பாதிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டது, அவர்களில் ஏறத்தாழ 20 லட்சம் பேர் அந்நோய்க்குப் பலியானார்கள்—கிட்டத்தட்ட எல்லோருமே குறைந்த வருவாய் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள்.—ஆஸ்திரேலியாவின் மருத்துவப் பத்திரிகை (ஆங்கிலம்).
◼ “தற்போது எச்ஐவி தொற்றிய இளைஞர்கள் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள்; இக்கிருமி, ஒவ்வொரு வருடமும் 49 லட்சம் பேரைத் தொற்றுகிறது; அவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்.”—ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை செயற்பாட்டு நிதி அமைப்பு.
◼ அல்பட்ராஸ் என்ற கடல் பறவைகள் உலகைச் சுற்றிவருகிற பயணப் பாதைகளை செயற்கைக்கோள் தடயம் பதிவுசெய்தது. அப்பறவைகளில் அதிவேகமானது பூமியை வெறும் 46 நாட்களில் சுற்றிவந்தது.—ஸைன்ஸ் பத்திரிகை, அ.ஐ.மா.
◼ “போர்வீரர்களுக்கு, ஆயுதங்களுக்கு, வெடி மருந்துகளுக்கு என இந்த உலகம் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு மணிநேரத்திலும் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைச் செலவழிக்கிறது.”—வைட்டல் ஸைன்ஸ் 2005, உவர்ல்ட் வாட்ச் இன்ஸ்டிட்யூட்.
குருமாருக்கு எதிரான வன்முறை அதிகரிக்கிறதா?
“[பிரிட்டனில்] மிகமிக ஆபத்தான வேலைகளில் ஒன்று பாதிரி வேலை” என டெய்லி டெலிகிராஃப் என்ற லண்டன் செய்தித்தாள் 2005-ல் அறிக்கை செய்தது. 2001-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய ஒரு சுற்றாய்வின்போது பேட்டி காணப்பட்ட குருமாரில், ஏறத்தாழ 75 சதவீதத்தினர் கடந்த இரண்டு வருடங்களில் மோசமாக நடத்தப்பட்டிருந்தது அல்லது தாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 1996 முதற்கொண்டு, குறைந்தது ஏழு குருமார் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மர்ஸிஸைட் என்ற ஒரு நகர்புறப் பகுதியில், “சராசரியாக ஒவ்வொரு நாளும் அங்குள்ள 1,400 வணக்க ஸ்தலங்கள் ஒன்றில் தாக்குதலோ, திருட்டோ, தீ வைப்போ நடந்திருக்கிறது.”
வியக்கத்தக்க பல்வகை உயிரினங்கள்
மழைக்காடுகள் அழிக்கப்பட்டபோதிலும், “பார்னியோ தீவின் உள்ளூர் பகுதியில் வியக்கத்தக்க அளவு பல்வகையான உயிரினங்கள் இருக்கின்றன” என த நியு யார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது. உலக வன விலங்கு நிதி அமைப்பின்படி, 1994-லிருந்து 2004-குள்ளாக, உயிரியல் வல்லுநர்கள் 361 புதிய தாவர வகைகளையும் விலங்கினங்களையும் அத்தீவில் கண்டுபிடித்திருக்கிறார்கள்; புரூனி, இந்தோனேஷியா, மலேஷியா ஆகிய நாடுகள் அத்தீவை சொந்தம் கொண்டாடுகின்றன. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்களில், 260 பூச்சிகளும், 50 தாவரங்களும், 30 மீன்களும், 7 தவளைகளும், 6 பல்லிகளும், 5 நண்டுகளும், 2 பாம்புகளும், 1 தேரையும் அடங்குகின்றன. ஆனால், வெப்பமண்டலத்தைச் சேர்ந்த உறுதியான மரக்கட்டைகளுக்கும், ரப்பருக்கும், பாமாயிலுக்கும் கிராக்கி அதிகமாக இருப்பதால் அத்தீவின் உள்ளூர் பகுதியிலுள்ள மழைக்காடுகள் வேகமாக அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கின்றன.
மூட நம்பிக்கைகள் அதிகரிக்கின்றன
“தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் கொடிகட்டிப் பறக்கிற இந்தக் காலத்திலும்கூட, மூட நம்பிக்கை அதன் கவர்ச்சியை இழக்கவே இல்லை” என ஆலென்ஸ்பாக் என்ற ஜெர்மன் கருத்துச் சுற்றாய்வு நிறுவனம் அறிக்கை செய்கிறது. “நல்ல அல்லது கெட்ட சகுனத்தில் ஜனங்கள் கண்மூடித்தனமாக நம்பிக்கை வைப்பது இன்னமும் தொடருகிறது, சொல்லப்போனால், 25 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைவிட அது இன்று அதிக பிரபலமாக இருக்கிறது” என்பதை நீண்ட நாள் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு காண்பித்திருக்கிறது. எரி நட்சத்திரங்கள் தங்கள் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துவதாக 1970-களில் 22 சதவீதத்தினர் நம்பினார்கள். இப்போதோ 40 சதவீதத்தினர் அதை நம்புகிறார்கள். மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே இன்று எல்லா வகையான மூட நம்பிக்கைகளையும் தவிர்க்கிறார்கள். ஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1,000 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்போது, மூன்றில் ஒரு பகுதியினர் கார்களில் அல்லது சாவிக் கொத்தில் தொங்கவிடப்படுகிற அதிர்ஷ்ட தாயத்துகளை நம்பினார்கள் என்பது தெரியவந்தது.
அண்டார்க்டிக் பனிப்பாறைகள் குறுகுகின்றன
“கடந்த 50 ஆண்டுகளில், அண்டார்க்டிக் தீபகற்பத்திலிருந்த 244 பனிப்பாறைகளில் 87 சதவீதம் குறுகியிருக்கின்றன,” அதுவும் நிபுணர்கள் முன்பு நினைத்ததைவிட அதிக வேகமாகவே குறுகியிருக்கின்றன என்று ப்யூனஸ் அயர்ஸில் உள்ள கிலாரீன் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. பனிப்பாறைகளைப் பற்றி முதன்முதலில் நடத்தப்பட்ட முழுமையான ஆராய்ச்சியின்போது, கடந்த 50 ஆண்டுகளில் காற்றின் தட்பவெப்பம் 2.5 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதும்கூட கண்டுபிடிக்கப்பட்டது. பனிப்பாறைகள் இப்படிப் பரவலாகக் குறுகியதற்குச் சீதோஷ்ண மாற்றமே முக்கிய காரணம் எனக் குறிப்பிடுகிறார் பிரிட்டிஷ் அண்டார்க்டிக் சுற்றாய்வுக் குழுவைச் சேர்ந்த டேவிட் வான். “இதற்கு மனிதர்கள் பொறுப்பாளிகளா?” எனக் கேட்ட அவர், “நம்மால் நிச்சயமாகச் சொல்ல முடியாது, ஆனால் இந்த முக்கிய கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிப்பதில் நாம் ஒருபடி அருகே சென்றிருக்கிறோம்” என்றும் பதிலளித்தார்.