Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகருக்கு

எமது வாசகருக்கு

எமது வாசகருக்கு

இந்த இதழ் முதற்கொண்டு, விழித்தெழு!-வில் சில மாற்றங்கள் இருக்கும். சில அம்சங்கள் மாறுபட்டிருந்தாலும், பெரும்பாலானவை அதேபோலவே இருக்கும்.

ஆரம்பத்தில் வைத்திருந்த அதே இலட்சியத்தை விழித்தெழு! தொடர்ந்து நிறைவேற்றும். 4-⁠ம் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, இந்தப் பத்திரிகை “முழு குடும்பத்துக்கும் அறிவொளியூட்டுவதற்காக பிரசுரிக்கப்படுகிறது.” உலக சம்பவங்களை ஆராய்கிறது, பல்வேறு கலாச்சாரத்தினரைப் பற்றி சொல்கிறது, படைப்பின் அதிசயங்களை விவரிக்கிறது, ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகிறது, அறிவியல் அறியாதவர்களுக்கு அறிவியலை விளக்குகிறது, விழித்தெழு! தொடர்ந்து வாசகருக்குச் செய்தி அறிவிக்கும், தங்களைச் சுற்றி நடக்கிற உலக சம்பவங்களின் மத்தியில் விழிப்புடன் இருப்பதற்கு உதவும்.

ஆகஸ்ட் 22, 1946 தேதியிட்ட விழித்தெழு! இதழ் இவ்வாறு உறுதிமொழி அளித்தது: “சத்தியத்தை உறுதியாய்க் கடைப்பிடிப்பதே இப்பத்திரிகையின் மிக முக்கிய இலட்சியம்.” இந்த உறுதிமொழிக்கு இசைய, நிஜமான தகவல்களையே பிரசுரிப்பதற்கு விழித்தெழு! என்றும் முயன்று வந்திருக்கிறது. இதற்காக கட்டுரைகள் முற்றுமுழுக்க ஆராய்ச்சி செய்யப்படுகின்றன, திருத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள கவனமாகச் சரிபார்க்கப்படுகின்றன. ‘சத்தியத்தை உறுதியாய்க் கடைப்பிடிப்பதை’ மிக முக்கியமான மற்றொரு விதத்திலும் இப்பத்திரிகை நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

விழித்தெழு! எப்பொழுதும் வாசகருக்கு பைபிளைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. என்றாலும், இந்த இதழ் முதற்கொண்டு பைபிள் சார்ந்த கட்டுரைகளை இன்னும் அதிகமாகச் சிறப்பித்துக் காட்டும். (யோவான் 17:17) இன்று அர்த்தமுள்ள அதேசமயத்தில் வெற்றிகரமான வாழ்க்கை வாழ பைபிளின் நடைமுறையான அறிவுரைகள் எப்படி உதவுகின்றன என்பதையும் விழித்தெழு! தொடர்ந்து சிறப்பித்துக் காட்டும். உதாரணமாக, “இளைஞர் கேட்கின்றனர் . . .” மற்றும் “பைபிளின் கருத்து” போன்ற தொடர் கட்டுரைகளில் பைபிள் சார்ந்த வழிநடத்துதல் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது, இவை தொடர்ந்து இந்த இதழில் இடம்பெறும். அதோடு, இன்றைய அநீதி நிறைந்த உலகம் விரைவில் நீக்கப்பட்டு, சமாதானம் தவழும் புதிய உலகம் ஸ்தாபிக்கப்படும் என்ற பைபிளின் வாக்குறுதிக்கு வாசகர்களுடைய கவனத்தை விழித்தெழு! தொடர்ந்து திருப்பும்.​—வெளிப்படுத்துதல் 21:3, 4.

வேறென்ன வித்தியாசம் இருக்கும்? விழித்தெழு! பத்திரிகை 82 மொழிகளில் வெளிவருகிறது, இந்த இதழ் முதற்கொண்டு பெரும்பாலான மொழிகளில் மாதம் ஒருமுறை மட்டுமே பிரசுரிக்கப்படும். (முன்பு இது பெரும்பாலான மொழிகளில் மாதம் இருமுறை பிரசுரிக்கப்பட்டது). a 1946 முதல் தொடர்ந்து வெளிவரும் “உலகை கவனித்தல்” என்ற பகுதி ஒவ்வொரு இதழிலும் இடம்பெறும், ஆனால் இரண்டு பக்கத்திற்கு பதிலாக ஒரு பக்கமாக குறைக்கப்படும். அதோடு, 31-⁠ம் பக்கத்தில், “எப்படி பதில் அளிப்பீர்கள்?” என்ற சிறப்புப் பகுதியை புதிய அம்சமாக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அதில் என்னென்ன விஷயங்கள் இருக்கும், அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?

இந்த இதழில் 31-⁠ம் பக்கத்திற்கு சற்று உங்களுடைய பார்வையை செலுத்துங்கள். அந்தப் பக்கத்திலுள்ள சில பகுதிகள் சிறுவர்களுக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கும்; பிற பகுதிகளோ நன்கு தேர்ச்சிபெற்ற பைபிள் மாணாக்கருடைய நினைவாற்றலை தீட்டும். “சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?” என்ற பகுதி, பைபிள் கதாபாத்திரங்களில் வருபவர்கள் எப்பொழுது வாழ்ந்தார்கள், முக்கிய சம்பவங்கள் எப்பொழுது நிகழ்ந்தன என்பவற்றைக் காட்டும் கால அட்டவணையைத் தயாரிக்க உங்களுக்கு உதவும். பெரும்பாலான கேள்விகளுக்குரிய பதில்கள் அதே இதழில் வேறொரு பக்கத்தில் தலைகீழாக அச்சிடப்பட்டிருக்கும். “இந்த இதழிலிருந்து” என்ற பகுதிக்குரிய பதில்கள் இந்தப் பத்திரிகையிலேயே காணப்படும். பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு சற்று ஆராய்ச்சி செய்து, கற்றுக்கொண்டதை மற்றவர்களுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ளலாமே! குடும்பமாக அல்லது தொகுதியாக பைபிள் உரையாடல்களை நடத்துவதற்கு “எப்படி பதில் அளிப்பீர்கள்?” என்ற புதிய அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, விழித்தெழு! இந்த உறுதிமொழியை அளித்தது: “தகவல்களை உள்ளூர் கண்ணோட்டத்தில் அல்ல, ஆனால் உலகளாவிய கண்ணோட்டத்தில் இந்தப் பத்திரிகை வழங்கும். எல்லா நாடுகளிலும் வாழும் நேர்மையுள்ள மக்களுக்கு இது ஆர்வமூட்டுவதாக இருக்கும். . . . இளைஞராக இருந்தாலும்சரி முதியோராக இருந்தாலும்சரி, இப்பத்திரிகையில் உள்ள விஷயங்கள், பெரும்பாலோருக்குத் தகவல் அளிப்பதாயும் கல்வி புகட்டுவதாயும் அக்கறை ஊட்டுவதாயும் இருக்கும்.” விழித்தெழு! இந்த உறுதிமொழியை காப்பாற்றியிருக்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள வாசகர்கள் ஒத்துக்கொள்வார்கள். அதையே நாங்கள் தொடர்ந்து செய்வோமென உங்களுக்கு உறுதி அளிக்கிறோம்.

பிரசுரிப்போர்

[அடிக்குறிப்பு]

a விழுத்தெழு! சில மொழிகளில் காலாண்டுக்கு ஒருமுறை பிரசுரிக்கப்படுகிறது, ஆகவே இந்தக் கட்டுரையில் காணப்படும் எல்லா அம்சங்களும் அந்தப் பதிப்புகளில் ஒருவேளை இருக்காது.

[பக்கம் 3-ன் படங்கள்]

1919-⁠ல் “கோல்டன் ஏஜ்” என அழைக்கப்​பட்டது, 1937-⁠ல் “கன்சொலேஷன்” என்றும், 1946-⁠ல் “விழித்தெழு!” என்றும் பெயர் மாற்றப்பட்டது

[பக்கம் 4-ன் படங்கள்]

“விழித்தெழு!” வெகு காலமாக வாசகரின் கவனத்தை பைபிளிடம் திருப்பியிருக்கிறது

[படங்களுக்கான நன்றி]

துப்பாக்கிகள்: U.S. National Archives photo; starving child: WHO photo by W. Cutting