ஒளிமயமான எதிர்காலம்?
ஒளிமயமான எதிர்காலம்?
எதிர்காலம்—இன்று அதிக ஆர்வத்திற்குரிய ஒரு விஷயம். அடுத்த மாதமோ அடுத்த ஆண்டோ, ஏன் பத்தாண்டுகள் கழித்தோ, நாம் என்ன செய்துகொண்டிருப்போம் என்பதை அறிய யாருக்குத்தான் விருப்பமில்லை? இன்னும் பெரியளவில் பார்த்தால், 10, 20, அல்லது 30 ஆண்டுகளுக்குப்பின் இந்த உலகம் எப்படி இருக்கும்?
எதிர்காலத்தில் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? கோடானுகோடி மக்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது, இவர்களை இரு சாராராகப் பிரிக்கலாம்: நிலைமை முன்னேறும் என நம்புவதற்கு ஆணித்தரமான ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்வோர் ஒரு சாரார்; இருண்ட எதிர்காலத்தை எண்ணிப் பார்க்க மனமின்றி ஒளிமயமான எதிர்காலத்தின் மீது ஏதோ பெயரளவில் நம்பிக்கை வைப்போர் மறு சாரார்.
ஆனால், நல்ல எதிர்காலம் வருமென நம்பாத சிலரும் இருக்கிறார்கள். உலக முடிவைப் பற்றி முன்னுரைப்பவர்களே அவர்கள்; பூமி கோளம் அழியப்போவதைப் பற்றி அறிவிப்பதில் அவர்கள் இன்பம் காண்பதுபோல் தெரிகிறது. அவர்களுடைய கண்ணோட்டத்தில், யாருமே எதிர்காலத்தில் உயிர்தப்ப மாட்டார்கள்.
எதிர்காலத்தைப் பற்றி உங்களுடைய கண்ணோட்டம் என்ன? இருண்ட எதிர்காலத்தை எதிர்நோக்குகிறீர்களா அல்லது சமாதானமும் பாதுகாப்பும் தவழும் எதிர்காலத்தை எதிர்நோக்குகிறீர்களா? சமாதானமும் பாதுகாப்பும் நிலவுமென நீங்கள் நினைத்தால், உங்களுடைய நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன? அது வெறுமனே நல்நம்பிக்கையா அல்லது அதற்கு உறுதியான அத்தாட்சி இருக்கிறதா?
மனிதகுலம் பூண்டோடு அழியும் நாளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என அழிவை முன்னுரைப்போர் நம்புகிறார்கள். விழித்தெழு! இதழைப் பிரசுரிப்போரோ அவ்வாறு நம்புவதில்லை. ஆனால், எக்காலத்திலும் சிறப்பான காலம் வரப்போகிறது என நம்புவதற்கு ஆணித்தரமான ஆதாரத்தை பைபிள் தருகிறது.
[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]
U.S. Department of Energy photograph