‘பறந்து போகுது பார்!’
‘பறந்து போகுது பார்!’
ஏறக்குறைய அந்திசாயும் வேளை அது, இலையுதிர் கால காற்று ஜில்லென வீசியது. ஆனால் அந்த மாலைப்பொழுதின் அமைதி சீக்கிரத்தில் கலைந்தது—ஆம், 20 கூஸ் வாத்துகளின் (goose) கூட்டம் ஒன்று ‘க்வாக்’ ‘க்வாக்’ என “ராகம்” பாடிக்கொண்டு, திடீரென தலைக்குமேல் பறந்துவந்தன. வலிமைமிக்க சிறகுகளை அடித்துக்கொண்டு, பிரம்மாண்டமான V வடிவத்தில் நளினமாக பறந்துவந்தன. ஒரு கூஸ் வாத்து ஒயிலாக இடதுபுறம் திரும்பி, அந்தக் கூட்டத்தின் பின்புறம் சென்றது. நெஞ்சைக் கொள்ளைகொள்ளும் இந்த அழகிய காட்சி என் ஆர்வப்பசியைக் கிளறிவிட்டது. ஏன் கூஸ் வாத்துகள் V வடிவத்தில் பறக்கின்றன? அவை எங்கே போகின்றன?
இது நீரில் வாழும் ஒரு வகை வாத்து, சாதாரண வாத்தும் (duck) அன்னப்பறவையும் இதற்கு நெருங்கிய சொந்தம். இந்த கூஸ் வாத்துகளில் சுமார் 40 வகை உலகெங்கிலும் உள்ளன, இவை பெரும்பாலும் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் காணப்படுகின்றன. கனடா கூஸ் வாத்துதான் பிரபலமான வகையாகும். நீண்ட கருநிற கழுத்தும் குரல்வளையைச் சுற்றிலுமுள்ள வெண்ணிற திட்டும் இதன் சிறப்பம்சம். இதன் துணை வகையைச் சேர்ந்த வளர்ச்சியடைந்த ஆண் கூஸ் வாத்துகள் இராட்சத கனடா வாத்துகள் என அழைக்கப்படுகின்றன. அதன் எடை எட்டு கிலோகிராம் வரை இருக்கும், இறக்கை இரண்டு மீட்டர் நீளம். இந்த கூஸ் வாத்து அலாஸ்கா மற்றும் வட கனடாவரை சென்று கோடையை கழிக்கிறது; பின்பு குளிர் காலங்களில் தெற்கே மெக்சிகோ வரை இடம்பெயர்ந்து செல்கிறது.
இடப்பெயர்ச்சி செய்யும் காலம் கூஸ் வாத்துகளுக்கு மிகவும் முக்கியம். வடக்கிற்கு வெகு சீக்கிரத்தில் அவை வந்துசேர்ந்துவிட்டால், தண்ணீர் இன்னும் உறைநிலையிலேயே இருக்கும், தாவரங்களும் அரிதாகவே காணப்படும். ஆகவே, கதகதப்பான சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப வடக்கு நோக்கி இடப்பெயர்ச்சி செய்கிறது கனடா கூஸ் வாத்து. அங்குபோய் சேர்ந்தவுடன் இந்த கூஸ் வாத்துகள் ஜோடிகளாக
பிரிந்துவிடுகின்றன, ஒவ்வொரு ஜோடியும் தனக்கென சொந்தமாக இணைசேரும் பிராந்தியத்தை உறுதிப்படுத்திக்கொள்கிறது.இந்த கூஸ் வாத்துகள் V வடிவத்தில் பறந்துசெல்வதால் ஒன்றையொன்று நோட்டமிட்டுக்கொள்ள முடிகிறது. அதனால் முன்னே செல்லும் கூஸ் வாத்து திசையை, வேகத்தை, அல்லது உயரத்தை மாற்றும்போது சட்டென்று மற்றவையும் அதற்கேற்ப மாற்றிக்கொள்ள முடிகிறது. அதோடு, முன்னால் செல்லும் பறவை உருவாக்கும் காற்றோட்டத்தால் மற்ற வாத்துகளுக்குப் பறப்பது எளிதாகிறது, காற்றின் கொந்தளிப்பும் குறைகிறது என நிபுணர்கள் சிலர் கருதுகிறார்கள். எதுவாக இருந்தாலும்சரி, இடப்பெயர்ச்சி செய்யும் கூட்டத்தில் பொதுவாக அநேக குடும்பங்கள் இருக்கும், வயதுவந்த கூஸ் வாத்துகளே மாறிமாறி தலைமைதாங்கி வழிநடத்திச் செல்கின்றன.
பெரும்பாலும், கனடா கூஸ் வாத்துகள் வருஷாவருஷம் அதே வீ(கூ)ட்டையே பயன்படுத்துகின்றன. பொதுவாக, குச்சிகள், புற்கள், பாசிகள் போன்ற எளிய பொருட்களால் கூடு கட்டுகின்றன. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற உயர்ந்த கொள்கையையே இந்த கூஸ் வாத்துகள் காலம்பூராவும் கடைப்பிடிக்கின்றன. ஒருவேளை ஜோடியில் ஒன்று காலமானால், மற்றொரு துணையை மணமுடித்துக் கொள்ளலாம். ஆனால், பொதுவாக அது தனிமையிலேயே காலத்தைக் கழிக்கும்.
பெண் கூஸ் வாத்து நான்குமுதல் எட்டு முட்டைகள்வரை இடுகிறது, அவற்றை 28 நாட்களுக்கு அடைகாக்கிறது. குஞ்சு பொரித்த கூஸ் வாத்துகள் சிறந்த பாதுகாவலர்களாக திகழ்கின்றன. தங்களுக்கோ குஞ்சுகளுக்கோ ஆபத்து ஏற்பட்டால், அவை அதிக மூர்க்கமாக மாறிவிடுகின்றன. இறக்கைகளைக் கொண்டு எதிரிகளை அவற்றால் பலமாக தாக்க முடியும்.
கூஸ் வாத்துக்குஞ்சுகள் முட்டையில் இருக்கும்போதே பேச்சுத்தொடர்பு கொள்கின்றன. அவற்றின் சத்தம் உச்சஸ்தாயில் எழுப்பும் அதிர்வொலிமுதல் (திருப்தியை குறிக்கும் ஒலிமுதல்) அபாய ஒலிவரை பல்வேறு விதங்களில் இருக்கும். பெரிய கூஸ் வாத்துகளும்கூட குஞ்சுகளுடன் தொடர்புகொள்வதற்கும் அவைதாமே ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதற்கும் பல்வகை ஒலிகளை எழுப்புகின்றன. சொல்லப்போனால், கனடா கூஸ் வாத்துகள் குறைந்தபட்சம் 13 வகையான ஒலிகளை எழுப்புவதாக ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கூஸ் வாத்துகள் உண்மையில் ‘இயல்புணர்வால் ஞானமுள்ளவை’ என்பதற்கு அத்தாட்சி அளிக்கின்றன. (நீதிமொழிகள் 30:24, NW) ஆனால், ஆகாயத்தில் பறக்கும் பறவைகள் உள்ளிட்ட அனைத்தையும் படைத்தவரான யெகோவா தேவனுக்கே இதற்கான எல்லா புகழும் உரித்தாகிறது.—சங்கீதம் 104:24.
[பக்கம் 17-ன் பெட்டி/படங்கள்]
உங்களுக்குத் தெரியுமா?
● குஞ்சு பொரித்தவுடன் கூஸ் வாத்துக்குஞ்சுகள் அப்பா அம்மாவுடன் சேர்ந்து கூட்டைவிட்டு நிரந்தரமாய் வெளியேறிவிடுகின்றன. பொதுவாக குடும்பங்கள் ஒன்றுசேர்ந்தே வாழ்கின்றன.
● பட்டைத்தலை நீர் வாத்துகள் சுமார் 8,900 அடி உயரமுடைய எவரெஸ்ட் மலையைக் கடந்து இடப்பெயர்ச்சி செய்வதாக சொல்லப்படுகிறது.
● சிலவகை கூஸ் வாத்துகள் ஓய்வின்றி 1,600 கிலோமீட்டர் தூரம்வரை பறக்க முடியும்.
● தனியாகப் பறக்கும் வாத்துகள் இறக்கைகளை வேகமாக அடிப்பதுபோல, V வடிவத்தில் பறக்கும் வாத்துகள் தங்களுடைய இறக்கைகளை அவ்வளவு அடிக்கடி அடிப்பதில்லை, அதனால் இதயத்துடிப்பு குறைவாக இருக்கிறது.
[படத்திற்கான நன்றி]
மேலே இடது: U.S. Fish & Wildlife Service, Washington, D.C./Duane C. Anderson
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
பறக்கும் கூஸ் வாத்து: © Tom Brakefield/CORBIS