Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூஞ்சணம் நண்பனும் பகைவனும்!

பூஞ்சணம் நண்பனும் பகைவனும்!

பூஞ்சணம் நண்பனும் பகைவனும்!

ஸ்வீடனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

சில பூஞ்சணங்கள் உயிரைக் காக்கின்றன; மற்றவையோ உயிரைப் பறிக்கின்றன. சீஸ், ஒயின் போன்றவற்றிற்கு சுவை சேர்க்கின்றன சில; மற்றவையோ உணவை விஷமாக்குகின்றன. மரக்கட்டைகளில் வளருகின்றன சில; மற்றவையோ குளியலறைகளிலும் புத்தகங்களிலும் தொற்றுகின்றன. சொல்லப்போனால், பூஞ்சணங்கள் எங்கும் எதிலும் காணப்படுகின்றன​—⁠இந்த வாக்கியத்தை நீங்கள் வாசிக்கையிலும்கூட அவற்றின் துகள்கள் உங்களுடைய நாசி வழியாக சென்றுகொண்டிருக்கலாம்.

நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் பூஞ்சணம் இருக்கிறது; நம்ப முடியவில்லையா? அப்படியானால், ஒரு துண்டு பிரெட்டை வெளியில் வையுங்கள், ஏன், குளிர்சாதனப் பெட்டியில்கூட வையுங்களேன். சீக்கிரத்தில் பொசுபொசுவென ஏதோவொன்று அதன்மீது படரும், அதுதான் பூஞ்சணம்!

பூஞ்சணம் என்றால் என்ன?

பூஞ்சணங்கள் பூஞ்சக்காளான்கள் (fungus) என்ற பெரும் பிரிவைச் சேர்ந்தவை; மில்டியூஸ், காளான்கள், தாவரத்தில் உண்டாகும் புள்ளிகள், ஈஸ்டுகள் ஆகியவை உள்ளிட்ட 1,00,000-⁠க்கும் அதிகமான வகைகள் அவற்றில் இருக்கின்றன. சுமார் 100 பூஞ்சக்காளான்களே மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் நோய் உண்டாக்குகின்றன. மற்ற அநேக பூஞ்சக்காளான்களோ உணவுச் சங்கிலியில் இன்றியமையாத பாகம் வகிக்கின்றன​—⁠இறந்த கரிமப்பொருளை மக்கச்செய்து, தாவரங்களுக்கு பயன்படும் வகையில் முக்கிய மூலக்கூறுகளாக சுழற்சி முறையில் மாற்றுகின்றன. இன்னும் வேறுசில பூஞ்சணங்களோ தாவரங்களுடன் சேர்ந்து இணைவாழ்வு முறையில் (symbiotic relationships) செயல்பட்டு, நிலத்திலிருந்து சத்துக்களை உறிஞ்ச அவற்றிற்கு துணைபுரிகின்றன. அதோடு, சில ஒட்டுண்ணிகளாக இருக்கின்றன.

பூஞ்சணங்கள் காற்றில் அடித்து செல்லப்படும் நுண்துகள் (microscopic spore) வடிவில் அவற்றின் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன. அந்த நுண்துகள் தகுந்த ஓர் உணவுப் பொருளின்மீது வந்து அமர்ந்தால், அதோடு தகுந்த வெப்பநிலையும் ஈரப்பதமும் இருந்தால், அது வளர ஆரம்பிக்கும்; அது ஹைஃப்பா (hypha) என்ற நூலிழை போன்ற செல்களை உருவாக்கும். அந்த ஹைஃப்பா ஒரு தொகுதியாக உருவாகும்போது, மைசிலியம் என அழைக்கப்படும் பொசுபொசுவென்ற சிக்கலான திரள் ஏற்படுகிறது, அதுவே கண்ணால் காணக்கூடிய பூஞ்சணமாகும். பூஞ்சணம் அழுக்கு போலவும் அல்லது கறை போலவும்கூட தெரியலாம்; பாத்ரூம் டைல்களுக்கு இடையே உள்ள பிளாஸ்டர்மீது உருவாகும்போது அது இப்படித் தெரிகிறது.

இனப்பெருக்கம் செய்வதில் பூஞ்சணம் கில்லாடி. ‘பிரெட்’டில் தோன்றும் ரைஸோபஸ் ஸ்டோலோநிஃபர் (Rhizopus stolonifer) என்ற பூஞ்சணத்தில் காணப்படும் சின்னஞ்சிறு கரும் புள்ளிகளே, அதன் துகள் கூட்டங்களாகும் (sporangium). ஒரேவொரு புள்ளியில் மட்டுமே 50,000-⁠த்திற்கும் அதிகமான துகள்கள் இருக்கின்றன; அவை ஒவ்வொன்றும் சில நாட்களிலேயே கோடானுகோடி புதிய துகள்களை உருவாக்க முடியும்! தகுந்த சூழல் இருந்தால், காட்டிலுள்ள மரக்கட்டையில் வளருவதுபோல், ஒரு புத்தகத்தில், ஷூவில், அல்லது வால்பேப்பரில்கூட பூஞ்சணம் எளிதாக வளரக்கூடும்.

பூஞ்சணங்கள் எப்படி “சாப்பிடுகின்றன”? மனிதர்களும் விலங்குகளும் முதலில் உணவை சாப்பிடுகின்றன(ர்), பிறகு ஜீரணசக்தியின் மூலம் அந்த உணவு உறிஞ்சப்படுகிறது; ஆனால் பூஞ்சணங்கள் அப்படி செய்வதில்லை, இந்த முறையை தலைகீழாக செய்கின்றன. பூஞ்சணங்களால் சாப்பிட முடியாத அளவுக்கு கரிம மூலக்கூறுகள் மிகவும் பெரியவையாக அல்லது சிக்கலானவையாக இருக்கும்போது, ஜீரணிக்கக்கூடிய என்ஸைம்களை அவை மெதுவாக வெளிவிடுகின்றன, இவை அந்த மூலக்கூறுகளை அதிக எளிமையான கூறுகளாக சிதைத்த பின்பு அவற்றை உட்கொள்கின்றன. அதோடு, உணவுக்காக பூஞ்சணங்கள் அங்குமிங்கும் அலைந்து தேட முடியாததால், அவை தங்களுடைய உணவுப் பொருளில்தான் வாழ வேண்டும்.

மைக்கோடாக்ஸின்ஸ் (mycotoxins) என்ற நச்சுப் பொருள்களை பூஞ்சணங்களால் உருவாக்க முடியும். அவை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீய விளைவுகளை உண்டாக்கலாம். சுவாசிக்கும்போதோ விழுங்கும்போதோ, அல்லது தோலின் வாயிலாகவோ அவை நம்மைத் தொற்றலாம். ஆனால், பூஞ்சணங்கள் எப்போதுமே தீங்கு விளைவிப்பவை அல்ல, ஏனென்றால் அவற்றில் மிகவும் பயனுள்ள பண்புகளும் இருக்கின்றன.

பூஞ்சணத்தின் நல்ல அம்சங்கள்

நுண்ணுயிரிகளை அழிக்கும் சக்தி பச்சை பூஞ்சணத்திற்கு இருப்பதை 1928-⁠ல் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் என்ற அறிவியலாளர் தற்செயலாகக் கண்டறிந்தார். பிறகு அதை பெனிஸிலியம் நெட்டேடம் (Penicillium notatum) என அடையாளம் கண்டார்; இந்தப் பூஞ்சணம் பாக்டீரியாவுக்கு ஆபத்தானதாகவும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தற்றதாகவும் இருக்கிறது. இது பெனிஸிலியத்தை​—⁠“நவீன மருத்துவத்தில் வேறெதையும்விட அதிக உயிர்களைக் காப்பாற்றும் மிகப் பெரிய உயிர்காப்பாளன்” என அழைக்கப்படும் ஒன்றை⁠—⁠கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தது. இதற்காக 1945-⁠ல், ஃபிளெமிங்கும் அவருடைய சக ஆராய்ச்சியாளர்களான ஹாவர்டு ஃப்ளோரி, எர்ன்ஸ்ட் சேன் என்பவர்களும் மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்றார்கள். அது முதல், பூஞ்சணம் அநேக மருந்துப் பொருள்களை​—⁠இரத்த உறைவையும் கடும் ஒற்றைத் தலைவலிகளையும் பார்கின்சன் நோயையும் குணப்படுத்துவதற்கு உதவும் மருந்துப் பொருள்களை​—⁠அளித்திருக்கிறது.

உணவுப் பொருள்களுக்கு சுவையூட்டுவதற்கும் பூஞ்சணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ‘சீஸை’ எடுத்துக்கொள்ளுங்கள். பிரீ (Brie), கமம்பெர்ட், (Camembert) புளூ சீஸ் (Danish blue), கார்கன்சோலா (Gorgonzola) ரோக்ஃபர்ட் (Roquefort), ஸ்டில்டன் (Stilton) ஆகிய ஒவ்வொரு வகை சீஸும் தனித்தன்மை வாய்ந்த சுவையுடன் இருப்பதற்கு பெனிசிலியம் பூஞ்சணத்தின் ஒரு வகையே காரணம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதேபோல், சலாமி, சோயா சாஸ், பியர் ஆகியவையும் சில வகை பூஞ்சணத்தைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன.

ஒயினும் இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது. தகுந்த சமயத்தில், ஒவ்வொரு கொத்திலும் தகுந்த அளவில் பூஞ்சணம் பூத்த, தகுந்த திராட்சைப்பழங்களை அறுவடை செய்யும்போது, அவற்றை அருமையான ஒயின்கள் தயாரிக்க பயன்படுத்தலாம். போட்ரிடிஸ் சினெரியா (Botrytis cinerea) என்ற பூஞ்சணம், அதாவது சில வகை திராட்சைகளில் வளரும் வெள்ளை பூஞ்சணம் (“noble rot”) அந்தத் திராட்சைகளில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்து சுவையைக் கூட்டுகிறது. ஒயின் தயாரிக்கும் அறையில், கடைசிகட்ட செய்முறையின்போது, கிளாடோஸ்போரியம் செல்லாரே (Cladosporium cellare) என்ற பூஞ்சணம் இன்னும் அதற்கு சுவை சேர்க்கிறது. ‘வெள்ளை பூஞ்சணம் சிறந்த ஒயினை தருகிறது’ என்பதே ஹங்கேரி நாட்டில் திராட்சை வளர்ப்போர் கூறும் முதுமொழி.

பூஞ்சணம் பகைவனாக மாறுகையில்

சிலவகை பூஞ்சணங்களின் தீய பண்புகளும் வெகு காலமாகவே இருந்து வந்திருக்கின்றன. பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில், தங்களுடைய விரோதிகளின் கிணறுகளை நச்சுப்படுத்துவதற்கு கிளாவிசெப்ஸ் பர்புரியா (Claviceps purpurea) என்ற பூஞ்சணத்தை அசீரியர்கள் பயன்படுத்தினார்கள்; அது ஒரு பண்டைக்கால உயிரியல் போர். சிலசமயங்களில் ஒருவகை புல்லில் உருவாகும் இந்தப் பூஞ்சணம், மத்திப சகாப்தத்தில், பலருக்கு காக்காய் வலிப்பையும், கடுமையான உடல் எரிச்சலையும், தசையழுகலையும், மனப்பிராந்தியையும் உண்டாக்கியது. இப்போது எர்காடிஸம் (ergotism) என அழைக்கப்படும் இந்த நோய்க்கு செ. அந்தோனியின் அக்கினி என்ற பெயர் இருந்தது. அற்புத சுகம் கிடைக்கும் என்று நம்பி அநேக பிணியாளிகள் பிரான்சிலுள்ள செ. அந்தோனி கோயிலுக்கு யாத்திரை சென்றார்கள், இதுவே இப்பெயர் தோன்றுவதற்கு காரணமாகும்.

புற்றுநோய் உருவாக்கக்கூடிய பயங்கரமான ஒரு பொருள் அஃப்லாடாக்ஸின் (aflatoxin) என அறியப்பட்டுள்ளது. இது பூஞ்சணங்களால் உருவாக்கப்படும் ஒரு நச்சுப்பொருளாகும். ஆசிய நாடு ஒன்றில், ஒவ்வொரு ஆண்டும் 20,000 பேர் இந்த நச்சுப்பொருளால் சாகிறார்கள் என கூறப்படுகிறது. சாவுக்கேதுவான இந்தப் பொருள் நவீன உயிரியல் ஆயுதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

என்றாலும், அன்றாட வாழ்க்கையில் சாதாரண பூஞ்சணங்கள் தாக்கியதற்குரிய அறிகுறிகள் ஏற்படுகையில், அவை ஆரோக்கியத்திற்கு ஒரு பயங்கர அச்சுறுத்தலாக இல்லாமல் ஒரு தொந்தரவாகவே இருக்கின்றன. “பெரும்பாலான பூஞ்சணங்கள்​—⁠நீங்கள் அவற்றை முகர்ந்தாலும்கூட​—⁠தீங்கிழைக்காது” என ஓர் ஆதாரம் (UC Berkeley Wellness Letter) கூறுகிறது. ஆஸ்துமா போன்ற நுரையீரல் கோளாறு உடையவர்கள்; அலர்ஜிகள், இரசாயன அலர்ஜிகள், அல்லது நோய் எதிர்ப்புசக்தி இல்லாதவர்கள்; பெருமளவில் பூஞ்சணங்களை எதிர்ப்படுகிற விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரே பொதுவாக அதன் தீய பண்புகளினால் பாதிக்கப்படுகிறார்கள். சிசுக்களும் வயதானவர்களும்கூட பூஞ்சணத்தால் எளிதில் பாதிக்கப்படலாம்.

பூஞ்சணங்கள் பின்வரும் அறிகுறிகளை உண்டாக்கலாம் என ஐக்கிய மாகாணங்களிலுள்ள கலிபோர்னியா சுகாதார சேவை இலாக்கா கூறுகிறது: ‘மூச்சுவாங்குதல் (wheezing), சுவாசக் கோளாறுகள், மூச்சிரைப்பு போன்ற சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்; மூக்கடைப்பு மற்றும் சளி கட்டுதல்; கண் அரிப்பு (எரிச்சல், நீர் வடிதல், அல்லது கண் சிவத்தல்); வறட்டு இருமல்; மூக்கு அல்லது தொண்டை அரிப்பு; தோல் அரிப்பு அல்லது சிவந்த தடிப்புகள்.’

பூஞ்சணமும் கட்டடங்களும்

சில தேசங்களில், பூஞ்சணத்தை நீக்குவதற்காக பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதை அல்லது மக்கள் தங்களுடைய வீடுகளை அல்லது அலுவலகங்களைக் காலி செய்வதைப் பற்றிய செய்திகள் அடிக்கடி உங்கள் காதில் விழலாம். 2002-⁠ம் ஆண்டின் ஆரம்பத்தில், ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோமில் புதிதாக கட்டப்பட்ட மியூஸியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்ஸை பூஞ்சணத்தின் காரணமாக மூட வேண்டியதாயிற்று. பூஞ்சணத்தை நீக்கி சரிப்படுத்த கிட்டத்தட்ட 22.5 கோடி ரூபாய் செலவானது! சமீப காலத்தில் ஏன் இந்தப் பிரச்சினை மிகப் பரவலாகக் காணப்படுகிறது?

இதற்குரிய பதில் இரண்டு முக்கிய காரணிகளில் அடங்கியுள்ளது: ஒன்று, கட்டடத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள், மற்றொன்று கட்டட அமைப்புகள். சமீப காலங்களில் எளிதில் பூஞ்சணத்தால் தாக்கப்படுகிற பொருள்களால் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அதற்கு ஓர் உதாரணம், ஜிப்ஸம் போர்டு என்ற சுவர் பலகை. கெட்டியாக்கப்பட்ட பிளாஸ்டர் நடுவிலும், ஏராளமான பேப்பர் அடுக்குகள் அதன் இரு பக்கங்களிலும் வைக்கப்பட்டு பெரும்பாலும் இது தயாரிக்கப்படுகிறது. நடுவில் இருக்கும் பிளாஸ்டர் ஈரப்பதத்துடனேயே இருக்கிறது. நீண்ட காலத்திற்கு இவை ஈரமாகவே இருப்பதால் பூஞ்சண முளைகள் வளரத் தொடங்குகின்றன; வளர வளர உலர்ந்த சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் ‘வால் பேப்பரை’ தின்றுவிடுகின்றன.

இன்றைக்கு கட்டட அமைப்புகளும் மாறிவிட்டன. 1970-களுக்கு முன்பு, ஐக்கிய மாகாணங்களிலும் பல்வேறு நாடுகளிலும், அதிக காற்றோட்டம் இருக்கும் விதத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டன; அவற்றில் அவ்வளவாக இன்ஸுலேஷன் இல்லை. இன்றோ சிக்கனம் என்ற பெயரில், வெப்பத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் காற்று புகாத கட்டடங்களே பெரும்பாலும் கட்டப்படுகின்றன. ஆகவே இந்தக் கட்டடங்களுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகையில், அது அங்கேயே நீண்ட காலத்திற்குத் தங்கி பூஞ்சணத்தைக் கொழிக்கச் செய்துவிடுகிறது. இந்தப் பிரச்சினைக்குப் பரிகாரம் உண்டா?

பூஞ்சணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, அல்லது குறைப்பதற்குச் செய்ய வேண்டிய மிகச் சிறந்த வழி உட்புறத்திலுள்ள எல்லாவற்றையுமே சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும், குறைவான ஈரப்பதத்துடனும் வைத்துக்கொள்வதே. எங்காவது ஈரம் ஏற்பட்டால், உடனடியாக அந்த இடத்தைத் துடைத்துவிடுங்கள், மீண்டும் அங்கே ஈரம் தங்காதவாறு தேவையான மாற்றங்களை அல்லது ரிப்பேர்களைச் செய்யுங்கள். உதாரணமாக, கூரையையும் ஜலதாரைகளையும் சுத்தமாகவும் நல்ல நிலையிலும் வைத்திருங்கள். தரை சரிவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள், அப்பொழுதுதான் அஸ்திவாரத்தைச் சுற்றிலும் தண்ணீர் நிற்காது. ஏர்-கன்டிஷனிங் இருந்தால், ‘டிரிப் பேன்’களை ஈரமில்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், வடிகுழாய்களில் எந்த தடங்கலுமின்றி தண்ணீர் செல்லும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

“ஈரத்தைக் கட்டுப்படுத்துவதே பூஞ்சணத்தைக் கட்டுப்படுத்துவதற்குச் சிறந்த வழி” என்று ஒரு புத்தகம் கூறுகிறது. எளிய முறைகளைக் கடைப்பிடிப்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பூஞ்சணத்தின் தீய அம்சங்களிலிருந்து பாதுகாக்கும். சில விதங்களில், பூஞ்சணம் நெருப்பைப் போல் இருக்கிறது. அது தீங்கையும் இழைக்கும், சிறந்த பலன்களையும் அளிக்கும். ஆனால், அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம், கட்டுப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அது அதிகம் சார்ந்திருக்கிறது. அதேசமயத்தில், பூஞ்சணத்தைப் பற்றி நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆம், கடவுளுடைய வியத்தகு படைப்புகளைப் பற்றிய அறிவு நம்முடைய நன்மைக்கே.

[பக்கம் 1415-ன் பெட்டி/படம்]

பூஞ்சணத்தைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறதா?

‘ஒரு வீட்டிலே [அதாவது, அந்தக் கட்டடத்திலே] குஷ்டதோஷம்’ இருப்பதைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. (லேவியராகமம் 14:34-48) “வீட்டை அரிக்கிற குஷ்டம்” என்றும்கூட அழைக்கப்படுகிற அது, பூஞ்சக்காளானின் அல்லது பூஞ்சானின் ஒரு வகையாகும், ஆனால் அதை உறுதியாகக் கூற முடியாது. அது என்னவாக இருந்தாலும், அரிக்கப்பட்ட கற்களை நீக்க வேண்டுமென்றும், வீட்டின் உட்பகுதிச் சுவர் முழுவதையும் சுரண்டியெடுக்க வேண்டுமென்றும், சந்தேகத்திற்குரிய எல்லாப் பொருள்களையும் நகருக்குப் புறம்பே “அசுத்தமான ஒரு இடத்திலே” அப்புறப்படுத்த வேண்டுமென்றும் கடவுளுடைய சட்டம் வீட்டுச் சொந்தக்காரர்களுக்குக் கட்டளையிட்டது. ஒருவேளை அந்தத் தோஷம் மீண்டும் ஏற்பட்டால், முழு வீடும் தீட்டானது என்று அறிவிக்கப்பட்டு, இடிக்கப்பட வேண்டும், பிறகு அப்புறப்படுத்தப்பட வேண்டும். யெகோவா கொடுத்த விவரமான கட்டளைகள் தமது ஜனங்கள் மீதும், அவர்களுடைய ஆரோக்கியத்தின் மீதும் அவருக்கிருந்த ஆழ்ந்த அன்பையே வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

[பக்கம் 13-ன் படம்]

பூஞ்சணத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் அநேகருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கின்றன

[பக்கம் 15-ன் படம்]

ஜிப்ஸம் போர்டு, வினைல் ஆகியவை ஈரத்தை தக்கவைத்துக்கொள்ளும், இது பூஞ்சணம் வளர ஏதுவாகும்