Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மிகாயெல் அகரிகாலா “புதிய சகாப்தத்தின் தந்தை”

மிகாயெல் அகரிகாலா “புதிய சகாப்தத்தின் தந்தை”

மிகாயெல் அகரிகாலா “புதிய சகாப்தத்தின் தந்தை”

பின்லாந்திலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“பின்லாந்தின் கலாச்சாரத்திலும், கருத்துகளிலும், மதிப்பீடுகளிலும் இந்தளவு ஆழமான, முழுமையான செல்வாக்கைச் செலுத்தியிருப்பது பைபிளைத் தவிர வேறெந்தப் புத்தகமும் இல்லை.” ​—⁠“பிப்லியா 350​—⁠ஃபின்னிஷ் பைபிளும் கலாச்சாரமும்.”

உங்களுடைய தாய்மொழியிலேயே பைபிள் கிடைக்கிறதா? கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால், முழுமையாகவோ பகுதியாகவோ 2,000-⁠க்கும் அதிகமான மொழிகளில் பைபிள் இன்று கிடைக்கிறது. இது ஏதோ தற்செயலாக நடந்த ஒன்றல்ல. எண்ணற்ற ஆண்களும் பெண்களும், பொதுமக்களுடைய மொழியில் பைபிளை மொழிபெயர்ப்பதற்காக அயராது உழைத்திருக்கிறார்கள், அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த தடைகளையும் தகர்த்தெறிந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவர்களில் மிகாயெல் அகரிகாலாவும் ஒருவர்.

ஃபின்னிஷ் மொழியில் பைபிளை மொழிபெயர்த்த அறிஞரே இந்த அகரிகாலா. இவருடைய இலக்கிய படைப்புகள் இன்றைய ஃபின்னிஷ் கலாச்சாரம் உருவாக உதவிபுரிந்தன. அதனால், புதிய சகாப்தத்தின் தந்தை என இவர் அழைக்கப்படுவதில் துளியும் ஆச்சரியமில்லை!

அகரிகாலா, சுமார் 1510-⁠ம் வருடம் தென் பின்லாந்திலுள்ள டார்ஸ்பி என்ற கிராமத்தில் பிறந்தார். அவருடைய அப்பா ஒரு விவசாயி. லத்தீன் மொழியில் “விவசாயி” என்பதற்கு அகரிகாலா என்பார்கள். அவருடைய குடும்பப் பெயர் அகரிகாலா என்று வைக்கப்பட்டதற்கு இதுவே காரணம். ஸ்வீடிஷ், ஃபின்னிஷ் ஆகிய மொழிகள் பேசப்பட்ட பகுதியில் வளர்ந்துவந்த இவர் இவ்விரண்டு மொழிகளிலுமே பேசியதாகத் தெரிகிறது. விபார்க் நகரிலிருந்த லத்தீன் பள்ளியில் படித்துவந்தபோது லத்தீனையும் கற்றுக்கொண்டார். பிறகு, பின்லாந்தின் நிர்வாக மையமாக விளங்கிய டுர்கு நகருக்குச் சென்று அங்கிருந்த கத்தோலிக்க பிஷப்பான மார்டி ஸ்கைட்டேவின் செயலாளராகப் பணியாற்றினார்.

அவருடைய காலத்தில் மதமும் அரசியலும்

அகரிகாலாவுடைய வாழ்க்கையின் இச்சமயத்தின்போது ஸ்கான்டிநேவியாவில் மிகுந்த குழப்பமும் கலவரமும் நடந்துகொண்டிருந்தது. கல்மர் யூனியனின் கீழிருந்த ஸ்கான்டிநேவிய நாடுகளில் ஒன்றான சுவீடன் அதிலிருந்து பிரிந்துவருவதற்கு கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தது. 1523-⁠ல் முதலாம் குஸ்டவ், சுவீடனின் அரசராக முடிசூட்டப்பட்டார். இது பின்லாந்தை மிகவும் பாதித்தது, ஏனென்றால் பின்லாந்து அப்போது சுவீடனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.

இந்தப் புதிய அரசர் தன் ஆட்சியை வலுப்படுத்துவதில் குறியாக இருந்தார். தன் லட்சியங்களை அடைய சமய சீர்த்திருத்த இயக்கத்தைத் தொடங்கிவைத்தார். அந்த இயக்கம் வட ஐரோப்பா முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. தன்னுடைய ராஜ்யத்தில் முக்கிய மதமாகத் திகழ்ந்த கத்தோலிக்க மதத்தை லூத்தரன் மதமாக மாற்றி, வாட்டிகன் அதிகாரிகளுடன் இருந்த உறவை அறுத்துக்கொண்டார்; கத்தோலிக்க பிஷப்புகளின் ஆட்சி அதிகாரத்திற்குக் குழிபறித்தார், அதோடு கத்தோலிக்க சர்ச்சின் செல்வங்களை தன்வசப்படுத்தினார். எனவே, இந்நாள்வரையாக சுவீடனிலும் சரி, பின்லாந்திலும் சரி பெரும்பான்மையோர் லூத்தரன் மதத்தினராகவே இருக்கிறார்கள்.

சர்ச்சில் லத்தீன் மொழிக்குப் பதிலாக, பொதுமக்களுடைய மொழிகளில் பிரசங்கம் செய்ய வேண்டும் என்பதே புராட்டஸ்டன்ட் மதத்தவரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. எனவே, 1526-⁠ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம், அதாவது “புதிய ஏற்பாடு” ஸ்வீடிஷ் மொழியில் வெளியிடப்பட்டது. என்றாலும், பின்லாந்தில், புராட்டஸ்டன்ட் மதத்திற்கு அந்தளவு செல்வாக்கு இருக்கவில்லை. அச்சமயத்தில் பைபிளை ஃபின்னிஷ் மொழியில் மொழிபெயர்ப்பதற்கு யாருமே ஆர்வம் காட்டவில்லை. காரணம்?

“எத்தனை கடினமான, எத்தனை சிக்கலான” வேலை

ஒரு முக்கிய காரணம், அதுவரை ஃபின்னிஷ் மொழியில் ஒரு புத்தகம்கூட அச்சிடப்படவில்லை என்பதே. 1500-⁠களின் மத்திபத்திற்கு முன்பு ஒருசில கத்தோலிக்க ஜெபங்கள் மாத்திரமே அம்மொழியில் எழுதப்பட்டிருந்தன. எனவே, பரிசுத்த வேதாகமத்தை ஃபின்னிஷ் மொழியில் மொழிபெயர்ப்பதற்கு ஏற்கெனவே இருக்கிற அநேக வார்த்தைகளுக்கு எழுத்து வடிவம் தர வேண்டும்; அதோடு, புதுப்புது வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்; மொழிசார்ந்த பாடப் புத்தகங்கள் எதுவுமே இல்லாமல் இதையெல்லாம் செய்ய வேண்டும். இத்தனை சிக்கல்கள் இருந்தும்கூட பைபிளை மொழிபெயர்க்கும் வேலையில் அகரிகாலா இறங்கினார்!

ஸ்கைட்டே என்ற கத்தோலிக்க பின்லாந்து பிஷப், இறையியலிலும் மொழியியலிலும் அகரிகாலா இன்னும் நன்கு தேர்ச்சி பெற வேண்டுமென்பதற்காக ஜெர்மனியிலுள்ள விட்டன்பர்க் நகரத்திற்கு 1536-⁠ல் அவரை அனுப்பிவைத்தார். 20 வருடங்களுக்கு முன் இந்த நகரிலிருந்த ஒரு சர்ச்சின் கதவில்தான் லூத்தர் தன்னுடைய பிரபலமான 95 குறிப்புரைகளை ஆணியடித்து வைத்தார் எனச் சில அறிக்கைகள் சொல்கின்றன.

விட்டன்பர்க்கில் இருந்தபோது, அகரிகாலா படிப்பதோடு மட்டுமே நிறுத்திக்கொள்ளவில்லை. ஃபின்னிஷ் மொழியில் பைபிளை மொழிபெயர்க்கும் மாபெரும் வேலையையும் தொடங்கினார். 1537-⁠ல் சுவீடனின் அரசருக்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “என்னுடைய படிப்பில் கடவுள் எனக்கு உதவும்வரை, நான் ஏற்கெனவே மொழிபெயர்க்கத் தொடங்கிய புதிய ஏற்பாட்டை ஃபின்னிஷ் மொழியில் மொழிபெயர்ப்பதற்குத் தொடர்ந்து முயற்சிசெய்துகொண்டே இருப்பேன்.” அவர் பின்லாந்திற்குத் திரும்பிய பிறகும் மொழிபெயர்ப்பு வேலையைத் தொடர்ந்தார், அதேசமயத்தில் பள்ளி முதல்வராகவும் பணியாற்றினார்.

பைபிளின் பூர்வ மொழிபெயர்ப்பாளர்களைப் போலவே அகரிகாலாவுக்கும் பைபிளை மொழிபெயர்ப்பது சிரமமாக இருந்தது. லூத்தரும்கூட இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “எபிரெய எழுத்தாளர்களை ஜெர்மன் மொழியில் பேச வைப்பது எத்தனை கடினமான, எத்தனை சிக்கலான வேலை”! உண்மைதான், ஒத்துப்பார்க்க அகரிகாலாவிற்கு, மற்ற மொழிபெயர்ப்புகள் கைவசம் இருந்தன, ஆனால் அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது ஃபின்னிஷ் மொழிதான். ஏனென்றால், அதற்கு முன் அது எழுத்தில் வடிக்கப்பட்டதே இல்லை.

எனவே, அகரிகாலா அவ்வாறு மொழிபெயர்த்தது, ஒரு ‘பிளான்’ இல்லாமல், அங்குமிங்குமாகக் கிடக்கிற கொஞ்சநஞ்ச பொருள்களை மட்டுமே வைத்து வீடு கட்டுவதுபோல இருந்தது. அதை அவர் எப்படிச் செய்தார்? ஃபின்னிஷ் மொழியின் பல்வேறு பேச்சுவழக்குகளிலிருந்து வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அவை உச்சரிக்கப்பட்ட விதமாகவே அவற்றிற்கு எழுத்து வடிவம் கொடுத்தார். ஃபின்னிஷ் மொழியில் “அரசாங்கம்,” “மாய்மாலக்காரர்,” “கைப்பிரதி,” “ராணுவப் படை,” “மாதிரி,” “வேதபாரகர்” போன்ற பதங்களை முதன்முதலில் கண்டுபிடித்தது அகரிகாலாதான். கூட்டுச் சொற்களையும் அவர் உருவாக்கினார், ஒரு சொல்லிலிருந்து மற்றொரு சொல்லை உருவாக்கினார், மேலும் வேற்று மொழிச் சொற்களை, முக்கியமாக ஸ்வீடிஷ் மொழி சொற்களைக் கடன் வாங்கினார். எங்கெலி (ஏன்ஜெல் [தேவதூதர்]), ஹிஸ்டார்யா (ஹிஸ்டரி [வரலாறு]), லாம்ப்பு (லாம்ப் [விளக்கு]), மார்டியெரி (மார்டர் [புனிதத்தியாகி]), பால்மு (பாம் ட்ரீ [பனை மரம்]) போன்றவை அவற்றில் சில.

சுதேசிக்குக் கடவுளுடைய வார்த்தை

கடைசியில் 1548-⁠ம் வருடம், அகரிகாலாவின் முதல் புத்தகம் வெளியிடப்பட்டது. அதன் பெயர் ஸெ யூஸி டெஸ்ட்மென்டி (புதிய ஏற்பாடு). இந்தப் புத்தகம் ஐந்து வருடங்களுக்கு முன்னரே மொழிபெயர்க்கப்பட்டதாகவும், பண நெருக்கடியின் காரணமாக புத்தகத்தை வெளியிட இத்தனை காலம் பிடித்ததாகவும் சிலர் சொல்கிறார்கள். அச்சடிப்பதற்குச் செலவான பணத்தில் பெரும் தொகையை அகரிகாலாவே கொடுத்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

மூன்று வருடங்களுக்குப் பிறகு டாவிடின் ஸால்டாரி (சங்கீதம்) வெளியானது. இதை, தன்னுடன் வேலை செய்த ஆட்களின் உதவியோடு அகரிகாலா மொழிபெயர்த்திருக்கலாம். அதோடு, மோசே எழுதிய புத்தகங்களையும் எபிரெய வேதாகமத்தின் சில தீர்க்கதரிசன புத்தகங்களையும் மொழிபெயர்க்கிற வேலையைக்கூட அவர் ஆரம்பித்து வைத்தார்.

தன்னுடைய வரம்புகளைத் தாழ்மையுடன் ஒத்துக்கொண்ட அகரிகாலா நேர்மையாக இவ்வாறு எழுதினார்: “எந்தவொரு கிறிஸ்தவரும் அல்லது கடவுள் பக்தியுள்ள எந்தவொரு மனிதரும் அல்லது இப்பரிசுத்த புத்தகத்தின் எந்தவொரு வாசகரும் அனுபவமற்ற இந்த மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்பில் தவறைக் கண்டாலோ, விசித்திரமான ஏதாவதைக் கண்டாலோ, அல்லது புதிய கோணத்தைக் கண்டாலோ தயவுசெய்து ஏமாற்றம் அடைந்துவிடாதீர்கள்.” அகரிகாலாவின் மொழிபெயர்ப்பில் குறைபாடுகள் இருந்தாலும், பொதுமக்கள் பைபிளை பெறுவதற்காக அவர் எடுத்த தீவிரமான முயற்சியும் வைராக்கியமும் மிகவும் பாராட்டத்தக்கது.

அகரிகாலா விட்டுச்சென்ற ஆஸ்தி

1557-⁠ன் தொடக்கத்தில். லுத்தரனாக மாறியிருந்த அகரிகாலா, டுர்கு நகரின் பிஷப்பாக ஆகிவிட்டிருந்தார். அப்போது, சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவிய எல்லை சச்சரவுகளைத் தீர்ப்பதற்காக மாஸ்கோவிற்குச் செல்ல அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொடுத்த வேலையை வெற்றிகரமாகவும் முடித்தார். ஆனால், வீடு திரும்பியபோது, பல சிரமங்களை எதிர்ப்பட வேண்டியிருந்ததால், எதிர்பாரா விதமாக அவர் நோயுற்றார். வரும் வழியிலேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. அப்போது அவருக்குச் சுமார் 47 வயது.

அகரிகாலா, தான் வாழ்ந்த அந்தச் சொற்ப காலத்தில், சுமார் 10 பிரசுரங்களை மட்டுமே வெளியிட்டிருந்தார், அவற்றின் மொத்த பக்கங்கள் சுமார் 2,400 ஆகும். இருந்தாலும், “புதிய சகாப்தத்தின் தந்தை”யான இந்த மனிதர்தான் ஃபின்னிஷ் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு ஏணியாகத் திகழ்ந்தார் என அநேகர் நினைக்கிறார்கள். அதுமுதல், கலை மற்றும் விஞ்ஞான துறைகளில், ஃபின்னிஷ் மொழியிலும் அதன் மக்களிலும் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

மிக முக்கியமாக, மிகாயெல் அகரிகாலா இன்னொரு விதமான சகாப்தத்தையும் ஆரம்பித்து வைத்தார். அதாவது, ஃபின்னிஷ் மொழி பேசும் மக்களுக்குக் கடவுளுடைய வார்த்தையின் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்தார். அவருடைய மரணத்திற்குப் பிறகு அவர் நினைவாக லத்தீன் மொழியில் இயற்றப்பட்ட ஒரு கவிதையில் இது சுருங்கச் சொல்லப்பட்டிருக்கிறது: “அவர் விட்டுச் சென்றது சாதாரண ஆஸ்தி அல்ல. தன்னுடைய கைவண்ணத்தை, அதாவது ஃபின்னிஷ் மொழியில் தான் மொழிபெயர்த்த பரிசுத்த புத்தகங்களை, விட்டுச் சென்றிருக்கிறார். பெரிதும் பாராட்டப்பட வேண்டிய வேலை அது.”

[பக்கம் 23-ன் பெட்டி/படம்]

ஃபின்னிஷ் பைபிள்

1642-⁠ல் ஃபின்னிஷ் மொழியில் முதன்முறையாக முழுமையான பைபிள் வெளியிடப்பட்டது. மிகாயெல் அகரிகாலாவின் மொழிபெயர்ப்புகளின் அடிப்படையிலேயே அது பெரும்பாலும் அமைந்திருந்தது. காலப்போக்கில் அது ஃபின்னிஷ் லூத்தரன் சர்ச்சின் அதிகாரப்பூர்வ பைபிளாக ஆனது. பல ஆண்டுகளாக அந்தப் புத்தகத்தில் அநேக சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் மொத்தமாகப் பார்த்தால் 1938 வரை அது அப்படியே மாறாமல் இருந்தது. அதன் கடைசி பதிப்பு 1992-⁠ல் வெளியானது.

இதைத் தவிர ஃபின்னிஷ் மொழியில் முழுமையாக இருக்கிற பைபிள், யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு ஆகும். 1995-⁠ல் அது வெளியிடப்பட்டது. 20 வருடங்களுக்கு முன்பாகவே, அதாவது 1975-⁠ல், யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருந்தார்கள். இந்தப் புதிய உலக மொழிபெயர்ப்பு, மூலப் படிவத்தை அப்படியே மொழிபெயர்க்க முயற்சி செய்திருக்கிறது. இன்றுவரை சுமார் 13,00,00,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.

[பக்கம் 22-ன் படம்]

மிகாயெல் அகரிகாலாவும் முதல் ஃபின்னிஷ் பைபிளும். 1910-⁠ம் வருடத்தைச் சேர்ந்த ஒரு போஸ்ட் கார்டு

[படத்திற்கான நன்றி]

National Board of Antiquities/Ritva Bäckman

[பக்கம் 23-ன் படம்]

அகரிகாலாவின் “புதிய ஏற்பாடு”

[பக்கம் 21-ன் படத்திற்கான நன்றி]

National Board of Antiquities