Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அல்ஹம்பறா கிரனடாவின் இஸ்லாமிய மணிக்கல்

அல்ஹம்பறா கிரனடாவின் இஸ்லாமிய மணிக்கல்

அல்ஹம்பறா கிரனடாவின் இஸ்லாமிய மணிக்கல்

ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“இந்தக் கிழக்கத்திய கட்டடங்களோடு பின்னிப்பிணைந்த நிஜக் கதைகளும் கற்பனைக் கதைகளும் எத்தனை எத்தனை! உண்மைப் பாரம்பரியங்களும் கற்பனைப் பாரம்பரியங்களும் எத்தனை எத்தனை! அரபிக் மொழியிலோ ஸ்பானிஷ் மொழியிலோ இயற்றப்பட்ட காதல், போர், வீரம் கமழும் பாடல்களும் கவிதைகளும் எத்தனை எத்தனை!” ​—⁠வாஷிங்டன் இர்விங், 19-வது நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளர்.

இந்த வார்த்தைகளை வடிக்கத் தூண்டியதே புகழ்பெற்ற அல்ஹம்பறா அரண்மனைதான். ஒப்பற்ற இந்த அரண்மனை ஸ்பெயின் நகரமான கிரனடாவை அலங்கரிக்கிறது. அரேபிய அல்லது பெர்சிய நாட்டின் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த அரண்மனை தென் ஐரோப்பாவில் வீற்றிருக்கிறது. இக்கோட்டையை இத்தனை அழகு மிளிரக் கட்டிய பெருமை இஸ்லாமிய மூர் இனத்தவரையே சாரும். இவர்களுடைய ஆதிக்கம் பல நூற்றாண்டுகளுக்கு ஸ்பெயினில் கொடிகட்டிப் பறந்தது. a

11-வது நூற்றாண்டில், அரேபிய ஆட்சியாளரான ஸேவி பென் ஸிரி என்பவர் கிரனடா என்ற சுயேச்சை ராஜ்யத்தை உருவாக்கினார். அது சுமார் 500 வருடங்களுக்கு நிலைத்திருந்தது. அப்போது அது கலையிலும் கலாச்சாரத்திலும் செழித்தோங்கியது. 1492-⁠ல் கத்தோலிக்க ஆட்சியாளர்களான ஃபர்டினான்டும் இஸபெல்லாவும், ஸ்பெயினில் இஸ்லாமியர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தபோது அது சீரழிந்துபோனது.

1236-⁠ல், கார்டபாவை கிறிஸ்தவமண்டல படைகள் கைப்பற்றின. பிறகு மூர் இனத்தவர் கிரனடாவை ஸ்பெயினின் தலைநகராக ஆக்கியபோது அது புகழின் உச்சத்தை எட்டியது. அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் அங்கு ஓர் அரண்மனையை அமைத்தார்கள், அதன் பேர்தான் அல்ஹம்பறா. அதுபோன்ற ஓர் அரண்மனையை ஐரோப்பிய சரித்திரம் ஒருபோதும் கண்டதில்லை. “உலகிலுள்ள கட்டடங்களிலேயே மிக அற்புதமானது” என்று ஓர் எழுத்தாளர் உற்சாகத்தோடு அதை விவரித்தார்.

அல்ஹம்பறாவின் சுற்றுப்புறமும் அதைப் போலவே கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அதன் பின்னணியில் 3,400 மீட்டர் உயரமுள்ள மிகப் பெரிய சியர்ரா நாவாடா என்ற பனி மலைச் சிகரங்கள் ஒய்யாரமாக எழுந்து நிற்கின்றன. இந்த அல்ஹம்பறா அரண்மனை வளாகமும்கூட, நகரத்தைவிட 150 மீட்டர் உயரத்தில் இருக்கிற சாபிகா என்ற மரஞ்செறிந்த நீளமான மலையில் வீற்றிருக்கிறது. உயரமான இந்த மலை கிரனடா நகரை பார்த்தவாறு அமைந்திருப்பது, 14-⁠ம் நூற்றாண்டைச் சேர்ந்த இபன் ஸம்ரக் என்ற கவிஞரின் கண்களுக்கு, கணவன் தன் மனைவியைப் பிரியத்துடன் பார்த்துக்கொண்டே இருப்பதுபோல் தெரிகிறதாம்.

நகரத்திற்குள் ஒரு நகரம்

அல்ஹம்பறா என்பதற்கு அரபிக் மொழியில் “சிவப்பு” என்று அர்த்தம். அரண்மனையின் கோட்டைச் சுவரைக் கட்டுவதற்கு மூர்கள் பயன்படுத்திய செங்கற்களின் நிறத்தைக் குறிப்பதற்காக அல்ஹம்பறா என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். இருப்பினும், அரேபிய சரித்திர ஆசிரியர்கள் தரும் விளக்கத்தையே சிலர் ஏற்க விரும்புகிறார்கள், அதாவது “தீவட்டிகளின் வெளிச்சத்தில்” அல்ஹம்பறா கட்டப்பட்டது என்ற விளக்கத்தையே ஏற்க விரும்புகிறார்கள். இரவு நேரத்தில் தீவட்டிகளின் வெளிச்சத்தில் சுவர் சிவப்பாக மினுமினுத்தது. அதனாலேயே இந்தக் கட்டடத்திற்கு அல்ஹம்பறா என்ற பெயர் வந்தது என நம்புகிறார்கள்.

இந்த அல்ஹம்பறாவை வெறுமனே ஓர் அரண்மனை என்று சொல்லிவிட முடியாது. அதை கிரனடா நகரத்திற்குள் அமைந்திருக்கிற ஒரு நகரம் என்றே சொல்ல வேண்டும். அதனுடைய மாபெரும் கோட்டைச் சுவருக்குள்ளே தோட்டங்களும், அரங்குகளும், அரண்மனைக் கட்டடங்களும், ஆல்காஸாபாவும் (அதாவது, கோட்டையும்), அதோடு ஒரு சிறிய மெதினாவும், அதாவது பட்டணமும் இருக்கின்றன. மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த ஐரோப்பிய கட்டடங்கள் சமச்சீரான வடிவத்துடனும் உறுதியுடனும் காணப்படுகின்றன; அவற்றின் மத்தியில் மூர்கள் அல்ஹம்பறாவை வடிவமைத்த முறையும் பிற்பாடு செய்த மாற்றங்களும் அரேபிய கட்டடக்கலையின் நளினமான, நுட்பமான வேலைப்பாடுகளுக்கு ஒப்பற்ற எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.

மூர்கள் உபயோகித்த ஒரு முறையின் காரணமாகவே அல்ஹம்பறா அவ்வளவு அழகாக காட்சியளிக்கிறது; இதே முறையைத்தான் பூர்வ கிரேக்கர்களும் உபயோகித்தனர். முதலாவதாக, ஒத்திசைவு, சரிசம விகிதளவு, எளிமை ஆகிய கட்டட விதிகளுக்கு ஏற்றபடி கல்லின் இயற்கையான நிறத்தையும் மேற்பரப்பு தன்மையையும் பயன்படுத்தி கட்டடத்தை அவர்கள் உருவாக்கினார்கள். பிறகு கண்கவர் கட்டடத்தை அலங்கரித்தார்கள். ஒரு நிபுணர் இதைக் குறித்து இவ்வாறு சொல்கிறார்: “கட்டடக் கலையின் முதல் நியதி என கட்டடக்கலை நிபுணர்கள் கருதுவதை மூர்கள் எப்போதுமே கடைப்பிடித்தார்கள், அதாவது கட்டி முடித்த பிறகே கட்டடத்தை அலங்கரித்தார்கள், கட்டும்போதே அல்ல.”

அல்ஹம்பறா​—⁠ஒரு கண்ணோட்டம்

அல்ஹம்பறாவின் நுழைவாயிலில் குதிரை இலாட வடிவில் ஒரு பெரிய வளைவு இருக்கிறது. இதற்கு நீதியின் வாசல் என்று பெயர். இந்தப் பெயர், இஸ்லாமியரின் காலத்தில் சிறுசிறு பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க இந்த இடத்தில் கூடிவந்த வழக்கு மன்றத்தை நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. நகர வாசலில் நீதி வழங்கப்படுவது மத்திய கிழக்கு தேசங்களில் பொதுவான ஒரு வழக்கமாக இருந்தது. பைபிளிலும்கூட இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. b

அல்ஹம்பறா போன்ற அரேபிய அரண்மனைகளுக்கே உரிய நுட்பமான அலங்கரிப்பு, குழைகார் (stucco) என்ற சுண்ணாம்புக் கலவையால் செய்யப்பட்டது. கைவினைஞர்கள் இந்தக் கலவையை ‘லேஸ்’ போன்ற அழகிய வடிவங்களாக செய்து அருகருகே அமைத்தார்கள். அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கிற சில வளைவுகள் ஒரே சீரான வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் தொங்குகிற ஊசிப் பாறைகள்போல் காட்சியளிக்கின்றன. அரண்மனையின் இன்னொரு அம்சம் ஸிலிஸ், அதாவது, கண்ணாடி போல் பளபளக்கும் அழகிய ஓடுகள், மிகச் நுணுக்கமான ஜாமெட்ரிக் வடிவத்தில் அமைக்கப்பட்டு கீழ்ச்சுவரில் வரிசையாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. கண்ணைப் பறிக்கும் நிறங்களிலுள்ள இந்த ஓடுகள் மேற்கூரையிலுள்ள குழைகாரையின் மங்கலான நிறத்துடன் முற்றிலும் மாறுபட்டு காட்சியளிக்கின்றன.

அல்ஹம்பறாவின் முற்றங்களிலேயே சிறப்பு வாய்ந்தது சிங்கங்களின் முற்றம்தான். “ஸ்பெயினில், அரேபிய கலைவேலைப்பாட்டிற்கு மிக அரிய ஓர் எடுத்துக்காட்டு” என இது விவரிக்கப்படுகிறது. அந்நகரின் வழிகாட்டி நூல் ஒன்று இவ்வாறு சொல்கிறது: “ஒரு அசல் கலைவேலைப்பாட்டை யாரும் பின்பற்றவும் முடியாது, அதே போல் செய்யவும் முடியாது. . . . கிரனடாவிலுள்ள இந்த முற்றத்தைப் பார்க்கும்போது நாம் அப்படித்தான் நினைப்போம்.” சீராக அமைக்கப்பட்ட சன்னமான தூண்களும் அதன் மீதுள்ள வரிசையான வளைவுகளும் ஒரு ஃபெளன்டனைச் சுற்றி நிற்கின்றன. பளிங்குக்கல்லால் செதுக்கப்பட்ட 12 சிங்கங்கள் அந்த ஃபெளன்டனைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. ஸ்பெயினில், மிக அதிகமாக புகைப்படம் எடுக்கப்படுகிற இடங்களில் இதுவும் ஒன்று.

புத்துணர்ச்சியூட்டும் தோட்டங்கள்

அல்ஹம்பறா அரண்மனை வளாகத்தில் அழகிய தோட்டங்களும், ஃபெளன்டன்களும், குளங்களும் உள்ளன. c “பரதீஸின் ஓர் எடுத்துக்காட்டுதான் அரேபிய தோட்டம்” என மூரிஷ் ஸ்பெயின் என்ற புத்தகத்தில் என்ரிகே ஸார்டோ சொல்லியிருக்கிறார். திரும்பிய பக்கமெல்லாம் இஸ்லாமியரின் செல்வாக்குதான் கண்ணில் தென்படுகிறது. ஸ்பானிய எழுத்தாளரான கார்ஸியா கோமேஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: “இஸ்லாமிய பரதீஸைப் பற்றி குர்ஆனில் விவரமான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் செழிப்பான தோட்டத்திற்குள் . . . மனதுக்கினிய நீரோடைகள் பாய்ந்தோடுகின்றன.” அல்ஹம்பறாவில் தண்ணீருக்குப் பஞ்சமே இல்லை. வறண்ட பாலைவனத்தில் வெந்துகொண்டிருந்த மக்களுக்கு தண்ணீர் ஒரு ஆடம்பரப் பொருளாக இருந்தது. இந்தத் தோட்டத்தை வடிவமைத்த வல்லுநர்கள், தண்ணீர் இருந்தால் காற்று சில்லென்று வீசும் என்பதையும், அதன் சலனம் காதுகளுக்குச் சங்கீதம் இசைக்கும் என்பதையும் உணர்ந்து அதை வடிவமைத்திருக்கிறார்கள். பிரகாசமான ஸ்பானிய வானத்தை கண்ணாடி போல் பிரதிபலிக்கிற செவ்வக வடிவிலான குளங்கள், தோட்டம் மிகவும் விசாலமாகவும் வெளிச்சமாகவும் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

அல்ஹம்பறாவிற்கு அருகிலேயே தோட்டம் சூழ கெனெராலிஃபெ என்ற மாளிகை இருக்கிறது. மூர் இனத்தவரின் இந்த ஒதுக்குப்புற மாளிகை, சாபிகா மலைக்குப் பக்கத்திலுள்ள ஸெரோ டெல் சால் என்ற மலைமீது கட்டப்பட்டிருக்கிறது. அரேபிய இயற்கைக்காட்சிக்கு சிறந்த உதாரணமாக திகழும் இந்த கெனெராலிஃபெ “உலகிலுள்ள அழகிய தோட்டங்களில் ஒன்று” என அழைக்கப்படுகிறது. d முன்பு அது ஒரு பாலத்தின் மூலம் அல்ஹம்பறா அரண்மனையுடன் இணைக்கப்பட்டிருந்தது. அப்போது அது கிரனடாவின் ஆட்சியாளர்கள் ஓய்வெடுக்கும் மாளிகையாக இருந்தது. ஒரு முற்றத்தின் கடைசியில் தண்ணீர் படிக்கட்டு இருக்கிறது. இந்தத் தோட்டத்திற்கு வந்தவுடன் ஒளிகளும் நிறங்களும் எண்ணற்ற நறுமணங்களும் ஒருவரின் ஐம்புலன்களையும் வசீகரித்துவிடுகின்றன.

மூர் மன்னரின் பெருமூச்சு

ஃபெர்டினான்ட் என்ற அரசரிடமும் இஸபெல்லா என்ற அரசியிடமும் கிரனடாவின் கடைசி அரசரான போயாப்டில் (பதினோறாம் முகமது) சரணடைந்தபோது அவரும் அவருடைய குடும்பமும் தாயகத்தைவிட்டுப் போக வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் நகரத்தைவிட்டு நகர்ந்த பிறகு உயரமான ஓர் இடத்தில் பயணத்தை நிறுத்தினார்கள் என சொல்லப்படுகிறது. அந்த இடம் இன்று எல் ஸுஸ்பிரோ டெல் மோரோ (மூர் மன்னரின் பெருமூச்சு) என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் கடைசியாக ஒருமுறை தங்களுடைய பிரமாண்டமான சிவப்பு மாளிகையைத் திரும்பிப் பார்த்தபோது, போயாப்டில்லின் தாய் தன் மகனிடம், “ஓர் ஆண்மகனாக இருந்து உன்னால் அதைக் காப்பாற்ற முடியாததை எண்ணி ஒரு பெண்ணைப் போல் புலம்பியழு!” எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.

இன்று அல்ஹம்பறாவைச் சுற்றிப்பார்க்க வருடந்தோறும் 30 லட்சம் பேர் வருகிறார்கள். அவர்களில் சிலர், மூர் மன்னர் பெருமூச்சு விட்ட இடத்தைப் போய் பார்க்கிறார்கள். இவர்களும் போயாப்டில்லைப் போலவே அந்த இடத்திலிருந்து கிரனடா நகரத்தை பார்வையிட முடியும். கிரீடத்திலுள்ள ஒரு மணிக்கல் போல மலைமீது வீற்றிருக்கும் அல்ஹம்பறா அரண்மனையின் பாதத்தில் இந்த கிரனடா நகரம் அமர்ந்திருக்கிறது. நீங்களும் ஒருநாள் கிரனடாவிற்கு விஜயம் செய்தால், மூர் இனத்தைச் சேர்ந்த அதன் கடைசி மன்னர் பெருமூச்சு விட்டதற்குரிய காரணத்தைப் புரிந்துகொள்வீர்கள்.

[அடிக்குறிப்புகள்]

a பொ.ச. 711-⁠ல் அரேபியர்களின் மற்றும் பர்பர்களின் படைகள் ஸ்பெயினுக்குள் நுழைந்தன. ஏழே ஆண்டுகளுக்குள் ஸ்பெயின் தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதி இஸ்லாமியரின் ஆட்சியின் கீழ் வந்துவிட்டது. இரண்டே நூற்றாண்டிற்குள் ஐரோப்பிய நகரங்களில் கார்டபா நகரமே மிகப் பெரிய நகரமாகவும், கலாச்சாரமிக்க நகரமாகவும் ஆனது.

b உதாரணமாக, மோசேக்குக் கடவுள் இவ்வாறு கட்டளையிட்டார்: “உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.”​—⁠உபாகமம் 16:18.

c ஸ்பெயின் உட்பட மத்தியதரைக் கடல் பகுதி முழுவதிலும், அரேபியர்கள் பெர்சிய மற்றும் பைசாண்டிய பாணியில் தோட்டங்கள் அமைத்தார்கள்.

d இந்தப் பெயர் “ஜெனெட்-எல்-அரீஃப்” என்ற அரேபிய வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் இது “உயரமான தோட்டங்கள்” என மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் இந்தப் பதம் “கட்டடக் கலைஞரின் தோட்டம்” என்ற அர்த்தத்தையே தருகிறது.

[பக்கம் 15-ன் படம்]

அல்காஸாபா

[பக்கம் 16-ன் படம்]

சிங்கங்களின் முற்றம்

[பக்கம் 1617-ன் படம்]

கெனெராலிஃபெ தோட்டங்கள்

[பக்கம் 17-ன் படம்]

தண்ணீர் படிக்கட்டு

[பக்கம் 14-ன் படத்திற்கான நன்றி]

Line art: EclectiCollections

[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]

மேலுள்ள படத்தை தவிர மற்றவை: Recinto Monumental de la Alhambra y Generalife

[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]

எல்லா படங்களும்: Recinto Monumental de la Alhambra y Generalife

[பக்கம் 17-ன் படங்களுக்கான நன்றி]

மேலுள்ள படங்கள்: Recinto Monumental de la Alhambra y Generalife; கீழுள்ள படங்கள்: J. A. Fernández/San Marcos