Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளமைத் துடிப்புடன் என்றென்றும்!

இளமைத் துடிப்புடன் என்றென்றும்!

இளமைத் துடிப்புடன் என்றென்றும்!

இயேசுவுக்கு அருகிலிருந்த ஒருவன் சீக்கிரத்தில் இறக்கவிருந்தான். அவன் இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.” இயேசு அவனை நோக்கி: “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.” (லூக்கா 23:42, 43) பெயர் குறிப்பிடப்படாத அவன் முதுமையால் நோய்ப்பட்டு இறக்கவில்லை என்பது உண்மைதான்; அவன் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டான். ஆனாலும் அவனுடைய அவல நிலையைக் கவனிக்கையில், முதியவர்கள் அதிக உற்சாகத்தைப் பெறலாம்.

அந்த மனிதனின் அசாதாரண நம்பிக்கையை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது! அவனுக்கு அருகில் இயேசுவும் சாகிற நிலையில் இருந்தார் என்றாலும், அவர் கடவுளுடைய ராஜ்யத்தில் நிச்சயம் ராஜாவாக ஆட்சி செய்வார் என அவன் உறுதியாக நம்பினான். அதுமட்டுமல்லாமல், இயேசு தன்னை ஒருநாள் நினைவுகூர்ந்து நடவடிக்கை எடுக்க முடியும் என நம்பினான். தீர்ப்பளிக்கப்பட்ட அந்தக் குற்றவாளி, ராஜாவாக இயேசு ஆட்சி செய்யப்போகும் பரதீஸான பூமியில் உயிர்த்தெழுப்பப்படப் போவதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்!

இன்று மனிதகுலம் அந்தக் குற்றவாளியின் நிலைமையில்தான் இருக்கிறது. எவ்விதத்தில்? நாம் எந்த வயதினராக இருந்தாலும், பாவத்திற்கான அபராதத்தைச் செலுத்திவருகிறோம், ஆகவே நமக்கு இரட்சிப்பு தேவை. (ரோமர் 5:12) அந்தக் குற்றவாளியைப் போல் நாமும் இயேசு கிறிஸ்துவை நம்பியிருக்கலாம்; முதிர்வயதில் ஏற்படும் வேதனைமிக்க பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்காகவும்கூட அவரை நம்பியிருக்கலாம்! பரதீஸான பூமியில் பூரண உடல்நலத்தோடும் மனநிலையோடும் நித்தியமாக வாழும் நம்பிக்கையை இயேசு மனிதருக்கு அளித்திருப்பதில் சந்தேகமே இல்லை.​—யோவான் 3:16, 36.

இளையோருக்கும் முதியோருக்கும் எல்லாமே புதிது

கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பூமியில் குடிமக்கள் “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:11) “வியாதிப்பட்டிருக்கிறேன்” என ஒருவரும் சொல்ல மாட்டார்கள். (ஏசாயா 33:24) இப்போது சகித்துவருகிற எல்லாவித உடல்நல குறைபாடும் குணமாக்கப்படும்; ஆம், “முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.” (ஏசாயா 35:6) முதியவர்கள் இளமைத் துடிப்புமிக்கவர்களாய் ஆவார்கள்; அவர்களுடைய உடல், “வாலிபத்தில் இருந்ததைப் பார்க்கிலும் ஆரோக்கியமடையும்.”​—யோபு 33:⁠25.

என்றாலும், இந்த நம்பிக்கை நடைமுறையான நம்பிக்கையா? சாகும் நிலையிலிருந்த குற்றவாளிக்கு, பரதீஸில் வாழும் நம்பிக்கையைத் தந்த இயேசுவைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். முடவர், குருடர், செவிடர் போன்ற ஊனமுற்றோரை அநேக சந்தர்ப்பங்களில் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். அவர் மிகுந்த அக்கறையோடு “சகல வியாதிகளையும் சகல நோய்களையும்” குணப்படுத்தினார். (மத்தேயு 9:35, 36; 15:30, 31; மாற்கு 1:40-42) அவரது ராஜ்யம் எதை சாதிக்குமென்பதை மனிதரின் கண்ணெதிரே செய்து காட்டினார். இறந்துபோன அநேகரைக்கூட இயேசு உயிர்த்தெழுப்பினார். (லூக்கா 7:11-17; யோவான் 11:38-44) இவ்வாறு, ‘பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்டு புறப்பட்டு வருவார்கள்’ என்ற தமது வாக்குறுதிக்கு வலிமை சேர்த்தார்.​—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:⁠15.

பறவைகளின் பாட்டும் கலகலப்பான பேச்சும் காதுகளில் ஒலிக்க, புதிய உடலுடனும், தெளிவான கண்பார்வையுடனும், வலியே இல்லாத கைகால்களுடனும், எவ்விதக் குறையும் இல்லாத மனதுடனும் பரதீஸில் விழித்தெழுவதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அப்போது, முதுமையின் “தீங்கு நாட்கள்” சுவடு தெரியாமல் மறைந்திருக்கும். (பிரசங்கி 12:1-7; ஏசாயா 35:5, 6) மரணமும் ‘அழிக்கப்பட்டு,’ ‘முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கும்.’​—1 கொரிந்தியர் 15:26, 54, பொ.மொ.

இன்றைய உலக நிலைமைகளை பைபிள் தீர்க்கதரிசனங்களோடு ஒத்துப் பார்க்கையில், முதுமை ஒழியப்போகும் காலம் வாசலருகே வந்துவிட்டதை நாம் அறிகிறோம். (மத்தேயு 24:7, 12, 14; லூக்கா 21:11; 2 தீமோத்தேயு 3:1-5) அப்படியானால், கடவுள்மீது விசுவாசம் வைத்து அவருக்கு சேவைசெய்து வந்திருக்கிற முதியவர்கள் மறுபடியும் இளமைத் துடிப்புடன் என்றென்றும் வாழப்போகும் காலம் மிக அருகில்!

[பக்கம் 9-ன் பெட்டி/படம்]

உங்கள் மூளைக்குப் பயிற்சி அளியுங்கள்!

உடற்பயிற்சி தசைகளை வலுப்படுத்துவது போலவே மனப்பயிற்சி மூளையை வலுப்படுத்துகிறது. மூளையை தூண்டுவிப்பதற்கு நாம் புதுப் புது காரியங்களைச் செய்ய வேண்டும். மூளையில் செல்-இணைப்புகளை உருவாக்கவும் அவற்றை வலுவாக்கவும் உதவும் சில வழிகள்.

◼ புதுப் புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள்; உதாரணத்திற்கு, கலைவேலைப்பாடு, சிற்பவேலை, வார்த்தைகளை உருவாக்கும் விளையாட்டு, அல்லது ஜிக்சா புதிர் விளையாட்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்றவற்றில் ஈடுபடுங்கள்; வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்.

◼ பலதரப்பட்ட நபர்களுடன் பழகுங்கள்; இயந்திரத்தனமான வாழ்க்கையைத் தவிர்த்து மூளையை கூர்மையாக்க பலருடன் பேசிப் பழகுங்கள்.

◼ ஆன்மீகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”​—⁠பிலிப்பியர் 4:6, 7.

◼ தகுந்த விஷயங்களை வாசியுங்கள்; வாசித்தவற்றை யாரிடமாவது சொல்லுங்கள்.

◼ ரேடியோ அல்லது டிவி செய்திகளில் கேட்ட விஷயங்களை ஞாபகப்படுத்திப் பார்த்து மற்றவர்களிடமும் சொல்லுங்கள்; அப்போது உங்கள் குறுகிய-கால மற்றும் நீடித்த-கால ஞாபகசக்திக்குப் பயிற்சி கிடைக்கும்.

◼ நீங்கள் அதிகம் பயன்படுத்தாத கையை (உதாரணத்திற்கு, வலதுகைப் பழக்கம் உடையவரென்றால் இடது கையை) டிவி ரிமோட் கன்ட்ரோலை அழுத்தவும், போனை எடுக்கவும், பற்களை துலக்கவும் உபயோகப்படுத்துங்கள்.

◼ நாள் முழுக்க உங்களது எல்லாப் புலன்களையும் முடிந்தளவு பயன்படுத்திக் கொண்டே இருங்கள்.

◼ அருகிலுள்ள அல்லது தொலைவிலுள்ள ஆர்வத்திற்குரிய இடங்களைப் பற்றி தெரிந்துகொண்டு அங்கு சென்று வாருங்கள்.

[பக்கம் 89-ன் படம்]

வேதனைமிக்க முதுமைக்காலம் விரைவில் ஒழிந்து, இளமைத்துடிப்பு என்றென்றும் நீடிக்கும் என்பது இயேசுவின் வாக்குறுதி