Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையான கடவுள் ஒருவர்தானா?

உண்மையான கடவுள் ஒருவர்தானா?

பைபிளின் கருத்து

உண்மையான கடவுள் ஒருவர்தானா?

மோளேகு, அஸ்தரோத், பாகால், தாகோன், மெரொதாக், யூப்பித்தர், மெர்க்கூரி, தியானாள்​—⁠இவை பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆண், பெண் தெய்வங்களின் பெயர்கள் ஆகும். (லேவியராகமம் 18:21; நியாயாதிபதிகள் 2:​13; 16:23; எரேமியா 50:2; அப்போஸ்தலர் 14:12; 19:24) ஆனால், யெகோவாவை மட்டும்தான் சர்வ வல்லமையுள்ள தேவன் என்று பைபிள் அழைக்கிறது. ஜனங்களோடு சேர்ந்து வெற்றிப் பாடலை மோசே பாடியபோது, “யெகோவாவே, தேவர்களில் உமக்கு நிகரானவர் யார்?” என்றார்.​—யாத்திராகமம் 15:11, திருத்திய மொழிபெயர்ப்பு.

தெளிவாகவே, மற்ற எல்லா தெய்வங்களைக் காட்டிலும் யெகோவாவை பைபிள் உயர்த்திக்காட்டுகிறது. ஆனால், மற்ற தெய்வங்கள் வகிக்கும் பங்கு என்ன? இந்தத் தெய்வங்களும், காலங்காலமாக வணங்கப்பட்டுவரும் எண்ணிலடங்கா மற்ற தெய்வங்களும் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய யெகோவாவுக்கு கீழ் இருக்கும் உண்மையான தெய்வங்களா?

வெறும் கற்பனை படைப்புகளே

யெகோவாதான் ஒரே உண்மை கடவுள் என பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (சங்கீதம் 83:17; யோவான் 17:3) யெகோவா தாமே சொன்ன வார்த்தைகளை தீர்க்கதரிசியாகிய ஏசாயா இவ்வாறு பதிவு செய்தார்: “எனக்குமுன் உண்டான தெய்வம் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே யெகோவா; ரட்சிப்பவர் என்னைத்தவிர இல்லை.”​—ஏசாயா 43:10, 11, தி.மொ.

மற்ற எல்லா தெய்வங்களும் யெகோவாவிற்கு முற்றிலும் கீழானவை மட்டுமல்ல, அவை நிஜமானவையே அல்ல. இவற்றில் பெரும்பாலானவை மனிதனின் கற்பனை படைப்புகளாக மட்டுமே இருக்கின்றன. இந்தத் தெய்வங்கள், ‘காணாமலும் கேளாமலும் சாப்பிடாமலும் முகராமலும் இருக்கிற . . , மனுஷர் கைவேலையாகிய தேவர்கள்’ என்று பைபிள் குறிப்பிடுகிறது. (உபாகமம் 4:​28) யெகோவா மட்டுமே உண்மையான தேவன் என்று பைபிள் தெளிவாகக் கற்பிக்கிறது.

யெகோவாவைத் தவிர வேறு எந்தத் தெய்வங்களை வணங்குவதையும் பைபிள் கடுமையாக எச்சரிப்பதில் ஆச்சரியமே இல்லை. உதாரணத்திற்கு, பூர்வ இஸ்ரவேல் தேசத்தாருக்காக மோசேயிடம் கொடுக்கப்பட்ட பத்து கட்டளைகளில் முதல் கட்டளை, வேறு எந்தத் தெய்வங்களையும் வணங்கக் கூடாது என்பதுதான். (யாத்திராகமம் 20:3) ஏன்?

முதலாவதாக, இல்லாத ஒரு தெய்வத்தை வணங்குவது படைப்பாளருக்கு பெருத்த அவமரியாதை காட்டுவதாக இருக்கிறது. பொய் தெய்வங்களை வணங்குபவர்களை ‘தேவனுடைய சத்தியத்தை . . . பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவிப்பவர்கள்’ என பைபிள் குறிப்பிடுகிறது. (ரோமர் 1:​25) பெரும்பாலும், இயற்கை பொருட்களான உலோகம், மரம் போன்றவற்றால் இந்தக் கற்பனை தெய்வங்களுக்குச் சிலைகள் வடிக்கப்படுகின்றன. இடி, கடல், காற்று போன்ற இயற்கையின் சில அம்சங்களோடு அநேக தெய்வங்கள் தொடர்புபடுத்தப்படுகின்றன. அப்படியானால், இத்தகைய போலி தெய்வங்களை வணங்குவது, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முழுக்க முழுக்க அவமரியாதை காட்டும் செயல் என்பதில் சந்தேகமேயில்லை.

பொய் தெய்வங்களும் அவற்றின் சிலைகளும், படைப்பாளருக்கு அருவருப்பானவை. எனினும், அவற்றை உருவாக்கியவர்கள் மேல்தான் முக்கியமாக கடவுள் வெறுப்பு காட்டுகிறார். அவர் தமது உணர்ச்சிகளை இவ்வாறு கடுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்: “அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.”​—சங்கீதம் 135:15-​18.

யெகோவா தேவனைத் தவிர வேறு யாரையோ அல்லது வேறு எதையோ வணங்குவதை பைபிள் கண்டிப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அப்படிப்பட்ட வணக்கத்தில் நேரமும் முயற்சியும் முற்றிலும் வீணாகிறது. ஏசாயா தீர்க்கதரிசி சரியாகவே இவ்வாறு சொன்னார்: “சித்திரவேலை உருவத்தையும் வார்ப்பு விக்கிரகத்தையும் செய்பவனை என்ன சொல்ல! அது ஒன்றுக்கும் உதவாதே” (ஏசாயா 44:10, தி.மொ.) பைபிள் மேலும் சொல்கிறது: “ஜனங்களுடைய சகல தெய்வங்களும் வீணானவையே.” (சங்கீதம் 96:5, NW) பொய் தெய்வங்களெல்லாம் ஒன்றுமில்லாதவை, ஒன்றுமில்லாதவற்றை வணங்கினால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

இயேசு, தேவ தூதர்கள், மற்றும் பிசாசு

சில சமயம், நிஜமான நபர்களை கடவுட்களாக பைபிள் குறிப்பிட்டிருக்கிறது. என்றபோதிலும், அதை கவனமாக அலசி ஆராய்ந்தால், அந்த நபர்கள் கடவுளைப்போல் வணங்கப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. உண்மையில், பைபிள் எழுதப்பட்ட மூல மொழிகளில் “கடவுள்” என்ற வார்த்தை, வல்லமையான ஒருவரை, தெய்வ குணம் படைத்த நபரை, அல்லது சர்வ வல்லமையுள்ள கடவுளோடு நெருக்கமான தொடர்புடைய ஒருவரை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது.

உதாரணத்திற்கு, இயேசு கிறிஸ்துவை தேவன் என்று சில பைபிள் வசனங்கள் குறிப்பிடுகின்றன. (ஏசாயா 9:​6, 7; யோவான் 1:​1, 18) இயேசுவை வணங்க வேண்டும் என்று இது குறிக்கிறதா? இயேசுவே இவ்வாறு சொன்னார்: “உன் தேவனாகிய யெகோவாவையே நீ வணங்க வேண்டும், அவர் ஒருவருக்கே பரிசுத்த சேவை செய்ய வேண்டும்.” (லூக்கா 4:8, NW) தெளிவாகவே, இயேசு வல்லமை பொருந்தியவராக, தெய்வத் தன்மை கொண்டவராக இருந்தாலும், பைபிள் அவரை வணக்கத்திற்குரியவராக சித்தரிப்பதில்லை.

தேவதூதர்களும்கூட “தேவனைப் போன்றவர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள். (சங்கீதம் 8:5, NW; எபிரெயர் 2:7) என்றபோதிலும், தேவதூதர்களை வணங்கும்படி பைபிளில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. சொல்லப்போனால், ஒரு சந்தர்ப்பத்தில், வயதான அப்போஸ்தலன் யோவான் தேவதூதனைக் கண்டதும் திகைத்துப்போய், அவரை வணங்க பாதத்தில் விழுந்தார். ஆனால், அந்தத் தேவதூதன், “இப்படிச் செய்யாதபடிக்குப் பார் . . . தேவனைத் தொழுதுகொள்” என்றார்.​—வெளிப்படுத்துதல் 19:10.

பிசாசை “இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்” என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (2 கொரிந்தியர் 4:4) “இந்த உலகத்தின் அதிபதி” என்பதால் பிசாசு எண்ணற்ற பொய் தெய்வங்களை வணங்க மக்களை தூண்டியிருக்கிறான். (யோவான் 12:31) ஆக, மனிதனால் உருவாக்கப்பட்ட தெய்வங்களுக்கு செலுத்தப்படும் எல்லா வணக்கமும், உண்மையில் சாத்தானுக்கே செலுத்தப்படுகிறது. ஆனால், சாத்தான் நம் வணக்கத்தைப் பெற தகுதியானவன் அல்ல. அவன் குறுக்கு வழியில் அதிகாரத்தைத் தட்டிப் பறித்தவன். முடிவில், அவனும், எல்லாவிதமான பொய் வணக்கமும் நீக்கப்பட்டுவிடும். அப்போது, மனிதர் அனைவரும், சொல்லப்போனால், சிருஷ்டிகள் அனைவரும், யெகோவாதான் ஒரே உண்மையான ஜீவனுள்ள தேவன் என என்றென்றும் ஒப்புக்கொள்வார்கள்.​—எரேமியா 10:10.

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ விக்கிரக வணக்கத்தைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது?​—சங்கீதம் 135:15-​18.

◼ இயேசுவையும் தேவதூதர்களையும் கடவுட்களாக வணங்க வேண்டுமா?​—லூக்கா 4:8.

◼ ஒரே உண்மையான கடவுள் யார்?​—யோவான் 17:3.

[பக்கம் 2829-ன் படங்கள்]

உருவச்சிலைகள் இடமிருந்து வலம்: மரியாள், இத்தாலி; மாயாக்களின் சோளக் கடவுள், மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா; அஸ்தரோத், கானான்; மாயமந்திர கடவுள், சியர்ரா லியோன்; புத்தர், ஜப்பான்; சீகொமெகொவாடல், அஸ்தெக், மெக்சிகோ; ஹோரஸ் ஃபால்கன், எகிப்து; ஜியஸ், கிரீஸ்

[படத்திற்கான நன்றி]

சோளக் கடவுள், ஹோரஸ் ஃபால்கன், ஜியஸ்: Photograph taken by courtesy of the British Museum