Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

◼ ஸ்பானிய அரசாங்கம் 0.5 சதவீத வரியை அவரவரின் விருப்பத்திற்கேற்ப, தர்ம ஸ்தாபனங்களுக்கோ அல்லது கத்தோலிக்க அமைப்புகளுக்கோ ஒதுக்குகிறது. 80 சதவீத ஸ்பானியர்கள் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்களென சொல்லிக்கொண்டாலும் 20 சதவீத ஸ்பானியர்கள் மாத்திரமே கத்தோலிக்க அமைப்புகளுக்காக வரியை ஒதுக்கும்படி சொல்கிறார்கள்.​—⁠எல் பாய்ஸ், ஸ்பெயின்.

◼ “30 வயதாகியும் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பது ஆண்களின் வாழ்நாளில் ஐந்தரை வருடங்களையும் பெண்களின் வாழ்நாளில் ஆறரை வருடங்களையும் குறைத்துவிடுகிறது.” இந்த அட்டவணையை இன்ஷ்யூரன்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனம் வெளியிட்டது. என்றாலும் 30 வயதில் புகை பிடிப்பதை நிறுத்துவது புகையிலை தொடர்பான நோயால் இறந்துபோகும் ஆபத்தை பெருமளவில் குறைக்கிறது.​—⁠தி டைம்ஸ், இங்கிலாந்து.

◼ 2004-⁠ம் வருடத்தின்போது உலகமுழுவதிலும் எண்ணெய், 3.4 சதவீதம் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. அதாவது ஒரு நாளைக்கு 8.24 கோடி பீப்பாய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. அந்த அதிகரிப்பில் கிட்டத்தட்ட பாதிக்குக் காரணம் அமெரிக்காவும் சீனாவுமே. இப்போது அமெரிக்கா 2.05 கோடி பீப்பாய் எண்ணெயையும் சீனா 66 லட்சம் பீப்பாய் எண்ணெயையும் தினமும் பயன்படுத்துகின்றன.​—⁠வைட்டல் சைன்ஸ் 2005, உவர்ல்டுவாட்ச் இன்ஸ்டிட்யூட்.

“உங்கள் தாயை மதியுங்கள்”

ஸ்கூலுக்குப் போகிற இரண்டு பிள்ளைகளைக் கொண்ட கனடா நாட்டு இல்லத்தரசி செய்கிற ஒவ்வொரு வேலைக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டால், ‘ஓவர் டைமுடன்’ சேர்த்து ஒரு வருடத்திற்கு 1,63,852 கனடா நாட்டு டாலர்களை அவள் பெறுவாள் என தொழில் ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகிறார்கள். இத்தொகை, இன்றைய சராசரி ஊதியத் தொகையின் அடிப்படையிலும் ‘வாரத்திற்கு 100 மணிநேர வேலை என்பதன் அடிப்படையிலும்’ கணக்கிடப்பட்டிருக்கிறது. “அதாவது, வாரத்தில் ஆறுநாள் 15 மணிநேர வேலையும் ஒரு நாள் 10 மணிநேர வேலையுமாக மொத்தம் 100 மணிநேர வேலை” என வான்கூவர் சன் செய்தித்தாள் சொல்கிறது. இந்த இல்லத்தரசிகளுக்கு இருக்கிற வேலைகளில், குழந்தையைப் பராமரிக்கும் வேலை, பாடம் சொல்லித்தரும் வேலை, வண்டி ஓட்டும் வேலை, வீட்டைச் சுத்தப்படுத்தும் வேலை, சமையல் வேலை, வைத்தியம் பார்க்கும் வேலை, அதோடு பொதுவாக எல்லாவற்றையும் பழுதுபார்க்கும் வேலை ஆகியவை அடங்கும். எனவே அந்தச் செய்தித்தாள் இவ்வாறாக ஆலோசனை அளிக்கிறது: “உங்கள் தாயை மதியுங்கள்: வேலைக்குத் தகுந்த சம்பளம் அவளுக்குக் கிடைக்காதிருக்கலாம்.”

இளைஞர் வட்டத்தில் முரண்பாடான ஒழுக்க நெறிகள்

பின்லாந்தின் இளைஞர்கள் “தங்களுக்கு தாங்களே ஒழுக்க நெறிகளை” உருவாக்கிக்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது என ஜூவாஸ்கூலா பல்கலைக்கழகத்தின் செய்தி அறிக்கை கூறுகிறது. “ஷாப்பிங் செய்வதுபோல இன்று பொதுவாக மக்கள் தாங்கள் சரியென நம்புகிற நெறிகளை இங்கிருந்தும் அங்கிருந்துமாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்” என அந்தச் செய்தி அறிக்கை கூறுகிறது. அதனால் சிலசமயங்களில் ஒன்றுக்கொன்று முரண்படும் நெறிகளை கடைசியில் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள். உதாரணத்திற்கு, செல்வமும் வளமும் சரியாகப் பங்கிடப்படுவது முக்கியமென இளைஞர்கள் நம்புகிறார்கள். அதே சமயத்தில், “முரட்டுத்தனமாக, கடும் போட்டியிடுவது சரியென நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.”

இரத்தத்தால் பரவும் பிரையான் நோய்க்கிருமி

இரத்தமேற்றுதலின் மூலம் பிரையான் என்ற நோய்க்கிருமி உடலுக்குள் புகுந்துவிடும் ஆபத்து இருக்கலாம் என்று நினைக்கப்பட்டது. ஆனால் இன்று அநேகமாக ஆபத்து ஏற்படும் என்பதை “மருந்துப் பொருள்களுக்கான பிரெஞ்ச் சுகாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பு” கண்டுபிடித்திருக்கிறது. இது சமீபத்தில் பத்திரிகை செய்தியில் வெளியிடப்பட்டது. இந்தப் பிரையான்கள் உண்மையில் புரோட்டீன் மூலக்கூறுகள்; இவை மனிதர்களில் மூளை சிதைவு நோய் (variant Creutzfeldt-Jakob disease [vCJD]) ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது. இது குணப்படுத்த முடியாத நரம்பு திசு சிதைவுறும் நோயாக இருக்கிறது. அதே நோய் கால்நடைகளுக்கு ஏற்படுகையில் உள்துளை மூளை வீக்கம் (bovine spongiform encephalopathy) என அழைக்கப்படுகிறது. இது பொதுவாக “பசு-பித்து நோய்” (mad-cow disease) என அறியப்படுகிறது. பிரிட்டனில், இரத்தத்தின் மூலம் vCJD பரவியிருப்பது இரண்டு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்டது; அதன் பிறகே அதன் ஆபத்து அதிகரித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. அறிகுறிகள் எதுவும் தோன்றுவதற்கு முன்பு இந்த நோயைக் கண்டுபிடிப்பதற்கு சரியான பரிசோதனை முறைகள் இல்லை.

ஊசிபோன்ற உடலுக்காக ஏங்குகிறார்கள்

“ஐந்து வயது பெண் குழந்தைகள்கூட தங்கள் உடலைக் குறித்து கவலைப்படுகிறார்கள், ஒல்லியாக இருந்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறார்கள்” என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதாக த சிட்னி மார்னிங் ஹெரல்ட் செய்தி பத்திரிகை அறிக்கை செய்கிறது. ஐந்திலிருந்து எட்டு வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய சிறுமிகளை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியைப் பற்றி இந்த அறிக்கை சொல்கிறது. அதில் கிட்டத்தட்ட பாதி பேர் ஒல்லியாக இருக்கவே விரும்பினார்கள். இன்னொரு பாதி பேர், “ஒருவேளை குண்டானால் டயட்டிங் செய்வோமென” கூறினார்கள். சரியான உடல் உருவத்தைக் குறித்து இருக்கும் தவறான எண்ணங்கள் காலப்போக்கில் “தாழ்வு மனப்பான்மை, மனச்சோர்வு, உணவு பழக்கத்தில் கோளாறு போன்றவற்றில் விளைவடையும்” என ஓர் ஆராய்ச்சியாளர் கூறியதாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது.