Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செயற்கை கை, கால் பொருத்தும் மையத்திற்கு ஒரு விஜயம்

செயற்கை கை, கால் பொருத்தும் மையத்திற்கு ஒரு விஜயம்

செயற்கை கை, கால் பொருத்தும் மையத்திற்கு ஒரு விஜயம்

நியுஜிலாந்திலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

நியுஜிலாந்தின் வெலிங்டன் நகரிலுள்ள செயற்கை கை, கால் பொருத்தும் மையத்திற்கு செல்ல இரண்டு காரணங்களுக்காக நான் ‘அப்பாய்ண்ட்மென்ட்’ கேட்டேன். ஒன்று, எனக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை காலைப் பழுதுபார்க்க வேண்டும். இரண்டாவது, செயற்கை உறுப்புகளைத் தயாரிக்கும் வேலையைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

எனக்கு செயற்கை காலைப் பொருத்திய மருத்துவர் நான் கேட்டுக்கொண்டபடியே அந்த மையத்தைச் சுற்றிக் காட்ட அன்புடன் ஒப்புக்கொண்டார். அவருடன் நான் செலவிட்ட நேரம் மிகவும் பிரயோஜனமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அந்தத் தொழிலில் ஈடுபடுகிறவர்களின் திறமைகளையும் கடுமையான முயற்சிகளையும் அதிகமாகப் போற்றுவதற்கு அது எனக்கு உதவியது.

“செயற்கை உறுப்பு பொருத்துதல்” என்றால் இழந்த ஓர் உறுப்பை அல்லது உடலின் ஒரு பாகத்தை, செயற்கை உறுப்பால் மாற்றீடு செய்வதாகும். செயற்கை உறுப்பு பொருத்தலியல் என்பது “செயற்கை உறுப்பு பொருத்தும் மருத்துவத் துறை.” செயற்கை உறுப்பு பொருத்துநர் என்றால், “செயற்கை உறுப்பு பொருத்தும் நிபுணர், அதைத் தொழிலாகச் செய்துவருபவர்.”​—⁠மருத்துவம், நர்சிங் மற்றும் கூட்டு சுகாதாரத்தின் என்ஸைக்ளோப்பீடியாவும் அகராதியும், மூன்றாம் பதிப்பு (ஆங்கிலம்).

செயற்கை கால் எப்படித் தயாரிக்கப்படுகிறது?

இந்த மையத்திற்கு வருபவர்களில் பெரும்பாலோர் செயற்கை காலைப் பொருத்திக்கொள்ளவே வருகிறார்கள். அதில் முதல் படியாக, ஒரு நபருடைய துண்டிக்கப்பட்ட காலின் மீதமிருக்கும் பகுதிக்கு உறை சுற்றப்படுகிறது. பிறகு, மீதமிருக்கும் காலின் மாவு-அச்சு தயாரிக்கப்படுகிறது. அதற்குள் மாவு ஊற்றப்பட்டு துண்டிக்கப்பட்ட காலின் மாதிரி தயாரிக்கப்படுகிறது. இந்த மாதிரியை வைத்து செயற்கை காலை பொருத்துவதற்கான பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கப்படுகிறது. இப்படியாக இழக்கப்பட்ட காலை ஈடு செய்கிற, முழுமையாக செயல்படுகிற செயற்கை கால் உருவாகிறது. துண்டிக்கப்பட்ட காலைத் துல்லியமாக அளவெடுப்பதற்கு மிகத் திறம்பட்ட நவீன முறை CAD/CAM முறை ஆகும். அதற்குப் பிறகு, மீதமிருக்கும் காலை அப்படியே ஒத்திருக்கும் மாதிரியை ஒரு மெஷின் தயாரித்துவிடுகிறது.

அந்த மையத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகளை எனக்கு விளக்கினார்கள். அதன் பிறகு இறக்குமதி செய்யப்பட்ட சில ‘ரெடிமேட்’ செயற்கை உறுப்புகளையும் காட்டினார்கள். அதில் ஒன்று என்னை ரொம்பவே கவர்ந்தது. அதுதான் ஹைட்ராலிக் முழங்கால் மூட்டு. இது தெர்மோபிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட குழாயுடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்த பிளாஸ்டிக்கை வெப்பத்தினால் இளக வைக்கவும் முடியும் இறுக வைக்கவும் முடியும். அதாவது பேஷன்ட்டின் செளகரியத்திற்கு ஏற்றபடி மாற்றியமைக்க முடியும். இந்த உறுப்புகளின் படங்களைக் கொண்ட விளக்கமான பட்டியல்கள் உலகெங்கிலும் பல இடங்களில் கிடைக்கின்றன.

செயற்கை கால் தயாரிப்பின் கடைசி கட்டங்களில் என்ன செய்யப்படுகிறது? முடிந்தவரை இயல்பாக நடப்பதற்காக பிளாஸ்டிக் குழாய், முழங்கால், தோல், பாத உறுப்புகள் ஆகியவை ஒன்றோடு ஒன்று பொருத்தப்பட்டு நுணுக்கமான சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. கடைசியாக, செயற்கை காலின் “எலும்புகளை” மறைப்பதற்காக ‘ஃபோம் கவர்’ தயாரிக்கப்படுகிறது. இந்த ஏற்பாடு, செயற்கை காலின் நிறம் நிஜ காலைப் போலவே இருப்பதற்காக செய்யப்படுகிறது.

பேஷன்ட்டுக்கு தன் நடையில் ஓரளவு நம்பிக்கை வந்தபிறகு, மையத்திற்கு விஜயம் செய்கிற எலும்பியல் அறுவை மருத்துவர் அவரை பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இவ்வாறு, செயற்கை காலை பேஷன்ட் நன்கு பயன்படுத்துவதை உறுதிசெய்வதற்குத் தேர்ச்சி பெற்ற அந்த மருத்துவர் கடைசியாக பரிசோதித்துப் பார்க்கிறார்.

குழந்தை பேஷன்ட்டுகளும் விளையாட்டு வீரர்களும்

மையத்தில் ஒவ்வொன்றையும் பார்த்துவிட்டு வந்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு சிறுபெண் என் கவனத்தைக் கவர்ந்தாள். அவள் தன்னுடைய துண்டிக்கப்பட்ட காலையும் புதிதாக பொருத்தப்பட்டிருந்த செயற்கை காலையும் கொஞ்சம்கூட தயக்கமில்லாமல் எங்களுக்குக் காட்டினாள். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவள் தன்னையே மறந்து சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன்.

கையையோ காலையோ இழந்த பிள்ளைகளைப் பற்றி என் மருத்துவர் சொன்னதைக் கேட்பதற்கு ரொம்ப ஆர்வமாக இருந்தது. சிறிய கை ஒன்றைக் காட்டி, இது ஆறு மாத சிறு குழந்தைகளுக்குக்கூடப் பொருத்தப்படுகிறது என்று கூறினார். அதற்கான காரணத்தையும் விளக்கினார். இந்தக் குழந்தைகள் வளர்ந்த பிறகு செயற்கை கையை நன்றாகப் பயன்படுத்த வேண்டுமென்றால் இப்போதே பயிற்சிகொடுக்க வேண்டுமாம். இல்லையென்றால் அவர்கள் எல்லாவற்றையும் ஒரு கையிலேயே செய்ய பழகிவிடுவார்களாம், பிறகு இரண்டு கைகளையும் பயன்படுத்துவது அவர்களுக்கு கடினமாகிவிடுமாம்.

ஓர் ஐரோப்பிய கம்பெனி, சமீபத்தில் விளையாட்டு வீரர்களுக்கென்று செயற்கை உறுப்புகளை ஏற்றுமதி செய்ததாக நான் கேள்விப்பட்டேன். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் ஊனமுற்றவர்களுக்காக நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிக்காகவே அவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை போட்டியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. அதோடு போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு உதவுவதற்காகச் செயற்கை உறுப்பு பொருத்துநர்கள் சிலர் நியுஜிலாந்திலிருந்தும் சென்றிருந்தார்கள்.

விளையாட்டில் கலந்துகொள்பவர்களுக்கென்றே ஸ்பெஷலாக செயற்கை கை கால்கள் சில தயாரிக்கப்பட்டிருந்தன. உதாரணத்திற்கு, கணுக்காலுடன் சேர்ந்த ஒரு செயற்கை பாதத்தை எனக்கு காட்டினார்கள். அது ஒரு விசேஷ பொருளினால் செய்யப்பட்டிருந்ததால் நிஜமான பாதத்தைப் போலவே இதையும் எப்படி வேண்டுமானாலும் வளைக்க முடிந்தது.

நவீன முன்னேற்றங்கள்

செயற்கை உறுப்புகளைப் பொருத்தும் துறையில் என்ன முன்னேற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்? அதற்கு என் மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா? நியுஜிலாந்தில் இப்போது குறைந்தபட்சம் ஒருவர் கம்ப்யூட்டரால் கன்ட்ரோல் செய்யப்படும் செயற்கை காலை பொருத்தியிருப்பதாகச் சொன்னார். அப்படிப்பட்ட செயற்கை கால்களில் சென்ஸார்கள் (sensors) பொருத்தப்படுகின்றன. இவை பாதத்தில் ஏற்படுகிற அழுத்தங்களுக்கு உடனடியாகப் பிரதிபலிக்கின்றன. விளைவு? “இயற்கையான” நடை.

சில நாடுகளில் திறம்பெற்ற எலும்பியல் அறுவை மருத்துவர்கள் ஆஸ்டியோ இன்டிகிரேஷன் (osteointegration) என்கிற ஒரு முறையை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இம்முறையில், துண்டிக்கப்பட்ட காலில் ஸ்பெஷல் கொக்கி (pin) ஒன்று பொருத்தப்படுகிறது. இந்தக் கொக்கியுடன் செயற்கை கால் இணைக்கப்படுகிறது. ஆக, இந்த முறையில், மாவு-அச்சுகளுக்கும் குழாய்களுக்கும் ‘குட்பை’ சொல்ல முடிகிறது.

துண்டிக்கப்பட்ட உறுப்பின் நரம்பிழைகளில் (nerve fibers) செயற்கை ரிசப்டர்களை (receptors) பொருத்துவதற்கும் ஆராய்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. இப்படிப் பொருத்துவதால் வெறுமனே யோசனையின் மூலமாகவே செயற்கை உறுப்பை இயங்க வைக்க முடியும். அமெரிக்காவிலும் மற்ற சில நாடுகளிலும் வெகு சிலருக்கு மட்டுமே மாற்று கை பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இது சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கிறது. மாற்று உறுப்பு பொருத்தப்பட்ட பேஷன்ட்டுகள் வாழ்நாள் முழுவதும் ஆன்டிரிஜக்‍ஷன் (antirejection) மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

செயற்கை கை பொருத்தும் துறையில் இப்போது மையோயெலக்ட்ரானிக்ஸ் என்ற ஒரு புதிய முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், துண்டிக்கப்பட்ட கை தசையில் இருக்கிற உணர்வுகளை (impulses) மின்வாய்கள் (Electrodes) பெறுகின்றன. அதன்பின் வலுவற்றிருக்கும் இந்த உணர்வுகள் பாட்டரி மூலம் இன்னும் வலுவாக்கப்படுகின்றன. அதனால் செயற்கை கையிலுள்ள எலக்ட்ரானிக் சாதனங்கள் செயல்பட தொடங்குகின்றன. செயற்கை கை பிரிவின் லேட்டஸ்ட் டெக்னாலஜியில் பேஷன்டுக்கு ஏற்றவிதத்தில் செயற்கை கையை துல்லியமாக அமைக்கும் வேலையை ஒரு கம்ப்யூட்டரே செய்துவிடுகிறது.

செயற்கை உறுப்புகள் பொருத்தும் துறை இந்தளவு முன்னேற்றம் அடைந்திருப்பதைப் பார்த்து அப்படியே அசந்துபோய்விட்டேன். நிஜமான கை, கால்கள் இயங்கும் விதத்தையும் செயற்கை கை, கால்கள் இயங்கும் விதத்தையும் ஒப்பிட்டால் என்ன சொல்லலாம் என்று என் மருத்துவரிடம் கேட்டேன். அதற்கு அவர் எந்தச் செயற்கை கையையும் காலையும், நிஜமான கை, காலுக்கு ஒப்பிடவே முடியாது என சட்டென்று சொல்லிவிட்டார். அவர் அப்படி சொன்னவுடன் சங்கீதக்காரன் தன் படைப்பாளரிடம் ஜெபத்தில் சொன்ன இந்த வார்த்தைகள்தான் என் ஞாபகத்திற்கு வந்தன: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்.”​—சங்கீதம் 139:14.

[பக்கம் 23-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

[படங்கள்]

மையோ எலெக்ட்ரிக் கைகள் தசை உணர்வுகளைப் பயன்படுத்திக் கையின் வேகத்தையும் அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகின்றன

[படத்திற்கான நன்றி]

கைகள்: © Otto Bock HealthCare

[படங்கள்]

இந்த ‘ஹைடெக்’ முழங்காலின் உள்ளே கம்ப்யூட்டர் சிப்ஸும் காந்த சக்தியும் இருப்பதால் அதை அணிந்திருப்பவரின் நடைக்கு ஏற்ற விதமாக முழங்கால் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறது

[படத்திற்கான நன்றி]

முழங்கால்: Photos courtesy of Ossur

[படம்]

பாதத்தின் இந்தக் குறுக்கு வெட்டுத் தோற்றம் ‘ஃபோம் கவரையும்’ கணுக்காலின் அமைப்பையும் காட்டுகிறது

[படத்திற்கான நன்றி]

© Otto Bock HealthCare

[படத்திற்கான நன்றி]

© 1997 Visual Language

[பக்கம் 21-ன் படம்]

செயற்கை கால் அட்ஜஸ்ட் செய்யப்படுகிறது

[பக்கம் 22-ன் படம்]

ஒரு மருத்துவர் பேஷன்ட்டிற்குச் செயற்கை உறுப்பைப் பொருத்துகிறார்

[பக்கம் 23-ன் படம்]

கை துண்டிக்கப்பட்ட சின்ன குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பதற்காக உபயோகிக்கப்படும் சிறிய செயற்கை கை

[பக்கம் 23-ன் படம்]

2004-⁠ல் 100 மீட்டர் பாராலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றவர், ‘கார்பன்-ஃபைபர்’ பாதத்தை அணிந்துகொண்டு 10.97 வினாடியில் ஓடினார்

[படத்திற்கான நன்றி]

Photo courtesy of Ossur/Photographer: David Biene

[பக்கம் 21-ன் படத்திற்கான நன்றி]

© Otto Bock HealthCare