Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தேம்ஸ் நதி இங்கிலாந்தின் தனிச்சிறப்புமிக்க சொத்து

தேம்ஸ் நதி இங்கிலாந்தின் தனிச்சிறப்புமிக்க சொத்து

தேம்ஸ் நதி இங்கிலாந்தின் தனிச்சிறப்புமிக்க சொத்து

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

‘ஓல்ட் ஃபாதர் தேம்ஸ்’ என்று பிரிட்டன் நாட்டவர்களால் பிரியமாக அழைக்கப்படும் தேம்ஸ் நதி, தென் மத்திப இங்கிலாந்தின் கண்கவர் காட்ஸ்வோல்ட் மலைகளிலுள்ள நான்கு ஊற்றுகளிலிருந்து பெருக்கெடுக்கிறது. அது கிழக்கு நோக்கி 350 கிலோமீட்டர் வளைந்து நெளிந்து ஓடுகையில் மற்ற நதிகளும் சேர்ந்துகொள்கின்றன; கடைசியாக 29 கிலோமீட்டர் அகன்ற ஒரு கழிமுகத்தைக் கடந்து வட கடலில் சென்று கலக்கிறது. இந்தச் சிறிய நதி இங்கிலாந்தின் சரித்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது ஒரு சுவாரஸ்யமான கதை.

சுமார் பொ.ச.மு. 55-⁠ல் ஜூலியஸ் சீஸர் தலைமையில் முதன்முதலாக இங்கிலாந்தின் மீது ரோம படையெடுப்பு ஆரம்பமானது. அடுத்த வருடம் அவர் மீண்டும் இங்கிலாந்துக்கு வந்தபோது, ஒரு நதி அவருக்குத் தடையாக இருந்தது; அந்த நதியை அவர் தாமிஸிஸ், அதாவது தேம்ஸ் என்றழைத்தார். அதற்குப் பின் 90 வருடங்கள் கழித்துதான் ரோம பேரரசர் கிளாடியஸ் அந்நாட்டைக் கைப்பற்றினார்.

அப்போதெல்லாம் தேம்ஸ் நதியின் இரு கரைகளும் சதுப்பு நிலமாக இருந்தன. ஆனால் பிற்பாடு, அதன் கழிமுகத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில்​—⁠கடலேற்ற சமயத்தில் நதிக்குள் கடல்நீர் இதுவரை வரும்⁠—⁠ரோம படையினர் மரப்பாலம் ஒன்றை அமைத்தனர். அங்கே, நதியின் வடக்கு கரையில் ஒரு துறைமுகத்தை அமைத்தனர், அதை லண்டினியும் என்று அவர்கள் அழைத்தனர். a

அடுத்த நான்கு நூற்றாண்டுகளில், ஐரோப்பாவின் மற்ற இடங்களிலும் ரோமர்கள் வாணிகத்தை விஸ்தரித்தார்கள்; மத்தியதரைப் பகுதியிலிருந்து ஆடம்பரப் பொருள்களை இறக்குமதி செய்தார்கள்; லெபனானிலிருந்து மரத்தையும்கூட இறக்குமதி செய்தார்கள். அதோடு, தேம்ஸ் நதி வழியாக உள்நாட்டுப் பகுதிகளிலிருந்து லண்டனுக்கு சரக்குகளை எடுத்துச்சென்றார்கள்; நகர மையத்திலிருந்து பிரதான சாலைகள் பிரிந்து செல்லும் அமைப்பை உடைய லண்டன் நகரம் விரைவில் ஒரு முக்கியமான வணிக மையமாக மாறுவதற்கு இது வழிவகுத்தது.

வெற்றிவீரர் வில்லியமின் செல்வாக்கு

ரோம பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், பொ.ச. 410-⁠ல் ரோம சேனைகள் பிரிட்டனை விட்டுச் சென்றன. லண்டன் கைவிடப்பட்ட நிலையில், தேம்ஸ் வழியாக நடந்த வியாபாரமும் நொடித்துப்போனது. நார்மன்டியிலிருந்து வெற்றிவீரரான வில்லியம் வந்து 11-⁠ம் நூற்றாண்டில் கைப்பற்றும்வரை ஆங்கிலோ-சாக்ஸன் அரசர்கள் கிங்ஸ்டன் நகரில் முடிசூட்டப்பட்டார்கள்; இந்தக் குடியேற்றப் பகுதி, லண்டனிலிருந்து 19 கிலோமீட்டர் உள்நோக்கி இருந்தது; அந்தப் பகுதியில் நடந்தே எளிதாக நதியைக் கடந்து வர முடிந்தது. வில்லியம் 1066-⁠ல் வெஸ்ட்மின்ஸ்டரில் முடிசூட்டப்பட்ட பின், ரோமர் எழுப்பியிருந்த மதில்களுக்குள் லண்டனின் கோபுரத்தை கட்டினார். வியாபார வர்க்கத்தினர்மீது ஆதிக்கம் செலுத்தவும் வர்த்தகத்தை விஸ்தரிக்கவும் துறைமுகத்திற்கு செல்லும் வழியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இப்படி செய்தார். மீண்டும் வாணிகம் செழித்தது. லண்டனின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 30,000-ஆக உயர்ந்தது.

லண்டனுக்கு மேற்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில், இன்று வின்ட்ஸர் என்று அறியப்படும் கோட்டையையும் வெற்றிவீரரான வில்லியம் கட்டினார்; அதை ஒரு சுண்ணாம்பு பாறையின் மீது கட்டினார். சாக்ஸனியரின் அரச வழி குடியிருப்பாக இருந்த இடத்தைத்தான் இப்படி கோட்டையாக மாற்றி அமைத்தார்; இங்கிருந்து தேம்ஸை பார்ப்பது கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சி. பலமுறை மாற்றியமைக்கப்பட்ட பின்னர் உருவானதே வின்ட்ஸர் காஸில் அல்லது வின்ட்ஸர் மாளிகை; பிரிட்டனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இது பெரிதும் ஈர்க்கிறது.

லண்டனில் தேம்ஸ் நதியின் குறுக்கே ஒரு கற்பாலத்தைக் கட்டும் 30 ஆண்டு திட்டம் 1209-⁠ல் நிறைவு பெற்றது. இப்படிப்பட்ட கற்பாலம், ஐரோப்பாவிலேயே இங்குதான் முதன்முதலாக கட்டப்பட்டது. இந்த வித்தியாசமான கட்டமைப்பில் கடைகள், வீடுகள் மட்டுமல்லாமல் ஓர் ஆலயமும் கட்டப்பட்டது; இந்தப் பாலத்தின் தெற்கு பகுதியில், அதாவது சௌத்வர்க்கில் பாதுகாப்புக்காக இரண்டு தூக்குப் பாலங்களும் ஒரு கோபுரமும் இருந்தன.

தேம்ஸ் நதிக்கரையில் வின்ட்ஸர் அருகே உள்ள ரன்னிமீடில் வைத்துதான் இங்கிலாந்தின் அரசரான ஜான் (1167-1216), பிரபல சாசனமாகிய மாக்ன கார்டாவில் 1215-⁠ம் வருடம் முத்திரை பதித்தார். இந்தச் சாசனம் ஆங்கிலேயர்களுக்குக் குடி உரிமைகள் வழங்கியது மட்டுமல்லாமல், குறிப்பாக லண்டன் நகரத்திற்கும் அதன் துறைமுகத்திற்கும் வணிகர்களுக்கும் வாணிகம் சம்பந்தமான உரிமைகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்தது.

வளம் கொழிக்கும் தேம்ஸ்

அதற்கு பின் வந்த நூற்றாண்டுகளில் தேம்ஸில் வாணிகம் செழித்தோங்கியது. காலப்போக்கில், அந்த நதியின் வசதிகளையும் மீறி வாணிகம் அதிகரித்தது. இருநூறு வருடங்களுக்கு முன்பு, தேம்ஸின் துறையில் 600 கப்பல்களை மட்டுமே நங்கூரமிட்டு நிறுத்திவைக்க முடிந்தது; இருந்தும் சில சமயங்களில் 1,775-⁠க்கும் அதிகமான கப்பல்கள் சரக்குகளை இறக்குவதற்காகத் துறைமுகத்தில் காத்திருந்தன. இந்த நெருக்கடி காரணமாக, திருட்டு ஒரு பெரிய தொந்தரவானது. இரவில் திருடர்கள் கப்பல்களின் நங்கூரச் சங்கிலிகளை அறுத்துவிட்டு, கொள்ளையடித்தார்கள்; இவ்வாறு திருடிய பொருள்களைக் கொண்டுசெல்வதற்காக தேம்ஸில் சிறிய படகுகளை ஓட்டி சிலர் பிழைப்பு நடத்தி வந்தார்கள். இந்தப் பிரச்சினையை சரிக்கட்ட உலகின் முதல் நதிக் காவல் படை லண்டனில் நிறுவப்பட்டது. அது இன்றும் செயல்படுகிறது.

துறைமுகத்திலிருந்த இந்த நெருக்கடியைக் குறைப்பதற்கு இன்னும் அநேக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருந்தன. ஆகவே, நதியின் இரு கரைகளிலுமுள்ள தாழ்வான நிலப்பகுதியில் உலகிலேயே மிகப் பெரிய மூடப்பட்ட கப்பல்கூடத்தைக் கட்டுவதற்கு இங்கிலாந்தின் பாராளுமன்றம் 19-⁠ம் நூற்றாண்டில் ஒப்புக்கொண்டது. சர்ரி கமெர்ஷியல் டாக், லண்டன் டாக், மேற்கு மற்றும் கிழக்கிந்திய டாக் ஆகியவை 1800-களின் தொடக்கத்தில் முதன்முதலாகக் கட்டி முடிக்கப்பட்டன. அதற்கு பின் 1855-⁠ல் ராயல் விக்டோரியா டாக்கும் 1880-⁠ல் அதற்குத் துணையாக நிற்கும் ராயல் ஆல்பர்ட் டாக்கும் கட்டப்பட்டன.

தந்தையும் மகனுமான இரு பொறியாளர்கள் மார்க் ஐ. மற்றும் இஸம்பார்ட் கே. ப்ரூனல் நீருக்கடியில் முதல் சுரங்க பாதை அமைத்து தேம்ஸின் இரு கரைகளையும் 1840-⁠ல் இணைத்தார்கள். க்ரேட்டர் லண்டனில் இயங்கிவரும் நிலத்தடி ரயில் அமைப்பு முறையின் பாகமாக இன்னும் பயன்படும் இது 459 மீட்டர் நீளமானது. நவீன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் டவர் ப்ரிட்ஜ் 1894-⁠ல் கட்டி முடிக்கப்பட்டது. தூக்குப் பாலத்தின் இரு பகுதிகளும் 76 மீட்டருக்கு அகல திறந்து பெரிய கப்பல்களை அதன் இரண்டு டவர்களுக்கு மத்தியில் போகவிடுகின்றன. கிட்டத்தட்ட 300 படிகள் ஏறிச் சென்றால், ஒரு நடைபாதையைச் சென்றெட்டலாம்; அங்கிருந்து நதியோரமாக அற்புதமான காட்சிகளைக் காணலாம்.

20-⁠ம் நூற்றாண்டிற்குள், நகரத்தின் வாணிகத்தை ஈடுகட்டுவதற்குத் தேவையான அதிகமதிகமான நீராவிக் கப்பல்களுக்கு லண்டனின் கப்பல்கூடத்தில் போதுமான இடவசதி இருந்தது. அரசர் ஐந்தாம் ஜார்ஜின் பெயர் சூட்டப்பட்ட கடைசி கப்பல்கூடம் 1921-⁠ம் வருடம் கட்டப்பட்டபோது, லண்டன் உலகிலேயே “மிகப் பெரிய, செல்வச்சிறப்புமிக்க துறைமுக அமைப்பைக் கொண்டிருந்தது.”

அரண்மனைகளை, அரசகுலத்தவரை, அருங்காட்சிகளை ஆதரித்த நதி

லண்டன் வளர்ச்சியடைந்து வந்த சமயத்தில், அதன் சாலைகள் தளமிடப்படாமல் மோசமானவையாக இருந்தன; குளிர் காலத்தில் பெரும்பாலும் அவற்றைக் கடக்க முடியவில்லை. எனவே, தேம்ஸ் நதிப் போக்குவரத்தே மிக விரைவானதும் மிகச் சிறந்ததுமாக இருந்தது; தேம்ஸ், பல ஆண்டுகளாகப் போக்குவரத்து நிறைந்த நதியாக விளங்கியிருக்கிறது. படகோட்டிகள் சவாரி பெறுவதற்காக நதிக்கரையின் படிக்கட்டுகளில் இங்கும் அங்குமாக வந்து சத்தமாக “ஓர்ஸ்!” என்று கூப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்; மக்களை நதியின் இக்கரைக்கும் அக்கரைக்கும், தேம்ஸின் நதிமூலம் நோக்கி அல்லது கடல் நோக்கி அல்லது வளைந்து நெளிந்து செல்லும் ஃப்ளீட், வால்ப்ரூக் ஆகிய உபநதிகள் வழியாகக் கொண்டுசெல்வதற்குமே இந்த அழைப்பு; இந்த உபநதிகளோ பல்லாண்டுகளுக்கு முன்பே மண்ணில் புதைந்துவிட்டன; அவற்றின் இடத்திலுள்ள தெருக்களுக்கு அவற்றின் பெயர்களே உள்ளன.

காலப்போக்கில், லண்டனும் வெனிஸ் நகரம்போல் காட்சியளிக்க தொடங்கியது. அதன் கம்பீரமான அரண்மனைகளின் அடுக்கடுக்கான படிகள் நதிவரை இறங்கியவாறு அமைந்திருந்தன. தேம்ஸ் நதிக் கரையில் வசிப்பது என்பது அரச பரம்பரைக்குரிய பாணியாகிவிட்டது; க்ரீன்விச், வைட்ஹால், வெஸ்ட்மின்ஸ்டர் ஆகிய அரண்மனைகள் இதற்கு எடுத்துக்காட்டு. அதைப்போலவே, ஹாம்டன் கோர்ட், இங்கிலாந்தின் ராஜா ராணிகளின் இல்லமாகச் சேவித்தது; நதிமூலத்தின் அருகிலுள்ள வின்ட்ஸர் காஸில் இன்றுவரை அரசகுலத்தவரின் இருப்பிடமாகவே திகழ்கிறது.

1717-⁠ல் அரச குடும்பத்தார் தண்ணீரில் உல்லாசப் பயணம் சென்ற சமயத்தில் அரசர் முதலாம் ஜார்ஜை மகிழ்விப்பதற்காக ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஹான்டில் ‘நீர் இசையை’ அமைத்தார். அரசரின் உல்லாசப் படகுடன்கூட “நதியை முழுவதும் நிரப்புமளவுக்கு ஏராளமான படகுகள்” இருந்ததாக அன்றைய செய்தித்தாள் ஒன்று அறிக்கை செய்தது. அரசரின் படகருகே இருந்த மற்றொரு உல்லாசப் படகு 50 இசை வல்லுநர்களை ஏற்றிச் சென்றது. அவர்கள் வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து செல்ஸிவரை எட்டு கிலோமீட்டர் உள்நோக்கி பயணிக்கையில் ஹான்டிலின் இசையை மூன்று முறை இசைத்துவிட்டனர்.

இன்பமும் ஓய்வும் அளிக்கும் நதி

1740-களில் வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் கட்டப்படும்வரை லண்டன் பாலம் வழியாக மட்டுமே தேம்ஸை கால்நடையாகக் கடக்க முடிந்தது. பின்னர் அது திரும்பவும் புதுப்பிக்கப்பட்டது; கடைசியாக 1820-களில் புதிதாகக் கட்டப்பட்டது. முதலிலிருந்த கல் கட்டமைப்பின் 19 வளைவுகளைத் தாங்கிநின்ற தூண்கள் நதியின் வெள்ளப்போக்கைப் பேரளவில் தடுத்தன. ஆகவே, அந்தப் பாலம் இருந்த சுமார் 600 வருடங்களில் தேம்ஸ் குறைந்தது எட்டு முறை உறைந்துவிட்டது. இப்படிப்பட்ட சமயங்களில், பனிமீது “உறைபனி கண்காட்சிகள்” அமைக்கப்பட்டு, அங்கு அநேக விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அரச குடும்பத்தார் அங்கு எருதுகளை வாட்டி சாப்பிட்டனர். “தேம்ஸில் வாங்கியது” என்று லேபல் இடப்பட்ட புத்தகங்களும் விளையாட்டுச் சாமான்களும் விரைவாக விற்பனையாயின. செய்தி தகவல்களும் கர்த்தருடைய ஜெபத்தின் பிரதிகளும்கூட உறைந்த நதியில் நிறுவப்பட்ட அச்சு இயந்திரங்களில் அச்சிடப்பட்டன!

அதற்குப் பின்வந்த காலங்களில், பல்கலைக்கழக படகு போட்டி இளவேனிற்காலத்தில் வருடாவருடம் நடக்கும் ஒரு சம்பவமாயிற்று; ஆக்ஸ்ஃபர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான படகு போட்டி அது. ஒவ்வொரு படகிலும் எட்டு பேரைக் கொண்ட குழுக்கள் கிட்டத்தட்ட ஏழு கிலோமீட்டர் தூரத்தை இருபது நிமிடங்களுக்கும் குறைவான சமயத்தில் கடப்பார்கள்; இந்தப் பந்தயத்தில் பங்கெடுப்போரை உற்சாகப்படுத்துவதற்காக பட்னிக்கும் மார்ட்லேக்கிற்கும் இடையே தேம்ஸ் நதிக்கரை நெடுக மக்கள் திரண்டு நிற்பார்கள். முதல் போட்டி 1829-⁠ல் இன்னும் உள்நோக்கி தொலைவில் இருந்த ஹென்லி பகுதியில் நடத்தப்பட்டது. நதியின் கீழ்த்திசை நோக்கி இன்னொரு பகுதியில் படகு போட்டி நடத்தப்படத் தொடங்கியபோது, ஹென்லி பகுதியினர் தனியாகவே ராயல் ரிகாட்டா என்ற பந்தயத்தை நடத்த ஆரம்பித்துவிட்டனர். இது ஐரோப்பாவிலேயே மிகப் பழமையும் பிரபலமுமான படகு போட்டியாக ஆனது. உலகிலேயே துடுப்பு வலிப்பதில் மிகச் சிறந்து விளங்கும் ஆண்களும் பெண்களும், சுமார் 1,600 மீட்டர் தூரத்திற்கு படகோட்டும் பந்தயங்களில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். இந்த ரெகாட்டா கோடைக்கால பந்தயம் இப்போது முக்கியமான சமூக நிகழ்ச்சியாகிவிட்டது.

தேம்ஸ் நதி, “ஆங்கிலேய நாட்டுப்புறத்திற்கே உரிய தாழ்வான மலைகள், காடுகள், புல்வெளிகள், நாட்டுப்புறத்திலுள்ள பெரிய வீடுகள், அழகிய கிராமங்கள், சிறிய ஊர்கள் ஆகிய அனைத்தினூடேயும் செல்கையில் பற்பல விதங்களில் இன்பமளிக்கிறது. . . . அது போகிற போக்கில் செல்வதற்கு வழிநெடுக சாலை அமைக்கப்படவில்லை, ஆனால் நதியோரமாக குதிரைகள் இழுத்துச் செல்லும் படகுகளில் போக வழி உண்டு. எனவே, அந்த நதியின் போக்கில் அமைந்துள்ள நகரங்களின் சாலைகளில் வாகனத்தில் செல்லும்போது அதை ரசிக்க முடிந்தாலும், படகிலோ கால்நடையாகவோ சென்றால் மட்டுமே தேம்ஸ் நதியின் அமைதியான வனப்பை முழுமையாகக் கண்டுகளிக்க முடியும்” என்பதாக பிரிட்டன் பற்றிய வழிகாட்டி புத்தகம் ஒன்று குறிப்பிடுகிறது.

நீங்கள் இங்கிலாந்து வர திட்டமிடுகிறீர்களா? அப்படியானால் தேம்ஸை ஆராய்வதற்கும் அதன் வரலாற்றைக் கொஞ்சம் நுகர்ந்து மகிழ்வதற்கும் நேரமெடுத்துக் கொள்ளுங்கள். அது ஊற்றெடுக்கும் எழில் கொஞ்சும் நாட்டுப்புறத்திலிருந்து அதன் சுறுசுறுப்பான கழிமுகம் வரை பார்ப்பதற்கும், செய்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும் எத்தனையோ விஷயங்கள் உண்டு! “ஓல்ட் ஃபாதர் தேம்ஸ்” நிச்சயம் ஏமாற்றமளிக்கமாட்டார்.

[அடிக்குறிப்பு]

a லண்டினியும் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து லண்டன் என்ற பெயர் வருகிற போதிலும், இவ்விரு வார்த்தைகளையுமே லின் மற்றும் டின் என்ற கெல்டிய வார்த்தைகளிலிருந்தும் பெறலாம். அவ்வார்த்தைகள் இரண்டும் சேர்ந்து “ஏரி அருகிலுள்ள நகரம் [அல்லது கோட்டை]” எனப் பொருள்படும்.

[பக்கம் 27-ன் பெட்டி]

இலக்கியமும் தேம்ஸ் நதியும்

ஜெரோம் கே. ஜெரோம், த்ரீ மென் இன் அ போட் என்ற தனது புத்தகத்தில் தேம்ஸ் நதியின் அமைதியான சூழலை விவரித்தார். ஹாம்டன் கோர்ட்டிலிருந்து ஆக்ஸ்ஃபர்ட் வரை மூன்று நண்பர்கள் தங்கள் நாயுடன்கூட அந்த நதியில் உள்நோக்கி படகு வலித்து செல்லும் விடுமுறை பயணத்தை விவரிக்கிறது அந்தப் புத்தகம். 1889-⁠ல் எழுதப்பட்டு, அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட அந்த புத்தகம் “விசித்திரமான நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாய்” இன்றும் பிரபலமாக விளங்குகிறது.

த வின்ட் இன் த வில்லோஸ் என்பது பெரியவர் சிறியவர் அனைவரும் விரும்பும் மற்றொரு பிரபல கதை. தேம்ஸ் நதிக்கரையில் உள்ள பாங்பர்ன் என்ற ஊரில் வாழ்ந்த கெனத் க்ரேயம் என்பவரால் 1908-⁠ல் அது எழுதி முடிக்கப்பட்டது; தேம்ஸ் நதிக்கரையிலோ அதன் அருகிலோ வாழ்ந்த விலங்குகளைப் பற்றிய ஒரு கற்பனை கதை அது.

[பக்கம் 27-ன் பெட்டி/படம்]

அரசரும் தேம்ஸும் எதிரும் புதிருமாக

17-⁠ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஆட்சிபுரிந்த முதலாம் ஜேம்ஸ் என்ற அரசர் ஒருமுறை லண்டன் மாநகராட்சியிடமிருந்து 20,000 பவுண்ட் பணம் கேட்டார். லண்டன் நகர மேயர் மறுக்கவே, அரசர் இவ்வாறு அச்சுறுத்தினார்: “உம்மையும் உம் நகரத்தையும் என்றைக்குமாக நான் நாசமாக்குவேன். என் சட்ட மன்றங்களையும் அரசவையையும் பாராளுமன்றத்தையும் வின்செஸ்டருக்கு அல்லது ஆக்ஸ்ஃபர்ட்டுக்கு மாற்றி, வெஸ்ட்மின்ஸ்டரை வனாந்தரமாக்குவேன்; அப்போது உம் நிலை என்னவாகும் என்று யோசித்துப் பாரும்!” இதற்கு மேயரின் பதில் இதுவே: “லண்டனின் வணிகர்களுக்கு எப்போதுமே ஒரு ஆறுதல் இருக்கும்: அரசராகிய உம்மால் தேம்ஸை கொண்டுசெல்ல முடியாதே.”

[படத்திற்கான நன்றி]

From the book Ridpath’s History of the World (Vol. VI)

[பக்கம் 24-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

இங்கிலாந்து

லண்டன்

தேம்ஸ் நதி

[படத்திற்கான நன்றி]

நிலப்படம்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

[பக்கம் 2425-ன் படம்]

பிக் பென்னும் பாராளுமன்ற சபைகளும், வெஸ்ட்மின்ஸ்டர், லண்டன்

[பக்கம் 25-ன் படம்]

லண்டன் பாலம், கல்லால் கட்டப்பட்டது, 1756

[பக்கம் 25-ன் படக்குறிப்பு]

பழைய மற்றும் புதிய லண்டன் என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து: A Narrative of Its History, Its People, and Its Places (Vol. II)

[பக்கம் 26-ன் படம்]

தேம்ஸ் நதியையும் துறைமுகத்தில் நங்கூரமிட்டுக் கிடந்த நூற்றுக்கணக்கான கப்பல்களையும் காட்டும் 1803-⁠ம் வருட செதுக்கோவியம்

[படத்திற்கான நன்றி]

Corporation of London, London Metropolitan Archive

[பக்கம் 2627-ன் படம்]

1683 உறைபனி கண்காட்சி பற்றிய செதுக்கோவியம்

[படத்திற்கான நன்றி]

பழைய மற்றும் புதிய லண்டன் என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து: A Narrative of Its History, Its People, and Its Places (Vol. III)