Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பில்கிரிம்களும் பியூரிடன்களும்—அவர்கள் யார்?

பில்கிரிம்களும் பியூரிடன்களும்—அவர்கள் யார்?

பில்கிரிம்களும் பியூரிடன்களும்—அவர்கள் யார்?

வட அமெரிக்க கடற்கரையில், மாஸசூஸெட்ஸிலுள்ள பிளைமௌத் நகரத்தில் 1620 என்ற எண் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய கருங்கல் இருக்கிறது, அது பிளைமௌத் பாறை என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்திற்கு அருகில்தான் கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு முன் ஐரோப்பியர்கள் ஒரு குழுவாக வந்து காலூன்றினார்கள் என பரவலாக நம்பப்படுகிறது. அவர்களே பில்கிரிம்கள் என்பதாக அழைக்கப்பட்டவர்கள்.

உபசரிக்கும் குணம்கொண்ட இந்த பில்கிரிம்கள் அறுவடை செய்தவற்றை தங்கள் அமெரிக்க இந்திய நண்பர்கள் உண்டு மகிழ அவர்களை விருந்துக்கு அழைத்தது பற்றிய கதைகள் பலரும் அறிந்ததே. ஆனால், இந்த பில்கிரிம்கள் யார், அவர்கள் ஏன் வட அமெரிக்காவிற்கு வந்தனர்? இதற்கு விடைகாண ஆங்கிலேய அரசன் எட்டாம் ஹென்றியின் காலத்திற்கு பின்நோக்கிச் செல்வோம்.

இங்கிலாந்தில் மத கொந்தளிப்புகள்

பில்கிரிம்கள் அமெரிக்கா செல்வதற்கு 100-⁠க்கும் குறைவான வருடங்களுக்கு முன், இங்கிலாந்து ஒரு ரோமன் கத்தோலிக்க தேசமாக இருந்தது; சமயப் பாதுகாவலர் எனும் போப்பாண்டவருக்குரிய பட்டத்தை அரசனான எட்டாம் ஹென்றி பெற்றிருந்தார். அவரது ஆறு மனைவிகளில் முதல் மனைவி, ஆரகான் பகுதியைச் சேர்ந்த கேத்தரின். அவளுடன் திருமண பந்தத்தை முறிப்பதற்கு ஹென்றியை போப் ஏழாம் கிளமென்ட் அனுமதிக்காததால் அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டது.

குடும்பப் பிரச்சினைகளில் ஹென்றி மூழ்கியிருக்கையில், புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகள் ஏறக்குறைய ஐரோப்பா முழுவதிலுமுள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். முதலில், சர்ச் கொடுத்த அந்தஸ்தை இழக்க மனதில்லாததால், சீர்திருத்தவாதிகள் இங்கிலாந்திற்கு நுழைய ஹென்றி அனுமதிக்கவில்லை. அதன் பிறகோ மனதை மாற்றிக்கொண்டார். கத்தோலிக்க சர்ச் அவரது திருமண உறவை ரத்து செய்யாததால், தனக்கும் சர்ச்சுக்கும் இருந்த உறவை முறித்துக்கொள்ள முடிவு செய்தார். 1534-⁠ல் ஹென்றி, ஆங்கிலேய கத்தோலிக்கர்கள் மீது போப்புக்கு இருந்த அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சர்ச் ஆஃப் இங்லண்டின் முதன்மை தலைவர் என்று தன்னை அறிவித்துக்கொண்டார். சீக்கிரத்திலேயே, அவர் துறவி மடங்களை மூடிவிட்டு, அதன் ஏராளமான சொத்துக்களை விற்றார். 1547-⁠ல் ஹென்றி மரித்தபோது, இங்கிலாந்து புராட்டஸ்டன்ட் தேசமாக மாறிக் கொண்டிருந்தது.

ரோமுடன் ஏற்பட்ட விரிசல், ஹென்றியின் மகன் ஆறாம் எட்வர்ட்டின் காலத்திலும் தொடர்ந்தது. 1553-⁠ல் எட்வர்டின் மரணத்திற்குப் பிறகு, ஹென்றிக்கும் ஆரகானைச் சேர்ந்த கேத்தரினுக்கும் பிறந்த ரோமன் கத்தோலிக்க மகளான மேரி, ராணி ஆனார். அப்போதிலிருந்து அவர் போப்பின் அதிகாரத்திற்கு நாட்டை அடிபணியவைக்க முயற்சித்தார். அநேக புராட்டஸ்டன்ட்களை நாடுகடத்தியதாலும் சுமார் 300-⁠க்கும் அதிகமான மக்களைக் கழுமரத்தில் எரித்ததாலும், “இரத்தவெறி பிடித்த மேரி” என்ற பட்டப்பெயரை பெற்றார். ஆனால் ஏற்படவிருந்த மாற்றங்களை அவரால் தடுக்க முடியவில்லை. 1558-⁠ல் மேரி மரித்ததும், அவருடைய ஒன்றுவிட்ட சகோதரியான முதலாம் எலிசபெத் ராணியானார்; அதுமுதற்கொண்டு, இங்கிலாந்து நாட்டவரின் மத வாழ்வில் போப் எந்தவித அதிகாரமும் செலுத்தாதபடி பார்த்துக்கொண்டார்.

என்றபோதிலும், ரோம சர்ச்சைவிட்டு வெறுமனே பிரிந்துவருவது மட்டும் போதாது என சில புராட்டஸ்டன்ட்கள் நினைத்தனர்; மாறாக, ரோமன் கத்தோலிக்க மதத்தின் சுவடே தங்கள் மத்தியில் காணப்படக்கூடாது என்று நினைத்தனர். சர்ச்சின் வணக்கமுறையைச் சுத்தப்படுத்த அவர்கள் விரும்பினர், அதனால் பியூரிடன்கள் என அவர்கள் அழைக்கப்பட்டார்கள். பிஷப்புகளுக்கான தேவை இல்லையென கண்டதால் ஒவ்வொரு சபையும் தேசிய சர்ச்சிலிருந்து பிரிந்து சுயமாக இயங்க வேண்டும் என்று பியூரிடன்கள் சிலர் நினைத்தார்கள். இவர்கள் பிரிவினையாளர்கள் என அழைக்கப்பட்டார்கள்.

சச்சரவு ஏற்படுத்திய பியூரிடன்கள், எலிசபெத்தின் ஆட்சியின்போது மற்றவர்களுக்கு அறியப்படலானார்கள். சில குருமார் முறையற்ற உடைகளை அணிந்திருந்ததைக் கண்டு ராணி எரிச்சல் அடைந்தார்; அதனால், அவர்கள் இன்னின்ன உடைகள்தான் அணிய வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்தும்படி கான்டர்பரியின் தலைமை பிஷப்புக்கு 1564-⁠ல் அவர் கட்டளையிட்டார். ஆனால் கத்தோலிக்க குருமாரின் அங்கியைப் போலவே தாங்களும் அணிய நேரிடும் என்பதை முன்னுணர்ந்த பியூரிடன்கள் அந்தக் கட்டளையை ஏற்க மறுத்தனர். பிஷப்புகளையும் தலைமை பிஷப்புகளையும் கொண்ட பழைய குருவர்க்க ஆட்சியைக் குறித்து அதிக கருத்துவேறுபாடுகள் எழும்பின. எலிசபெத் ராணி, பிஷப்புகளை நீக்காமல், சர்ச்சின் தலைவியாக தனக்கு விசுவாசமாக இருப்பதாய் உறுதிமொழி கூறும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

பிரிவினையாளர்களிலிருந்து பில்கிரிம்கள்

எலிசபெத்துக்குப் பிறகு, 1603-⁠ல் முதலாம் ஜேம்ஸ் ஆட்சிக்கு வந்தார்; தன்னுடைய அதிகாரத்திற்கு அடிபணியக்கோரி பிரிவினையாளர்கள் மேல் அதிக அழுத்தத்தைக் கொண்டுவந்தார். ஆகவே ஸ்க்ரூபி நகரத்தில் இருந்த பிரிவினையாளர்களின் ஒரு சபை, 1608-⁠ல் ஹாலந்திற்கு தப்பி ஓடியது; ஏனென்றால் ஹாலந்தில் அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. என்றபோதிலும், அங்கிருந்தவர்கள் மற்ற மதங்களையும் ஒழுக்கக்கேட்டையும் கண்டும்காணாமல் விட்டதை பிரிவினையாளர்களால் சகிக்க முடியவில்லை; இங்கிலாந்தைவிட அங்கு வாழ்வது அவர்களுக்குக் கடினமாகிவிட்டது. அதனால் ஐரோப்பாவைவிட்டு வட அமெரிக்காவிற்குச் சென்று, அங்கு புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவுசெய்தார்கள். இந்தப் பிரிவினையாளர்கள், தங்கள் மத நம்பிக்கைகளுக்காக சொந்த ஊரைவிட்டு வெகு தூரம் செல்வதற்கு முன்வந்ததால், காலப்போக்கில் “பில்கிரிம்கள்” (யாத்திரிகர்கள்) என்று அழைக்கப்பட்டார்கள்.

பிரிட்டிஷ் காலனியான வர்ஜீனியாவில் குடியேற பில்கிரிம்கள் அனுமதி பெற்றார்கள், இவர்களில் பிரிவினையாளர்கள் பலரும் அடங்குவர்; இவர்கள் செப்டம்பர் 1620-⁠ல் மே ஃப்ளவர் என்ற கப்பலில் வட அமெரிக்காவிற்குப் புறப்பட்டார்கள். வட வர்ஜீனியாவிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கேப் காட் கடற்கரையை வந்தடைவதற்கு, சிறுவர்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 100 பேர் கொந்தளிப்புமிக்க வட அட்லாண்டிக் பெருங்கடலில் இரண்டு மாதம் பயணித்தார்கள். அங்கு மே ஃப்ளவர் ஒப்பந்தத்தை எழுதினார்கள்; அதில், அவர்களுக்கென்று ஒரு சமுதாயத்தை ஏற்படுத்தவும் அதன் சட்டங்களுக்குக் கீழ்ப்படியவும் விரும்புவதாக குறிப்பிட்டார்கள். டிசம்பர் 21, 1620-⁠ல் பிளைமௌத் நகரத்திற்கு அருகில் அவர்கள் குடியேறினார்கள்.

புதிய உலகில் புதிய வாழ்வு

அந்த அகதிகள் வட அமெரிக்காவின் குளிர்காலத்தை சமாளிப்பதற்குத் தயாராகவே வரவில்லை. ஆகவே சில மாதங்களிலேயே அந்தத் தொகுதியில் பாதிபேர் இறந்துவிட்டார்கள். வசந்தகாலம் வந்தபிறகுதான் மீதமுள்ளவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அவர்கள் வீடுகளைக் கட்டினார்கள், அதோடு, அங்கிருந்த அமெரிக்க இந்தியர்களைப் பார்த்து அப்பகுதிக்குரிய பயிர்களை விளைவிக்கவும் கற்றுக்கொண்டார்கள். 1621-⁠ன் இலையுதிர்கால முடிவிற்குள், பில்கிரிம்கள் சீரும் சிறப்புமாக வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார்கள், எனவே கடவுளுக்கு நன்றி சொல்ல ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கினார்கள். அதிலிருந்துதான், “தேங்ஸ் கிவ்விங் டே” கொண்டாட்டம் ஆரம்பமானது, ஐக்கிய மாகாணங்களிலும், மற்ற பல இடங்களிலும் இன்னமும் அது கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும் அநேகர் பிளைமௌத்திற்கு வந்து குடியேறியதால், 15 ஆண்டுகளுக்குள் அங்கு மக்கள்தொகை 2,000-⁠ஐத் தாண்டியது.

இதற்கிடையே, பிரிவினையாளர்களைப் போலவே இங்கிலாந்திலிருந்த சில பியூரிடன்களும், அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அக்கரையில்தான் தங்களது “வாக்குப்பண்ணப்பட்ட தேசம்” இருப்பதாக முடிவு செய்தனர். இவர்களில் ஒரு தொகுதியினர் 1630-⁠ல் பிளைமௌத்திற்கு வடக்கே ஓரிடத்தை அடைந்து மாஸசூஸெட்ஸ் பே காலனியை ஏற்படுத்தினர். 1640-குள் சுமார் 20,000 ஆங்கிலேயர்கள் நியு இங்லாண்டில் குடியேறியிருந்தார்கள். 1691-⁠ல் மாஸசூஸெட்ஸ் பே காலனி பிளைமௌத்தை கைப்பற்றிய பிறகு பிரிவினையாளர்கள் இனியும் தனிப்பிரிவாக இருக்கவில்லை. இப்போது பியூரிடன்கள் நியு இங்லாண்ட் வாசிகளின் மத வாழ்வில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதும் பாஸ்டன் அவர்களுடைய பகுதியின் ஆன்மீக மையமாக மாறியது. பியூரிடன்கள் எப்படிப்பட்ட வணக்கத்தில் ஈடுபட்டனர்?

பியூரிடன்களின் வணக்கம்

புதிய உலகில், இந்த பியூரிடன்கள் ஆரம்பத்தில் மரத்தாலான மன்றங்களைக் கட்டி அங்கு ஞாயிற்றுக்கிழமை காலைகளில் கூடினார்கள். சீதோஷ்ணம் நன்றாக இருக்கையில் அந்த மன்றத்திற்குள் எப்படியோ தாக்குப்பிடிக்க முடிந்தது; ஆனால் குளிர்காலத்திலோ, மிக வைராக்கியமான பியூரிடன்களின் சகிப்புத்தன்மையே சோதிக்கப்பட்டது. கூடிவந்த இடத்தில் அனலூட்டும் வசதி இல்லை, எனவே, சீக்கிரத்தில் சர்ச் அங்கத்தினர்கள் குளிரில் நடுங்கினார்கள். பிரசங்கிப்பவர்கள் சைகைகளுடன் பேச்சுக்கொடுக்கும்போது பயங்கரமான ஜில் காற்றில் கைகள் உறைந்துபோகாதிருக்க அவர்கள் கையுறைகளை அணிந்துகொண்டார்கள்.

பியூரிடன்களின் நம்பிக்கைகள், பிரெஞ்சு புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதியான ஜான் கால்வினின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. முன்விதித்தல் கோட்பாட்டை அவர்கள் நம்பினார்கள்; அதாவது, யாரை காப்பாற்றுவது யாரை எரிநரகத்தில் வாதிப்பது என்று கடவுள் முன்கூட்டியே தீர்மானித்துவிடுகிறார் என நம்பினார்கள். ஆகவே, மனிதர்கள் எப்படித்தான் நடந்துகொண்டாலும் கடவுளுக்கு முன்பாக தங்கள் நிலைநிற்கையை மாற்றமுடியாது என நினைத்தார்கள்; ஒருவர் மரித்த பிறகு அவர் சொர்க்கத்தில் இன்பமாக இருப்பாரா அல்லது நரகத்தில் என்றென்றும் வாதிக்கப்படுவாரா என்பது யாருக்கும் தெரியாது என அவர்கள் கருதினார்கள்.

நாளடைவில், மனந்திரும்புதலைப் பற்றி பியூரிடன்கள் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். கடவுள் இரக்கமுள்ளவராக இருந்தாலும், தமது சட்டங்களை மீறுபவர்களை நேரடியாக நரகத்தில் தள்ளிவிடுவார் என்று எச்சரித்தார்கள். அந்தப் பிரசங்கிப்பாளர்கள், மக்களை தங்கள் பிடியில் வைத்துக்கொள்வதற்காக எரிநரகத்தைப் பற்றி போதித்தார்கள். 18-⁠ம் நூற்றாண்டில் “சினம் கொண்ட கடவுளின் கையில் பாவிகள்” என்ற தலைப்பில் ஜானதன் எட்வர்ட்ஸ் எனும் பிரசங்கிப்பாளர் பேச்சு கொடுத்தார். அவர் நரகத்தை படுபயங்கரமான இடமாக விவரித்ததால் சபையினர் கதிகலங்கிப் போனார்கள்; அதன்பிறகு மற்ற குருமார் அவர்களை ஆசுவாசப்படுத்த வேண்டியிருந்தது.

மாஸசூஸெட்ஸில் பிரசங்கித்த பிற தொகுதி சுவிசேஷகர்களின் உயிர் ஆபத்தில் இருந்தது. க்வேக்கர் தொகுதியின் பிரசங்கிப்பாளர் மேரி டையரை, அதிகாரிகள் மூன்று முறை துரத்தியடித்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் திரும்பவந்து தன் கருத்துக்களை பரப்பினார். ஆகவே கடைசியாக ஜூன் 1, 1660-⁠ல் பாஸ்டனில் அவருக்கு தூக்கு தண்டனை கொடுத்தனர். வைராக்கியமான பியூரிடன் மதத்தலைவர்கள் தங்களை எதிர்த்தவர்களை எப்படி நடத்தினார்கள் என்பதை ஃபிலிப் ரேட்க்ளிஃப் மறந்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை. அவர் அரசாங்கத்திற்கும் சேலம் நகரத்தில் இருந்த சர்ச்சுக்கும் எதிராக பேசினார். எனவே அந்த மதத்தலைவர்கள் அவரை சாட்டையால் அடித்து அபராதம் விதித்தனர். அதுமட்டுமல்ல, அவர் அதை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவரது காதுகளை வெட்டி அவரை அனுப்பிவிட்டனர். பியூரிடன்களின் மத சகிப்பின்மையால் மாஸசூஸெட்ஸில் இருந்த மக்கள் வெளியேறினர், அது மற்ற காலனிகள் வளர வித்திட்டது.

மேட்டிமையினால் வன்முறை

அநேக பியூரிடன்கள் கடவுளால் “தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என்று தங்களை தாங்களே நினைத்துக்கொண்டு, அங்கிருந்த குடிமக்களையே குடியுரிமை இல்லாதவர்கள்போல கீழ்த்தரமாக கருதினர். இந்த மனப்பான்மை குடிமக்களின் ஆத்திரத்தைக் கிளறியதால், அவர்களில் சிலர் அடிதடியில் இறங்கினர். அதனால், பியூரிடன் தலைவர்கள் ஓய்வுநாள் சட்டங்களை கொஞ்சம் தளர்த்தி, வணக்கத்திற்கு செல்லும்போது துப்பாக்கிகளை எடுத்துச்செல்ல அனுமதித்தனர். பின்பு, 1675-⁠ல் நிலைமை இன்னும் மோசமாக ஆனது.

வாம்ப்பனோவாக் அமெரிக்க இந்தியர்களின் தலைவன் மெடகாமெட்​—⁠அரசர் ஃபிலிப் என்றும் அழைக்கப்பட்டவர்​—⁠தம் மக்களின் குடியிருப்பு பகுதிகள் பறிபோவதைப் பார்த்தபோது, பியூரிடன்களின் குடியிருப்புகளைச் சூறையாடி, அவர்கள் வீடுகளை எரித்து, அவர்களையும் படுகொலை செய்யத் தொடங்கினார். பியூரிடன்களும் பழிக்குப்பழிவாங்கினர், இந்தச் சண்டை பல மாதங்களுக்கு நீடித்தது. ஆகஸ்ட் 1676-⁠ல், பியூரிடன்கள் ரோட் தீவில் ஃபிலிப்பை கைதுசெய்தனர். அவருடைய தலையைத் துண்டித்து உடலை நான்கு கூறாக ஆக்கினர். இவ்வாறு, ஃபிலிப் ராஜாவின் போர் முடிவுக்கு வந்தது, அத்துடன் நியு இங்லாண்டில் குடியிருந்த மக்களுக்கும் சுதந்திரம் பறிபோனது.

18-ஆம் நூற்றாண்டின்போது, பியூரிடன்கள் தங்கள் வைராக்கியத்தை புது விதமாக வெளிக்காட்டினர். மாஸசூஸெட்ஸில் இருந்த சில பிரசங்கிப்பாளர்கள் ஆங்கிலேய ஆட்சியை குறை கூறுவதன் மூலம் சுதந்திர தாகத்தைத் தூண்டினர். புரட்சி பற்றி அவர்கள் பேசியபோது அரசியலையும் மதத்தையும் கலந்தனர்.

பியூரிடன்கள் பெரும்பாலும் கடின உழைப்பாளிகளாக, தைரியசாலிகளாக, தங்களுடைய மதத்தில் அதிக ஈடுபாடு உடையவர்களாக இருந்தனர். “பியூரிடனின் பண்பு” மற்றும் “பியூரிடனின் நேர்மை” பற்றி மக்கள் இன்னமும் பேசுகின்றனர். ஆனால் நேர்மையாக இருப்பது மட்டுமே ஒருவரை தவறான போதனைகளிலிருந்து சுத்தமாக்கிவிடாது. அரசியலோடு மதத்தை இணைப்பதை இயேசு கிறிஸ்து தவிர்த்தார். (யோவான் 6:​15; 18:36) மேலும், மற்றவர்களை கொடூரமாக நடத்துவது, “அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்னும் அடிப்படை சத்தியத்திற்கு நேர்மாறானது​—1 யோவான் 4:8.

எரிநரகம், முன்விதித்தல் போன்ற பைபிளுக்கு முரணான கோட்பாடுகளை உங்கள் மதம் கற்றுத் தருகிறதா? உங்கள் மதத்தலைவர்கள் அரசியல் பிரச்சாரங்களில் பங்குகொள்கிறார்களா? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை ஊக்கமாகப் படியுங்கள். உண்மையில் தூய்மையானதும் கடவுளுக்கு ஏற்கத் தகுந்ததுமான ‘மாசற்ற சுத்தமான தெய்வ வழிபாட்டை’ கண்டுபிடிக்க அது உங்களுக்கு உதவும்.​—யாக்கோபு 1:​27, தி.மொ.

[பக்கம் 13-ன் பெட்டி/படம்]

பியூரிடன்களும் எரிநரகமும்

எரிநரகத்தைப் பற்றி பிரசங்கித்ததன் மூலம், பியூரிடன்கள் கடவுளுடைய வார்த்தையைப் புரட்டிவிட்டனர். மரித்தவர்கள் வலியையோ சந்தோஷத்தையோ எதையுமே உணரமுடியாத நிலையில் இருப்பதாக பைபிள் கற்பிக்கிறது. (பிரசங்கி 9:​5, 10) அதோடு, மக்களை எரிநரகத்தில் வதைக்கும் எண்ணம் உண்மைக் கடவுளின் “இருதயத்தில் தோன்றினதுமில்லை.” (எரேமியா 19:5; 1 யோவான் 4:8) வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளுமாறு மக்களிடம் அவர் பரிவோடு கேட்கிறார், மேலும் தவறு செய்பவர்கள் மனம் திரும்பாதபோதும் கரிசனையுடன் நடந்துகொள்கிறார். (எசேக்கியேல் 33:11) ஆனால், இந்த பைபிள் சத்தியங்களுக்கு நேர்மாறாக, பியூரிடன் பிரசங்கிப்பாளர்கள் கடவுளை கொடியவராகவும் பழிவாங்குபவராகவும் சித்தரித்தனர். அதுமட்டுமல்ல, உயிரை துச்சமாக கருதி, தங்களை எதிர்த்தவர்களை அடக்க வன்முறையைக் கையாண்டனர்.

[பக்கம் 10-ன் படம்]

பில்கிரிம்கள் வட அமெரிக்காவிற்கு வந்து சேருகின்றனர், 1620

[படத்திற்கான நன்றி]

Harper’s Encyclopædia of United States History

[பக்கம் 12-ன் படம்]

முதன்முறையாக தேங்ஸ் கிவ்விங் டே கொண்டாடுகின்றனர், 1621

[பக்கம் 12-ன் படம்]

பியூரிடன்கள் கூடிவந்த இடம், மாஸசூஸெட்ஸ்

[பக்கம் 12-ன் படம்]

ஜான் கால்வின்

[பக்கம் 12-ன் படம்]

ஜானதன் எட்வர்ட்ஸ்

[பக்கம் 13-ன் படம்]

ஆயுதங்களோடு சர்ச்சுக்கு செல்லும் பியூரிடன் தம்பதியர்

[பக்கம் 11-ன் படத்திற்கான நன்றி]

Library of Congress, Prints & Photographs Division

[பக்கம் 12-ன் படங்களுக்கான நன்றி]

மேலே இடது: Snark/Art Resource, NY; மேலே வலது: Harper’s Encyclopædia of United States History; ஜான் கால்வின்: Portrait in Paul Henry’s Life of Calvin, from the book The History of Protestantism (Vol. II); ஜானதன் எட்வர்ட்ஸ்: Dictionary of American Portraits/Dover

[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]

Photos: North Wind Picture Archives