Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொன்னான காலம்?

பொன்னான காலம்?

பொன்னான காலம்?

நேரம் காலை 6:30 மணி. ஆப்பிரிக்காவிலுள்ள சோவேட்டோ நகர், குளிரின் பிடியில் சுருண்டு கிடக்கிறது. படுக்கையை விட்டு எவலன் எழுந்திருக்க வேண்டும். a ஆனால் வீட்டை கதகதப்பாக வைக்கும் சாதானம் இல்லாததால் எழுந்திருப்பது பெரும் பாடுதான்.

விண்விண்ணென்று வலியெடுக்கும் முழங்கால்களை மெதுவாக நகர்த்தி கட்டிலின் ஓரத்திற்குக் கொண்டுவருகிறார். பிறகு கஷ்டப்பட்டு எழுந்து உட்காருகிறார். கொஞ்ச நேரத்திற்கு அப்படியே அசையாமல் இருக்கிறார். முழங்கால் வலி மெதுமெதுவாக குறைகிறது. சக்தியையெல்லாம் திரட்டி எழுந்து நிற்கிறார். உடம்பெல்லாம் ஒரே வலி, தாங்க முடியாமல் முனகுகிறார். இடுப்பில் கையை வைத்துக்கொண்டு, “வெட்டுக்கிளியைப் போல நடை தட்டுத்தடுமாற,” மெதுவாக பாத்ரூமுக்குப் போகிறார்.​—பிரசங்கி 12:5, பொது மொழிபெயர்ப்பு. b

‘இது உண்மையிலேயே ஒரு சாதனைதான்!’ என எவலன் மனதுக்குள் சொல்லிக்கொள்கிறார். இன்னொரு நாள் உயிருடன் இருப்பதும் சாதனை, வேதனைத் தருகிற கைகால்களை வைத்துக்கொண்டு நடமாடுவதும் சாதனை.

அதேசமயத்தில் அவருக்கு இன்னொரு கவலை. “என் புத்தி பேதலித்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது” என அவர் கூறுகிறார். இப்போதெல்லாம் சாவிக்கொத்தை அவ்வப்போது தொலைத்துவிடுகிறார், என்றாலும் அவரது புத்தி கூர்மையாகத்தான் இருக்கிறது. “வயதான காலத்தில் சிலருக்கு புத்தி மங்கிவிடுவதுபோல் எனக்கும் ஆகிவிடக்கூடாது என்றுதான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என்கிறார் அவர்.

இளவயதில், முதுமையைப் பற்றி எவலன் நினைத்ததே கிடையாது. ஆனால் திடீரென்று காலம் உருண்டோடிவிட்டது போல் உணருகிறார். இப்போது, அவருக்கு 74 வயது என்பதை வேதனை அளிக்கிற அவரது உடல் சதா ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

எவலனைவிட கொஞ்சம் நல்ல நிலையில் இருக்கும் சிலர்​—⁠தீராத வியாதியோ மன அழுத்தமோ இல்லாத சிலர்​—⁠தங்கள் முதுமைக் காலத்தை பொன்னான காலமாக நினைக்கலாம். பூர்வத்தில் வாழ்ந்த ஆபிரகாமைப் போல் அவர்கள் ‘நல்ல நரைவயதையும், பூரண ஆயுசையும்’ எட்டியிருக்கலாம். (ஆதியாகமம் 25:8) மற்றவர்களோ ‘துயர நாட்களையும் ஆண்டுகளையும்’ அனுபவிப்பதால் “வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே” என்று சொல்லலாம். (பிரசங்கி 12:1, பொ.மொ.) ஓர் ஆய்வின்போது, ஓய்வுபெறும் காலத்தைப் பற்றி நிறைய பேர் நம்பிக்கையில்லாமல் பேசியதால், பொன்னான காலத்தை இனி “இருண்ட காலம்” என்றுதான் அழைக்க வேண்டுமென நியூஸ்வீக் பத்திரிகை குறிப்பிட்டது.

முதுமைக் காலத்தை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்? முதியோர் எதிர்ப்படும் சவால்கள் சில யாவை? வயதான காலத்தில் புத்தி மங்கிப்போவதைத் தவிர்க்கவே முடியாதா? முதிர்வயதில் மன நிம்மதியைப் பெருகச் செய்வது எப்படி?

[அடிக்குறிப்புகள்]

a இத்தொடர் கட்டுரைகளில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b பிரசங்கி என்ற மிகப் பழமையான பைபிள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனம், வயோதிகத்தின் கஷ்டங்களை கவிதை நடையில் நன்கு விவரிப்பதாய் பல காலமாக ஏற்கப்பட்டுள்ளது.