முதுமை எனும் சவாலை சந்தித்தல்
முதுமை எனும் சவாலை சந்தித்தல்
“எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது; அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன, நாங்களும் பறந்துவிடுகின்றோம்.” (சங்கீதம் [திருப்பாடல்கள்] 90:10, பொது மொழிபெயர்ப்பு) 3,000 ஆண்டுகள் பழமையான இந்தப் பாடல், முதுமை எனும் சவால் தொன்றுதொட்டே இருந்துவந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. மருத்துவத்தில் மெச்சத்தக்க முன்னேற்றங்கள் செய்யப்பட்டிருக்கிற போதிலும், முதுமையின் சில அம்சங்கள் ‘துன்பத்தையும் துயரத்தையும்’ தருகின்றன. அவை யாவை, இவற்றால் வரும் சவால்களை சிலர் எப்படி சந்தித்து வருகிறார்கள்?
முதிர்வயதிலும் கூர் மதி
“எனக்கிருக்கும் பயமெல்லாம், வயதாவதால் என் மனநிலை பாதிக்கப்பட்டுவிடுமோ என்பதுதான்” என 79 வயது ஹான்ஸ் கவலையோடு கூறுகிறார். மற்ற முதியவர்களைப் போல் தனக்கும் ஞாபக மறதி ஏற்படலாம் என்ற எண்ணமே அவருக்கு கொடுங்கனவாக இருந்தது. மதிப்புமிக்க மூளையை “பொற்கிண்ணி” என பூர்வகால கவிஞர் ஒருவர் அழைத்தார், இதில்தான் பொக்கிஷம் போன்ற நினைவுகள் சேகரிக்கப்படுகின்றன, எனவே இந்த மூளையைக் கட்டுப்படுத்துவது கஷ்டமாகிவிட்டதை நினைத்து அவர் கவலைப்பட்டார். (பிரசங்கி 12:6) “இயல்பாகவே, வயது ஆகஆக மூளை சரியாக வேலை செய்யாதா?” என அவர் கேட்கிறார்.
ஹான்ஸைப் போலவே நீங்களும் பெயர்களை மறந்துவிடுகிறீர்களா? அல்லது அப்படிப்பட்ட ஞாபக மறதி ஏதோ பெரிய மனக்கோளாறின் ஆரம்பமாக இருக்கலாமென சந்தேகப்படுகிறீர்களா? அப்படியென்றால், தயவுசெய்து இதை மனதில் வையுங்கள்: எல்லா வயதினருக்கும் ஞாபக மறதி ஏற்படுகிறது; வயதானோருக்கு ஏற்படும் மன பாதிப்புகள் பொதுவாக டிமென்ஷியா கோளாறினால் (அறிவாற்றல் குறைவினால்) ஏற்படுவதில்லை. a வயது ஆகஆக சிறிது ஞாபக மறதி ஏற்படுவது சகஜம்தான் என்றாலும், “முதியவர்கள் பெரும்பாலோர் கடைசிவரை எவ்வித மன பாதிப்புகளும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்” என டாக்டர் மைக்கேல் டி. லிவி கூறுகிறார்; இவர் நியு யார்க்கிலுள்ள ஸ்டேட்டன் ஐலன்ட் யுனிவர்ஸிட்டி ஹாஸ்பிட்டலில், நடத்தை சார்ந்த அறிவியல் துறையின் சேர்மன்.
முதியவர்களைவிட இளையவர்கள் விவரங்களை சீக்கிரத்தில் ஞாபகப்படுத்திச் சொல்வார்கள் என்பது உண்மைதான். ஆனால் “நேரத்தை மட்டும் கணக்கில் எடுக்காதிருந்தால், முதியவர்களுக்கும் இளையவர்களுக்கும் ஒரேபோல் ஞாபகசக்தி இருப்பதாகத் தெரியவருகிறது” எனச் சொல்கிறார்
நரம்பியல் நிபுணர் ரிச்சர்ட் ரெஸ்டாக். சொல்லப்போனால், போதிய கல்வியும் பயிற்சியும் அளிக்கப்படுகையில், முதியோரின் ஆரோக்கியமான மூளை தொடர்ந்து கற்றுக்கொள்ளவும், ஞாபகம் வைக்கவும், குறிப்பிட்ட திறமைகளை மேம்படுத்தவும்கூட செய்கிறது.ஞாபக மறதியும் குணப்படுத்தக்கூடிய கோளாறுகளும்
யாருக்காவது ஞாபக மறதி இன்னும் மோசமாக இருந்தால்? அப்போதும்கூட, டிமென்ஷியாதான் காரணம் என உடனடியாக முடிவுசெய்துவிடக் கூடாது. வேறுபல கோளாறுகளாலும்கூட முதிர்வயதில் ஞாபக மறதியும் திடீர் குழப்பமும் ஏற்படலாம்; அவை குணமாகக்கூடியவை. அநேக சமயங்களில் இவை முதுமைக் கோளாறுகள் என தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. மருத்துவர்கள்கூட சிலசமயங்களில் அப்படித் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். இது முதியவர்களுக்கு மதிப்புக்குறைவாக இருப்பதோடு, தகுந்த மருத்துவ சிகிச்சை பெறுவதிலிருந்தும் அவர்களைத் தடை செய்கிறது. இந்தக் கோளாறுகளில் சில யாவை?
ஊட்டச்சத்துக் குறைவு, நீர்ச்சத்துக் குறைவு, ரத்தசோகை, தலைக்காயம், தைராய்டு பிரச்சினைகள், வைட்டமின் குறைவு, மருந்துகளின் பக்கவிளைவுகள், அல்லது இடமாற்றம்கூட திடீரென, என்றுமில்லாத அளவு குழம்பிப்போவதற்கு காரணமாக இருக்கலாம். மன அழுத்தம் வெகுநாள் நீடிக்கும்போது ஞாபக மறதிப் பிரச்சினைகள் ஏற்படலாம்; மேலும், நோய்த்தொற்றுகளாலும் முதியோருக்கு மனக்குழப்பம் ஏற்படுவது நன்கு அறியப்பட்டிருக்கிறது. முதியோருக்கு ஏற்படும் ஞாபக மறதிக்கும் மனக்குழப்பத்துக்கும் மனச்சோர்வுகூட காரணமாக இருக்கலாம். ஆகவே, “திடீரென குழப்பம் ஏற்படும்போது அது முதுமையின் கோளாறுதான் என ஒருபோதும் அசட்டை செய்துவிடக் கூடாது” என டாக்டர் லிவி அறிவுரை தருகிறார். முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்வது, அந்த அறிகுறிகளுக்கான உண்மையான காரணத்தைக் கண்டுபிடிக்க உதவலாம்.
மனச்சோர்வை சமாளித்தல்
மனிதருக்கு, ஏன் கடவுளுடைய உத்தம ஊழியர்களுக்குக்கூட, மனச்சோர்வு புதிய ஒன்றல்ல. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு அறிவுரை வழங்க வேண்டியிருந்தது: “மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:14, பொ.மொ) அழுத்தம் நிறைந்த நம் காலத்தில் இது இன்னுமதிகம் அவசியம். ஆனால், முதியோர் மத்தியில் மனச்சோர்வு பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படாமலேயே போவது அல்லது வேறெதோ கோளாறென தவறாக நினைக்கப்படுவது வருத்தமான விஷயம்.
வயது ஆகஆக விரக்தியும் சிடுசிடுப்பும் அதிகமாகும் என்ற தவறான எண்ணம் நிலவிவருவதால், அப்படிப்பட்ட அறிகுறிகள் முதுமையின் இயல்பான அம்சங்கள் என மற்றவர்கள் நினைக்கலாம்; முதியோரும்கூட அவ்வாறு நினைக்கலாம். “ஆனால் இது உண்மையல்ல” என முதியோருக்கு சிகிச்சையளித்தல் என்ற ஆங்கில நூல் குறிப்பிடுகிறது. “முதியோருக்கு மனச்சோர்வு ஏற்படுவது முதுமையின் இயல்பான அம்சமே அல்ல” என்றும் அது சொல்கிறது.
அவ்வப்போது சோர்ந்துவிடுவதைவிட, வெகு காலத்திற்கு அப்படியே கடும் மனச்சோர்வில் மூழ்கிவிடுவதே பெரிய பிரச்சினை. இது பல விபரீதங்களுக்கு வழிநடத்துவதால் இந்நிலையை அசட்டை செய்யவே கூடாது. அப்படிப்பட்ட மனச்சோர்வை குணப்படுத்தாமல் விட்டதால் அது இன்னும் தீவிரமாகி, நம்பிக்கையிழந்த சில b—மாற்கு 2:17.
நோயாளிகளை தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டியிருக்கிறது. முதியோருக்கு ஏற்படும் மனச்சோர்வின் பயங்கரமான அம்சம் என்னவென்றால், “மனக்கோளாறுகளிலேயே மிக எளிதாக குணப்படுத்தக்கூடியதும் இதுதான், கவனிக்காமல் அப்படியே விட்டால் உயிருக்கு மிக ஆபத்தாக ஆகிவிடக்கூடியதும் இதுதான்” என டாக்டர் லிவி விளக்குகிறார். மனச்சோர்வு நீடித்தால், மனக்கோளாறுகளில் தேர்ச்சிபெற்ற நிபுணரிடம் சிகிச்சை பெற வேண்டியிருக்கலாம்.யெகோவா ‘மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறார்’ என்பதால் மனச்சோர்வடைந்தவர்கள் நம்பிக்கையோடு இருக்கலாம். (யாக்கோபு 5:11) ‘நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு அவர் சமீபமாயிருக்கிறார்.’ (சங்கீதம் 34:18) சொல்லப்போனால், அவர் ‘மனச்சோர்வுற்றோருக்கு ஆறுதல் அளிப்பதில்’ நிகரற்றவர்.—2 கொரிந்தியர் 7:6, நியூ அமெரிக்கன் ஸ்டான்டர்டு பைபிள்.
லாயக்கற்றவர்களாக உணர வேண்டாம்
“முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளி விடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்” என 3,000 ஆண்டுகளுக்கும் முன் உண்மையுள்ள தாவீது ராஜா ஜெபம் செய்தார். (சங்கீதம் 71:9) 21-ஆம் நூற்றாண்டில்கூட, அதேவிதமாக முதியோர் உணருவது அபூர்வமல்ல; இனி எதற்கும் லாயக்கற்றவர்களாகக் கருதப்படுவோமோ என அவர்கள் பயப்படலாம். மோசமான உடல்நிலையின் காரணமாக ஏற்படும் குறைபாடுகளால் மிக எளிதில் லாயக்கற்ற உணர்வு உண்டாகலாம்; மேலும், கட்டாய ஓய்வு பெறுவது அவர்களுடைய சுயமதிப்பைக் குறைக்கலாம்.
இருந்தாலும், நம்மால் செய்ய முடியாதவற்றை நினைத்து சோர்வடைவதற்குப் பதிலாக, செய்ய முடிகிறவற்றில் கவனம் செலுத்தினால் ஓரளவு சுயமதிப்பைக் காத்துக்கொள்ளலாம்; நம்மால் பிரயோஜனமுண்டு என்ற உணர்வையும் தக்கவைத்துக் கொள்ளலாம். இது சம்பந்தமாக, ஐநா சங்கத்தின் ஓர் அறிக்கை இவ்வாறு பரிந்துரை செய்கிறது: ‘முறைப்படி அல்லது மற்றபடி கற்றுக்கொள்வது, சமுதாய அமைப்புகளில் சேர்ந்து பணியாற்றுவது, மத நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து முன்னேற வேண்டும்.’ யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான எர்னெஸ்ட் என்பவர் சுவிட்சர்லாந்தில் ஒரு பேக்கரியில் வேலை பார்த்தவர்; இப்போது ஓய்வுபெற்றிருக்கும் அவர், ‘கற்றுக்கொள்வதன் மூலம் தொடர்ந்து முன்னேறுவதற்கு’ சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். 70 வயதைத் தாண்டிவிட்ட பிறகு, ஒரு கம்ப்யூட்டரை வாங்கி அதைக் கற்றுக்கொள்ள அவர் முடிவு செய்தார். அதே வயதைச் சேர்ந்த மற்றவர்கள், புதிய தொழில்நுட்பம் என்றாலே பயப்படும் சமயத்தில் அவர் மட்டும் ஏன் அதைக் கற்றுக்கொள்ள விரும்பினார்? “முதலாவதாக, வயது கூடினாலும் மனதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள நினைத்தேன்; இரண்டாவதாக, பைபிள் ஆராய்ச்சிக்கும் கிறிஸ்தவ சபை சம்பந்தப்பட்ட வேலைகளுக்கும் உதவியாயிருக்கும் லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள நினைத்தேன்” என்கிறார் அவர்.
ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடுவது முதியோரின் அடிப்படைத் தேவைகள் பலவற்றை நிறைவு செய்யும்; அதாவது வாழ்க்கையில் ஒருவித நோக்கத்தையும் நிறைவையும் தருவதோடு கொஞ்சம் வருமானத்தையும் அளிக்கும். ‘மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதும்’ மனிதருக்கு கடவுள் தந்துள்ள ஈவு என ஞானியாகிய சாலொமோன் ராஜா குறிப்பிட்டார்; மேலும், “மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்” என்றுகூட குறிப்பிட்டார்.—பிரசங்கி 3:12, 13.
முடிந்தளவு செய்வது
அநேக சமுதாயங்களில், முதியவர்களே அடுத்தடுத்த சந்ததிகளுக்கு அறிவூட்டி, தார்மீக மற்றும் ஆன்மீக நெறிமுறைகளைக் கற்றுத் தருகிறார்கள். தாவீது ராஜா இவ்வாறு எழுதினார்: “கடவுளே, உம் கைவன்மையையும் ஆற்றலையும் இனிவரும் தலைமுறைக்கு நான் அறிவிக்குமாறு வயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட என்னைக் கைவிடாதேயும்.”—சங்கீதம் [திருப்பாடல்கள்] 71:18, பொ.மொ.
ஆனால் உடல்நிலை அல்லது சூழ்நிலை காரணமாக மிகவும் தளர்வுற்றிருக்கும் முதியோரின் விஷயத்தில்? 79 வயதுடைய சாரா ஒரு யெகோவாவின் சாட்சி; தான் சோர்வு அடைந்திருப்பதாக கிறிஸ்தவ மூப்பர் ஒருவரிடம் யாக்கோபு 5:16) “பல ஆண்டுகளாக, நீங்கள் கடவுளோடு ஒரு நெருங்கிய பந்தத்தை வளர்த்து வந்திருக்கிறீர்கள். இப்போது அந்தப் பந்தத்திலிருந்து நாங்கள் எல்லாரும் பயன்பெற நீங்கள் உதவலாம்; உங்கள் தனிப்பட்ட ஜெபத்தில் எங்களுக்காக வேண்டிக்கொள்ளலாமல்லவா!” என அந்த மூப்பர் சொன்னார். மேலும், “சகோதரியே, எங்களுக்கு உங்கள் ஜெபம் தேவை” என அவர் சொன்னதும் சாரா மிகுந்த உற்சாகம் பெற்றார்.
தெரிவித்தார். “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது” என்ற பைபிள் நியமத்தை அந்த மூப்பர் அவருக்கு நினைப்பூட்டினார். (சாரா உணர்ந்த விதமாக, மற்றவர்கள் சார்பாக முதியோர் இரவும் பகலும் பிரயாசப்படுவதற்கு சிறந்த வழி ஜெபம் செய்வதாகும்; அது பயனளிக்கும், அர்த்தமுள்ள வழியாகும். (கொலோசெயர் 4:12; 1 தீமோத்தேயு 5:5) அதேசமயம், அப்படிப்பட்ட ஜெபங்கள், ‘ஜெபத்தைக் கேட்கிறவராகிய’ யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல விசுவாசமுள்ள முதியோருக்கு உதவுகின்றன.—சங்கீதம் 65:2; மாற்கு 11:24.
முதியோருக்குக் குறைபாடுகள் இருந்தாலும், தங்கள் அனுபவங்களையும் வளங்களையும் தாராளமாக அள்ளி வழங்கும் பட்சத்தில், அவர்கள் சமுதாயத்தின் மதிப்புமிக்க ஆஸ்திகளாக இருக்கிறார்கள். “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்” என்பதை அவர்கள் நிரூபிக்கிறார்கள்.—நீதிமொழிகள் 16:31.
ஆனாலும் நாம் இவ்வாறெல்லாம் கேட்கலாம்: வயது ஆகஆக என்ன எதிர்காலம் காத்திருக்கிறது? முதிர்வயதில் சந்தோஷமாக வாழ முடியுமென எதிர்பார்ப்பது நடைமுறையானதா?
[அடிக்குறிப்புகள்]
a “65 வயதுக்கும் மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தினர் டிமென்ஷியா கோளாறினால் பாதிக்கப்படாதவர்கள்” என ஆராய்ச்சியாளர்கள் சிலர் சொல்கிறார்கள். டிமென்ஷியாவுக்குரிய சிகிச்சைகள் சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு, செப்டம்பர் 22, 1998, விழித்தெழு! இதழில், “அல்ஸைமர் நோய்—துன்பத்தைக் குறைத்தல்” என்ற தொடர்கட்டுரைகளைக் காண்க.
b எவ்வித குறிப்பிட்ட சிகிச்சையையும் விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை. ஆனால் பைபிள் நியமங்களுடன் ஒத்துப்போகும் சிகிச்சை முறைகளைத் தேர்ந்தெடுக்க கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஜனவரி 8, 2004, விழித்தெழு! ஆங்கில இதழில், “மனக்கோளாறுகளைப் புரிந்துகொள்ளுதல்” என்ற தொடர்கட்டுரைகளைக் காண்க.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
அவசரகதியில் இயங்கும் நவீன உலகில் தாங்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பதாக முதியோர் நினைக்கிறார்கள்
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
முதியோருக்கு உதவும் வழிகள்
◼ கண்ணியமாய் நடத்துங்கள். ‘முதிர்வயதுள்ளவரைக் கடிந்துகொள்ளாமல், அவரைத் தகப்பனைப் போலவும், . . . முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப் போலவும் . . . பாவித்து புத்திசொல்லு.’—1 தீமோத்தேயு 5:1, 2.
◼ கவனமாகச் செவிகொடுத்துக் கேளுங்கள். ‘கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருங்கள்.’—யாக்கோபு 1:19.
◼ அனுதாபம் காட்டுங்கள். ‘நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாதிருங்கள்.’—1 பேதுரு 3:8, 9.
◼ எப்போது உற்சாகம் தேவையென பகுத்தறியுங்கள். “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.”—நீதிமொழிகள் 25:11.
◼ உங்கள் வேலைகளில் அவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். “உபசரிக்க நாடுங்கள்.”—ரோமர் 12:13.
◼ நடைமுறை உதவி அளியுங்கள். “ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலை கொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.”—1 யோவான் 3:17, 18.
◼ நீடிய பொறுமை காட்டுங்கள். ‘நீங்கள் உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்ளுங்கள்.’—கொலோசெயர் 3:12.
முதியவர்களை அக்கறையோடு கவனித்துக் கொள்வதன் மூலம் நாம் கடவுளுடைய தராதரங்களுக்கு மரியாதை காட்டுகிறோம்; ஏனென்றால் ‘முதிர்வயதுள்ளவர் முகத்தைக் கனம் பண்ண வேண்டும்’ என அவரது வார்த்தை சொல்கிறது.—லேவியராகமம் 19:32.
[பக்கம் 6-ன் படம்]
முழுமையான மருத்துவப் பரிசோதனை பயனளிக்கலாம்