அன்புக்கு ஏங்கி
அன்புக்கு ஏங்கி
முன்னொரு காலத்தில் லேயாள் என்ற ஒரு பெண் வாழ்ந்து வந்தாள்; துருக்கி என இன்று அழைக்கப்படுகிற நாட்டிலுள்ள ஒரு நகரத்தில் அவள் வாழ்ந்து வந்தாள். பார்ப்பதற்கு சுமாராக இருந்தாள், ஆனால் அவள் தங்கை ராகேலோ வெகு லட்சணமாக இருந்தாள்.
ராகேலை ஓர் ஆண்மகன் சந்தித்தான்; அவளைக் கண்டதுமே அவன் நெஞ்சத்தில் காதல் மலர்ந்தது; அவள்மீது அவனுக்கு அளவுகடந்த அன்பு ஏற்பட்டதால், அவளைக் கரம்பிடிக்க ஏழு வருடங்கள் அவளுடைய அப்பாவிடம் வேலை பார்க்க ஒப்புக்கொண்டான். ஆனால் திருமண இரவன்று அந்தப் பெண்களின் அப்பா, இளைய மகள் ராகேலுக்குப் பதிலாக மூத்த மகள் லேயாளை மணமுடித்து வைத்தார். தன் அப்பா செய்த சூழ்ச்சியைப் பற்றி லேயாள் என்ன நினைத்திருப்பாள் என்பது நமக்குத் தெரியாது, ஆனால் மணவாழ்வில் இப்படி அடியெடுத்து வைப்பது சரியே அல்ல என்பது நிச்சயமாக அவளுக்குத் தெரிந்திருக்கும்.
நடந்தது வெட்டவெளிச்சமானவுடன், புது மாப்பிள்ளை பலமாக ஆட்சேபிக்கத் தொடங்கினார். மூத்த மகளை விட்டுவிட்டு இளையவளுக்கு முதலில் மணமுடிப்பது வழக்கம் அல்ல என அந்தப் பெண்களின் அப்பா சாக்கு சொன்னார். ஆக, இப்படியொரு பித்தலாட்டத்தின் விளைவாகவே, லேயாள் தன் தங்கையை அதிகமாக நேசித்த ஒருவரோடு வாழ்க்கைப்பட நேர்ந்தது. பிற்பாடு ராகேலும் அவருக்கு வாழ்க்கைப்பட்டாள். தன் கணவர் தன் தங்கையையே ரொம்பவும் நேசித்ததைக் கண்டபோது அவளுக்கு எவ்வளவு வருத்தமாக இருந்திருக்கும்! காதலனோடு கொஞ்சிக்குலாவுகிற அனுபவமெல்லாம் லேயாளுக்கு இருக்கவில்லை, ஏன் மணநாளைப் பற்றிய இனிய நினைவுகளும்கூட அவளுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ராகேலைப் போலவே தானும் நேசிக்கப்பட வேண்டுமென்ற தவிப்பு அவள் மனதில் எவ்வளவாய் இருந்திருக்கும்! எனவே, தன்னை யாரும் நேசிக்கவில்லை என்றும், தன்னால் யாருக்கும் பிரயோஜனமில்லை என்றும் லேயாள் அடிக்கடி உணர்ந்திருக்கலாம்; அவளது கட்டுப்பாட்டில் இல்லாத சூழ்நிலை அதற்கு ஓரளவு காரணமாக இருந்தது. a
இன்று அநேகர் லேயாள்மீது பரிதாபப்படலாம். அன்பு காட்டுவதற்கும் அன்பு காட்டப்படுவதற்குமான உள்ளார்ந்த தேவை நம் எல்லாருக்குமே இருக்கிறது. நம்மீது அன்பு செலுத்துகிற மணத்துணைக்காக ஒருவேளை நாம் ஏங்கலாம். அதுமட்டுமல்ல, நம் பெற்றோர்கள், நம் பிள்ளைகள், நம் கூடப்பிறந்தவர்கள், நம் நண்பர்கள் ஆகியோரின் பாசத்திற்காகவும் நேசத்திற்காகவும் தவிக்கலாம். லேயாளைப் போல, நமக்குக் கிடைக்காத அன்பு மற்றவர்களுக்குக் கிடைப்பதைப் பார்த்தும்கூட நாம் ஏக்கப்படலாம்.
கவர்ச்சியான கன்னியரும் கட்டிளம் காளையரும் காதலித்து, கல்யாணம் செய்துகொண்டு, கடைசிவரை மகிழ்ச்சியாக வாழ்ந்த கதைகளைப் பற்றி சிறு வயதிலிருந்தே நாம் ஏராளமாகக் கேட்டுவருகிறோம். காதலைப் பற்றி பாடகர்கள் உணர்ச்சிததும்ப பாடுகிறார்கள்; கவிஞர்களும் காதலை ஓஹோவென்று புகழ்கிறார்கள். ஆனாலும், இதைப் பற்றி ஆராய்ச்சி செய்கிற ஒருவர் இவ்வாறு எழுதினார்: “காதலைப் போன்ற மிகுந்த நம்பிக்கைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் ஆரம்பிக்கப்படுகிற எந்தவொரு செயலும் இல்லை, எந்தவொரு முயற்சியும் இல்லை, அதேசமயம், மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் எந்தவொரு செயலும் இல்லை.” சொல்லப்போனால், மிகமிக அன்யோன்யமான உறவுகள்தான் பெரும்பாலும் மிகமிக வேதனை அளிக்கின்றன—நிரந்தர சந்தோஷத்திற்குப் பதிலாகச் சஞ்சலத்தைத் தருகின்றன. ஏராளமான நாடுகளில் இப்போது நடக்கும் எல்லாத் திருமணங்களிலும் சுமார் 40 சதவீதம் விவாகரத்தில் முடிவடைகின்றன, விவாகரத்து செய்யாத அநேக தம்பதியரோ சந்தோஷமாக வாழ்வதில்லை.
நிறைய நாடுகளில் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களும் கட்டுக்குலைந்த குடும்பங்களும் பெருகி வந்திருக்கின்றன; இத்தகைய குடும்பங்களில் பிள்ளைகளும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கரிசனைமிக்க அன்பான குடும்பச் சூழலில் கிடைக்கிற உணர்ச்சிரீதியான பாதுகாப்பு குறிப்பாகப் பிள்ளைகளுக்குத் தேவைப்படுகிறது. அப்படியானால், இப்போது அன்பு எங்கே? இந்த அருமையான குணத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ள யாருடைய உதவியை நாம் நாடலாம்? அடுத்துவரும் கட்டுரைகள் இந்தக் கேள்விகளை ஆராயும்.
[அடிக்குறிப்பு]
a இந்தப் பதிவு பைபிளிலுள்ள ஆதியாகமப் புத்தகத்தில் அதிகாரங்கள் 29, 30-ல் காணப்படுகிறது.