Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவசர ‘போன் கால்’—லண்டன்

அவசர ‘போன் கால்’—லண்டன்

அவசர ‘போன் கால்’—லண்டன்

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“ஏதோ வியாதியினால் அல்லது விபத்தினால் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஆட்களை எட்டே நிமிடங்களுக்குள் போய் பார்த்து உதவுவதே எங்கள் லட்சியம். அவர்கள் லண்டனில் 1,600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்குள் எங்கிருந்தாலும் போய் பார்ப்பதே எங்கள் குறிக்கோள். அவசர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே இருந்தாலும் 75 சதவீதத்திற்கும் மேலான சந்தர்ப்பங்களில் எங்களால் எட்டு நிமிடங்களுக்குள் சென்று உதவ முடிகிறது” என்று லண்டன் ஆம்புலன்ஸ் சர்வீஸின் மானேஜரான ராப் அஷ்ஃபர்ட் சொன்னார்.

லண்டனின் சென்ட்ரல் ஆம்புலன்ஸ் கன்ட்ரோலைச் சுற்றிப் பார்ப்பதற்கு எனக்கு ஓர் அழைப்பு கிடைத்தது. இந்த கன்ட்ரோல் ரூம், தேம்ஸ் ஆற்றின் தென்கரையிலுள்ள வாட்டர்லூ ரயில் நிலையத்தில் இருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள ஆம்புலன்ஸ் ஏஜன்ஸிகளிலேயே இதுதான் பெரியது. இங்கு ஒவ்வொரு நாளும் சுமார் 3,000 அவசர ‘போன் கால்கள்’ வருகின்றன. இவை சுமார் 70 கோடி மக்களிடமிருந்து வருகின்றன. இவர்கள் 300-⁠க்கும் அதிகமான மொழிகளைப் பேசுகிறார்கள். கன்ட்ரோல் ரூமில் வேலை செய்கிற 300 பேரும் இந்தச் சவாலைச் சமாளிக்க எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள்?

‘போன் கால்கள்’ வகைபிரிக்கப்படுகின்றன

பிரிட்டனின் அவசர டெலிஃபோன் நம்பர், 999. டெலிஃபோன் ஆப்பரேட்டர், “999 அவசர போன் கால்களை” ரிசீவ் செய்வதைக் கவனித்துக்கொண்டிருந்தேன். பாதிக்கப்பட்டவர் இருக்கிற இடத்தையும் அதற்கு அருகேயுள்ள ஜங்ஷனையும் அவர் கேட்டுத் தெரிந்துகொண்டார். உடனே அவருடைய கம்ப்யூட்டரில் சாலை வரைபடம் தெரிந்தது. அவர் சில கேள்விகளைக் கேட்டு, நிலைமை எந்தளவு சீரியஸாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டார். எத்தனை பேருக்கு உதவி தேவை? அவர்களுடைய வயது என்ன? ஆணா, பெண்ணா? அவர்களுக்கு நினைவிருக்கிறதா? மூச்சுவிட முடிகிறதா? நெஞ்சுவலி இருக்கிறதா? இரத்தம் வடிகிறதா? என்றெல்லாம் கேட்டார்.

ஆப்பரேட்டர், இந்தத் தகவல்களை டைப் செய்யும்போது கம்ப்யூட்டர் தானாகவே அவற்றை வகைபிரிக்கிறது. சிவப்பு நிறம்​—⁠உடனடியாக உயிர் போகும் நிலை; மஞ்சள் நிறம்​—⁠சீரியஸான நிலை, ஆனால் உடனே உயிர்போகும் அளவு ஆபத்து இல்லை; பச்சை நிறம்​—⁠சீரியஸும் இல்லை, உயிர்போகும் அளவுக்கு ஆபத்தும் இல்லை. இப்படியாக நிலைமையைக் கணித்த பிறகு இந்தத் தகவலை இன்னொரு நபருக்கு கம்ப்யூட்டர் மூலமாகவே அனுப்புகிறார். இந்த நபர் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்கிறார்.

சம்பவம் நடந்த இடத்தில் உதவி

இந்த ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் 395 ஆம்புலன்ஸ் வாகனங்களும் 60 விரைவு கார்களும் உள்ளன. அவசர ‘போன் கால்’ வந்தவுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலிருந்து ஒரு பொருத்தமான வண்டி அனுப்பப்படுகிறது. ‘போன் கால்’ வந்ததும் உடனே செல்வதற்கு மோட்டார் பைக்குகள்கூட தயார்நிலையில் இருக்கின்றன. நெரிசலான ரோடுகளில் மருத்துவ உதவியாளர்கள் வண்டிகளுக்கு இடையே சுலபமாக நுழைந்துபோவதற்கு இந்த மோட்டார் பைக்குகள் உதவியாக இருக்கின்றன. அதோடுகூட, 12 மருத்துவர்களும் தயாராகக் காத்திருக்கிறார்கள். இவர்கள் மருத்துவ உதவியாளர்களுக்குக் கைகொடுக்க 24 மணிநேரமும் தயாராக இருக்கிறார்கள்.

நான் அங்கு போயிருந்தபோது, உள்ளூர் போலீஸிடமிருந்து ஒரு ‘போன் கால்’ வந்தது. ரொம்ப பிஸியான நெடுஞ்சாலையில் படுமோசமான விபத்து ஒன்று ஏற்பட்டிருந்ததாகவும் சம்பவம் நடந்த இடத்திற்கு ஏற்கெனவே ஒரு ஆம்புலன்ஸ் போய் சேர்ந்துவிட்டதாகவும் தகவல் வந்தது. அப்படியிருக்கும்போது ஆம்புலன்ஸ் நிறுவனத்திற்கு போலீஸ் ஏன் போன் செய்தார்கள்? ஒருவேளை அவர்களுடைய ஹெலிகாப்டரின் உதவி தேவைப்படலாம் என்று தெரியப்படுத்துவதற்காக. சிவப்பு நிறத்திலுள்ள இந்த ஸ்பெஷல் ஹெலிகாப்டர் ஒரு வருடத்திற்கு சுமார் 1,000 முறை அவசர டிரிப் அடிக்கிறது. இதில் ஒரு மருத்துவரும், மருத்துவ உதவியாளரும் இருக்கிறார்கள். அடிபட்டு சீரியஸாக இருக்கும் நபர்களை இந்த ஹெலிகாப்டர் பொதுவாக ராயல் லண்டன் ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துச் செல்கிறது. அங்கு அவருக்குத் தேவையான உடனடி சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

2004-⁠ல் இன்னொரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் ‘டிரையல் சைக்கிள்-ஆம்புலன்ஸ் யூனிட்’ அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே நகரத்தின் மேற்கில் இயங்கிவரும் சேவையின் ஒரு பிரிவாகவே இது தொடங்கப்பட்டது. அவசர சேவைக்காக நியமிக்கப்பட்டிருக்கும் மருத்துவ வல்லுநர்களும் உதவியாளர்களும் அடங்கிய ஒரு குழு இந்தப் பிரிவில் பணியாற்றுகிறது. இவர்கள் சைக்கிளைப் பயன்படுத்துவதால் ஆம்புலன்ஸை மற்ற காரியங்களுக்கு உபயோகிக்க முடிகிறது. ஒவ்வொரு சைக்கிளிலும் நீல நிற லைட்டும் அபாய ஹாரனும் பொருத்தப்பட்டிருப்பதோடு பின்னால் இருபக்கங்களிலும் இரண்டு பெட்டிகள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. இவை 35 கிலோ எடையுள்ள பொருட்களைச் சுமக்கின்றன. இதயத்தை மறுபடியும் இயங்கவைக்கும் சாதனமும் (defibrillator) ஆக்ஸிஜனும் வலியைப் போக்குகிற மருந்துமாத்திரைகளும் (analgesics) அதில் உள்ளன.

இந்த சைக்கிள் யூனிட், அறிமுகப்படுத்தப்பட்டு கொஞ்ச நாட்களுக்குள் நல்ல பலன்களைத் தர ஆரம்பித்தது. ஹீத்ரோ விமான நிலையத்தின் நான்காவது டெர்மினலில் 35 வயது பெண்மணி ஒருவர் மூச்சு விடமுடியாமல் துடித்துக்கொண்டிருந்தார். ‘999 அவசர போன் கால்’ செய்யப்பட்டு சில வினாடிகளுக்குள் இரண்டு மருத்துவ உதவியாளர்கள் அங்கு சென்றார்கள். அவர்கள் அந்தப் பெண்மணிக்கு ஆக்ஸிஜன் கொடுத்தார்கள். பிறகு மூச்சு மீட்கும் சிகிச்சை (resuscitation) அளித்தார்கள். ஆம்புலன்ஸ் அவரை ஏற்றிக்கொண்டு பக்கத்திலுள்ள ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தது. அந்தப் பெண்மணி குணமான பிறகு, தன் உயிரைக் காப்பாற்றியதற்காக மருத்துவ உதவியாளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

வளர்ந்துவரும் சேவை

‘999 அவசர போன் கால்’ செய்பவர் ஆங்கிலம் பேசாவிட்டால் மொழிபெயர்ப்பாளருக்கு அந்த ‘போன் கால்’ கனெக்ட் செய்யப்படுகிறது. அவசர ‘போன் கால்’ செய்பவர் எந்த மொழியில் பேசுகிறார் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம், முக்கியமாக பதற்றத்தால் அல்லது கவலையால் அவர்கள் அவசர அவசரமாகப் பேசும்போது புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கலாம்!

அவசர ஹெல்த் கேரைப் பற்றி பொது மக்களுக்கு கல்வி புகட்ட டிவிடி-யில் (DVD) ஒரு சிறிய படக்காட்சி தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படக்காட்சியில் குறிப்புகள் கீழே ஆங்கிலத்தில் தெரியும். தென் ஆசியாவிலிருந்து லண்டனில் குடியேறியிருக்கிற மக்களுக்கு, “மூச்சு நின்றுவிட்ட ஒருவரின் இதயத்தை இயங்கவைக்க CPR சிகிச்சை (cardio-pulmonary resuscitation) அளிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கவே” இந்தப் படக்காட்சி தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று லண்டன் ஆம்புலன்ஸ் சர்வீஸ் ஏஜன்ஸியின் நியூஸ் என்ற பிரசுரம் சொல்கிறது. 999 அவசர ‘போன் கால்’ வந்தபிறகு என்னென்ன செய்யப்படுகிறது என்பதும் டிவிடி-யில் காட்டப்படுகிறது.

பன்னாட்டு மக்களுக்கு இருப்பிடமாக விளங்கும் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில், தேவைப்படுகிற சமயத்தில் உடனே கிடைக்கும் மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் மிகவும் நன்றியுடன் இருக்கிறார்கள். ஒரே ஒருவர் சீரியஸாக இருந்தாலும் சரி, நிறைய பேர் சீரியஸாக இருந்தாலும் சரி, அவர்கள் வானளாவ உயர்ந்த கட்டடத்தின் மேல் மாடியில் இருந்தாலும் சரி, நிலமட்டத்திற்குக் கீழ் வெகு ஆழத்தில் இருந்தாலும் சரி, இந்த அவசர சேவை வழங்கும் ஆட்கள் உடனே வருகிறார்கள். லண்டன் ஆம்புலன்ஸ் சர்வீஸில் பணிபுரியும் ஆண்களையும் பெண்களையும் குறித்து ஒரு வாலன்டியர் டாக்டர் இவ்வாறு சொன்னார்: “மருத்துவத் துறையில் என்னோடு சேர்ந்து வேலைபார்த்த மிகச் சிறந்தவர்களில் இவர்களும் அடங்குவர்.” உலகிலேயே மிகப் பெரிதாக உள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவை அளிக்கும் இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு இது சிறந்த பாராட்டு.

[பக்கம் 11-ன் பெட்டி]

பிரச்சினைகளும் தொல்லைகளும்

சிலர் தேவையில்லாமல் போன் செய்து எமர்ஜன்ஸி ஏஜன்ஸிக்கு தொந்தரவு தருகிறார்கள். உதாரணத்திற்கு சிலர் சம்பந்தமில்லாத தகவல் கேட்டு ‘போன் கால்’ செய்வார்கள், சின்ன சின்ன விபத்துகள் அல்லது வியாதிகளுக்காக ‘போன் கால்’ செய்வார்கள், இன்னும் சிலர் தெரியாமல் 999 டயல் செய்துவிடுவார்கள் அல்லது விளையாட்டுக்காக டயல் செய்வார்கள். சிலர் இதைவிட மோசமாகவும் நடந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் சிலரும் அவர்களுடைய குடும்பத்தினரும் மற்றவர்களும், மருத்துவ உதவி அளிக்க வந்தவர்களைத் திட்டியிருக்கிறார்கள், சில சமயங்களில் அடித்தும் இருக்கிறார்கள்! உதவி மிகவும் தாமதமாகவே கிடைத்ததாக நினைத்து பதற்றத்தினாலோ, போதைப் பொருளின் பாதிப்பினாலோ, அல்லது பொறுமையை இழந்ததாலோ அவர்கள் அப்படி கோபப்பட்டிருக்கலாம். இப்படிப்பட்ட தொல்லைகளுக்குத் தீர்வு காண்பது அவ்வளவு சுலபமல்ல. என்றாலும், பொதுமக்களுக்கு கல்வி புகட்டப்படுவது ஓரளவுக்கு உதவியிருக்கிறது.

[பக்கம் 10-ன் படங்கள்]

இந்த நிறுவனத்திற்கு ஒவ்வொரு நாளும் சுமார் 3,000 எமர்ஜன்ஸி ‘போன் கால்கள்’ வருகின்றன

[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]

எல்லா படங்களும்: Courtesy of London Ambulance Service NHS Trust