Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

◼ உலகில் சுமார் 20 கோடி மக்கள், அதாவது 15-⁠க்கும் 64-⁠க்கும் இடைப்பட்ட வயதுடையவர்களில் 5 சதவீதத்தினர், கடந்த ஆண்டில் சட்ட விரோதமாய் போதை மருந்துகள் உட்கொண்டிருக்கிறார்கள்.​—⁠2005 உவர்ல்டு ட்ரக் ரிப்போர்ட், மருந்துகள் மற்றும் குற்றச்செயலுக்குரிய ஐக்கிய நாட்டு அலுவலகம்

◼ துப்பாக்கிச் சண்டையைப் பார்க்கிற ஒரு டீனேஜர், அடுத்த இரண்டு வருடங்களுக்குள் வன்முறையில் ஈடுபட ஏறக்குறைய இரண்டு மடங்கு வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.​—⁠சைன்ஸ் பத்திரிகை, அ.ஐ.மா.

◼ ஒரு வருடத்தின்போது, பிரேசில், சாவோ போலோவிலுள்ள ஓர் ஆஸ்பத்திரியில் பலருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; அவர்களில் 16.8 சதவீதத்தினர் 35 வயதுக்குட்பட்ட பெண்கள். இந்தப் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் குணமடைகிற வாய்ப்பு 90 சதவிகிதம் உள்ளது.​—⁠ஃபோயா ஆன்லைன், பிரேசில்

சலிப்பைச் சமாளிக்க

சலிப்பு பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், “இன்றைய பயங்கர நோய்களில் இதுவும் ஒன்று” என அதை அழைத்ததாக த வான்கூவர் சன் செய்தித்தாள் அறிவிக்கிறது. “வட அமெரிக்காவில் நான்கில் மூவர், தங்கள் வாழ்க்கையில் சுவாரஸ்யமான விஷயமே நடக்காதா என ஏங்குவதாக” ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சலிப்பைச் சமாளிக்க செய்தித்தாளில் வெளிவந்த ஆலோசனைகளில் சில: “வழக்கமாக நீங்கள் செய்வதிலிருந்து ஒரு மாறுதலாக, வேறெதையாவது செய்யுங்கள்,” “புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்,” “அர்த்தமுள்ள வேலையை முன்வந்து” செய்யுங்கள், “‘வாக்கிங்’ . . . போன்ற உடற்பயிற்சி செய்யுங்கள்,” “நன்றிசொல்ல கற்றுக்கொள்ளுங்கள்.”

நவீன அடிமைத்தனம்

“உலகம் முழுவதும் குறைந்தபட்சம் 1 கோடியே 23 லட்சம் பேர் வலுக்கட்டாயமாக வேலையில் உட்படுத்தப்படுகிறார்கள்” என்று ஐநா சர்வதேச தொழிலாளர் சங்கம் (ILO) நடத்திய ஆய்வு கூறுகிறது. இவர்களில் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மனித வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக விருப்பம் இல்லா வேலையில் அல்லது சேவையில் இவர்கள் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். விபச்சாரம், ராணுவ சேவை, கொத்தடிமை ஆகியவை அதற்கு உதாரணங்கள்; கொத்தடிமையைப் பொறுத்தவரை, மிகக் குறைந்த கூலிக்கு அல்லது கூலியே இல்லாமல் அடிமை வேலை பார்க்கின்றனர், ஏனென்றால் அவர்கள் வாங்கிய கடனுக்காக கூலியைப் பிடித்துக்கொள்கிறார்கள். ILO டைரக்டர் ஜெனரல் ஹ்வான் சோமெவியா சொல்வதுபோல், இப்படிப்பட்ட அடிமைத்தனம் “மக்களின் அடிப்படை உரிமையையும் கண்ணியத்தையும் பறித்துவிடுகிறது.”

முதல் முழு கிரியோல் பைபிள்

“ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் மொழியில் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை முழு பைபிளின் மொழிபெயர்ப்பு வேலை முடிவடைந்துள்ளது” என்று த சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தித்தாள் அறிவிக்கிறது. இந்தப் புதிய கிரியோல் மொழிபெயர்ப்பு 2007-⁠ல் வெளியிடப்பட உள்ளது, வட ஆஸ்திரேலியாவின் ஒதுக்குப்புற பகுதிகளில் இருக்கும் சுமார் 30,000 பழங்குடியினர் இதனால் பயனடைவார்கள். “இந்த வேலை 27 வருடத்திற்கு முன் ஆரம்பித்தது” என்று அச்செய்தித்தாள் சொல்கிறது. யுனைடெட் பைபிள் சொஸைட்டீஸ் சொல்வதுபோல, “புதிய ஏற்பாட்டின் 22 புதிய மொழிபெயர்ப்புகள் 2004-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ளன.” இப்போது, 2,377 மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பைபிளை முழுமையாகவோ பகுதியாகவோ படிக்க முடியும்.

பார்க் செய்த கார்களுக்குள் வெப்பம்

2004-⁠ல் பார்க் செய்யப்பட்டிருந்த கார்களில் விடப்பட்டிருந்த 35 குழந்தைகள் வெப்பம் தாளாமல் இறந்துவிட்டார்கள் என்று பீடியாட்ரிக்ஸ் பத்திரிகை சொல்கிறது. வெளியில் இருக்கும் வெப்பம் 30 டிகிரி செல்ஸியஸைத் தாண்டினால், வண்டிக்குள் 57-68 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் கடகடவென உயர்ந்துவிடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. காருக்கு வெளியே வெறும் 22 டிகிரி செல்ஸியஸ் இருந்தாலுமே, காருக்கு உள்ளே இன்னும் 22 டிகிரி வெப்பநிலை உயர்ந்துவிடுகிறது. அதுவும் கார் பார்க் செய்யப்பட்டு 15-ல் இருந்து 30 நிமிடத்திற்குள் வெப்பநிலை இந்த அளவுக்கு உயர்கிறது. ஜன்னல்களை நான்கு சென்டிமீட்டர் திறந்து வைத்தாலும் அல்லது காரை ஆஃப் செய்வதற்கு முன் ஏசியைப் போட்டுவிட்டு நிறுத்தினாலும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த ஆபத்தைக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் கண்டிப்பாக பல உயிர்களைக் காப்பாற்றலாம் என்பதாக இந்தக் கட்டுரையின் ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.