Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

தோல் புற்றுநோய்​—⁠உங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் (ஜூன் 8, 2005) அந்த (ஆங்கில) தொடர் கட்டுரைகளில் கொடுக்கப்பட்ட தகவல் உண்மையில் அருமை. தோலியல் மருத்துவமனையில் நான் தலைமை மருத்துவராகப் பணியாற்றுகிறேன். மற்றவர்களுக்கும் கொடுக்க, இன்னுமதிகமான பிரதிகளைப் பெற விரும்புகிறேன்.

கே. டபிள்யூ., டென்மார்க்

அந்தக் கட்டுரையைப் படித்ததால்தான், என் முதுகில் இருந்த கட்டியைப் பரிசோதனை செய்துகொள்ள தீர்மானித்தேன். அது போவன் வியாதி என்ற ஒருவகை புற்றுநோயாக ஆகியிருக்கலாம் என்று டாக்டர் சொன்னார். உடனே ஆபரேஷன் செய்துகொண்டேன். காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெற அந்தத் தொடர் கட்டுரைகள் எனக்கு உதவின.

எஸ். எம்., ஜப்பான்

7-ஆம் பக்கத்தில் இருந்த பெட்டிச் செய்தியை வாசித்தவுடன், எனக்கு இருந்த மச்சத்தை டாக்டரிடம் பரிசோதனை செய்துகொள்ளத் தீர்மானித்தேன். பரிசோதனையில், அது தீவிரமான கருங்கட்டியின் ஆரம்பநிலை என்பது தெரியவந்தது. அந்தக் கட்டுரை சொன்னவிதமாக, அதற்குச் சிகிச்சை அளிக்காமல் விட்டிருந்தால் என் உயிரே போயிருக்கும். ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய என் டாக்டருக்கும், இந்த விழித்தெழு! தொடர் கட்டுரைகளுக்கும் அதிக நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

எல். எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

குடும்பத்தின் மறுபார்வைக்கு (மே 8, 2005) நான் எப்போதும் எனக்குப் பிடித்த கட்டுரைகளை மட்டுமே படிப்பேன், ஆனால், “குடும்பத்தின் மறுபார்வைக்கு” (ஆங்கிலம்) என்ற பக்கத்தைப் பார்த்த பிறகு, அதில் இருந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகவே முழு பத்திரிகையையும் படித்தேன். சீக்கிரத்திலேயே, முழு பத்திரிகையையும் படிக்கும் பழக்கம் எனக்கு வந்துவிட்டது!

ஒய். இஸட்., ரஷ்யா

அந்தப் பக்கத்தைப் பார்த்ததுமே நான் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது; அதோடு, படிக்கும் விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தியது.

டி. எஸ்., பிரிட்டன்

இளைஞர் கேட்கின்றனர் . . . நான் ஏன் தவறான ஆட்களிடம் கவரப்படுகிறேன்? (ஆகஸ்ட் 8, 2005) கடந்த பத்து வருடங்களாக ‘கடவுளுடைய வேலையில் எப்போதும் அதிகம் செய்துகொண்டிருந்தாலும்’ இந்தப் பழக்கத்தை மட்டும் என்னால் விடவே முடியவில்லை. (1 கொரிந்தியர் 15:58) நான் உணர்ச்சி ரீதியில் அவ்வளவு முதிர்ச்சி அடையவில்லை என்று உணர்ந்தேன். ஆனால், இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் பொல்லாத உலகில் வாழ இதுபோன்ற கட்டுரைகள் நமக்கு உதவுகின்றன, இதைத் தந்ததற்கு நான் யெகோவாவிற்கு நன்றி சொல்கிறேன்.

ஜெ. எஃப்., ஐக்கிய மாகாணங்கள்

‘பைபிள் சத்தியங்கள் தெரியாதவர்களை நாம் அடியோடு ஒதுக்கித் தள்ளிவிடக் கூடாது’ என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பற்றி கூடுதலாக விளக்க முடியுமா? ஒரு கிறிஸ்தவருக்கு விசுவாசத்தில் இல்லாதவரோடு நெருங்கிய உறவு இருந்தால் என்ன செய்வது? அது கவலைதரும் விஷயம் இல்லையா?

டி. பி., ஐக்கிய மாகாணங்கள்

“விழித்தெழு!” பதில்: அவிசுவாசிகளோடு கிறிஸ்தவர்கள் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதை அந்தக் கட்டுரை ஊக்குவிக்கவில்லை. “கெட்ட கூட்டுறவு நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” என்ற பைபிள் நியமம் உண்மையில் எல்லாச் சூழ்நிலையிலும் பொருந்தும். (1 கொரிந்தியர் 15:33, NW) விசுவாசத்தில் இல்லாதவர்களோடு பழகுவதை நாம் அடியோடு நிறுத்திவிட வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தாது. அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல, வெறும் சக விசுவாசிகளுக்கு மட்டும் அல்ல, ஆனால் ‘எல்லோருக்கும் நன்மை செய்யக்கடவோம்’ என்று பைபிள் அறிவுறுத்துகிறது. (கலாத்தியர் 6:10) சொல்லப்போனால், கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபடுவதற்கு நாம் மக்களிடம் உண்மையான அக்கறையைக் காட்ட வேண்டும்; அவர்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் இயேசு நமக்கு நல்ல உதாரணமாக இருந்தார். கடவுளுடைய சித்தத்தைச் செய்ய விருப்பம் இல்லாதவர்களுடன் மிகவும் அன்யோன்யமாக அவர் ஒருபோதும் பழகவில்லை. (யோவான் 15:14) அதேசமயத்தில், மக்களை அணுகிப் பேசுவது எப்படி என்று அவர் தெரிந்திருந்தார். அதன் விளைவாக, திறம்பட சாட்சி கொடுக்க நல்ல சந்தர்ப்பங்கள் இயேசுவிற்குக் கிடைத்தன. (உதாரணத்திற்கு, லூக்கா 7:36-50-⁠ல் உள்ள பதிவைப் பார்க்கவும்.) இயேசுவைப் போன்றே, நாமும் விசுவாசிகள் அல்லாதவர்களிடம் தொடர்ந்து மரியாதை காட்டலாம். “நியாயத் தன்மையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்க” வேண்டும் என்பதே நமது நோக்கம்.​—⁠தீத்து 3:2, NW.