Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘பாரடைஸ்’ மணல் தீவு

‘பாரடைஸ்’ மணல் தீவு

‘பாரடைஸ்’ மணல் தீவு

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

பிரிட்டன் நாட்டு ஆராய்ச்சியாளரான கேப்டன் ஜேம்ஸ் குக் 1770-⁠ல் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரமாக கப்பற்பயணம் மேற்கொண்டார். இன்று பிரிஸ்பேன் என்றழைக்கப்படுகிற நகரிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில், கடலோரமாக அமைந்திருந்த மாபெரும் மணல் தீவு ஒன்றை சரிவர கவனிக்காமலேயே கடந்து சென்றுவிட்டார். இந்தத் தீவோ காலப்போக்கில் 3,00,000 பார்வையாளரை வருடந்தோறும் கவர இருந்தது. சொல்லப்போனால், அவரும் இன்னும் மற்றவர்களும் அதை ஒரு தீவு என்றே நினைக்கவில்லை; மாறாக ஒரு தீபகற்பம் என்று நினைத்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு இந்தக் கடற்கரைக்கு வந்த மாத்யூ ஃப்லின்டர்ஸ் என்ற ஆய்வாளரும், “இந்தத் தீபகற்பத்தைப்போல் வெறுமையானதாக வேறு எதுவுமே [இருக்க] முடியாது” என்று எழுதினார்.

குக், ஃப்லின்டர்ஸ் இவர்கள் இருவரும் பொன்னிற கடற்கரைகளுக்கும் மணற்குன்றுகளுக்கும் அப்பால் இருந்தவற்றைத் துணிந்து ஆய்வு செய்திருந்தால் அவர்கள் வேறு விதமாக நினைத்திருப்பார்கள். ஏனென்றால் அங்கிருந்த மாசுபடாத மழைக் காடுகளையும், பளிங்காய்ப் பாயும் நன்னீர்க் குளங்களையும், தகதகவென ஜொலிக்கும் பல வண்ண மணற்குன்றுகளையும், நூற்றுக்கணக்கான விலங்கினங்களையும் பார்த்திருப்பார்கள். இன்று ப்ரேஸர் தீவு என்று அழைக்கப்படுகிற, உலகின் மிகப் பெரிய மணல் தீவாகிய இது அவ்வளவு சிறப்பானதாக இருப்பதால் 1992-⁠ல் உலக ஆஸ்திகள் பட்டியலில் இடம்பிடித்தது. a

மலைகளிலிருந்து பிறந்த தீவு

இந்த ப்ரேஸர் தீவின் நீளம் 120 கிலோமீட்டர்; அகலம் 25 கிலோமீட்டர்; பரப்பளவு 1,60,000 ஹெக்டேர். இங்குள்ள மணற்குன்றுகளோ, அப்பப்பா! கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 240 மீட்டர் வரை உயர்ந்து நிற்கின்றன. உலகிலேயே உயரமான மணல் தீவு எது என்றால் இதுதான். விசேஷமான இந்தத் தீவை உருவாக்கிய இயற்கைச் சக்திகள் யாவை?

இத்தீவை உருவாக்கிய பேரளவான மணல் குவியல்கள் கிரேட் டிவைடிங் மலைத்தொடரிலிருந்து வந்ததாகச் சான்றுகள் காட்டுகின்றன. ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை நெடுக கோடுகிழித்ததுபோல் நிற்கிறது இந்த மலைத்தொடர். பல காலமாகப் பெய்த பலத்த மழையினால் பாறைத் துண்டுகள் மலையிலிருந்து பெயர்ந்து ஆறுகளுக்கு அடித்துச் செல்லப்பட்டன, ஆறுகள் அவற்றைக் கடலில் கொண்டு சேர்த்தன. கடல் நீரோட்டங்கள் இந்தப் பாறைத் துண்டுகளைச் சுக்குநூறாக நொறுக்கி மணலாக மாற்றி, கடல் தரை நெடுக இவற்றைக் கொஞ்சகொஞ்சமாக வடக்குத்திசை நோக்கி வாரிக்கொண்டு சென்றன. அவ்வாறு செல்கையில் கடலிலுள்ள மேடுகளும் கடலின் அடித்தளத்திலிருந்து மதில் போல் எழும்பி நிற்கும் பாறைகளும் இவற்றைத் தடுத்து நிறுத்தின. இப்படியாகப் பேரளவான மணல் குவியல்கள் இங்கு சேகரிக்கப்பட்டன. இவ்வாறுதான் ப்ரேஸர் தீவு பிறந்தது.

இத்தீவு உருவானது முதல் பசிபிக் பெருங்கடல் புத்தம் புதிய மணலை கரையோரமாகத் தள்ளுகிறது. காற்று, கரையிலிருக்கும் இந்த மணலைத் தீவிற்குள்ளாக அடித்துச்சென்று மணற்குன்றுகளை உருவாக்குகிறது. இந்த மணற்குன்றுகளோ வருடத்திற்கு மூன்று அடி என்ற விகிதத்தில் இடம் பெயர்ந்து செல்கின்றன. அப்படி இடம் பெயருகையில் பாதையில் இருக்கிற எல்லாவற்றையுமே மூடிவிடுகின்றன.

நன்னீர்க் குளங்களும் அபூர்வமான காடுகளும்

இத்தீவெங்கும் பரவி நிற்கிற மணற்குன்றுகளின் உச்சியிலுள்ள குழிவான பகுதிகளில் 40 நன்னீர்க் குளங்கள் உருவாகியிருப்பது ஆச்சரியமான விஷயம்! இவற்றில் சில, உயரமான குளங்கள் என்றழைக்கப்படுகின்றன. உயரமான மணற்குன்றுகளின் உச்சியிலுள்ள அகலமான குழிவுகளில் தண்ணீர் தேங்குவதாலேயே இவை அவ்வாறு அழைக்கப்படுகின்றன. ஆனால் இந்த நீர் எப்படி உறிஞ்சப்படாமல் தேங்கி நிற்கிறது? மக்கிப்போன இலைகள், மரப்பட்டைகள், மரக்கிளைகள் ஆகியவை உட்குழிவுகளுக்குள் ‘லைனிங்’காக செயல்படுகின்றன.

இந்தத் தீவில் ஜன்னல் குளங்களும் இருக்கின்றன. மணற்பரப்பில் ஏற்படும் குழிகள் நிலத்தடி நீர்மட்டத்திற்கும் கீழே செல்கையில் இவை உருவாகின்றன. இந்தக் குழிகளுக்குள் இறங்குகிற நன்னீர், மணலால் வடிகட்டப்பட்டு உள்ளே செல்வதால் சுத்தமான தெளிந்த நீரையுடைய குளங்கள் உருவாகின்றன. இந்தக் குழிகள் நீர்மட்டத்தில் ஜன்னல்களாக அதாவது திறப்புகளாக இருக்கின்றன.

இத்தீவில் ஒவ்வொரு வருடமும் 150 சென்டிமீட்டருக்கு மழை பெய்கிறது. குளங்களாக உருவெடுக்காத தண்ணீரும் மணலால் உறிஞ்சப்படாத தண்ணீரும் நீரோடைகளாக மாறி, கடலில் சேர்ந்துவிடுகின்றன. நீரோடை ஒன்று ஒரு மணி நேரத்திற்கு 50 லட்ச லிட்டர் நீரை பசிபிக் பெருங்கடலுக்குள் சேர்ப்பதாகக் கணக்கிடப்படுகிறது.

ப்ரேஸர் தீவில் தண்ணீருக்குப் பஞ்சமே இல்லாததால் எங்கு பார்த்தாலும் அது பச்சைப் பசேலென செழிப்பாகக் காட்சியளிக்கிறது. பொதுவாக, வளமற்ற மணலில் மழைக்காடுகள் தோன்றுவது அபூர்வம். அப்படிப்பட்ட அபூர்வ இடங்களில் ஒன்றுதான் ப்ரேஸர் தீவு. சொல்லப்போனால், ஒரு காலத்தில் இங்குள்ள மழைக்காடு அந்தளவு அடர்த்தியாக இருந்ததால் மரவெட்டியின் கோடாலி சத்தம் 100-⁠க்கும் அதிகமான வருடங்கள் ஓயாமல் கேட்டது. இங்கிருந்த பிளாக்பட், கெளரி, டாலோவுட் போன்ற மரங்கள் காட்டுவாசிகளைக் கவர்ந்தன. ஒரு காட்டுவாசி 1929-⁠ல் இவ்வாறு சொன்னார்: “காட்டிற்குள் வருகிற ஒருவர், சுவர்போல் நிற்கிற மரத்தைக் கண்டு வியக்கிறார்; ஏனெனில் அவற்றின் உயரம் 45 மீட்டர் . . . கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த மரங்களின் சுற்றளவோ இரண்டிலிருந்து மூன்று மீட்டர்.” இத்தீவிலிருந்த ஸாட்டினாய், டர்பன்டைன் போன்ற சில மரங்கள் வீழ்த்தப்பட்டு சூயஸ் கால்வாயின் சுவர்கள் கட்டப்பட்டன. இன்றோ ப்ரேஸர் தீவின் மரங்கள் பயமின்றி நிம்மதியாக வளர்கின்றன.

பாரடைஸ் தீவின் சோகக் கதை

இத்தீவில் ஒரு சோக சம்பவம் நேரிட்டதால் அதற்கு ப்ரேஸர் தீவு என்ற பெயர் வந்தது. 1836-⁠ல் கேப்டன் ஜேம்ஸ் ப்ரேஸரும் அவருடைய மனைவி இலைஸாவும் ஸ்டெர்லிங் காஸல் என்ற கப்பலில் பயணம் செய்தபோது அவர்களுடைய கப்பல் சேதமடைந்தது. அவர்கள் எப்படியோ தப்பித்து இத்தீவுக்கு வந்து சேர்ந்தார்கள். இத்தீவின் ஆதிவாசிகள் கேப்டனைக் கொலை செய்துவிட்டதாகத் தெரிகிறது, இலைஸா மட்டும் அவர்களிடமிருந்து பின்னர் காப்பாற்றப்பட்டார். இந்தத் துயரமான சம்பவத்தின் நினைவாக இத்தீவுக்கு ப்ரேஸர் தீவு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாபெரும் மணல் தீவு என்று இது முன்பு அழைக்கப்பட்டது.

இத்தீவைச் சேர்ந்த மக்களுக்கும் துயரம் காத்திருந்தது. ஒரு காலத்தில், ஆஸ்திரேலிய பழங்குடியினராகிய அபாரிஜின்கள் கிட்டத்தட்ட 2,000 பேர் ப்ரேஸர் தீவில் வாழ்ந்தார்கள். அவர்கள் வாட்டசாட்டமானவர்களாகவும் பலசாலிகளாகவும் விவரிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்களுடைய தீவை கரீ, அதாவது, ‘பாரடைஸ்’ என்று அழைத்தார்கள். அபாரிஜின்களின் ஒரு பழங்கதைப்படி, இதுவரை உருவாக்கப்பட்ட இடங்களிலேயே இத்தீவு மிகமிக அழகானது. ஆனால் வருத்தகரமாக, ஐரோப்பாவிலிருந்து பரவிய வியாதியால் இத்தீவு மக்களில் நிறைய பேர் இறந்துபோனார்கள். அதுபோக, 20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மீந்திருந்த அபாரிஜின்கள் ஊருக்குள்ளே குடியேற்றப்பட்டார்கள்.

இது ஒரு புகலிடம்

இன்று இத்தீவு வன உயிர்களின் புகலிடமாக உள்ளது. இங்கு அதிகமாகக் காணப்படும் ஒரு விலங்கு டிங்கோ​—⁠ஆஸ்திரேலிய காட்டு நாய். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களோடு இவை சேருவதில்லை. டிங்கோ நாய்களிலேயே ப்ரேஸர் தீவில் வாழ்பவைதான் உயர் ரகமாகக் கருதப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு வீட்டு நாய்களைப் போல் இருக்கலாம். ஆனால் இவை காட்டு நாய்கள். அதனால் இவற்றுடன் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும், உஷாராக இருக்க வேண்டும்.

இத்தீவில் 300-⁠க்கும் அதிகமான பறவை இனங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு செம் பருந்துகளும் கடல் ஆளிப் பருந்துகளும் கடற்கரைகளைச் சுற்றி ரோந்து வருகின்றன. பளபளக்கும் ‘சிரல் காட்டு மீன்கொத்திகள்’ மின்னல் வேகத்தில் குளங்களில் ‘டைவ்’ அடிக்கின்றன. இடப்பெயர்ச்சி செய்கிற பறவைகளையும் இங்கு பார்க்க முடிகிறது. அவற்றில் ஒன்று மங்கோலிய நாட்டு மணல் நிற உப்புக்கொத்தி, இவை இனப்பெருக்கத்தை சைபீரியாவில் முடித்துக்கொண்டு, பிறகு குளிர்காலத்தை தெற்கில் கழிக்கின்றன; இதற்கிடையில் ப்ரேஸர் தீவுக்கு ஒரு ‘ஷார்ட் விசிட்’ தருகின்றன. இவை தவிர 30,000 அல்லது அதற்கும் மேலான சாம்பல் நிற தலையுடைய வெளவால்களும், குறிப்பிட்ட காலத்தில் இத்தீவிற்கு வருகை தருகின்றன; பறக்கும் நரிகள் என அழைக்கப்படும் இவை ரேவன் அளவுக்குப் பெரியதாக இருக்கின்றன. இவற்றிற்கு யூகலிப்டஸ் பூக்களிலுள்ள தேன் என்றால் உயிர். அதற்காகவே இவை இங்கு வருகின்றன.

ப்ரேஸர் தீவைச் சுற்றி ஓடுகிற தண்ணீரில்கூட ஏகப்பட்ட உயிரினங்களைக் காணமுடிகிறது. உதாரணத்திற்கு, குளிர்ந்த அண்டார்டிக் பகுதியிலிருந்து வருகிற திமில் முதுகு திமிங்கலங்கள், வழியில் ப்ரேஸர் தீவைச் சந்தித்துவிட்டு பிறகு கிரேட் பாரியர் பவளப்பாறைக்குச் செல்கின்றன. அங்கு போய் அவை குட்டிபோட்டபின் இணைசேருகின்றன. அவை திரும்பிச் செல்லும்போது ப்ரேஸர் தீவிற்கு சல்யூட் அடிப்பதுபோல் எகிறிக் குதித்து தண்ணீருக்குள் டைவ் அடிக்கின்றன. இந்தக் கண்கொள்ளாக் காட்சியை பல மைல் தூரம்வரை பார்க்க முடிகிறது. இந்த அற்புதத் தீவுக்கு என்னவொரு கம்பீரமான சல்யூட்!

[அடிக்குறிப்பு]

a இயற்பியல், உயிரியல், புவியியல், அறிவியல் ரீதியில் சிறந்து விளங்குகிற கலாச்சார மற்றும் இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஐ.நா. கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (UNESCO) அதன் உலக ஆஸ்திகள் பட்டியலில் சேர்க்கிறது.

[பக்கம் 14-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

பசிபிக் பெருங்கடல்

ப்ரேஸர் தீவு

[பக்கம் 15-ன் படங்கள்]

வலப் பக்கம், மேலிருந்து கீழே:

கர்னங் நீரோடையின் முகத்துவாரம்

40 நன்னீர்க் குளங்கள் ப்ரேஸர் தீவெங்கும் பரவியிருக்கின்றன, உயரமான குளங்களும் ஜன்னல் குளங்களும் இவற்றில் அடங்கும்

வளமற்ற மணலில் அபூர்வ மழைக்காடுகள்

[படத்திற்கான நன்றி]

எல்லா படங்களும்: Courtesy of Tourism Queensland

[பக்கம் 1617-ன் படங்கள்]

டிங்கோ மற்றும் கோலா

[படத்திற்கான நன்றி]

Courtesy of Tourism Queensland

[பக்கம் 1617-ன் படம்]

ப்ரேஸர் தீவின் ஒரு கடற்கரை நூற்றியிருபது கிலோமீட்டர் தூரம்வரை நீளுகிறது, இதுதான் உலகிலேயே நீளமான கடற்கரை

[பக்கம் 17-ன் படம்]

கடல் ஆளிப் பருந்து

[பக்கம் 17-ன் படம்]

கூக்கபுராக்கள்

[பக்கம் 17-ன் படம்]

பெலிகன்கள்

[பக்கம் 17-ன் படம்]

அண்டார்டிகாவிற்கு திரும்பிச் செல்கிற திமில் முதுகு திமிங்கலம் ப்ரேஸர் தீவில் ‘ப்ரேக்’ எடுக்கிறது

[பக்கம் 17-ன் படங்களுக்கான நன்றி]

பருந்து: ©GBRMPA; பெலிகனைத் தவிர மற்ற எல்லா படங்களும்: Courtesy of Tourism Queensland