முஃப்ளான்களைத் தேடி
முஃப்ளான்களைத் தேடி
மே மாதத்தில் இனிமையான ஓர் அதிகாலை வேளையில், வரைபடங்கள், கேமராக்கள், தொப்பிகள், முரட்டு பூட்ஸ்கள் சகிதமாக, கரடுமுரடான பாதையிலும் செல்லக்கூடிய வண்டியில் கிளம்புகிறோம். சைப்ரஸ் தீவில் ட்ரோவோதாஸ் மலைத்தொடரில் குடியிருக்கும் பாபோஸ் வனத்தை நோக்கி எங்களுடைய வண்டி செல்கிறது. கண்ணில் சிக்காமல் எப்போதும் மாயமாக மறைந்துவிடும் முஃப்ளான்களைப் பார்க்கும் ஆசைக் கனவுகளுடன் போகிறோம். முஃப்ளான்கள் என்பது என்ன?
முஃப்ளான்கள் என்பது ஒருவகை காட்டுச் செம்மறியாடுகள், இதோடு தொடர்புடைய ஒருவகை செம்மறியாடுகளை மத்தியதரைக்கடல் பகுதிகளில் எங்கும் பார்க்கலாம். ஆனால் எங்களுடைய ஆர்வக்கனலைப் பற்றவைத்த ஒருவகை முஃப்ளான், சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்தது; அதற்கு மானின் அழகும் வெள்ளாட்டின் வேகமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. விலங்கியலாளர்கள் அதை ஓவிஸ் ஜிமிலினி ஓப்பியன் என அழைக்கிறார்கள், சைப்ரஸ் நாட்டவரோ அக்ரீனோ என அழைக்கிறார்கள். தொலைதூர மலைப்பகுதிகளில் மட்டுமே அதைக் காண முடியும்.
இப்பொழுது, நெடுஞ்சாலைக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, மலையடிவாரத்தை நோக்கிச் செல்கிறோம், அங்கே அழகிய பள்ளத்தாக்கு வருகிறது, மலைச்சரிவுகளில் முளைத்திருக்கும் கிராமங்களும் எங்கள் கண்ணில் படுகின்றன, பள்ளத்தாக்குகள் நெடுக எங்கும் பழத்தோட்டங்கள். ஆனால், விரைவில், கரடுமுரடான பாதை தொடங்குகிறது. சில இடங்களில், எங்களுடைய வண்டி செங்குத்தான மலைச்சரிவுகளில் மயிர்கூச்செரியும் விளிம்புவரை செல்கிறது. ஒருவழியாக, வனத்துறையை அடைகிறோம். நாங்கள் இப்பொழுது பாபோஸ் வனத்திற்குள் நுழைந்திருக்கிறோம்—1,50,000 ஏக்கரில் ஊசியிலை மரங்களும் தேவதாரு மரங்களும் அடர்ந்து வளர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். அங்கே பச்சைநிற சீருடையில் காட்சியளிக்கிற ஆந்திரியாஸ் ஒரு வனத்துறை அதிகாரி—முஃப்ளான்களைப் பற்றிக் கேட்டதும் ஆர்வம் பொங்க பேசுகிறார். உடனே காபி ஆர்டர் செய்துவிட்டு, முஃப்ளான்களைப் பற்றி அவருடன் அளவளாவுகிறோம்.
சைப்ரஸ் வனத்தில் வசிக்கும் மிகப் பெரிய பாலூட்டிதான் முஃப்ளான் என்று எங்களுக்குச் சொல்கிறார். முன்பெல்லாம், ஏகப்பட்ட முஃப்ளான்கள் இத்தீவில் அலைந்து திரிந்ததாகவும், “கிரேக்க-ரோம காலத்தைச் சேர்ந்த நிறைய செதுக்கோவியங்கள்” இந்தக் காட்டுச் செம்மறியை சித்தரித்துக் காட்டுவதாகவும் கூறுகிறார். அதுமட்டுமல்ல, உயர்குடி வர்க்கத்தினர் பாபோஸ் வனத்தில் அவற்றை வேட்டையாடி மகிழ்ந்ததைப் பற்றி இடைக்கால எழுத்துக்கள் விவரிப்பதாகவும் எங்களிடம் குறிப்பிடுகிறார்.
வேலியடைக்கப்பட்ட ஓர் இடத்திற்கு எங்களை அழைத்துச் செல்கையில், முஃப்ளானின் சரித்திரத்தைப் பற்றி ஆந்திரியாஸ் விலாவாரியாக அடுக்கிக்கொண்டே போகிறார். உதாரணமாக, வேட்டைத் துப்பாக்கி வந்ததும் இந்த விலங்கினத்தின் எண்ணிக்கை அடியோடு சரிந்துவிட்டதையும், இந்த உயிரினத்தைப் பாதுகாப்பதற்கு சைப்ரஸ் நாட்டுச் சட்டங்கள் 1938-ல் திருத்தி அமைக்கப்பட்டதையும் நாங்கள் தெரிந்துகொள்கிறோம். இந்த விலங்கை சட்டவிரோதமாக வேட்டையாடுவதைத் தடுத்துநிறுத்த வனத்துறையினரும் காவல் துறையினரும் ஒன்றுசேர்ந்து உழைத்ததால், ஒரு வருடத்திற்குப் பிறகு, இந்த வனத்திற்குள் வேட்டைக்காரர்கள் நுழைவது தடை செய்யப்பட்டது; இந்த மாற்றங்களாலும், 1960-களில் எடுக்கப்பட்ட வேறுசில நடவடிக்கைகளாலும் இப்போது முஃப்ளான்கள் தழைத்தோங்க ஆரம்பித்துவிட்டன என்று ஆந்திரியாஸ் கூறுகிறார்.
எங்களுடைய முதல் சந்திப்பு
வேலி போடப்பட்ட இடத்திற்கு ஆந்திரியாஸுடன் நாங்களும் போகிறோம், அங்கே புதர்ச்செடிகளுக்கும் மரங்களுக்கும் இடையே உற்றுப் பார்க்கிறோம். அமைதியாக இருக்கும்படி எங்களுக்கு ‘சிக்னல்’ கொடுத்துவிட்டு,
மலைச்சரிவில் கொஞ்ச தூரம் மேல் நோக்கி எங்களை அழைத்துச் செல்கிறார் ஆந்திரியாஸ். அங்கே, பெரிய பெண் முஃப்ளான்கள் மூன்றும், புதிதாய் பிறந்த குட்டி முஃப்ளான்கள் இரண்டும், கொளுத்தும் வெயிலில் மேய்ந்து கொண்டிருக்கின்றன. பெரிய முஃப்ளான்கள் சுமார் மூன்றடி உயரம் இருக்கின்றன, அவற்றின் உரோமம் பழுப்பு நிறத்தில் உள்ளது, வயிற்றுப்பகுதி மட்டும் சற்று வெளிறிய நிறத்தில் இருக்கிறது.அவற்றிற்குப் பிடித்தமான காட்டுச் செடிகொடிகள் இந்த மாதங்களில்தான் ஏராளம் காணப்படுகின்றன, பெரிய முஃப்ளான்கள் இலைதழைகளை ரசித்து ருசித்து சாப்பிடுவதில் மும்முரமாக இருப்பதால் எங்களைக் கண்டுகொள்வதில்லை. ஆனால் புதிதாகப் பிறந்த அந்தக் குட்டிகளோ துள்ளி விளையாடுவதை நிறுத்திவிட்டு, தயங்கித் தயங்கி எங்களை நோக்கி சில அடிகள் எடுத்துவைக்கின்றன. எங்களுக்கு ஒரே குஷி! ஆனால் எங்களுடைய கேமராவை ‘கிளிக்’ செய்யும்போது, அவை திடுக்கிடுகின்றன, பிறகு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மொத்த முஃப்ளான்களும் காட்டுக்குள் ஓடி மறைகின்றன.
இவற்றைப் பார்த்த பூரிப்பில், காட்டுக்குள் நடந்தே சென்று இன்னுமதிக முஃப்ளான்களைக் கண்டுகளிக்க திட்டமிடுகிறோம். ஆனால், அதிகாலையில் போவதே நல்லது என ஆந்திரியாஸ் சொல்கிறார்; அந்த நேரத்தில்தான் இந்த விலங்குகள் உணவு தேடி காட்டின் ஓரம்வரை சிலசமயம் வருமாம். இரவு அந்தப் பள்ளத்தாக்கிலேயே கூடாரம்போட்டு தங்கிவிட நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்; ஆகவே பள்ளத்தாக்கைப் பார்த்தபடி நிற்கும் மலை, முஃப்ளான்களைத் தேடிப் பார்ப்பதற்கு நல்ல இடமாகத் தெரிகிறது. வெயில்காலத்தில், முஃப்ளான்கள் உயர்ந்த மலைச்சரிவுகளுக்கு அடிக்கடி வரும்; குளிர்காலத்திலோ மலையுச்சிகளை பனி மூடிவிடுவதால், தாழ்ந்த மலைச்சரிவுக்கும் வெட்டவெளிப் பகுதிக்கும்கூட உணவுதேடி வரும் என்று தெரிந்துகொள்கிறோம்.
இனச்சேர்க்கை இலையுதிர் காலத்தில் நடைபெறுகிறது. குளிர்காலங்களில் முஃப்ளான்கள் மந்தை மந்தையாக மேய்கின்றன; ஒவ்வொரு மந்தையிலும் 10 முதல் 20 முஃப்ளான்கள் இருக்கின்றன. ஏப்ரல் அல்லது மே மாதம் குட்டி போடும் சமயம் என்பதால், அந்த மந்தைகள் சிறுசிறு கூட்டங்களாக பிரிந்துவிடுகின்றன, அப்படி பிரிந்துவந்த முஃப்ளான்களைத்தான் வேலிக்குள் நாங்கள் பார்த்தோம். ஆண் முஃப்ளான்கள் பொதுவாக தனிமையில் உணவு தேடுகின்றன.
காட்டில் செம்மறியாட்டுக் கடா!
அடுத்த நாள் அதிகாலையில், மீண்டும் மலையுச்சிக்குப் போகிறோம்; திறந்தவெளியில் வண்டியை நிறுத்திவிட்டு, சூரியன் தலைக்குமேல் வருவதற்கு முன் காட்டுக்குள் நடந்து செல்கிறோம். காட்டில் ஒரே நிசப்தம், மரங்களுக்கு இடையே மூடுபனி ஊடுருவிக்கொண்டு வருகிறது. சாந்தம் தவழும் அந்தச் சூழலில் மனதைப் பறிகொடுத்து சற்று நிற்கையில், அதோ! எங்கள் கண்ணில் படுகிறது—அற்புதமான, கொழுகொழுவென்ற ஓர் ஆண் முஃப்ளான், குளிர்காலத்தைத் தாக்குபிடிக்கும் அதன் அடர்த்தியான உரோமம் ஏறக்குறைய எல்லாம் உதிர்ந்துவிட்டது. தாடையின் கீழ்ப்பகுதியை கருநிற மயிர் மூடியிருக்கிறது. அது தலையைக் கம்பீரமாய் சாய்த்து, அடர்ந்த கண்ணிமை வழியாக எங்களைப் பார்க்கிறது, பிறகு எங்களை மோப்பம்பிடிக்கிறது. வளைந்திருக்கும் அதன் கெட்டியான கொம்புகள் ஒவ்வொன்றும் 40 சென்டிமீட்டர் நீளம் இருக்கும்! நேற்றுப் பார்த்த பெண் முஃப்ளான்களைவிட இந்த ஆண் முஃப்ளான் பருமனாக காட்சியளிக்கிறது, அதன் எடை சுமார் 35 கிலோ தேறும்.
நாங்கள் அப்படியே ஆடாமல் அசையாமல் ‘கப்சிப்’ என்று நிற்கிறோம். என்றாலும், படு ஜாக்கிரதையான இந்த ஜீவராசி எங்களை மோப்பம் பிடித்துவிட்டது போலும்! சட்டென, தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு ஓடோடிவிடுகிறது. இந்த இரண்டு நாட்களில் நாங்கள் பார்த்ததும் கற்றுக்கொண்டதும் அப்படியே மனதில் பதிந்துவிட்டன. அதுமட்டுமல்ல, “சகல காட்டு ஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்” என்று சொல்லியிருக்கும் படைப்பாளர்மீது மதிப்புமரியாதையும் கூடியிருக்கிறது.—சங்கீதம் 50:10.
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
சைப்ரஸ் முஃப்ளானும் (பின்னணியில்), ஐரோப்பிய முஃப்ளானும்
[பக்கம் 25-ன் படங்களுக்கான நன்றி]
மேலே வலது: Oxford Scientific/photolibrary/Niall Benvie; ஐரோப்பிய முஃப்ளான்: Oxford Scientific/photolibrary