Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மெய் அன்பு அபூர்வம்—ஏன்?

மெய் அன்பு அபூர்வம்—ஏன்?

மெய் அன்பு அபூர்வம்​—⁠ஏன்?

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும் அன்பைப் பற்றிய அறிவுரைகளுக்குப் பஞ்சமே இல்லை. தெரபிஸ்ட்களும் கவுன்சலிங் நிபுணர்களும் அதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். டிவி நிகழ்ச்சிகள் பல அடிக்கடி அதைப் பரிசீலிக்கின்றன.

இன்டர்நெட்டிலுள்ள கணக்குவழக்கில்லா வெப் சைட்டுகள், காதலைக் கண்டடைய ஜனங்களுக்கு அறிவுரை வழங்குவதாக உரிமைபாராட்டுகின்றன. “அதி அற்புதமான, நம்ப முடியாத ரகசியங்களை” கண்டுபிடிப்பீர்கள் என்றும், “புரொஃபெஷனல் மேட்ச் மேக்கர்கள்,” “ரிலேஷன்ஷிப் எக்ஸ்பர்ட்டுகள்,” “லவ் ஸ்பெஷலிஸ்ட்டுகள்,” ஸைக்கோ தெரபிஸ்ட்டுகள், மனநல மருத்துவர்கள், ஜோதிடர்கள் ஆகியோரிடமிருந்து கற்றுக்கொள்வீர்கள் என்றும் ஒருவேளை அவை உங்களுக்குச் சொல்லலாம்.

அன்பு, காதல் ஆகியவற்றைப் பற்றிய புத்தகங்களையும் பத்திரிகைகளையும் பார்த்ததுமே அவற்றை வாங்கிப்படிக்க வேண்டும்போல் ஜனங்களுக்குத் தூண்டுதல் ஏற்படுகிறது; அவற்றில் சில, மட்டுக்கு மீறிய வாக்குறுதிகளை அளிக்கின்றன. உதாரணத்திற்கு, “உங்கள் காதல்வலையில் யாரையாவது விழச்செய்வது எப்படி” என்று காண்பிப்பதாக ஒரு புத்தகம் உரிமைபாராட்டுகிறது. “ஒரே மாதத்தில் பொருத்தமான ஜோடியை” கண்டுபிடிப்பது எப்படி என்ற விஷயத்தை வெளியிடுவதாக மற்றொரு புத்தகம் தெரிவிக்கிறது. ஒரு மாதம் ரொம்பவும் அதிகமோ? மற்றொரு புத்தகம், “90 நிமிடங்களில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில்” உங்களை யாராவது என்றென்றும் காதலிக்கும்படி செய்வது எப்படி எனக் கற்பிப்பதாய் பகிரங்கமாக அறிவிக்கிறது.

பெரும்பாலான இந்த ஆலோசனைகளை ஜனங்கள் விலை கொடுத்தே பெற வேண்டியிருக்கிறது. இதனால் ஏராளமானோர் இரண்டு காரியங்களை இழக்கிறார்கள். முதலில் ஆலோசனைகளை வாங்கும்போது, பணத்தை இழக்கிறார்கள். அடுத்து, அந்த ஆலோசனைகள் தாங்கள் எதிர்பார்த்தபடி “வேலைசெய்யாமல்” போகும்போது, மனோரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியத்தை இழக்கிறார்கள்​—⁠அடிக்கடி நடப்பது இதுதான்.

ஆனால், வேறொரு புத்தகம் இருக்கிறது; அது வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுவது ஒருபோதும் ஏமாற்றம் அளிக்காது. அதுமட்டுமல்ல, அன்பைப் பற்றி அது நேர்மையாகக் கலந்தாலோசிக்கிறது; ஆனாலும் அது உணர்ச்சிகளைக் கிளறுவதில்லை, போலியான வாக்குறுதிகளையும் அளிப்பதில்லை. எத்தனையோ காலங்களுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும், அதன் ஆலோசனைகள் பசுமை மாறாதிருக்கின்றன. அதன் நூலாசிரியர் ஞானத்தில் நிகரற்றவர், அன்பில் இணையற்றவர். ஒருவேளை அந்த விசேஷப் பரிசு உங்களிடம் ஏற்கெனவே இருக்கவும்கூட செய்யலாம்; அதுதான் பரிசுத்த பைபிள். நம்முடைய சூழ்நிலை அல்லது பின்னணி என்னவாக இருந்தாலும், அன்பைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை பைபிள் நமக்குக் கற்பிக்கிறது. அதன் ஆலோசனைகளுக்கு விலையேதும் இல்லை.

பைபிளின் ஆலோசனைப்படி நடந்தால், எல்லாரிடமும் நம்மால் நல்ல உறவை வைத்துக்கொள்ள முடியுமென அர்த்தமாகுமா? இல்லை. ஏனெனில், நாம் என்னதான் முயன்றாலும் சிலர் நம்மிடம் சிநேகமாகவே பழக மாட்டார்கள். உண்மையான அன்பை வற்புறுத்திப் பெறவும் முடியாது. (உன்னதப்பாட்டு 8:4) ஆனால், பைபிளின் வழிநடத்துதலை நாம் பின்பற்றும்போது, நிறைய பேருடன் அன்பான உறவுகளை வளர்த்துக்கொள்வோம்; அதிக நேரமும் முயற்சியும் தேவைப்பட்டாலும் அவ்வாறு செய்வோம். அன்பின் இந்த அம்சம் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும், ஆனால் இந்தக் காலத்தில் மெய் அன்பைக் காண்பது ஏன் அரிதாகி வருகிறது என்பதை முதலில் சிந்திக்கலாம்.

அன்பு ‘தணிந்துபோகும்’

‘உலக முடிவை’ பற்றிய மிக முக்கியமான தமது தீர்க்கதரிசனத்தில், நம்முடைய நாளைக் குறித்த நிலைமைகளையும் வாழ்க்கைப் பாணிகளையும் இயேசு மிகத் துல்லியமாக முன்னறிவித்தார். அன்புக்கு நேரெதிரான அக்கிரமங்களும் போர்களும் உலகெங்குமே நடைபெறும் என அவர் கூறினார். அதோடு, “அநேகர் . . . ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்” என்றும் “அநேகருடைய அன்பு தணிந்துபோம்” என்றும் அவர் கூறினார். (மத்தேயு 24:3-12) இந்த உலகத்தில் அன்பு ரொம்பவே தணிந்துபோயிருப்பதையும், குடும்ப அங்கத்தினர் மத்தியில்கூட மெய் அன்பு இல்லாதிருப்பதையும் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?

இயேசு மட்டுமல்ல, அப்போஸ்தலன் பவுலும்கூட “கடைசி நாட்களில்” ஜனங்களுடைய மனோபாவம் எப்படியிருக்கும் என விவரமாகக் குறிப்பிட்டார். மனுஷர்கள் “தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்” இருப்பார்கள் என அவர் எழுதினார். (2 தீமோத்தேயு 3:1-4) இத்தகைய மனப்பாங்கு அநேக நாடுகளில் சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது.

சற்று யோசித்துப்பாருங்கள்: பெருமைபிடித்தவர்களிடமும், நன்றியில்லாதவர்களிடமும், உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுகிறவர்களிடமும், உங்களைக் காட்டிக்கொடுக்கிற துரோகிகளிடமும் நீங்கள் ஈர்க்கப்படுவீர்களா? தற்பிரியரிடமோ, பணப்பிரியரிடமோ, சுகபோகப்பிரியரிடமோ நீங்கள் கவரப்படுவீர்களா? பேராசை, சொந்த விருப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சுயநலவாதிகள் மற்றவர்களிடம் பழகுவதால், அவர்கள் காட்டுகிற எந்தவொரு அக்கறையும் சுயநலத்தால் தூண்டப்பட்டதாகவே இருக்கும். அதனால்தான் “இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு” என்ற ஞானமான ஆலோசனையை பைபிள் அளிக்கிறது.​—2 தீமோத்தேயு 3:5.

கடைசி நாட்களில் மக்கள் ‘சுபாவ அன்பில்லாதவர்களாய்’ இருப்பார்கள், அதாவது வேறொரு மொழிபெயர்ப்பு சொல்கிறபடி, “தங்கள் குடும்பத்தார்மீது இயல்பான அன்பில்லாதவர்களாய்” இருப்பார்கள் என்ற குறிப்பையும் இங்கே கவனியுங்கள். அதிகமதிகமான பிள்ளைகள் இப்படிப்பட்ட குடும்பங்களிலேயே வளர்ந்துவருகிறார்கள் என்பது வருத்தமான விஷயம். இந்தப் பிள்ளைகள் பெரும்பாலும் மீடியாவிலிருந்தே அன்பைப் பற்றிக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் மீடியா, அன்பை சரியாகச் சித்தரிக்கிறதா? உண்மையிலேயே நல்ல உறவுகளை ஏற்படுத்துகிற அன்பைப் பற்றி விளக்குகிறதா?

கற்பனைக் காதலா, மெய் அன்பா?

நம்மில் பெரும்பாலோர் மீடியாவினால் ஓரளவு செல்வாக்கு செலுத்தப்படுகிறோம். ஆராய்ச்சியாளர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “சிறு வயதிலிருந்தே சினிமா, டிவி, புத்தகங்கள், பத்திரிகைகள், ரேடியோ, இசை, விளம்பரங்கள், ஏன் செய்திகளில்கூட அன்பு, காதல், செக்ஸ் ஆகியவற்றைப் பற்றிய ஒரேமாதிரியான கதைகளையும் ராஜா-ராணி கதைகளையும் நாம் ஓயாமல் கேட்டு/பார்த்து வருகிறோம்.” அவர் மேலுமாக இவ்வாறு விளக்கினார்: “அன்பு, காதல், செக்ஸ் ஆகியவற்றைப் பற்றி மீடியாவில் வெளிவரும் பெரும்பாலான விஷயங்கள் நிறைவேறா எதிர்பார்ப்புகளை ஜனங்களுடைய மனதில் உருவாக்கிவிடுகின்றன அல்லது பதித்துவிடுகின்றன; நம்மில் பெரும்பாலோர் அவற்றை முழுமையாக ஒதுக்கிவிட முடிவதில்லை. எனவே, நம்முடைய நிஜமான துணைவர்களோடும், நமக்கு நாமேயும் திருப்தி அடையாதபடி செய்துவிடுகின்றன.”

ஆம், புத்தகங்கள், சினிமாக்கள், பாடல்கள் ஆகியவை அன்பைப் பற்றிய தெளிவான விளக்கத்தை அளிப்பது இல்லை. ஏனெனில், ஜனங்களை மகிழ்விப்பதே அவற்றின் நோக்கம், அவர்களுக்குக் கற்பிப்பது அல்ல! அதனால்தான் கற்பனையும் காதலும் கலந்த கதைகளை​—⁠காசைக் கறக்கும் கதைகளை⁠—⁠கதாசிரியர்கள் கடைந்தெடுக்கிறார்கள். ஆனால் வருத்தகரமாக, அத்தகைய கட்டுக்கதைகளை நிஜ வாழ்க்கையோடு மக்கள் வெகு எளிதில் குழப்பிக்கொள்கிறார்கள். எனவே, அந்தக் கற்பனைக் கதாபாத்திரங்களைப் போல தங்களுடைய உறவுமுறைகள் இல்லாததைப் பார்க்கும்போது அவர்கள் பெரும்பாலும் ஏமாற்றம் அடைகிறார்கள். அப்படியானால், கற்பனையையும் நிஜத்தையும் நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்? மீடியா காண்பிக்கிற காதலையும் உண்மையான அன்பையும் நாம் எப்படி வேறுபடுத்தலாம்? பின்வரும் ஒப்புமைகளைக் கவனியுங்கள்.

மீடியா காதல் VS மெய் அன்பு

புத்தகங்களிலோ, சினிமாக்களிலோ, நாடகங்களிலோ காதல் கதைகள் வேறுபடலாம், ஆனால் அவற்றின் அடிப்படை ‘ஃபார்முலா’ என்னவோ மாறுவதே கிடையாது. ரைட்டர் என்ற பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “பெரும்பாலான காதல் கதைகள் ஒரே மாதிரியாக எழுதப்படுகின்றன. அதற்கு ஒரு காரணம் பின்வரும் ஃபார்முலாவாகும்: ஓர் ஆண் ஒரு பெண்ணைச் சந்திக்கிறான்/ஆண் அந்தப் பெண்ணை இழந்துபோகிறான்/அந்தப் பெண் ஆணுக்குத் திரும்பவும் கிடைத்துவிடுகிறாள்; இந்த ஃபார்முலா ஒரு வெற்றி ஃபார்முலாவாக இருக்கிறது; கதையின் பின்னணியும் காலப்பகுதியும் எதுவாக இருந்தாலும், வாசகர்கள் இதுபோன்ற கதைகளையே திரும்பத்திரும்ப வாசிக்கத் தூண்டப்படுகிறார்கள்.” இந்த ஜனரஞ்சக ஃபார்முலாவை சற்று ‘க்ளோஸ்-அப்’பில் பார்க்கலாமா?

ஓர் ஆண் ஒரு பெண்ணைச் சந்திக்கிறான்: கட்டழகு இளவரசன், ஓர் அழகிய பெண்ணைச் சந்திக்கிறான், காதல் மலர்கிறது. காதல் கதைகளை எழுத விரும்புகிறவர்களுக்கு, பிரபல கதாசிரியை ஒருவர் இவ்வாறு அறிவுரை கூறுகிறார்: “[ஓர் ஆணும் பெண்ணும்] முதன்முதலில் சந்திப்பதை நீங்கள் விவரிக்கும்போதே, அவ்விருவரும் ஒருவருக்கொருவர் ஏற்ற ஜோடி என்பதை உங்கள் வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

கண்டதும் காதல் என்ற கருத்து, மெய் அன்பு வெறுமனே ஓர் உணர்ச்சி என்ற எண்ணத்தையும், பொருத்தமான ஒருவரைச் சந்திக்கும்போது உள்ளத்தினுள் ஏற்படுகிற கட்டுப்படுத்த முடியாத மன எழுச்சி என்ற எண்ணத்தையும் தருகிறது; அத்தகைய அன்பு எடுத்த எடுப்பிலேயே மலர்ந்துவிடும் என்றும், அதற்காக எந்தவொரு முயற்சியும் தேவையில்லை அல்லது அந்த நபரைப் பற்றித் தெரிந்துகொள்ள அவசியமில்லை என்றும் நினைக்க வைக்கிறது. என்றாலும், மெய் அன்பு ஓர் உணர்ச்சி மட்டுமே அல்ல. உண்மைதான், அதில் உணர்ச்சிகள் உட்படுகின்றன, ஆனால் மனித உறவுகளைப் பின்னிப்பிணைக்கும் ஆழ்ந்த அன்பில் நன்னெறிகளும் அடங்குகின்றன; சரியாக வளர்க்கப்பட்டு தொடர்ந்து காண்பிக்கப்படும் பட்சத்தில், அந்தப் பிணைப்பு பலமாகிக்கொண்டே இருக்கும்.​—கொலோசெயர் 3:14.

அதுமட்டுமல்ல, ஒரு நபரோடு பரிச்சயமாவதற்குக் காலமெடுக்கும். முதல் பார்வையிலேயே கச்சிதமான ஜோடியைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைப்பது, கற்பனைக் கதைக்கு ஒப்பாகவே இருக்கும், அநேகமாய் அது ஏமாற்றத்தில்தான் முடிவடையும். மெய் அன்பைக் கண்டுபிடித்துவிட்டதாகச் சட்டென முடிவுசெய்வது, அது மெய் அன்பில்லை என்பதற்கான அத்தாட்சிகளைக் காணாதபடி உங்கள் மனக்கண்களைக் குருடாக்கியும்விடும். உங்களுக்கு ஏற்ற ஜோடியைத் தேர்ந்தெடுப்பதற்கு, பொங்கியெழும் மோகத்தால் ஏற்படுகிற ஒருவித பலமான உணர்ச்சி மட்டுமே போதாது. எனவே, அவசரப்படாதீர்கள். சொல்லப்போனால், தவறான மணத்துணையைத் தேர்ந்தெடுப்பது, வேலை செய்கிற விதத்தையும், மனநலத்தையும், உடல்நலத்தையும், ஏன் ஆயுளையும்கூட மோசமாகப் பாதிக்கலாம் என்பதை ஏராளமான ஆய்வுகள் காண்பித்திருக்கின்றன.

ஆண் அந்தப் பெண்ணை இழந்துபோகிறான்: உயர்குடியைச் சேர்ந்த ஒரு கெட்ட ஆள் அந்த அழகிய பெண்ணைக் கடத்திக்கொண்டு, கோட்டையிலிருந்து தப்பியோடுகிறான். அவளைக் கண்டுபிடிப்பதற்காக இளவரசன் படு ஆபத்தான தேடுதல் வேட்டையில் இறங்குகிறான். “இரண்டு பேர் காதல் வயப்படுவதும், அந்தக் காதலை வெற்றி பெறச் செய்ய அவர்கள் போராடுவதும்தான் காதல் கதைகளின் கருப்பொருளாக இருக்க வேண்டும்” என அமெரிக்காவின் காதல் கதாசிரியர்களுடைய சங்கத்தின் சார்பாகப் பேசிய ஒரு பெண் குறிப்பிட்டார். பெரும்பாலான நாவல்களில், காதல் கண்டிப்பாக வெற்றிபெறும்​—⁠வாசகர்களுக்கும் அது தெரியும். அந்தக் காதலுக்கு வரும் தடைகள்​—⁠பெரும்பாலும் வெளியிலிருந்தே வரும் தடைகள்​—⁠முறியடிக்கப்படுகின்றன.

நிஜ வாழ்க்கையில், பிரச்சினைகள் பொதுவாக வெளியிலிருந்தும் வருகின்றன, உள்ளிருந்தும் வருகின்றன. பணம், வேலை, உறவினர்கள், நண்பர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாக அவை இருக்கலாம். ஒருவர் மற்றொருவருடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாதபோதும் பிரச்சினைகள் ஏற்படலாம். கற்பனைக் கதாபாத்திரங்களில், அநேகமாகச் சிறுசிறு குறைபாடுகளே இருக்கும், ஆனால் நிஜ வாழ்க்கையில் எப்போதும் அப்படி இருப்பதில்லை. அதோடு, கருத்துகளில், பின்னணிகளில், விருப்பங்களில், குணாம்சங்களில் உள்ள வேறுபாடுகளையோ வேறு சோதனைகளையோ நம்முடைய முயற்சியின்றி மெய் அன்பு நீக்கிவிடாது. மாறாக, அந்த அன்பில் ஒத்துழைப்பு, மனத்தாழ்மை, நீடிய சாந்தம், பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய குணங்களும் உட்பட்டுள்ளன​—⁠இவையெல்லாம் நமக்கு எப்போதும் இயல்பாகவோ எளிதாகவோ வந்துவிடுவதில்லை.​—1 கொரிந்தியர் 13:4-7.

ஆணுக்கு அந்தப் பெண் திரும்பவும் கிடைத்துவிடுகிறாள்: அந்த அழகிய பெண்ணை இளவரசன் மீட்கிறான்; கெட்ட ஆளை நாடுகடத்துகிறான். காதல் ஜோடிகள் மணமுடிக்கிறார்கள், அதன்பின் என்றென்றும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். காதல் கதைகளின் பதிப்பாசிரியர் வருங்கால எழுத்தாளர்களை இவ்வாறு அறிவுறுத்துகிறார்: “என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்றுதான் கதையை முடிக்க வேண்டும். . . . காதல் ஜோடி ஒன்றுசேர்ந்துவிட்டார்கள், சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற திருப்தி வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும்.” காதல் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியிருந்தார்கள் என்பதை அக்கதைகள் வர்ணிப்பதே கிடையாது. ஒருவேளை அச்சமயத்தில் மனஸ்தாபங்களும் ஏகப்பட்ட சவால்களும் பிரச்சினைகளும் அவர்களுடைய பந்தத்தைச் சோதித்திருக்கலாம். விவாகரத்து புள்ளிவிவரங்கள் காண்பிக்கிறபடி, காலப்போக்கில் ஏராளமான திருமணங்கள் இச்சோதனையில் தோல்வியையே தழுவியிருக்கின்றன.

ஆம், கற்பனைக் கதைகளில் வர்ணிக்கப்படுகிற அன்பு ஓரளவு எளிதானது; மெய் அன்புக்கோ மிகுந்த முயற்சி தேவை. இவ்விரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களைப் புரிந்திருப்பது நியாயமற்ற, முதிர்ச்சியற்ற எதிர்பார்ப்புகளை மனதில் சுமக்காதபடி உங்களைப் பாதுகாக்கும். அவசரப்பட்டு பொறுப்புகளை ஏற்றுவிட்டு, பிற்பாடு வருத்தப்படுவதிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். எனவே, சுயநலமற்ற மெய் அன்பை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? நீங்கள் எப்படி இன்னுமதிகமாக நேசிக்கப்படுகிற நபராக ஆகலாம்? அடுத்த கட்டுரை இக்கேள்விகளைச் சிந்திக்கும்.

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

அதிகமாக அன்பு காட்டாதவர்கள்மீது அதிகமாக அன்பு காட்டப்படுவதில்லை

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

கற்பனைக் கதைகளில் வர்ணிக்கப்படுகிற காதல் ஓரளவு எளிதானது; மெய் அன்புக்கோ மிகுந்த முயற்சி தேவை

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

காதல் கதைகளில் ஹீரோக்களும் ஹீரோயின்களும்

அமெரிக்காவில், காதல் கதைகள் வருடந்தோறும் நூறு கோடிக்கும் அதிகமான டாலருக்கு விற்பனையாகி, லாபம் ஈட்டித்தருகின்றன. அந்நாட்டில் விற்பனையாகும் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத நாவல்கள் காதலைப் பற்றியவை. அவற்றின் வாசகர்களில் சுமார் 90 சதவீதத்தினர் பெண்களே; காதல் கதைகளில் வரும் ஹீரோக்களில் அவர்கள் எதிர்பார்க்கிற மூன்று அடிப்படைப் பண்புகள்: ஆற்றல், அழகு, அறிவு. ஹீரோயின்களில் அவர்கள் எதிர்பார்க்கிற பிரபலமான மூன்று பண்புகள்: புத்திக்கூர்மை, மனோபலம், கவர்ச்சி; அமெரிக்காவிலுள்ள காதல் கதாசிரியர்கள் சங்கம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் இதைக் காண்பிக்கின்றன.

[பக்கம் 67-ன் படங்கள்]

அன்பை மீடியா சரியாகச் சித்தரிப்பதில்லை