Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மெய் அன்பைப் பெற . . .

மெய் அன்பைப் பெற . . .

மெய் அன்பைப் பெற . . .

காதலர்களிடையே மலரும் அன்பை மட்டுமல்ல, மெய் அன்பைப் பெறுவதற்கும் இன்னுமதிக அன்புக்குரியவராக ஆவதற்கும் நீங்கள் என்ன செய்யலாம்? ஒருவேளை பணக்காரராக ஆக வேண்டுமோ? அழகைக் கூட்டிக்கொள்ள வேண்டுமோ?

விளம்பரங்களால் வஞ்சிக்கப்பட்டு, மீடியாவினால் மதிமயக்கப்படுகிற ஆண்களும் சரி, பெண்களும் சரி, அன்பைப் பெற்றுக்கொள்ள பணம் பணம் என்று, அல்லது அழகு அழகு என்று பெரும்பாலும் அவற்றின் பின்பாகவே அலைகிறார்கள். நம்முடைய தோற்றத்தைக் குறித்து நாம் அக்கறை காட்டுவது இயல்புதான், சரியானதும்தான்; ஆனால் அழகு என்பது நிரந்தர பந்தத்தை ஒருபோதும் ஏற்படுத்துவதில்லை; என்னதான் செய்தாலும் அந்த அழகு வெறும் தற்காலிகமானதே. பணங்காசு விஷயத்திலும் அதுவே உண்மை. மெய் அன்பைப் பெற்றுக்கொள்ள நமக்கு உதவும் ஒன்றே ஒன்று, மற்றவர்களிடம் சுயநலமற்ற அன்பைக் காண்பிப்பதாகும். “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்” என்று கற்பித்தார் இயேசு. (லூக்கா 6:38) சுருங்கச் சொன்னால், அன்பு வேண்டுமானால், அன்பு காட்டுங்கள்.

அதை நாம் எப்படிக் காட்டலாம்? கடவுளுடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டு எழுதியபோது, அப்போஸ்தலன் பவுல் அந்தக் கேள்விக்குப் பதில் அளித்தார். அன்பு என்பது சக்திவாய்ந்தது என்றும், அது உணர்ச்சிகளால் அல்ல, ஆனால் முக்கியமாக மற்றவர்களுக்கு அது எதைச் செய்கிறது, எதைச் செய்யாமல் இருக்கிறது என்பதன் பேரிலேயே வரையறுக்கப்படுகிறது என்றும் அவர் வெளிப்படுத்தினார். பவுலுடைய வார்த்தைகளை இங்கே கவனியுங்கள்: “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.”​—1 கொரிந்தியர் 13:4-7.

ஒருவர் உங்களிடம் தயவாக நடந்துகொள்ளும்போது, அல்லது எரிச்சலூட்டும் சிறுசிறு விஷயங்களை நீங்கள் சொல்வதை/செய்வதைப் பொருட்படுத்தாமல் உங்களை ஏற்றுக்கொள்ளும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? உங்கள்மீது உண்மையிலேயே அக்கறை காட்டுகிற நபரிடம், எளிதில் கோபங்கொள்ளாத நபரிடம், மன்னிக்கத் தயாராயுள்ள நபரிடம், நாணயஸ்தராக உள்ள நபரிடம்​—⁠மன்னிப்பதும் நாணயமாக இருப்பதும் கடினமாக இருக்கும்போதுகூட அவ்வாறு உள்ள நபரிடம்​—⁠நீங்கள் கவர்ந்திழுக்கப்படுவீர்கள், அல்லவா?

ஆக, நீங்களும் மற்றவர்களிடம் அவ்வாறே நடந்துகொள்ளுங்கள். “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 7:12) அன்பு காண்பிப்பது எப்போதும் எளிதல்ல, ஆனாலும் அதற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். ஒரு பலன் என்னவென்றால், உங்கள் குடும்பத்தாராலும், நண்பர்களாலும், மணத்துணையாலும், அல்லது வருங்கால மணத்துணையாலும் நீங்கள் இன்னுமதிகமாக நேசிக்கப்படுவீர்கள். மற்றொரு பலன், சரியானதைச் செய்யும்போது, அதாவது மற்றவர்களுக்காக உங்களையே அர்ப்பணிக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். ஆம், ‘பெற்றுக்கொள்வதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம் இருக்கிறது.’​—அப்போஸ்தலர் 20:35, NW.

உன்னத அதிகாரியிடமிருந்து அன்பைக் கற்றுக்கொள்ளுங்கள்

யெகோவா அன்பின் கடவுள், அன்பைப் பற்றி நம்பகமான தகவல் அளிக்கும் உன்னத அதிகாரி. (1 யோவான் 4:8) கற்றுக்கொள்ள மனமுள்ள யாவருக்கும் அன்பைப் பற்றிக் கற்றுக்கொடுக்க அந்த அன்பே அவரைத் தூண்டுகிறது. அன்பு காட்டுவதற்கும் அன்பு காட்டப்படுவதற்கும் நமக்கு உதவுகிற பைபிள் நியமங்களின் சில உதாரணங்களை இப்போது கவனியுங்கள்.

‘கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும் இருங்கள்.’ (யாக்கோபு 1:19) பேசுவதை நன்கு கவனித்துக் கேட்கிற மணத்துணையுடைய ஆட்களே மிகமிக சந்தோஷமானவர்கள் என்பதை 20,000-⁠க்கும் அதிகமான தம்பதிகளோடு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று காண்பித்தது. நெருங்கிய பந்தத்திற்கு நல்ல பேச்சுத்தொடர்பு மிகவும் இன்றியமையாதது. சமூகவியல் பேராசிரியை ஒருவர் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் அனுபவிக்கிற கஷ்டங்களைப் பற்றி எதுவுமே தெரிந்திராத நபரோடு வாழும்போது நீங்கள் ரொம்பவே தனிமையாய் உணருவீர்கள். ஆனால் அதைவிட கொடுமை என்னவென்றால், நீங்கள் அனுபவிக்கிற கஷ்டங்களைத் தெரிந்திருந்தும் ‘இதற்குப்போய் ஏன் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டும்?’ என நினைக்கிற ஒரு நபரோடு வாழ்வதுதான்.” இரண்டு நபர்கள் பல்வேறு விதங்களில் வேறுபட்டவர்களாக இருந்தாலும், “உங்களுடைய அபிப்பிராயங்களைப் புரிந்துகொள்கிறவரும் வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படுகிற அனுபவங்களால் நீங்கள் எப்படிப் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறவருமான துணைவர் உங்களுக்கு இருந்தால், அத்தகைய வேறுபாடுகளெல்லாம் பெரிய விஷயமே அல்ல” என்கிறார் அவர் மேலுமாக.

‘உங்களுடைய கனிவான பாச உணர்ச்சிகளில் இறுகிப்போயிருக்கிறீர்கள் . . . விரிவாகுங்கள்.’ (2 கொரிந்தியர் 6:12, 13, NW) மற்றவர்களிடம் அன்பு காட்டுவதில் விரிவாகும்போது நாம் நன்மை அடைவோம். ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி வெளியிட்ட பிரசுரம் ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது: “சமூகத் தோழமையை அனுபவிக்கிற ஆட்கள், அதாவது குடும்பத்தாரோடும், நண்பர்களோடும், ஊர் ஜனங்களோடும் திருப்திகரமான உறவை அனுபவிக்கிற ஆட்கள், அவ்வளவாய் உடல்நலப் பிரச்சினைகள் இல்லாமல், நெடு நாளைக்குச் சந்தோஷமாக வாழ்வதாக ஆய்வுகள் பல காண்பித்திருக்கின்றன.”

‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வோமாக.’ (எபிரெயர் 10:24, 25) நண்பர்கள் நம்மீது செல்வாக்கு செலுத்துகிறார்கள். எனவே, உண்மையான கிறிஸ்தவ அன்பைக் காண்பிப்பவர்களுடன் நேரம் செலவிட்டீர்களென்றால், இந்த அன்பை நேரடியாகவே அனுபவிப்பீர்கள், அதோடு உங்கள் வாழ்க்கையில் அதை எப்படிக் காண்பிக்கலாம் என்பதையும் கற்றுக்கொள்வீர்கள். இத்தகைய அன்பை ஒருவருக்கொருவர் காண்பிக்க யெகோவாவின் சாட்சிகள் கடுமையாக முயற்சி செய்கிறார்கள், ஏனெனில், இயேசுவின் உண்மை சீஷர்களுடைய அடையாளமாக அது இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (யோவான் 13:35) அவர்களுடைய கிறிஸ்தவக் கூட்டங்களில் நீங்களும் தாராளமாகக் கலந்துகொள்ளலாம்.

உங்கள்மீது யாரும் அன்பு செலுத்தாததைப் போல் உணருகிறீர்களென்றால், மனம் தளர்ந்துவிடாதீர்கள் அல்லது உங்களை நீங்களே கடுமையாக நியாயந்தீர்க்காதீர்கள். உங்கள் நிலைமையை யெகோவா பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். இத்தொடர் கட்டுரைகளின் முதல் கட்டுரையில் லேயாளைப் பற்றி வாசித்தது ஞாபகம் இருக்கிறதா? அவளுடைய நிலைமையை யெகோவா கவனித்தார்; அதனால் பிற்பாடு ஆறு மகன்களுக்கும் ஒரு மகளுக்கும் அவள் தாயானாள்​—⁠குழந்தைகள் மிகப் பெரிய சொத்துகளாகக் கருதப்பட்ட அந்தச் சகாப்தத்தில் எப்பேர்ப்பட்ட அபரிமிதமான ஆசீர்வாதம்! அதுமட்டுமல்ல, லேயாளின் எல்லா மகன்களுமே இஸ்ரவேல் கோத்திரங்களின் முற்பிதாக்களாக ஆனார்கள். (ஆதியாகமம் 29:30-35; 30:16-21) கடவுள் தன்மீது அன்புடன் அக்கறை காட்டியபோது லேயாளுக்கு எத்தனை ஆறுதலாக இருந்திருக்கும்!

பைபிளில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள புதிய உலகில், எவருமே அன்பு கிடைக்காமல் தவிக்க மாட்டார்கள். மாறாக, மனித சமுதாயத்தில் மெய் அன்பு தழைத்தோங்கும். (ஏசாயா 11:9; 1 யோவான் 4:7-12) எனவே, பைபிளில் கற்பிக்கப்பட்டுள்ள அன்பை, அதன் நூலாசிரியரான கடவுள் காண்பித்துள்ள அன்பை வளர்த்துக்கொள்வதன் மூலம் அந்தப் புதிய உலகில் இருப்பதற்கான ஆசையை இப்போதே நாம் வெளிக்காட்டுவோமாக. ஆம், அன்பைப் பெற்றுக்கொள்வதில் மட்டுமல்ல, மற்றவர்களிடம் தன்னலமற்ற அன்பைக் காண்பிப்பதிலும் உண்மையான சந்தோஷம் இருக்கிறது.​—மத்தேயு 5:46-48; 1 பேதுரு 1:22.

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

‘வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம் இருக்கிறது.’​—⁠அப்போஸ்தலர் 20:35, NW.

[பக்கம் 8-ன் படம்]

அன்பு வேண்டுமானால், அன்பு காட்டுங்கள்