ஸ்கூலில் செக்ஸை தவிர்ப்பது எப்படி?
இளைஞர் கேட்கின்றனர் . . .
ஸ்கூலில் செக்ஸை தவிர்ப்பது எப்படி?
“ஸ்கூலில் தினமும் செக்ஸ் பற்றித்தான் பேச்சு. பாய்ஸை கேர்ல்ஸே தேடிப்போகிறார்கள். சொல்லப்போனால், ஸ்கூலிலேயே ‘எல்லாவற்றையும்’ முடித்துவிடுகிறார்கள்.”—ஐலின், 16.
“என்னுடைய ஸ்கூலில், ஹோமோசெக்ஷுவல்ஸ் எல்லார் முன்னாடியும் அசிங்க அசிங்கமாக நடந்துகொள்கிறார்கள், அதைப் பற்றி துளிகூட கூச்சப்படுவதில்லை.”—மைக்கேல், 15. a
உங்களுடைய வகுப்பில் படிக்கிறவர்கள் எப்பொழுது பார்த்தாலும் செக்ஸ் பற்றியே பேசுகிறார்களா? சிலர் அதற்கும் மேலே ஒருபடி போகிறார்களா? பள்ளியில் இருப்பது “ஏ-படம் சூட்டிங் எடுக்கிற இடத்தில் இருப்பது மாதிரி இருக்கிறது” என்று ஒரு டீனேஜ் பெண் சொன்னாள்; நீங்களும் ஒருவேளை அதேபோல் உணரலாம். உண்மை என்னவென்றால், ஸ்கூலில் செக்ஸ் பற்றி பேசுவதற்கு—ஏன், அதில் ஈடுபடுவதற்கும்கூட—அடிக்கடி வாய்ப்புகள் கிடைக்கின்றன.
“ஒரு தடவை போய்விட்டு வருவதை” (ஹூக்கிங்-அப்)—அதாவது உணர்ச்சிரீதியில் எந்தவொரு ஈடுபாடுமில்லாமல் ஒருவருடன் உடலுறவு கொள்வதை—பற்றி உங்கள் கிளாஸ்மேட்ஸ் பேசிக்கொள்ளலாம். மாணவர்கள் சிலர், ஓரளவு தெரிந்தவர்களுடன் “ஒரு தடவை போய்விட்டு வருகிறார்கள்.” வேறு சிலரோ, இன்டர்நெட்டில் தொடர்புகொண்ட முன்பின் தெரியாத ஆட்களுடன் பாலுறவுகொள்ள அவர்களைச் சந்திக்கிறார்கள். இந்த இரண்டு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு அன்பும் பிணைப்பும் இல்லாமல் உடல்ரீதியில் மட்டும் இணைவதே குறிக்கோளாக இருக்கிறது. “இரண்டு பேர் தங்கள் காமப் பசியைத் தீர்த்துக்கொள்கிறார்கள், அவ்வளவுதான்” என 19-வயது டானியெல் கூறுகிறாள்.
இன்று அநேக பள்ளிகளில், ‘ஒரு தடவை போய்விட்டு வருவது’ என்பது முக்கியமான ‘டாப்பிக்’காக இருக்கிறது. “திங்கட்கிழமை வந்தாலே போதும், எங்கு பார்த்தாலும் லேட்டஸ்ட் ‘அனுபவம்’ பற்றித்தான் ரொம்ப சுவாரஸ்யமாக எல்லாரும் பேசிக்கொண்டிருப்பார்கள்; எல்லாவற்றையும் அப்படியே பச்சையாக வர்ணித்துக் கொண்டிருப்பார்கள்” என 17-வயது பெண் ஒருத்தி தனது ஸ்கூல் நியூஸ் பேப்பரில் எழுதினாள்.
நீங்கள் பைபிள் தராதரங்களின்படி வாழ முயன்றுவருகிறீர்களா? அப்படியென்றால், செக்ஸும் பேச்சுமாகவே இருக்கிற இளசுகள் மத்தியில் இருக்கும்போது நீங்கள் மட்டும் தனியாக ஒதுக்கப்பட்டதைப் போல் உணரலாம். நீங்கள் அவர்களுடன் சேராவிட்டால், கேலிகிண்டலுக்கும் ஆளாகலாம். ஆனால் இது ஓரளவுக்கு எதிர்பார்க்க வேண்டியதுதான்; ஏனென்றால் உங்களுடைய பாணியைப் பற்றி புரிந்துகொள்ளாதவர்கள் ‘உங்களைப் பழிக்கலாம்’ என பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 4:3, 4, பொ.மொ.) என்றாலும், கேலிகிண்டலை யார்தான் விரும்புவார்கள்? அப்படியானால், ஸ்கூலில் எப்படி செக்ஸை தவிர்த்து, அதேசமயத்தில் அந்தத் தீர்மானத்தைக் குறித்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம்? முதலாவதாக, ஏன் செக்ஸ் அதிக சக்திவாய்ந்த ஒன்றாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.
உங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
டீனேஜ் பருவத்தில், உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் உங்களுக்குள் வேகமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்தப் பருவத்தில் பாலுணர்வுகள் பொங்கி எழுகின்றன. ஆனால் இது முற்றிலும் இயல்பானதுதான். ஆகவே, பள்ளியில் எதிர்பாலார்மீது உங்களுக்குப் பலமான கவர்ச்சி ஏற்பட்டால், நீங்கள் படுமட்டமான ரகம் என்றோ ஒழுக்கத்திற்கும் உங்களுக்கும் வெகு தூரம் என்றோ முடிவு செய்துவிடாதீர்கள். நீங்கள் மனது வைத்தால் நிச்சயம் ஒழுக்கமாக இருக்க முடியும்!
டீனேஜ் பருவத்தில் இப்படிப்பட்ட உணர்ச்சிப் போராட்டங்கள் நடப்பது சகஜம் என்பதை மனதில் வையுங்கள்; அதோடுகூட, இன்னொரு விஷயத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்: மனிதர் அபூரணராக இருப்பதால், எல்லாருமே கெட்ட காரியங்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். “என் மனதின் சட்டத்திற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு சட்டத்தை என் உறுப்புகளில் இருக்கக் காண்கிறேன்” என்று அப்போஸ்தலன் பவுல்கூட ஒப்புக்கொண்டார். தனது குறைகள் தன்னை ‘பரிதபிக்கத்தக்க’ மனுஷனாக உணரச் செய்கிறது என்றும் கூறினார். (ரோமர் 7:23, 24; NW) ஆனால் அந்தப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றார், அதேபோல் நீங்களும் வெற்றிபெற முடியும்!
உங்கள் வகுப்பு மாணவர்களைப் புரிந்துகொள்ளுங்கள்
ஏற்கெனவே குறிப்பிட்டபடி, உங்களுடைய வகுப்பு மாணவர்கள் எப்பொழுதும் செக்ஸ் பற்றியே பேசலாம் அல்லது அதில் ஈடுபட்டதாக பெருமை பீத்திக்கொள்ளலாம். அவர்களுடைய கெட்ட பழக்கம் உங்களைத் தொற்றிவிடாதபடி ஜாக்கிரதையாக இருங்கள். (1 கொரிந்தியர் 15:33, NW) அதேசமயத்தில், அவர்களை விரோதிகளாக பார்க்க வேண்டியதில்லை. ஏன்?
உங்களுக்கு இருக்கும் ஆசைகளேதான் உங்களுடைய வகுப்பு மாணவர்களுக்கும் இருக்கின்றன. கெட்ட காரியங்களிடம் கவரப்படும் இயல்பு அவர்களுக்கும் இருக்கிறது. வித்தியாசமெல்லாம், அவர்களில் சிலர் ‘தேவப் பிரியராயிராமல் சுகபோகப் பிரியராக’ இருப்பதுதான். ஒருவேளை ‘சுபாவ அன்பில்லாத’ குடும்பத்திலிருந்து அவர்கள் வந்திருக்கலாம். (2 தீமோத்தேயு 3:1-4) வேறு சிலருக்கு, நல்ல பெற்றோர்களுடைய அன்பான கண்டிப்போ ஒழுக்க விஷயங்களில் பயிற்றுவிப்போ கிடைக்காமல் இருக்கலாம்.—எபேசியர் 6:4.
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலுள்ள தலைசிறந்த ஆலோசனைகள் உங்களுக்கு எளிதில் கிடைப்பதுபோல் அவர்களுக்குக் கிடைக்காததால், ஆசைக்கு அடிபணிவதன் ஆபத்துக்களைப் பற்றி அவர்கள் அறியாதிருக்கலாம். (ரோமர் 1:26, 27) பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுக்காமலேயே, ஒரு காரைக் கொடுத்து, டிராஃபிக்கான ரோட்டில் ஓட்டச் சொல்வது போல் இது இருக்கிறது. கார் ஓட்டுவது அந்தச் சமயத்தில் ‘திரில்’லாக இருக்கலாம், ஆனால் பயங்கர விபத்து ஏற்படுவது உறுதி. ஆகவே, உங்களுடைய வகுப்பு மாணவர்கள் உங்கள் முன்பு செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்தால் அல்லது ஒழுக்கங்கெட்ட செயல்களில் ஈடுபடச் சொல்லி உங்களை வற்புறுத்தினால், நீங்கள் என்ன செய்யலாம்?
ஒழுக்கங்கெட்ட பேச்சை அடியோடு தவிருங்கள்
உங்கள் வகுப்பு மாணவர்கள் ஆபாசமாக பேச ஆரம்பித்தால், நீங்கள் வித்தியாசமானவராக தெரியக்கூடாது என்பதற்காக அதைக் கேட்க வேண்டும்போல் தோன்றும்; அல்லது, அவர்களுடன் சேர்ந்துகொண்டு பேச வேண்டும்போல் தோன்றும். ஆனால் உங்களைப் பற்றி அவர்களுக்கு எப்படிப்பட்ட அபிப்பிராயம் ஏற்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர்களுடைய பேச்சை ஆர்வமாக கேட்டால், நீங்கள் உண்மையிலேயே எப்படிப்பட்ட நபர் அல்லது எப்படிப்பட்ட நபராக இருக்க விரும்புகிறீர்கள் என்பது தெரியவரும் அல்லவா?
அப்படியானால், ஒழுக்கங்கெட்ட பாலியல் விஷயங்களிடம் பேச்சு திரும்புகையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? சட்டென்று எழுந்து போய்விட வேண்டுமா? ஆம், நிச்சயமாக! (எபேசியர் 5:3, 4) பைபிள் இவ்வாறு கூறுகிறது: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்.” (நீதிமொழிகள் 22:3) ஆகவே, அப்படிப்பட்ட விஷயங்கள் பேசப்படும் இடத்தைவிட்டு எழுந்து செல்வது, நீங்கள் அநாகரிகமாக நடப்பதாக இருக்காது—விவேகமாக நடப்பதாகவே இருக்கும்.
ஆபாசமான விஷயங்கள் பேசப்படுகிற இடத்திலிருந்து எழுந்து போவதைக் குறித்து நீங்கள் சங்கடப்பட வேண்டியதே இல்லை. சொல்லப்போனால், வேறெதாவது சந்தர்ப்பங்களில் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுந்து போய்விடுவதில்லையா? முக்கியமாக உங்களுக்கு விருப்பம் இல்லாத அல்லது நீங்கள் தலையிட விரும்பாத விஷயங்கள் பேசப்படுகையில் நீங்கள் எழுந்து போய்விடுவீர்கள்தானே? உதாரணமாக, மாணவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து ஏதாவது கொலை கொள்ளையில் ஈடுபடுவதைப் பற்றி பேசுவதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர்களோடு உட்கார்ந்துகொண்டு அவர்கள் போடும் திட்டத்தைக் கேட்டுக்கொண்டிருப்பீர்களா? அப்படி செய்தால், நீங்களும் அதற்கு உடந்தையாகிவிடுவீர்களே. ஆகவே, அந்த இடத்தைவிட்டு
வெளியேறுவதுதான் ஞானமான செயல். அதுபோலவே ஒழுக்கயீனமான விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசும்போதும் செய்யுங்கள். இதற்காக, பெரிய நீதிமான் போல் காட்டிக்கொண்டு அவர்களுடைய கிண்டலுக்கு ஆளாக வேண்டும் என்பதில்லை; வேறு விதத்தில் விவேகமாக எழுந்து சென்றுவிட முடியும்.உண்மைதான், இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலிருந்து எப்போதுமே வெளியேற முடியாது. உதாரணமாக, வகுப்பில் உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற இளைஞர்கள் செக்ஸ் பற்றி பேசும்படி உங்களையும் தூண்டலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், உங்களைத் தொல்லை செய்யாதிருக்கும்படி உறுதியாக அதேசமயத்தில் மரியாதைக்குரிய விதத்தில் சொல்லிவிடுங்கள். அப்படிச் சொல்லியும் எந்தப் பிரயோஜனமும் இல்லையென்றால், பிரென்டா என்ற மாணவி செய்ததுபோல் நீங்களும் செய்யலாம். “என்னுடைய இடத்தை மாற்றச் சொல்லி டீச்சரிடம் சாதுரியமாக கேட்டேன்” என்று அவள் கூறுகிறாள்.
பகுத்துணருங்கள்
நீங்கள் ஏன் “அந்த மாதிரியான” பேச்சுகளில் ஈடுபடுவதில்லை என்பதை எப்படியும் இன்னொரு நாள் உங்களுடைய வகுப்புத் தோழர்கள் சிலர் உங்களிடம் ஆர்வமாகக் கேட்பார்கள். உங்களுடைய நெறிமுறைகளைப் பற்றி அவர்கள் கேட்கையில், பகுத்துணர்வோடு பதில் சொல்லுங்கள். தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலில் கேட்காமல் உங்களைக் கேலி பண்ணுவதற்கென்றே சிலர் கேட்கலாம். ஆனால் கேட்பவருடைய உள்நோக்கம் நல்லதாக தெரிந்தால், உங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி தாராளமாகப் பேசுங்கள். பைபிள் தராதரங்களின்படி வாழ்வதால் வரும் நன்மைகளைப் பற்றி கிளாஸ்மேட்ஸ் புரிந்துகொள்வதற்கு, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தை இளைஞர்கள் பலர் பயன்படுத்தியிருக்கிறார்கள். b
உறுதியுடனிருங்கள்
சக மாணவர் உங்களைத் தகாத முறையில் தொடுவதற்கோ அல்லது முத்தமிடுவதற்கோ முயன்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இப்படிச் செய்ய நீங்கள் அனுமதித்தால், இத்தகைய தவறான செயலை தொடர்ந்து செய்ய அவனை/அவளை நீங்கள் தூண்டுவதாக இருக்கும். பைபிளில் உள்ள ஒரு பதிவின்படி, ஒழுக்கங்கெட்ட பெண் ஒருத்தி ஓர் இளைஞனைப் பிடித்திழுத்து முத்தமிட்டாள்; அதற்கு அவன் இடம்கொடுத்தான். அதோடு, தேனொழுகப் பேசுவதற்கும் அவளை அனுமதித்தான். விளைவு? ‘உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோல் . . . அவளுக்குப் பின்னே போனான்.’—நீதிமொழிகள் 7:13-23.
ஆனால் இதே போன்ற ஒரு சூழ்நிலையில் யோசேப்பு என்ன செய்தார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். எஜமானுடைய மனைவி அவரை தன் ஆசை வலையில் விழவைக்க முயன்றுகொண்டே வந்தாள், ஆனால் அவர் கொஞ்சமும் அசைந்துகொடுக்கவே இல்லை. கடைசியில் ஒருநாள் அவரைப் பிடித்திழுக்க அவள் முயன்றபோது, அவர் மறுயோசனையே இல்லாமல் அங்கிருந்து ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டார்.—ஆதியாகமம் 39:7-12.
பள்ளித் தோழரோ அல்லது பழக்கமான வேறு யாரோ தகாத முறையில் உங்களைத் தொட முயன்றால், யோசேப்பைப் போல், நீங்களும் கறாராக நடந்துகொள்ள வேண்டியிருக்கலாம். “யாராவது என்னைத் தொட முயன்றால், ‘தொடாதே!’ என்று முகத்துக்கு நேராக சொல்லிவிடுவேன்” என ஐலின் கூறுகிறாள். “அப்படியும் அவன் கேட்கவில்லையென்றால், ‘கையை எடு!’ என்று கூச்சல் போடுவேன்.” ஸ்கூலிலுள்ள பாய்ஸைப் பற்றி ஐலின் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறாள்: “அவர்களாக மரியாதை கொடுக்க மாட்டார்கள், கொடுக்கவைக்க வேண்டும்.”
நீங்களும்கூட உங்கள் பள்ளித் தோழர்களுடைய மதிப்பையும் மரியாதையையும் பெற முடியும். எப்படி? ஆபாசமான பேச்சுக்கு செவிகொடுக்காதிருப்பதன் மூலமும், பொருத்தமான சமயத்தில் உங்களுடைய ஒழுக்க தராதரத்தைப் பற்றி மரியாதையுடன் விளக்குவதன் மூலமும், ஒழுக்கமற்ற எல்லா செயல்களையும் உறுதியாக ஒதுக்கித்தள்ளுவதன் மூலமும் ஆகும். இதனால் வரும் மற்றொரு நன்மை, உங்கள்மீதே உங்களுக்கு ஒரு திருப்தி ஏற்படும். மிக முக்கியமாக, யெகோவா உங்களை ஏற்றுக்கொள்வார்!—நீதிமொழிகள் 27:11.
சிந்திப்பதற்கு
◼ ஆபாசமான விஷயங்கள் பேசப்படும் இடத்தைவிட்டு வெளியேற நீங்கள் என்ன சொல்லலாம்?
◼ ஸ்கூலில் ஒருவன்/ஒருத்தி உங்களிடம் ஒழுக்கமற்ற விதத்தில் நடந்துகொள்ள முயன்றால் என்ன சொல்வீர்கள், என்ன செய்வீர்கள்?
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 27-ன் படம்]
உரையாடல் ஆபாசமான பேச்சுக்குத் தாவினால், உடனே அந்த இடத்தைவிட்டு போய்விடுங்கள்
[பக்கம் 28-ன் படம்]
யாரேனும் கெட்ட ஆசையோடு நெருங்கினால், ‘நெருப்பாகிவிடுங்கள்’