Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையான மகிழ்ச்சிக்கு ரெஸிப்பி

உண்மையான மகிழ்ச்சிக்கு ரெஸிப்பி

உண்மையான மகிழ்ச்சிக்கு ரெஸிப்பி

சுவையான உணவு தயாரிப்பதற்கு, நல்ல ரெஸிப்பி மட்டும் இருந்தால் போதாது, நல்ல சமையற்காரரும் தேவை! ஒரு விதத்தில், மகிழ்ச்சியைக் குறித்ததிலும் இதுவே உண்மை. வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குத் துணைபுரியும் ஒரு அம்சம் மட்டும் இருந்தால் போதாது, மற்ற அம்சங்களும் தேவைப்படுகின்றன. வேலை, விளையாட்டு, குடும்பத்தினர்களோடும் நண்பர்களோடும் நேரம் செலவிடுதல், ஆன்மீக காரியங்கள் போன்ற அம்சங்கள் இதில் உட்பட்டுள்ளன. ஆனால் மனோபாவங்கள், ஆசைகள், இலட்சியங்கள் போன்ற பிற அம்சங்களும் இதில் மறைந்திருக்கின்றன.

சந்தோஷத்திற்குரிய விஷயம் என்னவென்றால், உண்மையான மகிழ்ச்சிக்குரிய ரெஸிப்பியை நாம் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. ஏன்? ஏனென்றால் மிக அருமையான அறிவுரைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை, அதாவது பைபிளை, படைப்பாளர் நமக்குத் தந்திருக்கிறார். இது இப்பொழுது 2,377 மொழிகளிலும் கிளை மொழிகளிலும்​—⁠முழுமையாகவோ பகுதியாகவோ​—⁠கிடைக்கிறது. ஆம், இவ்வுலகில் உள்ள வேறெந்த புத்தகத்தையும்விட மிக அதிகமான மொழிகளில் கிடைக்கிறது!

எல்லாருடைய மகிழ்ச்சியிலும் ஆன்மீக நலனிலும் கடவுளுக்கு எந்தளவு அக்கறை இருக்கிறது என்பதை அச்சிடப்படும் பைபிள் பிரதிகளின் எண்ணிக்கையும் மொழிகளும் படம்பிடித்துக் காட்டுகின்றன. (அப்போஸ்தலர் 10:34, 35; 17:26, 27) ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதிக்கிறவர் . . . நானே’ என்று கடவுள் கூறுகிறார்; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், நம்முடைய வாழ்க்கையில் சாந்தியும் சமாதானமும் ‘நதியைப் போல் இருக்கும்’ என்று அவர் வாக்குறுதி அளிக்கிறார்.​—ஏசாயா 48:17, 18.

முந்தைய கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட இயேசுவின் வார்த்தைகளை, அதாவது “ஆன்மீகத் தேவையைக் குறித்து உணர்வுடையோர் சந்தோஷமுள்ளவர்கள்” என்ற வார்த்தைகளை, இந்த வாக்குறுதி நினைவுபடுத்துகிறது. (மத்தேயு 5:3, NW) இங்கே குறிப்பிடப்படும் ஆன்மீக உணர்வு மேலோட்டமான பக்தி அல்ல. மாறாக, அது நமது முழு வாழ்க்கையையும் செல்வாக்குச் செலுத்துகிற ஒன்று. அவருக்குச் செவிசாய்ப்பதற்கும் அவரால் போதிக்கப்படுவதற்கும் நாம் விரும்புவதை அது காட்டுகிறது; ஏனென்றால் நம்மைவிட கடவுளுக்குத்தான் நம்மைப் பற்றி நன்கு தெரியும் என்பதை ஒத்துக்கொள்கிறோம். “பைபிள் கடவுள் தந்த புத்தகம் என்று நான் நம்புவதற்குக் மிக முக்கியமான காரணம் என்னவென்றால், அதிலுள்ள போதனைகளை கடைப்பிடிக்கும்போது அது பலன்தருகிறது!” என 50 வருடங்களுக்கும் அதிகமாய் பைபிள் படிக்கும் ஏர்ல் என்பவர் கூறுகிறார். உதாரணத்திற்கு, செல்வத்தையும் இன்பத்தையும் நாடுவது போன்ற விஷயங்களில் பைபிள் தரும் அருமையான அறிவுரைகளைக் கவனியுங்கள்.

பணத்தைக் குறித்ததில் ஞானமான வழிகாட்டி

“ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்று இயேசு கூறினார். (லூக்கா 12:15) ஆம், உங்களுடைய ‘பேங்க் பேலன்ஸ்’ எவ்வளவு என்பதை வைத்து கடவுள் உங்களுடைய உண்மையான மதிப்பை அளவிடுவதில்லை. சொல்லப்போனால், செல்வத்தைத் தேடுவது பெரும்பாலும் கவலைகளைத்தான் குவிக்கும், அவை உங்களுடைய சந்தோஷத்தைப் பறித்து, அதிமுக்கியமான காரியங்களுக்குச் செலவிட வேண்டிய நேரத்தைத் திருடிவிடும்.​—மாற்கு 10:25; 1 தீமோத்தேயு 6:⁠10.

பொருளாதார காரியங்களில் திருப்தி காண மக்கள் எந்தளவுக்கு முயற்சி செய்கிறார்களோ அந்தளவுக்குக் குறைவாகத்தான் திருப்தி அடைகிறார்கள் என ரிச்சர்டு ரையன் என்ற அமெரிக்க மனோதத்துவ பேராசிரியர் கூறுகிறார். பைபிள் எழுத்தாளர் சாலொமோன் அதை இவ்வாறு கூறினார்: “பண ஆசை உள்ளவர்களுக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது; செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர் அதனால் பயனடையாமற்போகிறார்.” (பிரசங்கி [சபை உரையாளர்] 5:10, பொது மொழிபெயர்ப்பு) கொசுக்கடியால் உண்டாகும் அரிப்புக்கு இதை ஒப்பிடலாம்​—⁠எந்தளவுக்கு அதிகமாய் சொறிகிறீர்களோ அந்தளவுக்கு அதிகமாய் அரிப்பெடுக்கும், கடைசியில் அந்த இடம் ரணமாகத்தான் ஆகும்.

கடினமாய் உழைக்கவும் அந்த உழைப்பின் பலனை அனுபவித்து மகிழவுமே பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (பிரசங்கி 3:12, 13) அப்படிச் செய்வதன் மூலம் நம்முடைய சுயமரியாதையை அதிகரிக்கிறோம்​—⁠இது மகிழ்ச்சிக்கு உதவும் மற்றொரு அம்சம். அதோடு, வாழ்க்கையில் சில ஆரோக்கியமான இன்பங்களையும் அனுபவித்து மகிழலாம். என்றாலும், பணத்தினால் கிடைக்கும் நல்ல காரியங்கள் சிலவற்றை அனுபவித்து மகிழ்வதற்கும், பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது.

இன்பங்களை அவற்றிற்குரிய இடத்தில் வையுங்கள்

பொழுதுபோக்கு, விளையாட்டு, அல்லது வேறுசில இன்பங்களிலிருந்து பேரளவில் நன்மைபெற வாழ்க்கையில் ஆன்மீக கண்ணோட்டம் உதவுகிறது. இயேசு விருந்துகளுக்குச் சென்று புசித்துக் குடித்து மகிழ்ந்தார். (லூக்கா 5:29; யோவான் 2:1-10) ஆனால் இவற்றையே சந்தோஷத்திற்கு முக்கிய ஊற்றுமூலமாய் அவர் நிச்சயம் கருதவில்லை. மாறாக, ஆன்மீக காரியங்களை நாடுவதிலேயே, அதாவது கடவுளையும் மனிதகுலத்திற்கான அவருடைய நோக்கத்தையும் பற்றி கற்றுக்கொள்ள பிறருக்கு உதவுதல் போன்ற காரியங்களிலேயே, பெருமகிழ்ச்சி கண்டார்.​—யோவான் 4:⁠34.

இன்பங்களைத் தேடினால் மகிழ்ச்சி கிடைக்குமா என்று சாலொமோன் ராஜா சோதித்துப் பார்த்தார். ‘இன்பத்தில் மூழ்கி அதன் இனிமையைச் சுவைப்பேன்’ என்று கூறினார். செல்வச்சீமானாக விளங்கிய இந்த ராஜா தயங்கித் தயங்கியோ பயந்து பயந்தோ இன்பத்தை நாடவில்லை. இன்ப வெள்ளத்தில் மிதந்தார்! ஆனால், அதற்குப்பின் அவர் எப்படி உணர்ந்தார்? “அதுவும் வீண்” என்று எழுதினார்.​—⁠பிரசங்கி [சபை உரையாளர்] 2:1, பொ.மொ.

வீண், ஒன்றுமில்லை​—⁠இன்பத்தை நாடுவோர் கடைசியில் இப்படித்தான் பொதுவாக உணருகிறார்கள். சொல்லப்போனால், இன்பங்களை நாடுவதையும் அர்த்தமுள்ள வேலை, ஆன்மீக நடவடிக்கைகள், குடும்பத்துடன் ஈடுபாடு போன்றவற்றையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இன்பத்தை நாடுவது அந்த ஆட்களுக்கு மிகக் குறைவான மகிழ்ச்சியையே அளித்திருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.

தாராள குணமுள்ளவர்களாகவும் நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள்

மகிழ்ச்சியுள்ள மக்கள் தன்னலம் கருதுவதில்லை, மாறாக தாராள குணமுள்ளவர்களாகவும் பிறர்மீது அக்கறை காட்டுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ‘வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி இருக்கிறது’ என இயேசு கூறினார். (அப்போஸ்தலர் 20:35) பொருளாதார உதவி அளிப்பதோடுகூட, நமது நேரத்தையும் சக்தியையும் கொடுக்கலாம், இவையே மிகவும் மதிப்புமிக்கவை​—⁠முக்கியமாய் குடும்பத்தில். திருமண பந்தத்தை பலமாக வைத்துக்கொள்வதற்கும் சந்தோஷமாய் இருப்பதற்கும் கணவனும் மனைவியும் ஒன்றுசேர்ந்து நேரம் செலவிட வேண்டும். பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும், அவர்களுடன் பேச வேண்டும், அவர்களுக்குப் பாசத்தைப் பொழிய வேண்டும், கற்பிக்க வேண்டும். இதையெல்லாம் செய்யும்போது, குடும்பம் செழித்தோங்கும், வீடு சந்தோஷப் பூங்காவாக இருக்கும்.

மறுபட்சத்தில், உங்களுக்காக மற்றவர்கள் தங்களது நேரத்தையும் சக்தியையும் செலவிடும்போது அல்லது வேறெதாவது விதத்தில் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டும்போது, நீங்கள் ‘நன்றியுடன்’ இருக்கிறீர்களா? (கொலோசெயர் 3:15) நன்றியுணர்வு பிறருடன் நமக்கு நல்லுறவுகளை ஏற்படுத்தும், நமது மகிழ்ச்சிக்கும் அதிக பங்களிக்கும். ஒருவர் உங்களுக்கு இதயங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கும்போது, உங்களுடைய உள்ளம் மகிழ்ச்சியால் பூரிக்கிறது, அல்லவா?

நன்றி தெரிவிப்பது நமக்குக் கிடைக்கும் நன்மையான காரியங்களைப் பற்றி அறிந்திருக்கவும் உதவுகிறது. அமெரிக்காவில் ரிவர்சைட் நகரிலுள்ள கலிபோர்னியா யுனிவர்சிட்டியில் பணிபுரியும் ஆய்வாளர் ஒருவர் தன்னுடைய ஆட்களிடம், “நன்றி தெரிவிக்கும் இதழை” தயாரிக்கச் சொன்னார்; அதாவது தாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்க விரும்பிய காரியங்களை எழுதி வைத்துக்கொள்ளச் சொன்னார். ஆறு வாரங்களுக்குப் பிறகு, அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அதிக திருப்தியுடன் இருப்பதாக உணர்ந்தார்கள்.

இதிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? உங்களுடைய சூழ்நிலை என்னவாக இருந்தாலும்சரி, நீங்கள் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களை எண்ணிப் பாருங்கள். சொல்லப்போனால், அப்படிச் செய்யும்படியே பைபிளும் உற்சாகப்படுத்துகிறது. “எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். . . . எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:16, 18, பொ.மொ.) அப்படிச் செய்ய வேண்டுமென்றால், நாம் அனுபவிக்கும் நன்மையான காரியங்களை எண்ணிப் பார்க்க தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இதை ஏன் உங்களுடைய தனிப்பட்ட இலக்காக வைத்துக்கொள்ளக் கூடாது?

அன்பும் நம்பிக்கையும்​—⁠மகிழ்ச்சிக்கு அத்தியாவசியம்

தொட்டில் முதல் சுடுகாடு வரை மனிதன் ஏங்கும் ஒன்று அன்பே என பொருத்தமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அது இல்லாமல் மக்கள் வாடிவதங்கிவிடுவார்கள். ஆனால் உண்மையில் அன்பு என்றால் என்ன? இன்றைய நாட்களில் இந்த வார்த்தை பரவலாக பயன்படுத்தப்படுகிறபோதிலும், பைபிள் அதை அழகாக விவரிக்கிறது: “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது [“சொந்த அக்கறைகளைத் தேடாது,” NW], சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.”​—1 கொரிந்தியர் 13:4-8.

உண்மையான அன்பு சுயநலமற்றது! அதுசொந்த அக்கறைகளைத் தேடாததால்’ தன்னுடைய சந்தோஷத்தைவிட பிறருடைய சந்தோஷத்தையே முக்கியமாய் கருதுகிறது. வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இன்றைக்கு இத்தகைய அன்பு வெகு அபூர்வமாய் ஆகிவருகிறது. சொல்லப்போனால், இந்த உலகத்தின் முடிவைப் பற்றிய மாபெரும் தீர்க்கதரிசனத்தில், “அநேகருடைய அன்பு தணிந்துபோம்” என்று இயேசு கூறினார்.​—மத்தேயு 24:3, 12; 2 தீமோத்தேயு 3:1-5.

ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலை என்றென்றும் தொடராது, ஏனென்றால் அன்பின் உருவாகத் திகழும் படைப்பாளரை இது அவமதிக்கிறது. (1 யோவான் 4:8) பகைமை அல்லது பேராசை நிறைந்த மக்கள் அனைவரையும் கடவுள் சீக்கரத்தில் ஒழித்துக்கட்டுவார். மேலே வர்ணிக்கப்பட்டுள்ள அன்பை வளர்க்க முயலுகிறவர்களை மாத்திரமே அவர் உயிரோடு காப்பார். அப்பொழுது, பூமியெங்கும் சந்தோஷமும் சமாதானமும் குடிகொள்ளும். பின்வரும் பைபிள் வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும்: “இன்னுங் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”​—சங்கீதம் 37:10, 11.

ஒவ்வொரு நாளும் ‘மிகுந்த மனமகிழ்ச்சியால்’ நிறைந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள்! “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்” என்று பைபிள் சொல்வதில் ஏதாவது ஆச்சரியமுண்டா? (ரோமர் 12:12) கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு கடவுள் தரும் மகத்தான நம்பிக்கையைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால், தயவுசெய்து பின்வரும் கட்டுரையை வாசிக்கவும்.

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

‘வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம்.’ ​—⁠அப்போஸ்தலர் 20:⁠35

[பக்கம் 5-ன் பெட்டி/படம்]

வெற்றிக் கதைகள்—எந்தளவு உண்மை?

கஷ்டப்பட்ட குடும்பத்தில் வளர்ந்து, பிறகு எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்து பணக்காரர்களாக ஆனவர்களைப் பற்றிய கதைகளை நாம் அவ்வப்பொழுது கேள்விப்படுகிறோம். மகிழ்ச்சியைப் பற்றி சான் பிரான்ஸிஸ்கோ கிரானிக்கல் செய்தித்தாளில் வெளிவந்த ஓர் அறிக்கை இவ்வாறு விளக்குகிறது: “ஏழ்மையான சூழ்நிலை​யிலும் தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்​தார்கள், பிள்ளைகளாக இருந்த காலத்தில் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தபோதிலும், அல்லது மகிழ்ச்சியற்றவர்களாக இருந்ததால் வெற்றி பெற்றார்கள் என்பதற்கு இப்படிப்பட்ட கதைகள் சிலசமயங்களில் அத்தாட்சியாக சொல்லப்​படுகின்றன.” ஆனால், “இந்த விளக்கம் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது, ஏனென்றால் ஆராய்ச்சியின்படி, அவர்கள் உண்மை​யில் வெற்றி பெறவில்லை, அல்லது மகிழ்ச்சியாக ஆக​வில்லை. வெறுமனே பணக்​காரர்​களாக ஆனார்கள் அவ்வளவுதான்.”

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

ஆரோக்கிய வாழ்வுக்கு மகிழ்ச்சி

மகிழ்ச்சியான மனநிலை ஓர் அருமருந்து. “மகிழ்ச்சி அல்லது அதோடு தொடர்புடைய மனநிலைகளான நம்பிக்கை, திருப்தி போன்றவை இதய நோய், நுரையீரல் நோய், நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு, சளி, மூச்சுக் குழலில் உண்டாகும் தொற்றுகள் ஏற்படுவதைக் குறைப்பதாக அல்லது அவற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதாக தோன்றுகிறது” என டைம் பத்திரிகையின் அறிக்கை கூறுகிறது. மேலும், வயதான நோயாளிகளை வைத்து நடத்தப்பட்ட டச்சு ஆராய்ச்சியின்படி, ஒன்பது ஆண்டுக்கு அதிகமான காலப்பகுதியில், மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையான மனநிலையுடனும் அவர்கள் இருந்ததால் மரணம் ஏற்படும் ஆபத்து 50 சதவீதம்வரை குறைந்திருப்பது தெரியவந்தது! இது வியத்தகு கண்டுபிடிப்பாகும்.

மனநிலை எப்படி உடல்நிலையைப் பாதிக்கிறது என்பது இன்னும் தெளிவாகப் புலப்படவில்லை. என்றாலும், நம்பிக்கையான மனநிலை உடையவர்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசால் என்ற சுரப்பி (இது நோய்க்காப்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்துகிறது) குறைவாக சுரக்கிறது என்பதை ஆராய்ச்சி காட்டியுள்ளது.

[பக்கம் 45-ன் படம்]

சுவையான உணவு தயாரிக்க நல்ல ரெஸிப்பியைப் பின்பற்றுவது போல, சந்தோஷத்தைக் காண தெய்வீக வழிநடத்துதலைப் பின்பற்றுவது அவசியம்