Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையான மகிழ்ச்சியை உங்களால் காண முடியும்!

உண்மையான மகிழ்ச்சியை உங்களால் காண முடியும்!

உண்மையான மகிழ்ச்சியை உங்களால் காண முடியும்!

ஆடம்பரமான கார், பங்களா, நிறைய பேங்க் பேலன்ஸ், கௌரவமான வேலை, நவீன எலக்ட்ரானிக் கருவிகள், நல்ல உடல்வாகு​—⁠இவற்றைத்தான் மகிழ்ச்சி எனும் உலகுக்கு பாஸ்போர்ட்டாக அநேகர் கருதுவதுபோல் தோன்றுகிறது. என்றாலும், மகிழ்ச்சி என்பது உண்மையிலேயே இந்த மாதிரியான காரியங்களையா சார்ந்திருக்கிறது?

“சந்தோஷம், நம்பிக்கை, ஆரோக்கியமான உடல் மற்றும் மனநிலை, நல்லொழுக்கம் ஆகியவற்றைப் பற்றி பேரளவில் ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது” என டைம் பத்திரிகையின் விசேஷ அறிக்கை கூறுகிறது. இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகள் அநேகருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கின்றன. பணம், புகழ், அழகு​—⁠இவைதான் மகிழ்ச்சியைத் தரும் என்ற சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறவர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என அத்தாட்சிகள் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன. சொல்லப்போனால், மன ஆரோக்கியத்தைக் கெடுக்கிற, ஏன், மனச்சோர்வையும்கூட உண்டாக்குகிற ஓர் அஸ்திவாரத்தின் மீதுதான் தங்களுடைய வாழ்க்கையை அவர்கள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று அமெரிக்காவில் வாழும் பலர் முன்பைவிட அதிக செல்வச் செழிப்பில் மிதக்கிறார்கள். “ஆனால் இது எந்த விதத்திலும் நம்மை அதிக மகிழ்ச்சியுள்ளவர்களாக ஆக்கவில்லை” என டைம் பத்திரிகை கூறுகிறது. இதுவே பிற நாடுகளில் வாழும் மக்களுடைய விஷயத்திலும் உண்மையாக இருக்கிறது. பொருளாதாரத்தில் வேகமாய் வளர்ந்துவரும் சீனாவிலும்கூட மகிழ்ச்சியற்றவர்களாக ஆகிவரும் மக்களின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் அளவில் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் “15-⁠க்கும் 34-⁠க்கும் இடைப்பட்ட வயதினரிடையே ஏற்படும் மரணத்திற்கு முக்கிய காரணம்” தற்கொலையே என அக்செஸ் ஏஷியா என்ற காலாண்டு இதழ் கூறுகிறது. போட்டி பொறாமை நிறைந்த இந்த உலகில், பொருளாதாரத்தில் வெற்றிபெற வேண்டுமென்ற அழுத்தமே இளைஞர்களுடைய இந்தப் போக்கிற்கு காரணமென தெரிகிறது.

என்றாலும், பொருளாதார செழுமை கவலையையோ மனஅழுத்தத்தையோ குறைத்துவிடுவதில்லை, சொல்லப்போனால் அவற்றை அதிகரிக்கத்தான் செய்கிறது. “உணர்ச்சி ரீதியிலும் மனோ ரீதியிலும் ஸ்திரமின்றி இருப்பதற்கு நம் வாழ்க்கை பாணியே இப்பொழுது முக்கிய காரணியாக ஆகிவிட்டது” என்ற முடிவுக்கு யுனிவர்சிட்டி ஆராய்ச்சி வந்தது. சமுதாயத்தின் போக்குகளைப் பற்றி ஆராயும் வான் விஷார்டு இவ்வாறு கூறினார்: “மனோ ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல கம்பெனிகள் ஹெல்த் இன்ஷுரன்ஸ் எடுப்பது மிக வேகமாய் அதிகரித்து வருகிறது.”

அதிவேகமாய் மாறிவரும் இன்றைய உலகம் பிள்ளைகளையும்கூட பாதிக்கிறது. “மனஅழுத்தத்திற்குரிய அறிகுறிகளை எப்படிக் கண்டுபிடிப்பது, அவற்றை எப்படிச் சமாளிப்பது” என்பதன் பேரில் அறிவுரை தருகிற புத்தகங்கள் எட்டு வயது பிள்ளைகளுக்கும் இப்பொழுது கிடைக்கின்றன என விஷார்டு கூறுகிறார். மேலை நாடுகள் பலவற்றில், பரிசோதிக்கப்படும் பிள்ளைகளில் 23 சதவீதத்தினருக்கு மனச்சோர்வு இருக்கிறது, அது ஒவ்வொரு ஆண்டும் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு அதிகரித்தும் வருகிறது என மனச்சோர்வை பற்றிய தகவல்களைத் தரும் பட்டியல் காட்டுகிறது. “ஆரம்பப் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே மனச்சோர்வை முறிக்கும் மருந்துகளைப் பிள்ளைகளுக்கு வாங்குவது மிக வேகமாய் அதிகரித்து வருவதாகவும்” அது காட்டுகிறது.

பயமும் அதிகரித்துக்கொண்டே போகிறது​—⁠இதற்குப் பொருளாதார நெருக்கடிகள் மட்டுமே காரணமல்ல. அரசியல் வெறியும் மத வெறியும் தீவிரமாகி வருவதால், வருங்காலத்தில் நடக்கப்போகும் பயங்கர கொடுமைகளை எண்ணி அநேகர் அஞ்சி நடுங்குகிறார்கள். இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனஅழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சியூட்டும் மாறுபட்ட வாழ்க்கை முறையை இயேசு கிறிஸ்து கற்பித்தார். அவருடைய போதனையின் மையக் கருத்து எளிமையாகவும் அதேசமயத்தில் ஆழமான சத்தியம் நிறைந்ததாகவும் இருந்தது. “ஆன்மீக தேவையைக் குறித்து உணர்வுடையோர் சந்தோஷமுள்ளவர்கள்” என அவர் கூறினார். (மத்தேயு 5:3, NW) ஆம், மனிதகுலத்தின் மிகப் பெரிய தேவையின் மீது​—⁠நமது படைப்பாளரைப் பற்றிய ஆன்மீக சத்தியத்தின் மீது, நமக்கான அவருடைய நோக்கத்தின் மீது​—⁠கவனத்தை ஒருமுகப்படுத்தும்படி ஜனங்களை இயேசு உற்சாகப்படுத்தினார்.

மகிழ்ச்சிக்கு உண்மையில் எது முக்கியம் என்பதைப் பகுத்துணர அந்தச் சத்தியம் நமக்கு உதவும்; இதைத்தான் பின்வரும் கட்டுரைகளில் நாம் காணப்போகிறோம். இது அதிக அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு, சந்தோஷமான வாழ்க்கைக்கு, நம்மை வழிநடத்தும். ஆன்மீக சத்தியம் அற்புதமான நம்பிக்கை தீபத்தை நமக்குள் ஏற்றுகிறது.

[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]

மகிழ்ச்சி என்பது பொருளுடைமை​களின் மீது சார்ந்திருக்கிறதா?