Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

அமெரிக்காவில் “ஒவ்வொரு வருடமும் நான்கில் ஒருவருக்கு ஏதாவது ஒரு மனக்கோளாறு ஏற்படுகிறது. சராசரியாக இரண்டில் ஒருவருக்கு வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் இது ஏற்படுகிறது.”​—⁠சைன்ஸ் நியூஸ், அமெரிக்கா.

செப்டம்பர் 2004-⁠ல், ஐவன் சூறாவளியினால் மெக்சிகோ வளைகுடாவில் கிட்டத்தட்ட 24 அலைகள், 50 அடி உயரத்திற்கு மேல் எழுந்தன. அவற்றில் மிகப் பெரிய அலை 91 அடி உயரத்திற்கு எழுந்தது.​—⁠சையன்ஸ் பத்திரிகை, அமெரிக்கா.

வாகனம் ஓட்டும்போது செல் போன்களைப் பயன்படுத்துவது விபத்துகள் ஏற்படும் வாய்ப்பை நான்கு மடங்கு அதிகரிக்கிறது, ஆஸ்பத்திரியில் சேர்க்குமளவுக்கு அவை சீரியஸாக இருக்கலாம். கையில் பிடித்துக்கொள்ள அவசியமில்லாத போனை பயன்படுத்துகிற டிரைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.​—⁠பிஎம்ஜெ, பிரிட்டன்.

◼ பைபிள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவியாக தயாரிக்கப்பட்டிருக்கும் பட்டியலின் புதிய பதிப்பின்படி, 6,912 மொழிகள் புழக்கத்தில் இருக்கின்றன.​—⁠த நியூ யார்க் டைம்ஸ், அமெரிக்கா.

◼ கர்ப்பிணிகளும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் புகைபிடித்தால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறபோதிலும் போலந்து நாட்டில் 30 சதவிகித பெண்கள் புகைபிடிக்கிறார்கள்.​—⁠ஸீட்ராவீ பத்திரிகை, போலந்து.

பணமும் மக்களின் மனமும்

பணத்தைப் பற்றிய மக்களுடைய மனப்பான்மை சம்பந்தமாக ஓர் ஆஸ்திரேலிய கழகம் நடத்திய ஆய்வில், ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்கள் 20 பேரில் ஒருவர்தான் தன்னைப் பணக்காரராகக் கருதுகிறார் என்பதாக ஏபிசி நியூஸ் ஆன்லைன் அறிக்கை தெரிவிக்கிறது. “பணம் ஏற ஏற திருப்தி குறைகிறது” என அந்தக் கழகத்தின் செயற்குழு இயக்குநரான கிளைவ் ஹாமல்டன் சொல்கிறார். பார்க்கப்போனால், மிக அதிகமாக சம்பாதிக்கிற மக்களில் 13 சதவீதத்தினர் மாத்திரமே மிகவும் திருப்தியான வாழ்க்கை வாழ்கிறார்கள். “பணத்தைவிட மற்ற காரியங்களே வாழ்க்கையில் திருப்தி அளிக்கின்றன என்று எல்லா சான்றுகளும் காட்டுகின்றன. அப்படியிருக்க, நம் சமுதாயத்தில் மற்ற எதைப் பார்க்கிலும் நாம் ஏன் பணம் சம்பாதிப்பதையே மிக முக்கியமாகக் கருதுகிறோம் என்ற கேள்வியை நமக்கு நாமே கண்டிப்பாக கேட்டுக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஹாமல்டன்.

விண்ணில் “குப்பைக்கூளங்கள்”

“காரில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதென்று அதை நடுரோட்டில் நிறுத்திவிட்டால் ஏற்படும் ஆபத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்” என்கிறது நியூ ஸயன்டிஸ்ட் பத்திரிகை. இன்று விண்வெளியில் ரிப்பேரான விண்கலங்கள் இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் இருக்கின்றன. அதனால் பூமியைச் சுற்றிவருகிற குப்பைக்கூளங்களான இந்த விண்கலங்கள்மீது புதிய விண்கலங்கள் மோதிவிடும் ஆபத்து அதிகமாக இருக்கிறது. 60 சென்டிமீட்டருக்கும் அதிகமான விட்டத்தை உடைய கிட்டத்தட்ட 1,120 விண்கலப் பொருள்கள், பூமியின் சுழற்சி வேகத்திலேயே சுற்றிவருகிற அநேக விண்கலங்களின் சுற்றுப்பாதைக்கு அருகாமையில் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. செய்தித்தொடர்புக்கு பயன்படுகிற அநேக விண்கலங்கள் இந்தச் சுற்றுப்பாதையிலேயே வலம் வருகின்றன. ஆனால் இந்த 1,120 விண்கலப் பொருள்களில் வெறும் 300 விண்கலங்கள் மட்டும்தான் இயங்கிவருகின்றன. மற்றவை குப்பைக்கூளங்களாகவே இருக்கின்றன. சுற்றுப்பாதையில் அம்போவென விடப்பட்டிருக்கும் ஆபத்தான இந்த விண்கலப் பொருள்களில் ரிப்பேராகிப்போன 32 அணுக்கரு உலைகளும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருக்கின்றன.

போர்க்கருவிகளும் போர்களும்

பனிப்போர் முடிவுக்கு வந்தபோது போர்த் தளவாடங்களின் வியாபாரம் சரிந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அது மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. 2004-⁠ல் உலக முழுவதிலும் ராணுவத்திற்காக கிட்டத்தட்ட 45 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது என ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனம் (SIPRI) அறிக்கை செய்கிறது. அந்தப் பணத்தை, உலகிலுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் பங்குபோட்டுக் கொடுத்திருந்தால் தலா 7,290 ரூபாய் கிடைத்திருக்கும். 2004-⁠ல் 19 போர்கள் நடந்ததில் ஒவ்வொன்றிலும் 1000-⁠க்கும் அதிகமானோர் இறந்திருப்பதாக SIPRI அறிக்கை செய்கிறது. அவற்றில் 16 போர்கள், பத்து வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகின்றன.

கார்களில் இரண்டு வகை எரிபொருள்கள்

பிரேசில் நாட்டு ஷோரூம்களில் விற்பனையாகும் கார்களில் மூன்றில் ஒன்று, இரண்டு வகை எரிபொருள்களில் ஓடுகிறது என அறிக்கை செய்கிறது வேஷா பத்திரிகை. இந்தக் கார்கள் பெட்ரோலியத்திலும் கரும்புச் சாராயத்திலும் ஓடுகின்றன. அல்லது ஏதோவொரு விகிதத்தில் இரண்டும் கலந்த எரிபொருளில் ஓடுகின்றன. 2003-2004 வருடங்களுக்குள், சாராய எரிபொருளின் விற்பனை 34 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. டிரைவர்கள் சாராய எரிபொருளை பயன்படுத்துவதற்குக் காரணம், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதால் அல்ல, ஆனால், அவர்களுக்கு செலவு மிச்சம் என்பதாலேயே. இரண்டு எரிபொருள்களில் ஓடுகிற கார்கள், “எரிபொருள் நெருக்கடி, எரிபொருள் விலையில் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கின்றன” என்று ரஃபெல் ஷைடமான் சொல்கிறார். இவர் பிரேசிலின் அடிப்படை வசதி மையத்தின் இயக்குநர். “சாராய விலை ஏறினால் பெட்ரோலைப் பயன்படுத்துங்கள்; பெட்ரோல் விலை ஏறினால் சாராயத்தைப் பயன்படுத்துங்கள்” என்கிறார் அவர்.