Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவி (மே 8, 2005) இந்தத் தொடர் கட்டுரைகளிலிருந்து நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. சில சமயங்களில், வாலிபப் பருவம் சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது. ஆனால் இதுபோன்ற ஊக்கமூட்டும் கட்டுரைகள் இப்படிப்பட்ட சவால்களைச் சமாளிக்க உதவுகின்றன. இந்த ‘கடைசி நாட்களாகிய கொடிய காலங்களில்’ ஊக்கமூட்டும் இதுபோன்ற தகவல்தான் எங்களுக்குத் தேவை. (2 தீமோத்தேயு 3:1) இந்தத் தொடர் கட்டுரைகள் நினைப்பூட்டிய விஷயங்கள், ‘பிசாசின் தந்திரங்களுக்கு’ இரையாகாமல் தப்பிப்பதற்கு எங்களுக்கு உதவும். (எபேசியர் 6:11) ஏற்ற வேளையில் ஆன்மீக உணவை அளிப்பதற்காக மிக்க நன்றி.

கே. எஸ்., அமெரிக்கா

சுத்தமான வீடு​—⁠அதில் நம் அனைவரின் பங்கு (ஜூலை 8, 2005) நான் சிறு பிள்ளையாக இருந்தபோது அப்பா, அம்மா இரண்டுபேரும் வேலைக்குப் போய்விடுவார்கள். பிள்ளைகளாகிய நாங்கள் மூன்று பேருமோ சதா விளையாடிக்கொண்டிருப்போம். வீடு ஒரே கந்தரகோளமாக இருக்கும். இன்றைக்குக்கூட வீட்டை சுத்தம் செய்வது என்றால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் இந்தக் கட்டுரை, கரிசனையுடன் என் அம்மா எனக்கு சுத்தம் செய்யச் சொல்லிக் கொடுப்பதுபோல் இருந்தது. இப்போது எனக்கு வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் சுத்தம் செய்யப் பிடிக்காது. அவர்களுக்கு நான் நிறைய காரியங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுரை என்னை ரொம்பவே ஊக்குவித்திருக்கிறது.

வை. ஈ., ஜப்பான்

குடும்பமாக மறுபார்வை செய்ய (மே 8, 2005 ஆங்கில விழித்தெழு!) இந்தக் கட்டுரையைப் படித்தபோது என்னை அறியாமலேயே என் கண்கள் கண்ணீரை உதிர்த்தன. என் மகளிடம் இந்தக் கட்டுரையைக் காட்டினேன். அடிபட்ட சிட்டுக்குருவியைப் பற்றிய கட்டுரையை அவள் ஏற்கெனவே படித்துவிட்டதாகச் சொன்னாள். அதோடு, “குடும்பமாக மறுபார்வை செய்ய” என்ற கட்டுரையில் உள்ள இரண்டு கேள்விகளுக்கும் பதில் கண்டுபிடித்துவிட்டதாகவும் சொன்னாள்.

எல். எஸ்., அமெரிக்கா

நூலகங்கள்​—⁠அறிவுக் களஞ்சியத்தின் கதவுகள் (ஜூன் 8, 2005) 16-⁠ம் பக்கத்திலுள்ள படம் அசீரிய ராஜாவான அசூர்பானிபால் என்று தவறாக குறிப்பிட்டிருப்பதை உங்கள் அன்பான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன் உண்மையில், அது அசீரிய ராஜாவான எசரத்தோனின் படம்.

ஏ. டபிள்யூ., ஜெர்மனி

“விழித்தெழு!” பதில்: இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்ததற்கு மிக்க நன்றி. “வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை” a (ஆங்கிலம்) என்ற பைபிள் அடிப்படையிலான புத்தகத்தின் முதலாம் தொகுதியில் பக்கம் 757-⁠ல் குறிப்பிட்டுள்ளபடி, எஸர்-ஹாடன் அசீரிய ராஜாவான சனகெரிப்பின் இளைய மகன், அவருக்கு அடுத்ததாக அரியணை ஏறியவர்.

வியத்தகு மாயா காலண்டர் (மே 8, 2005) இந்தக் கட்டுரை, இன்டர்நெட்டில் ஆராய்ச்சி செய்ய என்னைத் தூண்டியது. மாயா காலண்டருக்கும் சோதிடத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைத் தெரிந்துகொண்டேன். இப்படிப்பட்ட கட்டுரைகளை வெளியிடுவது வாசகர்களை சோதிடத்திலும் மாயமந்திரத்திலும் ஆர்வங்காட்டத் தூண்டுவது போலிருக்காதா?

ஜே. கே., போலந்து

“விழித்தெழு!” பதில்: “விழித்தெழு!” பத்திரிகையின் நான்காவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறபடி அது “சரித்திர நிகழ்ச்சிகளையும் பல நாடுகளிலுள்ள மக்களையும் பற்றி சொல்கிறது, மதத்தையும் அறிவியலையும் ஆய்வு செய்கிறது.” அதற்காக, இந்தத் துறைகளில் நடக்கும் எல்லாவற்றையும் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அர்த்தமாகாது. நீங்கள் சுட்டிக்காட்டுகிற சுருக்கமான இந்தக் கட்டுரையில் நாங்கள் பண்டைய மாயா இனத்தவரைப் பற்றியே குறிப்பிட்டோம். அவர்கள் திறம்பட்ட விதத்தில் காலத்தைக் கணக்கிட்டதால் வியக்கத்தக்க முறையில் துல்லியமான ஒரு காலண்டரைத் தயாரிக்க முடிந்தது. இந்த காலண்டர், குறிசொல்லுதலில் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்​—⁠கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்​—⁠வாசகரை சோதிடத்தில் ஆர்வங்காட்டும்படி எவ்விதத்திலும் உந்துவிக்கக் கூடாது.

எமது பிரசுரங்களில் வருகிற ஓவியங்கள் சம்பந்தமாக வாசகர்கள் இப்படிப்பட்ட கேள்விகளை சில சமயங்களில் கேட்கிறார்கள். எங்களது கட்டுரைகளில் விக்கிரகங்கள், மத சின்னங்கள், மாயமந்திர பொருள்கள் போன்றவற்றின் படங்கள் கொடுக்கப்படுவதற்குக் காரணம், அவை சம்பந்தமாக இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வாசகரைத் தூண்டுவதற்காக அல்ல. மாறாக, அவற்றைப் பற்றிய மர்மங்களை வெளிப்படுத்துவதற்காகவே. அதுமட்டுமல்ல, அவற்றுடன் எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ளாமல் இருக்கும்படி வாசகரை எச்சரிப்பதற்காகவும் அவை கொடுக்கப்படுகின்றன. எங்கள் கட்டுரைகளும் அதிலுள்ள படங்களும் பிரயோஜனமாக இருந்திருப்பதாக வாசகர்கள் அநேக முறை தெரிவித்திருக்கின்றனர்.

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.